Published:Updated:

குறுங்கதை : 20 - அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை

கைகால்களுடன் பேசுபவர்

குறுங்கதை : 20 - அஞ்சிறைத்தும்பி

கைகால்களுடன் பேசுபவர்

Published:Updated:
குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை

சாதாரணப் பகற்பொழுதில் நாம் பார்க்கும் அசோகன் வேறு; அலுவலகம் முடிந்து தன் தனியறையில் வாழும் அசோகன் வேறு.

குறுங்கதை : 20 - அஞ்சிறைத்தும்பி

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளையும் செல்லப்பிராணிகளையும் கொஞ்சுவதும் பேசுவதும் நேரங்கழிப்பதும் பலரின் வழக்கமாக இருக்கலாம். அப்படித்தான் செல்லப்பிராணிகளாய் நினைத்துத் தன் இரண்டு கைகள், இரண்டு கால்களுடன் உரையாடுவது அசோகனின் வழக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“சூப்பர்டா, இன்னைக்கு அழகா வேலை பண்ணினே. எவ்ளோ அழகான கையெழுத்து உன்னோடது. பாலு, குமார்லாம் பாராட்டித் தள்ளிட்டாங்க” என்று வலதுகையைப் பாராட்டியபடி வருடிக்கொடுப்பார். திடீரென்று இடதுகையைப் பார்க்கும்போது அவர் முகம் மாறிப்போகும். “ஏண்டா, டவுன்பஸ்ஸில உக்கார சீட்டு கிடைக்கலைன்னுதானே கம்பியைப் பிடிச்சு நின்னுக்கிட்டே வர்றேன். அதைக்கூட ஒழுங்காப் பிடிக்கத் தெரியாதா? நீ வழுக்கினதில கீழே விழத்தெரிஞ்சிருப்பேன், இந்தா இவனுக பேலன்ஸ் பண்ணினதால மானம் போகாம தப்பிச்சிச்சு” என்று இடதுகையைத் திட்டியபடி தன் இருகால்களையும் வருடிக்கொடுப்பார்.

அப்பா வாங்கிய கடன், அக்காளின் திருமணக் கடன், வேலை வாங்கியதற்காகச் செலவழித்த கடன் என எல்லாக் கடன்களையும் முடித்தபோது அசோகனுக்கு 45 வயது, திருமணம் என எல்லாம் கடந்திருந்தன. மிச்சமிருந்த ஒரே சொந்தமான அம்மாவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துபோக, இறுதிக்கடனையும் முடித்துவிட்டார். மாம்பலத்தில் ஒரு தனியறை. போதுமான சம்பளம். எந்தப் பழக்கமும் கிடையாது என்பதால் பணக்கஷ்டமில்லை. தானுண்டு, தன் அலுவலகம் உண்டு, தன் கைகால்கள் உண்டு என்று வாழ்ந்துவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்போது அவருக்கு இந்தப் பழக்கம் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. பகலில் அலுவலகத்தில் எல்லோரிடமும் இயல்பாகத்தான் பேசுவார். இயல்பாக என்றால் கலகலப்பாக, தாராளமாக என்று அர்த்தமில்லை. பேசுவார் அவ்வளவுதான். கேட்ட கேள்விக்குப் பதில், கூடுதலாக இரண்டு வார்த்தைகள். மேலும் அவருக்குக் கோபம் என்ற உணர்ச்சியே வராதா என்ற வியப்பும் அனைவருக்கும் உண்டு.

அவர் கோபப்பட்டு யாரும் பார்த்ததில்லை. மின்வாரிய அலுவலகம். மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் பிஸியாக இருக்கும். மற்றபடி எந்தப் பரபரப்புமில்லாமல்தான் இருக்கும். மின்கட்டணம் கட்டுவது, கட்டாமல் நிறுத்தப்பட்ட மின் இணைப்பு குறித்த புகார்கள், புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பங்கள் என்று வேலைகளைப் பட்டியலிட்டால் பத்துக்குள்தான் வரும்.

ன்று பேருந்தில் ஏறும்போது தவறுதலாக முட்டிமோதியதில் காலில் கடுமையான வலி. அலுவலகத்துக்கு விடுப்பெடுத்துவிட்டு அறையிலேயே தங்கியிருந்தார். மாலை ஏழு மணியிருக்கும். மேல் மாடி அறையில் தங்கியிருந்த நிஜாம் எட்டிப்பார்த்து, “ரூம்ல உனக்காக பிரியாணி வெச்சிருக்கேன். எடுத்துட்டு வரலாம்னு நினைச்சு மறந்துட்டேன். இந்தா சாவி” என்று கொடுத்துவிட்டு இறங்கிப்போனார்.

மேலே போய் எடுத்துவரலாம் என்று நினைத்தால், கால் முட்டி வலியில் தெறித்தது. 12 படிகள்தான். ஆனால் மெதுமெதுவாக அவர் படிகளை ஏறியபோது யுகாந்தரமாய் நீண்டது.

“உன்கூடப் பிறந்தவன்தானே அவன். எவ்ளோ சமத்தா இருக்கான். நீ தொல்லை கொடுத்துக்கிட்டே இருக்கியேடா” என்று இரண்டு படிகளுக்கிடையில் இடதுகாலை நொந்துகொண்டு திட்டினார். கீழே இறங்கும்போதும் வசவுதான்.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

வந்தவுடன் வலி கொஞ்சம் தணியட்டும் என்று காத்திருந்துவிட்டு பிரியாணியைச் சாப்பிட்டார். சாப்பிட்டுக்கொண்டே இடதுகாலைத் திட்டு வதும் தொடர்ந்தது. கையில் கோழியின் தொடை அகப்பட்டதும் ஒருகணம் திடுக்கிட்டுப்போனவர், அதை அகற்றிவிட்டு ஒருகவளம் சோற்றை மட்டும் சாப்பிட்டார். பிறகு மிச்ச பிரியாணியையும் எடுத்து ஓரமாக வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டார். கண்களில் நீர் வழிந்தது.

சோகனுக்குத் தன் கைகால்களை அடுத்து பிடித்த விஷயம் தன் கையெழுத்து. அச்சடிக்கப்பட்ட புத்தகத்திலிருந்து எழுந்து வந்ததைப்போலிருக்கும். மேலதிகாரிக்குக் கடிதம், புதிய விண்ணப்பங்கள் தொடங்கி கல்யாணப்பத்திரிகையில் பெயர் எழுதுவதுவரை அசோகனிடம்தான் கொடுப்பார்கள். கிளார்க் சண்முகத்துக்குக் கவிதைப் பைத்தியம். அவன் சொல்லச் சொல்ல, அசோகன் எழுதிக்கொடுப்பார். தபாலில் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைப்பான்.

ஒவ்வொரு கல்யாணப் பத்திரிகையில் பெயர் எழுதிக்கொடுக்கும்போதும் “நீங்க எப்ப சார் கல்யாணச் சாப்பாடு போடப்போறீங்க?” என்ற கேள்வியைத் தவறாமல் கேட்பான் அலுவலக உதவியாளர் பாலு. ஒரு சின்னச் சிரிப்புடன் பேருக்குக் கீழே வளைந்த கோட்டை வரைவார் அசோகன். பாலுவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. அவன் கல்யாணப் பத்திரிகையில் பெயர் எழுதிக் கொடுக்கும்போதும் தவறாமல் கேட்டான்.

“எவ்ளோ அழகா எழுதறான் பார்த்தியா, அதனாலதான் இவன் வாட்ச் கட்டியிருக்கான்” என்று தன் இடதுகையைப் பார்த்துச் சொல்லியபடி வலதுகையை வருடிக்கொடுப்பார்.

“என் ராஜா, செல்லம், நடிகைகளின் அழகுசோப் லக்ஸ் உனக்குத்தாண்டா” என்றும் வலதுகையைப் பார்த்துச் சொல்வார்.

அசோகனுக்குப் பொழுதுபோக்கு என்று பெரிதாக எதுவும் கிடையாது. காலையில் மேன்ஷனில் பேப்பர் படிப்பார். எப்போதாவது மேன்ஷன் டிவியில் பாடல்கள் பார்ப்பார். மனிதர்களின் கைகளை வேடிக்கை பார்ப்பதுதான் அவருடைய முதன்மையான பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அவ்வளவு கூட்டத்துக்கிடையிலும் கம்பியில் வாகாகச் சாய்ந்தபடி கண்டக்டர் டிக்கெட் கொடுக்கும் கைகளின் லாகவத்தை ரசிப்பார். அவர் மேன்ஷனுக்குச் செல்லும் வழியில் ஒரு பாதாம் பால் கடையும் பரோட்டாக் கடையும் இருந்தன.

மஞ்சள் சமுத்திரம்போல் சட்டியில் எப்போதும் கொதித்துக்கொண்டிருக்கும் பாதாம்பாலை ஒரு குவளையில் அள்ளி, அதன் வாயருகே டம்ளரைக் கொண்டுபோய்ச் சட்டென்று கடல் அலைபோல் விஸ்வரூபம் எடுத்து டம்ளர்களை மாற்றி மாற்றி ஆற்றும் கைகளின் வித்தையைக் கவனிப்பார். அதேபோல் குவித்துவைத்திருக்கும் பரோட்டா மாவைத் தன் வசம் இழுத்து இழுத்துப் பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக்கி பிறகு பெரிய பரோட்டாக்களாக மாற்றுவது, படுக்கை விரிப்பதைப்போல் வீச்சு பரோட்டா போடுவது ஆகியவற்றை ஆர்வமுடன் ரசிப்பார்.

எப்போதாவது மேன்ஷன் டிவியில் பாடல்கள் பார்க்கும்போது கதாநாயகர்களின் கைகளைக் கவனிப்பார். கேமராவுக்கு முன்பாகக் கைகளை என்ன செய்வது என்பது ஒரு சவால். எம்.ஜி.ஆர் நாயகிகளின் தோள்களைப் பிடித்து உலுக்கி, அதை எதிர்கொள்வார். ரஜினி பாதாம்பால் போல கைகளைச் சுழற்றி விசிறுவார் அல்லது பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்துக்கொள்வார். பாடல், நாயகி, இசை எல்லாம் எவ்வளவு சுமாராக இருந்தாலும் ராமராஜன் ‘சூப்பர்’ என்பதைப்போல், இரண்டு விரல்களை மடக்கி மூன்று விரல்களை விரித்து சைகை காட்டுவார்.

லுவலகத்துக்கு கம்ப்யூட்டர் வர ஆரம்பித்த பிறகு அசோகனின் கையெழுத்துக்கு வேலை இல்லாமல்போனது. தட்டுத்தடுமாறி அசோகனும் இரண்டு கைவிரல்களாலும் கம்ப்யூட்டரில் டைப் அடிக்கப் பழகிக்கொண்டார். அன்று மாலை “உனக்கும் நாளையில இருந்து லக்ஸ் சோப்புடா” என்றார் தன் இடதுகையிடம்.

“நீங்களும் கைப்பேசி வாங்கிக்க வேண்டியதுதானே?” என்றான் சண்முகம். புரியாமல் பார்த்த அசோகனிடம், “அதான் மொபைல் போன்” என்றான்.

ஏனோ அவருக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் அவர் வரும் வழியெங்கும் பலர் மொபைல் போன்கள் பயன்படுத்துவதையும் எல்லோர் கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றுபோல் மாறிக்கொண்டிருப்பதையும் கவனித்தார். பாதாம்பால் கடை இருந்த இடத்தில் பானிபூரிக் கடை வந்திருந்தது. நல்லவேளை பரோட்டாக் கடை அப்படியே இருந்தது. “பரோட்டாக்களுக்கு அழிவில்லை” என்று சிரித்துக்கொண்டார்.

“பார்த்தீங்களாடா, உங்க பேரை வெச்சு ஒரு இன்ஸ்ட்ரூமென்ட். கைப்பேசி. எல்லார் கையும் பேசிக்கிட்டிருக்கு” என்றார் தன் இரு கைகளைப் பார்த்தபடி. நாளை காலை சீக்கிரம் அலுவலகம் செல்ல வேண்டும். ஒருவர் கவர் ஒன்று கொண்டுவந்து தருவார் என்றும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் இணை மின்பொறியாளர் சொல்லியிருந்தார்.

லுவலகத்துக்கு யாரும் வரவில்லை. பாலுவும் இன்னும் வராதது ஆச்சர்யமாகத்தானிருந்தது. நடுத்தர வயதுக்காரர் ஒருவர் மெல்லிய பதற்றத்துடன் கொடுத்த கவரை வாங்கி, தன் மேஜை இழுப்பறையில் வைத்தார். திடீரென்று நான்குபேர் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.

குறுங்கதை : 20 - அஞ்சிறைத்தும்பி
குறுங்கதை : 20 - அஞ்சிறைத்தும்பி

ந்தது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்றும் அது இணைமின் பொறியாளருக்கு விரிக்கப்பட்ட வலை என்றும் அசோகனுக்குத் தாமதமாகத்தான் தெரியவந்தது. கவர் வாங்கிய தன் இருகைகளையும் மனதுக்குள் திட்டித்தீர்த்தார். தீவிர விசாரணையில் அன்று முழுவதும் அசோகனை வாட்டியெடுத்தனர். மறுநாள் அதிகாலை, மேலதிகாரி வீட்டின் முன் நின்றார். பாலுவுக்குத்தான் அவர் வீடு தெரியும் என்பதால் அவனையும் அழைத்துச் சென்றிருந்தார். அவரோ இன்னதென்று இல்லாத வார்த்தைகளில் அசோகனைத் திட்டித் தீர்த்தார்.

“இவ்ளோ விவரம் இல்லாமயா இருப்பீங்க? ரெய்டு வரப்போகுதுன்னு முதல்நாளே தெரிஞ்சுடுச்சு. உங்களுக்குத் தகவல் சொல்லலாம்னா எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. போன் கிடையாதாம்ல. எந்தக் காலத்து ஆள்யா நீ? என்கொயரியில என்னை எதுவும் மாட்டிவிட்டுடாதே. அப்புறம் நடக்கிறதே வேற” என்று விலாவாரியாக வசவுகளை அள்ளிக்கொட்டினார். கைகளைப் பிசைந்தபடியே குனிந்தபடி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார் அசோகன்.

போகும்போது, “ஏண்ணே, நீங்க என்ன தப்பு பண்ணினீங்க? அவன் ஒரு பிராடு. அப்படித் திட்டுறான். நிக்கிறீங்க?” என்றான் பாலு கோபத்துடன்.

காதில் வாங்கிக்கொள்ளாதபடி, “பாதாம்பால் சாப்பிடலாமா?” என்றார் அசோகன்.

சடாரென்று அவர் கைகளை பாலு விசையுடன் இழுக்க நடுவீதியில் தடுமாறிப்போனார்.

“யோவ், பொட்டையா நீ? கோபமே வராதா?” என்றான் பாலு உக்கிரமாக. எப்படியோ அந்த உக்கிரம் அசோகனைப் பற்றிக்கொண்டது.

அவரே நினைத்துப்பார்க்காத காரியத்தைச் செய்தார். காலில் கிடந்த செருப்பைக் கழற்றி பாலுவை அடித்துவிட்டார். ஒரு கண்ணில் அதிர்ச்சியும் இன்னொரு கண்ணில் ஆச்சர்யமுமாகப் பார்த்த பாலுவின் கண்கள் ஆத்திரத்துக்கு மாறிக்கொண்டிருக்க, விறுவிறுவென்று நகர்ந்துவந்துவிட்டார் அசோகன்.

றையில் நுழைந்ததும், “ஏண்டா இப்படி செஞ்சே, அடிடா அவனை” என்றபடி இடது கையால் வலதுகையை அடிக்கத் தொடங்கினார். அழுகையினூடே, “அவனுக்குத்தான் புத்தியில்லைன்னா அவன் கேட்டதும் ஏண்டா செருப்பைக் கழட்டிக்கொடுத்தே?” என்று இடதுகாலை நோக்கிக்கேட்டார்.

- தும்பி பறக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism