பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

குறுங்கதை : 15 - அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுங்கதை

சாதிவனம்

``மாப்ள, வேலையே இதானாடா?” என்றான் மகாலிங்கம்.

இது முதன்முறையாகக் கேட்கப்படும் கேள்வி அல்ல என்பதால் சித்தார்த்துக்குப் பழகிப்போனது. “இதுவா வேலை?”, “இதான் வேலையேவா?”, “இது ஹாபி. அப்போ என்ன வேலை பார்க்கிறீங்க?” என்று விதவிதமாகக் கேட்கப் பட்டாலும் அதன் தொனி ஒன்றுதான். அவர்களைப் பொறுத்தவரை வேலை என்பது காலையில் அலுவலகம் செல்வது, மாலை வீடு திரும்புவது. இரண்டு கட்டடங்களுக்கு இடையேயான நிகழ்வுதான் வேலை. ஆனால் சித்தார்த், மனிதர்கள் எங்கிருந்து இந்தக் கட்டடங்களுக்கு வந்தார்களோ அங்கு சென்றான். காடுகளுக்கு! அவன் இந்தியாவின் முக்கியமான கானுயிர்ப் புகைப்படக் கலைஞன். ஆனால் அந்த ‘முக்கியமான’ என்பதன் முக்கியத்துவம் பலருக்குத் தெரிவதில்லை.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

இன்ஜினீயரிங் படித்து முடித்தாலும் அவனுக்கு போட்டோகிராபியில்தான் ஆர்வம் அதிகம். அதிலும் வைல்டு லைஃப் போட்டோகிராபியில் மனசு சென்றது. உலகம் முழுக்கக் காடுகள், மலைகள், நீர்நிலைகள் என வெவ்வேறு பரப்புகளுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்துவந்தான். விதவிதமான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், வெவ்வேறு விதமான அலகுகள், இனம்புரியாத வண்ணங்கள் கொண்ட சிறகுகள், அவற்றின் பழக்கவழக்கங்கள், காதல் என அனைத்தும் பிரமிப்பூட்டுபவை. அது, தன்னைத்தானே செல்ஃபி எடுத்துத் திரியும் இந்த மனிதர்களுக்குப் புரியாது.

“தம்பி, ஊர்ல ஸ்டூடியோ வெச்சுத்தர்றேண்டா” என்று சொல்லி அலுத்துப்போனார் அப்பா. “நீபாட்டுக்குக் காடு, மலைன்னு சுத்திக்கிட்டிருக்கே. ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா என்னாகிறது?” என்பார் அம்மா. அதுவும் உண்மைதான். ஒருமுறை ஜிம்கார்பெட் பூங்காவில் ஒரு சிறுத்தையைப் படம் பிடிக்கும் ஆர்வத்தில் சென்றுவிட்டான். ஒருபக்கம் அடர்ந்த காடு. இன்னொரு பக்கம் ஆழமான பள்ளத்தாக்கு. மிகக்குறுகலான ஒற்றையடிப் பாதையில் சென்றபோது எதிரில் யானை தன் இரண்டு குட்டிகளுடன் வந்துவிட்டது. பேசாமல் நின்றுவிட்டான். சிறிதுநேரம் கழித்து அதுவே கடந்துபோனது. இப்படியான பல சந்தர்ப்பங்கள்.

“இதான் வேலையா?” என்று கேட்பவர்களின் இரண்டாவது கேள்வி, “சிங்கம், புலியெல்லாம் பாத்திருக்கியா?” என்பது. சித்தார்த் புலி, சிறுத்தை பார்த்திருக்கிறான். ஆனால் சிங்கம் பார்த்ததில்லை. கிர் காடுகளில் மாதக்கணக்கில் தவமிருந்தும் அவனால் ஒரே ஓர் ஆசிய சிங்கத்தைக்கூடக் காண முடியவில்லை.

தங்கைக்கு ஃபாரீனில் வேலை கிடைத்திருக்கிறது. ஒப்பந்தப்படி மூன்றாண்டுகள் இந்தியா திரும்ப முடியாது. “கொஞ்சநாள் எங்ககூட வந்து இரேன்” என்ற தங்கையின் வேண்டுகோளுக்கு ஏற்ப மூன்று மாதங்கள் காட்டுக்கு விடுப்பு எடுத்திருக்கிறான். இடைப்பட்ட காலத்தில் தன் பள்ளி, கல்லூரி நண்பர்களைத் தேடித்தேடிப் பார்க்கிறான். பள்ளி நண்பன் சீனியின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா. “உன்கூட படிச்சவன்லாம் கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துட்டாங்க. நீ கரடிக் குட்டியை போட்டோ எடுக்கி றேன், கழுதைக்குட்டியை போட்டோ எடுக்கிறேன்னு அலைஞ்சுக்கிட்டிருக்கே” என்றார் அம்மா.

ண்டபத்து வாயிலில் பெரிய பேனர் வைக்கப்பட்டி ருந்தது. சீனியின் மகள் சிரிக்கும் புகைப்படத்தின் அருகில் சிங்கம் ஒன்று வாயைத் திறந்து கர்ஜித்தது. கீழே ‘எங்கள் இன செல்லக்குட்டி ஸ்ரீதனாவை வாழ்த்தும் வீரச்சொந்தங்கள்’ என்ற வாசகத்தின் கீழ் இரண்டு இளைஞர்கள் செல்போன் பேசியபடியே கேமராவைப் பார்க்க, ஒருவர் மீசையை முறுக்கியபடியும் இன்னொருவர் அகலச் சிரித்தபடியும் காட்சியளித்தார்கள்.

“என்னடா, பேனர்ல சிங்கம்லாம் போட்டிருக்கீங்க?” என்றான் சித்தார்த் சீனியிடம்.

“அது எங்க சாதிச்சங்கத்துக் காரங்க வெச்ச பேனர்டா”

“சிங்கம் உங்க சாதியா?”

“உன் நக்கல் இன்னும் போகலை பார்த்தேல்ல, சிங்கம் மாதிரி வீரமான சாதின்னு சொல்றோம்.”

“அதுசரிடா, குழந்தையோட முத பொறந்தநாளுக்கேவா?”

“காட்டுல இருந்து இருந்து உனக்கு நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியலை” என்றான் சீனி.

விழாவில் தன் பழைய நண்பர்களைப் பார்த்தான். அங்கேதான் மகாலிங்கம் ‘`இதான் வேலையாடா?” கேள்வியைக் கேட்டான்.

“ஏண்டா இதில ஆபத்து இல்லையா?” என்றான் நண்பன் பாஸ்கர்.

``எதுலதான் ரிஸ்க் இல்லை? டிரைவர் வண்டி ஓட்டுறாரு. எப்ப வேணும்னாலும் ஆக்ஸிடென்ட் ஆகலாம். டிரைவர்னு இல்லை, வண்டி ஓட்டுற யாருக்கும் எதுவும் நடக்கலாம். செப்டிக் டேங்க் சுத்தம் பண்றவங்க கேஸ் அடிச்சு சாகறதில்லையா?” என்றான் சித்தார்த்.

“கருமம், எதைப்போய் எதோட கம்பேர் பண்றே?” என்றான் மகாலிங்கம்.

தன் இன்ஸ்டாகிராம் பக்கம் போய், தான் புகைப்படம் எடுத்த விலங்குகள், பறவைகள், பூச்சிகளைக் காட்டி நண்பர்களிடம் விவரித்தான் சித்தார்த்.

“எந்த பயங்கர மிருகம்னாலும் இப்போ மகா பயப்பட மாட்டான். ஏன் சொல்லு?” என்றான் பாஸ்கர்.

“ஏன்?” என்றான் சித்தார்த்.

“அவனுக்குத்தான் போன மாசம் கல்யாணம் ஆகிடுச்சே. பொண்டாட்டி வந்தபிறகு, சிங்கம் புலிக்கு பயப்படவா போறான்?” என்ற பாஸ்கரை முதுகில் அறைந்து ஓங்கிச் சிரித்தான் மகாலிங்கம்.

குறுங்கதை : 15 - அஞ்சிறைத்தும்பி

“வாழ்த்துகள்டா. சொல்லவேயில்லை?” என்றான் சித்தார்த்.

“ஆமா, காட்டுக்குள்ள வந்து உனக்குக் கல்யாணப்பத்திரிகை வைக்கச் சொல்றியா? சரி, நீ மூணுமாசம் இங்கேதானே இருக்கே, வர்ற சண்டே கோயம்புத்தூர் வீட்டுக்கு வா. என் ஒய்பை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்றான் மகாலிங்கம்.

சாய்பாபா காலனியில் பெரிய வீடுதான். மகாலிங்கத்தின் மனைவி, கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அளந்து அளந்து பேசினாள். சிரிப்பும் அளந்தபடி இருந்தது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு மகாலிங்கத்தின் அம்மா கண்ணைக் காட்ட, உள்ளே அறைக்குப் போய்விட்டாள்.

ஹாலில் சித்தார்த்தும் மகாலிங்கமும் பேசிக் கொண்டிருக்க, மகாலிங்கத்தின் அம்மா கல்யாண ஆல்பத்தை சித்தார்த்தின் கைகளில் கொடுத்துவிட்டு, டிவியில் சீரியல் பார்க்கத் தொடங்கினார்.

திறந்தவுடனே மகாலிங்கம் மணமகள் தோளில் கைவைத்து நிற்க, இருவரும் எங்கோ மூலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னொரு புகைப்படத்தில் அந்தப் பெண் காதில் இருந்த ஜிமிக்கியை வருடிக்கொண்டிருந்தார். மற்றொரு புகைப்படத்தில் பாரதிராஜா பட நாயகிகள்போல் கன்னத்தில் கைவைத்து சிரித்துக்கொண்டிருந்தார்.

“இன்னுமாடா இதேமாதிரி போட்டோ எடுத்துக்கிட்டிருக் காங்க?” என்றான் சித்தார்த்.

“அதெல்லாம் மாறிடிச்சுடா. இப்பல்லாம் வெட்டிங் போட்டோகிராபின்னு டூயட்லாம் பாட வெச்சு சினிமா மாதிரி எடுக்கிறாங்க. சேத்துல புரள வெச்செல்லாம் கூத்தடிக்கிறாங்க. ஆனா எங்க அம்மாகிட்ட சொன்னா கொன்னுடும்” என்றான்.

சித்தார்த் ஆல்பத்தைப் புரட்டினான். புகையால் கலங்கிய கண்களுடனும் தலையில் சிதறியிருந்த அட்சதைகளுடனும் இருவரும் மாறி மாறிக் கால்களில் விழுந்தனர். நலங்கு வைபவம், ஆசீர்வாதம் என்று தொடர்ந்த பக்கங்களின் நடுவில் பழைய பள்ளி நண்பர்கள் வந்திருந்த புகைப்படங்களைப் பார்த்தான்.

“ஆமா, உனக்கு குளோஸ் ஃபிரெண்ட் முரளிதானே?”

``ஆமாடா. ரெண்டு பேரையும்தான் ட்வின்ஸ் ராஸ்கல்ஸ்னு திட்டுவாரே சேவியர் சார்?’’

“ரெண்டுபேரும் ஸ்கூல் கட் அடிக்கிறது, கிளாஸ்ரூம்ல பட்டாசு வெடிக்கிறதுன்னு அவ்ளோ அநியாயம் பண்ணீங்களே?”

“ஏண்டா நல்ல விஷயமே உனக்கு ஞாபகத்துக்கு வராதா?”

“ஸாரிடா. நீங்க ரெண்டு பேரும் காந்தியோட உப்புச் சத்தியாக்கிரகம் போனது, கார்கில் போர்ல கலந்துக் கிட்டதெல்லாம் ஞாபகம் வருதுடா.”

“அப்புறம் நாங்க ரெண்டு பேரும் அப்துல் கலாமோட சேர்ந்து அணுகுண்டு வெடிச்சதை விட்டுட்டே?”

“ஆமால்ல, ஸாரிடா மறந்துட்டேன்” என்றவனை முதுகில் அறைந்து உரத்துச் சிரித்தான் சித்தார்த்.

“சரி அவன் கல்யாணத்துக்கு வரலையா?”

“வந்தான் வந்தான்” என்ற மகாலிங்கத்தின் குரலில் அலைவரிசை மாறியிருந்தது.

“போட்டோ எடுக்கலையா?”

“எடுத்தான்...”

“ஆல்பத்தில அவன் போட்டோவைக் காணோமே?” என்று சித்தார்த் கேட்க, “அம்மா, குடிக்கத் தண்ணி கொண்டுவா” என்றான் மகாலிங்கம்.

சீரியலிலிருந்து முகம் திருப்பி, தண்ணீர் எடுக்கப்போன அம்மாவின் முகத்தில் சலிப்பு தெரிந்தது.

குறுங்கதை : 15 - அஞ்சிறைத்தும்பி

“டேய், முரளி என்ன செஞ்சான் தெரியுமா? ஒரு எஸ்.சி பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டாண்டா” என்றான் மகாலிங்கம்.

“செரி…” என்றான் சித்தார்த், ‘அப்புறம்?’ என்ற தொனியில்.

“என்ன செரி? எவ்ளோ பிரச்னை ஆயிடுச்சு தெரியுமா, முரளி வீட்டுல ரெண்டுபேரையும் வெட்டிப்போடறதுக்குத் தேடினாங்க. அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல பஞ்சாயத்து வெச்சு, ‘உனக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ன்னு எழுதிக்கொடுத் துட்டாங்க.”

“நீங்கதான் கல்யாணம் பண்ணி வெச்சீங்களா?”

“வைப்பாங்க நல்லா. ஏண்டா நீ வேற. அவன் காலேஜ் ஃபிரெண்ட்ஸ் கல்யாணம் செஞ்சு வெச்சிருக்காங்க. நான் அவனுக்குப் பத்திரிகைலாம் வைக்கலை. அவனாதான் பொண்டாட்டியைக் கூட்டிட்டு வந்தான். கல்யாணத்துக்குப் பிறகு ஊருல அவங்க வந்த விசேஷம் இதான்.”

“சரிடா. அவன் போட்டோ ஏன் ஆல்பத்தில இல்லை?”

“டே சித்து. இங்கெல்லாம் எஸ்.சி பொண்ணைக் கட்டிக்கிட்டவனைக் கல்யாணத்துக்குக் கூப்பிட மாட்டாங்க. போட்டோ எடுத்தாலும் அதை ஆல்பத்தில சேர்க்கமாட்டோம். மத்தவங்க பார்த்தா சங்கடப்படு வாங்கல்ல?”

“என்னடா அநியாயமா இருக்கு.”

“நீ காட்டுல இருந்து இருந்து மனுசங்க பழக்கவழக்கம்லாம் மறந்துட்டே” என்று மகாலிங்கம் சொல்லிக் கொண்டிருந்தபோது, அம்மா சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். சட்டென்று அமைதியான மகாலிங்கம் மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.

சித்தார்த் ஆல்பத்தைப் புரட்ட, எல்லா உருவங்களும் தலையில்லாத முண்டங்களாகத் தோன்றின. முரளியின் புகைப்படம் இருக்கவேண்டிய தடயத்தைத் தேடித் தேடித் தடவிக்கொண்டிருந்தன சித்தார்த்தின் விரல்கள்.

- தும்பி பறக்கும்...