Published:Updated:

குறுங்கதை : 2 - அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை

தற்கொலைஃபிளாட்

குறுங்கதை : 2 - அஞ்சிறைத்தும்பி

தற்கொலைஃபிளாட்

Published:Updated:
குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

நாள்தோறும் அந்தியில் பூத்தது

பூவோ இது வா.....

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிங்டோனைப் பாதியில் நிறுத்திப் பேசினேன்.

“ஹலோ”

“இளையராஜா குரல்வளையை நெறிக்காதீங்கண்ணா” - கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான் எதிரில் இருந்தவன். இதற்குத்தான் நான் இங்கெல்லாம் வருவதில்லை. எனக்குக் குடிக்கும் பழக்கமும் கிடையாது. ரகு என் நண்பன். பிறந்தநாள் என்று டாஸ்மாக் கூட்டி வந்துவிட்டான். அவனின் நண்பன்தான் இளையராஜாவுக்காக மிகுபோதையில் அழுகிறவன். நான் ரகுவை முறைத்தபடி கடைக்கு வெளியே வந்துவிட்டேன். போனில் தமிழ்ச்செல்வன். வீடு விஷயமாகத்தான் பேசுவான்.

“சொல்லு தமிழ்.”

“அந்த வீடுதான்... எனக்கு ஒண்ணும் பிரச்னையில்லை. என் மனைவிதான் ரொம்ப பயப்படுறாங்க.”

“ம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“எதையாவது சொல்லிக் கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு வந்துடலாம். ஆனா தொடர்ந்து வீட்டுல இருக்கணுமில்லை?” என்றபடி பத்துநிமிடம் தன்னிலை விளக்கமளித்தான். பத்திரிகையாளன். மடிப்பாக்கத்தில் எனக்கு மூன்று ஃபிளாட்டுகள் இருக்கின்றன. அதில் ஒரு ஃபிளாட்டில் வசித்த ஓர் இளைஞன் தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டான். ஏழு மாதங்களாகிவிட்டன. ஒருவரும் குடிவரத் தயாராக இல்லை. தமிழ்ச்செல்வனுக்குக் கடவுள், பேய் இரண்டின்மீதும் நம்பிக்கையில்லை. ஆனால் அவன் மனைவிக்கு இரண்டின்மீதும் நம்பிக்கையிருந்தது; தன் கணவனின் கொள்கைகள்மீது மட்டும் நம்பிக்கையில்லை. குற்றவுணர்வுடன் நீண்டநேரம் விளக்கிக்கொண்டிருந்தவனிடம் பேச்சை மாற்றினேன்.?

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

“நீ ஆணவக்கொலை பத்தி எழுதின கட்டுரை படிச்சேன். நல்லா இருந்துச்சு.”

“ப்ச். அந்தக் கட்டுரை எழுதி பிரின்டுக்குப் போய் புத்தகம் வர்றதுக்குள்ள ரெண்டு ஆணவக்கொலை நடந்திடுச்சே?” - பத்துநிமிடங்கள் அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தேன். மிஸ்டு கால் வந்திருந்தது. அதே மடிப்பாக்கம் வேறொரு பிளாட்டில் வசிக்கும் வெங்கட்டிடம் இருந்து போன். ஆந்திராக்காரன். கண்டிப்பாகத் தண்ணீர்ப்பிரச்னை பற்றிப் பேசத்தான் கூப்பிட்டிருப்பான். லாரித் தண்ணீருக்குச் சொல்லவேண்டும் என்பான். அதற்கான பணமும் வீட்டு உரிமையாளர்தான் தரவேண்டும் என்பான். எப்படியும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அழைப்பான். புகார் தெரிவிக்க மட்டுமே அழைப்பவன். மீண்டும் அழைத்தால் பேசிக்கொள்ளலாம். ரகுவிடம் கைகுலுக்கி வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். இளையராஜா ரசிகன் கண்கள் செருகியபடி, ஒரு சிகரெட்டை இழுத்துக்கொண்டி ருந்தான்.

இரவு மீண்டும் அழைத்த வெங்கட், தன் நண்பனுக்குத் தெரிந்த ஒருவர், அந்தத் தற்கொலை ஃபிளாட்டைப் பார்க்க மறுநாள் காலை வருவதாகச் சொன்னான்.

நான் காலையில் அங்கிருந்தேன். பத்து நிமிடங்களிருக்கும், ஒரு நடுத்தர வயதுக்காரரைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, வேலைக்கு நேரமாவதாகச் சொல்லிவிட்டு வெங்கட் போய்விட்டான். அவர் வீட்டுக்குள் நுழைந்தார். அவர் நின்றார் என்பதைவிட, கால்பந்து மைதானத்தில் பந்தை உதைக்கத் தயாரானவனைப் போல் உடல் ஒருபக்கம் சாய்ந்து நின்றார். அழைத்துச் சென்று இரண்டு படுக்கையறைகளையும் சமையலறையையும் கழிப்பறைகளையும் காட்டி, ஹாலுக்கு வந்தேன். உட்கார்வதற்கு நாற்காலிகள் ஏதுமில்லை. சன்னலில் சாய்ந்தபடி பேசத் தொடங்கினேன்.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

“நீங்க மட்டும் தனியாளா வந்திருக்கீங்க?”

“ஓம். என் தங்கை அவுஸ்திரேலியாவில இருக்கிறா. அவளுக்கு ஒரு மக உண்டு. உடல்நலம் சரியேல்ல. நண்பர் வீட்டில நிக்கிறா” என்றார்.

“நீங்க மலையாளமா?”

“இல்லை. தமிழாளுதான். சிலோன்.”

“சிலோனா? வெங்கட் ஒண்ணும் சொல்லலையே?”

“ஓ, கதைச்சிருப்பார் எண்டு நினைச்சேன்” என்றபடி அங்கிருந்த ஓவியம் ஒன்றை உற்றுப்பார்த்தார். ஒரு கறுப்பினக் குழந்தை ஓவியம். சிரிக்கிறதா, சோகமா என்று தெரியாத மாதிரியான முகபாவனை.

“இதை வரைஞ்சவர் பேர் ராகவனோ?”

“ஆமாம்” என்றபடி யோசிக்கத் தொடங்கினேன். இலங்கைக்கா ரருக்கு வீடு தருவதா? ஏழு மாதங்களாச்சு, யாரும் குடிவரத் தயாரில்லைதான். ஆனாலும் இவருக்கு வீடு தந்தால் நாளை ஏதாவது பிரச்னை என்றால்..?

“என்ன யோசிக்கிறீங்க? என் தங்கை மகள் இங்கே ஒரு இன்ஸ்டிட்யூட்டில் விஸ்காம் படிக்கிறா. அதுக்காகத்தான் இங்கே நிக்கிறோம்.”

வேகவேகமாக அவர் பேசியதில் வார்த்தைகளைத் தடயம் கண்டு, ஓரளவு நானாக யூகித்துக்

கொண்டேன். ‘இருக்கிறோம்’ என்பதை ‘நிக்கிறோம்’ என்று அவர் சொல்லும்போதெல்லாம் விநோதமாக இருந்தது.

“புலியாக இருப்போம் எண்டு தயங்கிறீங்களோ?”

“அவங்கதான் இப்ப இல்லையே?”

“எங்களால எந்தப் பிரச்னையும் வராது. இதுவரை பன்னெண்டு வீடு பார்த்துட்டோம். யாரும் தரேல்லை. இந்த வீட்டு வாடகைப்பணமும் குறைவா இருந்தது. எங்கட ஆக்களுக்கு வாடகை விடுறதெண்டால் அதிகப்பணம் கேப்பாங்க. இது உங்கட ஆக்களுக்கு விடுறதைவிடக் குறைவா இருந்தது.”

“வெங்கட் உங்ககிட்ட ஒண்ணும் சொல்லலையா?”

அவர் குழப்பத்துடன் தலை யாட்டினார். அவன் புகார்களைத் தவிர எதையும் சொல்ல மாட்டான்போல. நானே சொல்ல வேண்டியதுதான்.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

“இந்தப் படம் வரைஞ்சானே ராகவன்னு ஒரு பையன். ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்தான். இங்கேதான் தங்கியிருந்தான். நல்ல பையன்தான். அவனுக்கு பர்சனல் பிராப்ளம். ஏழு மாசத்துக்கு முன்னாடி தூக்கு மாட்டிட்டு செத்துட்டான். சும்மா செத்தாலும் பரவாயில்லை. அதை டிக்டாக் வீடியோவாக்கி செத்துட்டான். பேப்பர், டி.வி, ஆன்லைன்னு ஒரே பரபரப்பாகிடுச்சு. எத்தனை தடவை ஸ்டேஷன் அலைய வேண்டியிருந்தது தெரியுமா? அதில இருந்து யாரும் குடிவரத் தயாரில்லை. பின்னே பயம் இருக்கத்தானே செய்யும்?”

நான் சொல்லி முடிக்கவும், “ஓ?” என்று மட்டும் சொன்னார் அவர். சின்ன ஆச்சர்யமோ அதிர்ச்சியோ இல்லை. அந்த ஓவியத்தைப் பார்க்கும்போது அவர் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகூட இதைக் கேட்ட போதில்லை. எனக்குத்தான் ஆச்சர்யமாக இருந்தது.

“உங்களுக்குப் பேய்பயம் கிடையாதா?”

“பேயா?” என்று சிரித்தவர், ‘தவறாக நினைத்து விடுவேனோ’ என்று நினைத்தாரோ என்னவோ நிறுத்திவிட்டார்.

“எங்கட வீட்டில மொத்தம் ஆறு சாவு. 1983 அப்போதான் முதல் இனக்கலவரம் வெடிச்சது. அப்போ எங்க மாமா, அம்மம்மா செத்துப்போனாங்கள். அப்புறம் ஆமி குண்டுவீச்சில அப்பா செத்துப்போனார். ராகவனும் யுத்தத்தில செத்துப்போனான். கடைசியா 2009-ல ரெண்டு சாவு. மிச்சம் எஞ்சினது என் தங்கையும் அவ மகளும். அவளுக்கும்கூட மேலே விமானம் பறக்கும்போதெல்லாம் அப்பப்போ பயம் வரும்” நிதானமாகச் சொல்லிமுடித்தார்.

நான் கறுப்பினக் குழந்தையின் இடது தோளின்மீதிருந்த ராகவனின் கையெழுத்தைச் சில விநாடிகள் உற்றுப் பார்த்தேன்.

“குடிக்கத் தண்ணி கிடைக்குமா?”

“இங்கே இருக்காதே சார். வாங்க, கீழே போய் டீ சாப்பிடலாம்.”

சாவிக்கொத்தைக் கையிலெடுத்து அவருடன் கிளம்பினேன்.

- தும்பி பறக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism