சினிமா
Published:Updated:

குறுங்கதை : 22 - அஞ்சிறைத்தும்பி

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

அடையாளம்

ன்னடா இது, தமிழுக்கு வந்த சோதனை!

‘தமிழரசன் முத்தலீப்’ என்ற பெயரை ஃபேஸ்புக் ஒப்புக்கொள்ளவில்லை. நீண்ட நாள்களாக இருந்துவரும் ஐடிதான். யாரும் சந்தேகம் கிளப்பினார்களா, ஃபேஸ்புக்குக்கே சந்தேகம் வந்ததா என்று தெரியவில்லை. உண்மையான அடையாளம்தானா என்பதை உறுதிசெய்ய ஆவணங்களைச் சமர்ப்பிக்கச் சொன்னது ஃபேஸ்புக். மனிதர்கள்தான் ஆவணங்களை உருவாக்குகிறார்கள். பின் அந்த மனிதர்கள்தான் அந்த மனிதர்களா என்பதை ஆவணங்களே உறுதிசெய்கின்றன.

ட்விட்டர் அக்கவுண்டில் போய்ப் பார்த்தான். நல்லவேளை இங்கே எந்தப் பிரச்னையும் இல்லை. புதிதாக நித்தீஷ் அவனை ஃபாலோ செய்வதைச் சொன்னது ட்விட்டர். அவன் பக்கத்தில் போய்ப் பார்த்தபோதுதான் அவன் சென்னையில் இருப்பது தெரிந்தது. எப்போ யு.எஸ்ஸிலிருந்து வந்தான்?

“எருமைமாடு, இந்தியா வந்தா சொல்ல மாட்டியா?” என்று டைரக்ட் மெசேஜ் அனுப்பினான்.

குறுங்கதை : 22 - அஞ்சிறைத்தும்பி

வனுக்குப் பக்கத்து வீடுதான் நித்தீஷின் வீடு. புதிதாகக் குடிவந்திருந்தார்கள். சில மனிதர்கள் மட்டும்தான் முதல்நாள் பார்த்து இரண்டாம் நாளைப்போல பேச ஆரம்பித்து விடுவார்கள். நித்தீஷின் அம்மாவும் அப்படித்தான். தமிழ் அவன் வீட்டுக்குப்போனபோது அன்று ஏதோ ஒரு பண்டிகை. அவனுக்குச் சுண்டல் தந்தார்கள். வாங்கிச் சாப்பிட்டபோது அவன் நெற்றியில் திருநீறு பூசிவிட்டார் நித்தீஷ் அம்மா.

“வேணாம், கலீமா மறந்துடும்” என்றான் தமிழ்.

கலீமா என்றால், அல்லாஹ் ஒருவனே இறைவன் என்று அரபு மொழியில் சாட்சி பகிர்தல். மதரசாவிலிருந்து அப்போதுதான் அவன் திரும்பியிருந்தான்.

“யார் சொன்னது?”

“இமாம்தான் சொன்னார்.”

“அவர் கிடக்காரு. அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்கல்ல?”

தமிழரசனின் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. சொல்லப்போனால் அம்மாவுக்கே சின்னச் சின்னதாய் நம்பிக்கைகள் உண்டு. கண்வலி என்றால் மாரியம்மன் கோயிலுக்குக் கண் உருவம் செய்து போட்டால் சரியாகிவிடும், வயிற்றுவலி என்றால் வயிற்றில் மாவிளக்கு ஏற்றினால் தீர்ந்துவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அம்மா பக்கத்து வீட்டு இந்துக்களிடம் பணம் கொடுத்து பிரார்த்தனைகளையும் நேர்த்திக்கடன்களையும் செய்யச் சொல்வார். யாராவது சுவரில் ஒற்றைக்காலை வைத்தபடி நின்றால், “தரித்திரம், அப்படி நிக்காதே” என்பார்.

தமிழரசனின் பெயரை அறிந்துகொள்ளும் யாவரும் ஆச்சர்யத்தில் தொடங்கி ‘எப்படி’ என்ற கேள்வியில் வந்தடைவார்கள். முத்தலீப்பின் அப்பா உமர் பாருக் தமிழ்ப்பற்றாளர். முதல் மொழிப்போராட்டத்தில் பட்டுக்கோட்டை அழகிரி திருச்சியிலிருந்து சென்னை வரை நடத்திய தமிழர் படையில் இருந்தவர்களில் உமர் பாருக்கும் ஒருவர். தமிழ்ப்பற்றால் பேரனுக்குத் தமிழரசன் என்று பெயர் சூட்டியிருந்தார். பெரும்பாலும் உறவினர்களுக்கு அரபுப்பெயர்கள்தான். ஆனால் அல்லா பிச்சை போன்ற பெயர்களும் உண்டு. முத்தலீப்பின் சாச்சா பெயர் சின்ராசு, சாச்சி ராசாத்தி. ஆனால் தமிழரசனுக்குத் தெரிந்து முதல் முஸ்லிம் தமிழரசன், தமிழரசன்தான்.

ர்காக்களில் மந்திரித்து தாயத்து கட்ட குழந்தைகளுடன் நிற்கும் தாய்மார்களும் முஸ்லிம்கள் கடை போட்டு வியாபாரம் செய்யும் மாரியம்மன் கோயில் திருவிழாவும் என்று ஊர் நெடுவருடங்களாகப் பிரச்னையில்லாமல்தான் இருந்தது. அந்த மாவட்டத்துக்கு முஸ்லிம் தலைவரின் பெயரை அரசு சூட்டியதை எதிர்த்து நடந்த ஊர்வலம் கலவரத்தில் முடிந்தது. ஒரு கும்பல் வெப்பம் தெறிக்கும் கோஷங்கள் போட, எங்கேயோ தீப்பற்றிக்கொண்டது. ஊர்வலத்தில் ஒருவர் ஆடை தூக்கி ஆபாசச் சவால் விட்ட காட்சி, இன்றும் தமிழரசனின் கண்களுக்குள் நின்றது. இங்கிருந்து செருப்புகளும் அரிவாள் மனைகளும் பறக்க மோதலின் முடிவில் இருதரப்பிலும் உயிர்ப்பலி. வாப்பா நடத்திவந்த ‘உமர் ஸ்டோர்’ சூறையாடப்பட்டது. இரண்டு நாள்களாக விடாமல் அழுதுகொண்டிருந்தான் தமிழரசன்.

ஷ்டம்தான் என்றாலும் அம்மாவின் நகைகளை அடகுவைத்து அங்கே இங்கே புரட்டி மீண்டும் கடையை வாப்பா தொடங்கிவிட்டார். கையோடு கடையின் பெயரை ‘இந்தியன் ஸ்டோர்’ என்று மாற்றிவிட்டார். ஒரு கலவரம் நடந்தால் பிறகு அந்த ஊரை அச்சம் பீடித்துக்கொள்ளும். கலவரத்தைவிட கலவரம் குறித்த அச்சம் கொடூரமானது. திடீரென்று பத்துப்பேர் ஓட ஆரம்பிப்பார்கள். அவர்கள் பின்னால் இன்னும் பத்துப்பேர். எங்கேயும் எதுவும் நடந்திருக்காது. ஆனாலும் பயம் உண்மையின் நிச்சயத்தன்மை அறியாது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியவர்கள், கணவனைத் தொழிலுக்கு அனுப்பியவர்கள் என்று எப்போதும் முந்தானையில் நெருப்பை முடிந்துவைத்திருப்பது என்னவோ வீட்டுப்பெண்கள்தான்.

தமிழரசன் டியூஷன் முடித்து தன் வீட்டுக்கு முன்னால் இரண்டு தெருக்கள் இருக்கும் தூரம் வரும்போது ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டது.

“பேரென்னடா?”

“தமிழரசன்”

அவனைப் போக அனுமதித்த கும்பல், இரண்டடி நகர்வதற்குள் மீண்டும் அழைத்தது.

“நீ ஷாப் கடை பாய் பையன்தானே? தமிழரசன்னு பேர் வெச்சா எங்களுக்குத் தெரியாதா?’’ என்றான் ஒருவன். அவன் குரலில் ஒரு வேட்டை மிருகம் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தது. ஒரு ஊருக்குத் தேவையான ஒட்டுமொத்த பயமும் தமிழரசனைச் சூழ்ந்துகொண்டது. அப்போதுதான் சின்னச்சாமி மாமா இடுப்பிலிருந்து உருவிய பெல்ட்டுடன் அங்கே தோன்றினார். எங்கிருந்து எப்படி வந்தார் என்று தெரியவில்லை.

“ஏண்டா, அராத்து பிடிச்சவனுகளா, யார் வீட்டுப் பையனைடா மிரட்டுறீங்க? ஒருத்தன் உசிர் மிஞ்சாது. அறுத்துப்போட்டுருவேன்” என்று குரலுயர்த்தினார். வாப்பா கடையில் பல ஆண்டுகளாக வேலை பார்த்த சின்னச்சாமி ஆறு ஆண்டுகளாகத் தனியாக வியாபாரம் செய்துவருகிறார். வாப்பாமீது இப்போதும் அவருக்கு மரியாதை. தமிழரசனைத் தன் டிவிஎஸ் 50-ல் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

ல்லூரி முடிந்து பஸ் பாஸில் அரசு டவுன்பஸ்ஸில் வந்துகொண்டிருந்தபோதுதான் அந்தத் தலைவர் கொல்லப்பட்ட செய்தி வந்து சேர்ந்தது. மீண்டும் கலவரம். பேருந்து முழுவதும் பயமும் சந்தேகமும் பற்றிக்கொண்டன.

“உங்காளுக என்ன பண்ணப்போறாங்கன்னு தெரியலையே?” என்றான் நித்தீஷ்.

“வெடிகுண்டுக்கும் வெட்டரிவாளுக்கும் என்னடா அடையாளமிருக்கு? யார் என்னன்னு பார்த்துட்டா கொல்லும்?” என்று தமிழரசன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பேருந்து திடீரென்று நின்றுபோனது. அடிக்கடி நடப்பதுதான். ஏற்கெனவே கியரில் கயிறு கட்டி மாட்டியிருந்தார் டிரைவர். கியர் பாக்ஸ், பாளம் பாளமாய் வெடித்த நிலம்போல வெளியே வந்திருந்தது.

செட்டியப்பட்டி பிரிவிலிருந்து கிட்டத்தட்ட அடுத்த ஸ்டாப்பிங் வரை தள்ளியபிறகுதான் பஸ் ஸ்டார்ட் ஆனது. உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடி அமர்ந்தார்கள். இவர்கள் வந்த பேருந்து கழித்து இரண்டாவது பேருந்தில் பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார்கள். கண்ணாடிகள் உடைந்து சிதறியிருக்கின்றன. நல்லவேளையாக உயிர்ச்சேதம் ஒன்றுமில்லை.

ல்லூரி முடித்துக் கொஞ்சநாள்கள் தமிழ், வாப்பா கடையில் உட்கார்ந்தான். பழனிரோட்டில் இருந்தது கடை. பீஃப் பிரியாணி ஸ்டால் உட்பட பல அசைவ உணவகங்கள், இந்தத் தைப்பூசப் பாதயாத்திரை சீசனில் மட்டும் சைவ உணவகங்களாக மாறிவிடும். அப்படித்தான் கருப்பசாமி புரோட்டா ஸ்டாலும் வேலவன் சைவ உணவகமாக மாறியிருந்தது. முதலாளி பாண்டித்துரையுடன் பேசிக்கொண்டிருந்தான் தமிழ்.

“இது சைவ ஹோட்டல்தானே?” என்று வாசலில் நின்று தயங்கியபடி கேட்டார், அந்தப் பச்சை வேட்டிக்காரர்.

“போர்டுலயே போட்டிருக்கோமே, சுத்த சைவம். உள்ளே வாங்க, டேய் இலை போட்டு, தண்ணி எடுத்து வை. அண்ணனுக்கு என்ன வேணும்னு கேள்” என்றார் பாண்டித்துரை.

சாப்பிட்டு முடித்துக் கை கழுவப்போனபோது திடீரென்று மயங்கி விழுந்துவிட்டார் அந்தப் பச்சை வேட்டிக்காரர். பதறியடித்து, கடைக்கு சரக்கு இறக்க வந்த டெம்போவில் அவரை அள்ளிப்போட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள் தமிழும் நித்தீஷும்.

சிகிச்சை முடிந்து மூன்றுமணி நேரத்துக்குப் பிறகு கண்விழித்தவர், வேட்டி மடிப்பிலிருந்து ஒரு துண்டுச்சீட்டை எடுத்துக்கொடுத்தார். அதில் ஒரு லேண்ட்லைன் நம்பர் இருந்தது. அவர் வீட்டுக்குத் தகவல் சொல்ல வேண்டும். டெலிபோன் பூத்துக்குப் போகத் திரும்பியபோது இருவரையும் அழைத்தார் அவர்.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

அருகில் வந்த இருவரின் நெற்றியிலும் வேட்டி மடிப்பில் முடிந்திருந்த விபூதியை எடுத்துப் பூசிவிட்டார். பிறகு கண்களை மூடிக்கொண்டு கைகள் குவித்து வேண்டிக்கொண்டார்.

ல ஆண்டுகளுக்குப் பிறகு நித்தீஷைச் சந்திக்கிறான் தமிழ். ஆள் மாறிவிட்டான். முடி உதிர்ந்து, தொப்பை விழுந்திருந்தது. ஆனால் முகத்தில் பளபளப்பு ஏறியிருந்தது. தன் இன்னொரு நண்பனையும் அழைத்துவந் திருந்தான். ரெஸ்டாரன்டில் ஆர்டர் செய்துவிட்டுப் பேசிக்கொண்டிருந் தார்கள்.

“அப்புறம் உன் தம்பி வகாப் என்ன பண்றான்?”

“வாப்பா இறந்ததுக்குப் பிறகு அவன்தான் கடையைப் பார்த்துக்கிறான். பிசினஸ் முன்ன மாதிரி இல்லை. நம்மூர்லயும் ஷாப்பிங் மால், டிபார்ட்மென்டல் ஸ்டோர் வர ஆரம்பிச்சிடுச்சு. வகாப்தானே, பெரிசாத் தாடி வளர்த்து தொப்பி போட ஆரம்பிச்சிட்டான். அம்மா பர்தா போடணுமாம். ஒரே பிடிவாதம். அவங்களுக்கு துப்பட்டா போட்டுதான் பழக்கம்.”

அருகில் இருந்த நண்பன் முரளியை அறிமுகப்படுத்திவைத்தான் நித்தீஷ். சேத்துப்பட்டில் ‘பிரபாகரன் நகலகம்’ என்று ஜெராக்ஸ் கடை நடத்திவருகிறானாம்.

“சொல்லுடா, உன் பாப்பாவுக்கு என்ன பேர் வெச்சிருக்கே?” என்று முரளியிடம் நித்தீஷ் கேட்டான்.

“அப்துல் ரவூப்”

“என்னடா முஸ்லிம் பேரு?”

“ஈழத்தமிழர்களுக்காக முதன்முதலில் தமிழ்நாட்டில தீக்குளிச்சவர்டா அப்துல் ரவூப்.”

ஆர்டர் செய்த உணவை கவனமாக மேசையில் வைத்தார் உணவகப் பணியாளர்.

“கையைக் கொடுங்க பாஸ். நியாயமாப் பார்த்தா உங்க பையனுக்குத்தான் கை கொடுக்கணும். ‘தன் பெயரால் தலைவலி வந்தோர் சங்க’த்துக்கு வெல்கம் சொல்லணும். இந்தப் பேரைச் சொன்னதுமே ஆயிரத்தெட்டுக் கேள்வி. இது எப்படி, அது எப்படின்னு. இப்பெல்லாம் குழந்தைகளுக்கு அர்த்தமே இல்லாம பேர் வைக்கிறாய்ங்க. ஒருத்தன்கூட அதுக்கு என்னான்னு கேக்கிறதில்லை. தமிழரசன் முத்தலீப்புக்கு மட்டும் ஆயிரம் பஞ்சாயத்து, என்கொயரி. அட, ஃபேஸ்புக் வரைக்கும் பஞ்சாயத்து பாஸ்” என்றான் தமிழ்.

“புலம்பாம சாப்பிடுறா. எவ்ளோநாள் கழிச்சு மீட் பண்ணியிருக்கோம்! ஆமா எப்போ கல்யாணம்?”

“ஒரு லவ் போயிட்டிருக்கு. சொல்றேன்” என்றான் தமிழ்,

“பேரு?”

“முதல்ல லவ் கன்ஃபார்ம் ஆகட்டும். உனக்குச் சொல்லாம யாருக்குச் சொல்லப்போறேன்?”

“உங்க குழந்தைக்கு என்ன பேர் வைப்பீங்க?” என்றான் முரளி.

“ஃபேக் ஐடி’ன்னு வைக்கலாம்னு இருக்கேன்” என்று சிரித்தான் தமிழரசன் முத்தலீப்.

- தும்பி பறக்கும்...