Published:Updated:

குறுங்கதை : 18 - அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை

பூனைகள் விளையாடும் மதுக்கூடம்

குறுங்கதை : 18 - அஞ்சிறைத்தும்பி

பூனைகள் விளையாடும் மதுக்கூடம்

Published:Updated:
குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை

கோப்பையைக் காலி செய்துவிட்டு, கசப்பு நீங்க முகத்தைச் சுளித்து, மூக்கை உறிஞ்சி, நாக்கில் சத்தமெழுப்பினான் கார்த்தி. அப்போது அவன் கால்களில் ஏதோ ஒன்று உரசும் உணர்வு வர, அனிச்சையாகக் காலை உதறினான். தெறித்து ஓடியது பூனைக்குட்டி.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

இந்த மதுக்கூடத்தில் நான்கு பூனைக்குட்டிகள் இருந்தன. பழுப்பு, கறுப்பு, சாம்பல் மற்றும் வெண்மை. மதுக்கூடமெங்கும் சிதறிக்கிடக்கும் மீன் எலும்புகள், இறைச்சி மிச்சங்களுக்காகவே கால்களைச் சுற்றிச் சுற்றி வரும்.

‘`வெள்ளை நிறத்திலொரு பூனை - எங்கள்

வீட்டில் வளருது கண்டீர்!

பழுப்பு நிறத்திலொரு பூனை - எங்கள்

பாரில் வளருது கண்டீர்!” என்று ஒருமுறை உற்சாக மிகுதியால் பாட்டுப் பாடினார் இலக்கிய விமர்சகர் கோவிந்தன். யாருமில்லாமல் தனியாகக் குடிக்க வரும்போது இந்தப் பூனைகளைப் பார்த்தவாறு மதுவருந்துவது கார்த்தியின் பொழுதுபோக்கு. இவனிடம் உதைபட்ட பூனை இரண்டு மேஜைகளுக்கு அப்பால், ஒரு வாட்டர் பாக்கெட்டைக் காலால் பிடித்து, வாயால் கடித்து இழுக்கும் முயற்சியில் இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பூனைக்கா பயந்துட்டீங்க புரட்சிக்காரரே?” என்று சிரித்தார் எதிரில் இருந்த கவிஞர் சில்வியா குண்டலகேசி. ஆண்தான். பழந்தமிழ் இலக்கியமான குண்டலகேசியையும் அமெரிக்கப் பெண் கவிஞர் சில்வியா பிளாத்தையும் இணைத்து தனக்குப் புனைபெயர் வைத்துக்கொண்டார்.

“ ‘மந்திரிகுமாரி’ படம் பார்த்திருக்கீங்களா... ‘வாராய்... நீ வாராய்’னு பாட்டுப் பாடிட்டுப் போய், தன்னைக் கொல்ல நினைச்ச புருஷனை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டவ குண்டலகேசி. சில்வியா பிளாத் தற்கொலை செஞ்சு செத்துப்போன கவிஞர். ஒரு கொலை, ஒரு தற்கொலை - இதுக்கிடையிலதான் என்னோட கவிதை” என்று தன் பெயருக்கு விளக்கமளிப்பார்.

“நாய்கிட்ட இருந்து விசுவாசத்தைக் கத்துக்கிடலாம். ஆனா, பூனைகிட்ட இருந்து எதையும் கத்துக்க முடியாது” என்றார் சில்வியா.

“போயும் போயும் பூனைகிட்ட கத்துக்கிற நிலைமையிலேயா மனுசங்க இருக்காங்க?” என்றான் கார்த்தி அடுத்த கோப்பையை நிரப்பியபடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“என்ன இப்படிச் சொல்லிட்டே. புலி, சிங்கம் எல்லாமே கேட் ஃபேமிலிதான். நாய்க்கு ஒரு பிஸ்கட் போடு, வாலை ஆட்டிக்கிட்டே சுத்திச் சுத்தி வரும். ஆனா பூனை அப்படியில்லை. அதுக்கு விசுவாசம்லாம் கிடையாது. தனக்கு என்ன தேவையோ அதை எடுத்துக்கும். எத்தனை தடவை நீ மீன் முள்ளும் கறியும் போட்டிருக்கே... ஆனா, அடுத்த தடவை வரும்போது உன்னை ஞாபகம் வெச்சுக்குமா? ஆனா நாய் வெச்சுக்கும். பூனையைப் பொறுத்தவரைக்கும் அது கெஞ்சிக் கேக்காது; உரிமையோட கேக்கும்.”

“திமிர் பிடிச்ச பிச்சைக்காரன் மாதிரி.”

“மாமூல் கேட்கிற போலீஸ்காரர் மாதிரின்னுகூடச் சொல்லலாம்.”

இப்போது கார்த்தி திரும்பிப் பார்த்தபோது சாம்பல் நிறப் பூனையின் மீசை, போலீஸ் மீசையைப்போலவே இருந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டான். நான்காம் மேஜையில் இருந்த, தனியாகக் குடித்துக் கொண்டிருந்தவர் போதை மிகுதியில் பூனையைத் தூக்கிக் கொஞ்சப்போக, அது உதறி ஓடியது.

ந்த மதுக்கூடத்துக்கு வரும் போதெல்லாம், பூனைகளைப் பார்க்கும்போதெல்லாம் சில்வியா தவறாமல் சொல்லும் சம்பவம் தான் அது. 43-வது தடவையாக அன்றும் சொன்னார்.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

அன்று கோவையில் ஓர் இலக்கியக் கூட்டம் முடிந்து மூன்று கவிஞர்களும் இரண்டு நவீன ஓவியர்களும் மது அருந்தச் சென்றிருக்கிறார்கள். “இலக்கியச் சந்திப்புங்கிறது என்ன தெரியுமா... இலக்கியக் கூட்டத்துக்கு வெளியில நடக்கிறதுதான் இலக்கியச் சந்திப்பு” என்று கவிஞர் ஞானசீலன் அடிக்கடி சொல்வார். சில்வியா ஞானசீலனிடமிருந்தும், அவர் கவிதைகளிடமிருந்தும் எதைக் கற்றுக்கொண்டாரோ இல்லையோ இந்தப் பொன்மொழியைக் கற்றுக்கொண்டார்.

மதுச்சாலைகளுக்கு வெளியிலும் இலக்கிய விவாதம் தொடர்ந்திருக்கிறது. உரத்துச் சத்தமிட்டபடி ஐவரும் சாலைகளை அடைத்தபடி சென்று கொண்டிருக்க, இரண்டு போலீஸ் காரர்கள் கூப்பிட்டு சில்வியாவையும் ஞானசீலனையும் அறைந்திருக்கிறார்கள்.

“ரோட்டுல ஒழுங்காப் போகமாட் டீங்களா, ஊரையே அலசிட்டுப் போறீங்க... எந்த ஊருய்யா நீங்க?”

“நாங்க கவிஞர்களுங்க.”

“எந்தப் படத்துக்குப் பாட்டு எழுதியிருக்கீங்க?”

அவர்களுக்குக் கவிஞர்கள் என்றால் சினிமாவில் பாட்டெழுதியிருக்க வேண்டும். இவர்கள், `குதிரைவீரன் பயணம்’, `நவீன விருட்சம்’, `புது எழுத்து’ என்று இலக்கியப் பத்திரிகைகளின் பெயர்களைச் சொல்ல, ‘மலையாள சினிமாபோல இருக்கு’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்களாம்.

சும்மா இல்லாமல் சில்வியா “சார், இவங்க ரெண்டு பேரும் மாடர்ன் ஆர்ட்டிஸ்ட்” என்று சொல்லியிருக்கிறார்.

“எந்தப் படத்துல நடிச்சிருக்கீங்க?” என்று கேட்ட போலீஸ்காரர்கள் குரலில் அப்போது கொஞ்சம் மரியாதை ஏறியிருந்தது.

“நடிகர்கள் இல்லை சார். ஓவியர்கள். நவீன ஓவியர்கள். `காலயுகம்’, `இமை’ பத்திரிகையில எல்லாம் ஓவியம் வரைஞ்சிருக்கோம்” என்றார்கள்.

சட்டென்று மரியாதை குறைய, சில விநாடிகள் யோசித்த போலீஸ்காரர் பேன்ட் பாக்கெட்டைத் துழாவி, ஒரு வெள்ளைப் பேப்பரைக் கையில் கொடுத்திருக்கிறார்.

“எங்கே பூனைப் படம் வரைங்க, பார்ப்போம்.”

சில விநாடிகள் தயங்கியவர்கள், வேறு வழியில்லாமல் வரையத் தொடங்கியிருக்கிறார்கள். பத்து நிமிடங்களில் நவீன ஓவியப் பூனை அந்தக் காகிதத்தில் துள்ளிக் குதித்தது. ஆனால், அந்த போலீஸ்காரர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திருந்த எந்தப் பூனையைப்போலவும் இல்லை அது. பூனையின் மீசையையும் வாலையும் தேடிப்பார்த்து ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அந்தக் காவலர்கள். எதிர்பாராத நேரத்தில் இருவரின் பிடரியிலும் அடி விழுந்திருக்கிறது.

“ஒரு பூனைப் படம் ஒழுங்கா வரையத் தெரியலை. மாடர்ன் ஆர்ட்டிஸ்ட்டாம்!”

ரு ஞாயிற்றுக்கிழமை சென்னை நடுக்குப்பத்தில் மீன் வாங்கினான் கார்த்தி. அங்கேயும் பூனைகள். மீன் கடைகளுக்குப் பக்கத்தில் எப்போதும் பூனைகள் உலவுகின்றன. அவை தங்களுக்கு ஒரு மீன் முள்ளோ, இறாலின் எச்சமோ எறியப்படும் வரை காத்திருக்கின்றன. எப்போதுமே பூனைகள் நம் கண்களை உற்றுநோக்கும். அவற்றுக்கு பயம் இருந்ததில்லை. அந்தக் கண்களில் பிரியத்தையோ, நட்பையோ, ஏமாற்றத்தையோகூட நம்மால் உணர முடியாது. இன்னும் சொல்லப்போனால் வேண்டு கோள்கூடத் தேங்கி நிற்பதில்லை. எப்போதும் பூனையின் கண்களில் ஆணைதான் இருக்கிறது என்று தோன்றியது கார்த்திக்கு.

குறுங்கதை : 18 - அஞ்சிறைத்தும்பி

நடுக்குப்பத்தில்தான் ஜான்சனைச் சந்தித்தான். ஜான்சனை இதற்கு முன்பு கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நடத்தப் பட்ட ஓர் இலக்கியக்கூட்டத்தில் சந்தித்திருக்கிறான். அதற்குப் பிறகு புத்தகக் கண்காட்சியில் ஒரு நண்பர் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். நடுக்குப்பத்தில் பார்த்தவுடன் ஜான்சன் பரிச்சயத்தின் சினேகம் காட்டிச் சிரித்தார்.

“வாங்க சார், டீ சாப்பிடப் போலாம்” என்று அழைத்தார் ஜான்சன்.

“வர்ற ஞாயித்துக்கிழமை ‘ஜனவரி 23’ன்னு ஒரு ஆவணப்படம் போடறாங்க. வந்துடுங்க சார்” என்றார் ஜான்சன்.

“எதைப் பத்தி?”

“ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு போலீஸ் எங்க குப்பத்துல நுழைஞ்சு அடிச்சாங்களே அதைப் பத்தி சார்” என்றார் ஜான்சன்.

ன்றே கால் மணி நேரம் ஓடிய ஆவணப்படத்தில் போலீஸ் செய்த அத்துமீறல்களை, பாதிக்கப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் விளக்கினார்கள். போலீஸால் தாக்கப்பட்டுக் கண் பாதிக்கப்பட்டிருந்த இளைஞனும் அவன் தாயும் வந்திருந்தார்கள்.

கூட்டம் முடிந்து வெளியே வந்து கார்த்தியும் ஜான்சனும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“போலீஸ் அடிக்கலாம், துப்பாக்கிச்சூடு நடத்தலாம். எல்லாம் செஞ்சுட்டு ‘சமூக விரோதிகள் ஊடுருவல்’னு ஒத்தைவரியில முடிச்சிடுறாங்கல்ல ஜான்சன்?”

“ஆமா சார். அதைச் சொல்றதுக்குத்தான் அரசாங்கத்தில இருந்து பெரிய பெரிய நடிகர்கள் வரைக்கும் இருக்காங்கல்ல. டாக்குமென்ட்ரியில பாதிக்கப்பட்டவங்க பேசினதைக் கேட்டீங்கல்ல... சமூக விரோதின்னா என்ன சார்? தன்னைவிட வலிமை குறைஞ்சவங்களை அடிக்கிறது,பொண்ணுங்களைத் தரக்குறைவாப் பேசுறது, உடைமைகளைச் சூறையாடறது. இதையெல்லாம் செஞ்சது போலீஸ். ஒரு வீட்டில பூந்து ரெண்டு செல்போனை எடுத்துட்டுப் போனதை ஒரு பையன் வீடியோவில சொல்றான். அப்போ சமூக விரோதி யார் சார்? நல்லா யோசிச்சுப் பாருங்க. கடல்ல மீன் பிடிக்கிற எங்களுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம்? இல்லை, அந்த பீச்சுல உக்காந்திருந்தவங்களில பாதிப் பேரு வாழ்நாளில ஜல்லிக்கட்டையே நேர்ல பார்த்திருக்க மாட்டாங்க. போராட்டம் பண்ணுனவங்களை போலீஸ் அடிச்சுச்சு. அவங்க எங்க குப்பம் பக்கம் ஓடி வந்தாங்க. அதுக்கப்புறம் போலீஸும் குப்பத்துல பூந்து அடிச்சு நொறுக்கிடுச்சு” என்றார் ஜான்சன்.

பூனைகள் விளையாடும் மதுக்கூடம்
பூனைகள் விளையாடும் மதுக்கூடம்

ரு சனிக்கிழமை மதியம் கார்த்தியும் சில்வியாவும் மட்டும் மது அருந்திக்கொண்டிருந்தார்கள். மதுச்சாலையில் கூட்டமில்லை. பேச்சு அரசியல், குடியுரிமை பாதுகாப்புச் சட்டம், போராட்டம் என்று போய்க்கொண்டிருந்தது. அடுத்த மேஜையில் தனியாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தவரும் வந்து இணைந்துகொண்டார். அவர் போலீஸ்காரர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது மதுவின் கசப்பு இன்னும் அதிகமானதைப்போல் இருந்தது இருவருக்கும்.

“எப்ப பார்த்தாலும் போராட்டம், போராட்டம்னா நாடு எப்படி சார் முன்னேறும்? நாட்டைக் காப்பாத்துறது எங்களை மாதிரி போலீஸ்தான் சார்” என்றார் அந்த மீசை போலீஸ்காரர்.

“என்ன சார் சொல்றீங்க, இவ்ளோ தொந்தியும் தொப்பையுமா இருக்கீங்க. நீங்க எப்படி சார் நாட்டைக் காப்பாத்துவீங்க?” என்றார் சில்வியா.

“சார், இப்பவும் நான் 100 தண்டால் எடுப்பேன். பார்க்கிறீங்களா?” என்றவர், நாற்காலிகளை ஒதுக்கிவிட்டு, இருவரும் எதிர்பாராத நேரத்தில் தரையில் தண்டால் எடுக்க ஆரம்பித்தார்.

நெத்திலிக் கருவாட்டை உண்பதில் மும்முரமாக இருந்த அந்தப் பழுப்பு நிறப் பூனை நிமிர்ந்து போலீஸ்காரரைப் பார்த்துவிட்டு, மீண்டும் மீனைச் சாப்பிட ஆரம்பித்தது.

- தும்பி பறக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism