சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 23 - அன்புள்ள ரஜினிகணேஷ்

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுங்கதை

குறுங்கதை

“ஒழுங்கா வணக்கம் சொல்லமாட்டியா? நீ வணக்கம் வைக்கிற ஸ்டைலைப் பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்க” என்று குறைப்பட்டுக் கொண்டாள் மீனாட்சி. சித்தி பெண்ணின் திருமணம் அது.

வேண்டுமென்றே செய்யவில்லை. அனிச்சையாக வந்துவிடுகிறது. முகத்துக்கு நேரே கைகளைக் குவித்துத்தான் எல்லோரும் வணக்கம் சொல்வார்கள். ஆனால் ரஜினியோ பக்கவாட்டில் தோளுக்கு மேலே கைகளைக் குவிப்பார். பலவற்றை மாற்றினாலும் கணேஷால் இதுபோன்ற சில விஷயங்களை மாற்ற முடியவில்லை.

றாவது படிக்கும்போதிருந்தே கணேஷ் ரஜினி ரசிகன். ‘கிழக்குத்தெரு ரஜினி பக்தர்கள்’ மன்றத்தில் இருந்தவர்களுக்கு கணேஷைவிடப் பத்துக்கும் மேல் வயது அதிகம். ஆனால் அவர்களுடன்தான் தலைவர் படம் பார்க்கப் போவான். அவனுடன் படித்த கார்த்தி தீவிர கமல் ரசிகன். வெறியன் என்றும் சொல்லலாம். இவனைப் பார்க்கும்போதெல்லாம் ‘`தெரியாமல் போட்டி போடும் மனிதா மனிதா, சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா, வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா... ஹேய் ஹேய்...உன்னைத்தானே” என்று பாடி வம்பிழுப்பான். அதிலும் தலையை ஒரு வெட்டு வெட்டி “ஹேய்...ஹேய்... உன்னைத்தானே” என்பான். ஒருநாள் கணேஷுக்கு செம கோபம் வந்தது. ஜாமிண்ட்ரி பாக்ஸால் தலையில் ஒரே போடு போட்டான். மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. டீச்சர் கூப்பிட்டு விட்டதுக்கு அம்மா வரமறுத்துவிட்டார். ஆயாதான் வந்தது. டீச்சரைப் பார்த்த பிறகு, இவன் முதுகில் ரெண்டு சாத்து, கார்த்தி முதுகில் ரெண்டு சாத்து. “படிக்கிற வயசுல என்னாடா சினிமாக்காரங்க வெறி?”

ஆனாலும் கணேஷ் அடங்கவில்லை. ‘ராஜா சின்ன ரோஜா’ படம் வந்தபோது ஆயாவிடம் அடம்பிடித்துக் காசு வாங்கி, தலைவரைப் போலவே பேன்ட் தைத்துப்போட்டான். “என்ன டவுசர்டா இது, நீ வீட்டுக்கு வர்றே, உன் டவுசரு ரெண்டு தெரு தள்ளிவருது” என்று கிண்டலடித்தது ஆயா. “அதுக்குப் பேரு பேன்ட். ரொம்ப நக்கலடிக்காதே ஆயா. நீ மண்டையைப் போட்டா நான்தான் உன்னை அடக்கம் பண்ணணும்” என்றான். “அடப் போடா போக்கத்தவனே, உன்னை நம்பியா நான் இருக்கேன். பணியாரக்கடை போட்டிருக்கேன். எம் பொணத்தை அடக்கம் பண்றதுக்கு நான் காசு சேர்ப்பேன்டா” என்று சொல்லும் ஆயா.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

‘பாண்டியன்’ படம் வந்தபோது அடையாளம் போட்ட பேட்ஜ் குத்திக்கொண்டு ஸ்கூலுக்குச் சென்று திட்டுவாங்கினான். தலையைக் கோதியபடி “மிஸ்டர் ரைட்” என்பான். ‘பாட்ஷா’ படம் வந்தபோது சட்டையின் எல்லா பட்டன்களையும் கழற்றிவிட்டு, கீழ் இருபக்கமும் சேர்த்து முடிச்சுபோட்டிருப்பான். காலர் தூக்கியிருக்கும். அந்த வருஷம் ஆட்டோ ஸ்டாண்ட் ஆயுத பூஜையை ரஜினி பக்தர்கள் சிறப்பாகக் கொண்டாடினார்கள். தூக்கிப்போட்டு ஆறு பூசணிக்காயைத் தன் தலையாலேயே உடைத்தான் கணேஷ். மூன்றுமணி நேரம் ரஜினி பாடல்களுக்கு கெட்ட ஆட்டம் ஆடினான்.

ப்ளஸ் டூ ஃபெயில் ஆனபிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஹேர் ஸ்டைல், நடையுடை பாவனை என்று குட்டி ரஜினியாக உருமாறியிருந்தான் கணேஷ். தலைவருக்கு அப்போதுதான் இரண்டு பக்கமும் முடி உதிர ஆரம்பித்ததால் இவனும் பிளேடு கொண்டு இருபக்கமும் அதேபோல் முடியை மழித்துக்கொண்டான். ‘தமிழன் பாய்ஸ் ஆடலும் பாடலும் கலைக்குழு’ பாலன் அண்ணன், “என் குரூப்ல ஆட வர்றியா?” என்றார். அப்போதிருந்து கணேஷ், ரஜினி கணேஷ் ஆனான்.

தலைவரைப்போல் ஆடுவது எளிது. வேகமாக நடக்கவேண்டும். ஓரிடத்தில் நின்று மேலே பார்க்க வேண்டும். தலைமுடியில் கைவிரல்களை விட்டுக் கலைக்க வேண்டும். இடப்பக்கமும் வலப்பக்கமும் கைகளைச் சுற்ற வேண்டும். ஆனால் இது எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. கணேஷ் ரஜினி கணேஷாகவே மாறியதால்தான் இது சாத்தியமானது.

“சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது”

டீக்கடையில் போய் டீ ஆர்டர் பண்ணினால்கூட, “இக்கடச்சூடு” என்பான். தினமும் ஆஃப் ஓல்டு காஸ்க் குடிக்கும் அளவுக்கு வருமானம் வந்தது. அதே குழுவில் லவ்ஸும் வந்தது கணேஷுக்கு. சௌமியா, ஹேமா என்று இரண்டே பெண்கள்தான். குஷ்பு, கௌதமி, பானுப்ரியா, ரோஜா என்று சௌமியாவுக்கு ஏகப்பட்ட அவதாரங்கள். “சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது” என்று சௌமியா ஆடும்போது ரஜினி கணேஷ் உடல் முழுக்க லட்சக்கணக்கில் சித்தெறும்பு ஊரும். ‘காதலின் தீபம் ஒன்று’ என்று பாடியபடி கைகளை பேன்ட் பாக்கெட்டில் விட்டபடி தனியாக ஃபீல் செய்து நடப்பான். ஆனால் சௌமியாவோ ‘வாடி பொட்டப்புள்ள வெளியே’ என்று நடனம் ஆடிய வடிவேலு குமாரைத் திருமணம் செய்துகொண்டபோது நொந்துபோனான் ரஜினி கணேஷ்.

அன்று இரவு கூட்டாளிகளுடன் குடிக்கும் போது ‘உன்னை நினைச்சேன், பாட்டுப் படிச்சேன்’ என்று சோகப்பாட்டு பாடிய ‘அப்பு’ நாகராஜ் மீது கிளாஸை விட்டெறிந்தான்.

ம்மா இறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. ‘இப்படியே விட்டால் கெட்டுக் குட்டிச்சுவர் ஆகிவிடுவான்’ என்று ஆயாதான் மூன்றாவது தெரு மீனாட்சியைக் கல்யாணம் செய்துவைத்தது. மாமனார் கறாராகச் சொல்லிவிட்டார். “ஆட்டம், பாட்டம்லாம் சரியா வராது. சைக்கிள் கடை வெச்சுத்தர்றேன். பொழைச்சுக்கோ” என்று. கணேஷுக்குச் சிறுவயதில் இருந்து அப்படி ஒன்றும் பக்தியெல்லாம் இருந்ததில்லை. ஆனால் ரஜினி கணேஷ் ஆனதிலிருந்து காலையில் குளித்துவிட்டு நெற்றி நிறைய பட்டை, கழுத்தில் உருத்திராட்சக் கொட்டை, கையில் காப்புடன்தான் சைக்கிள் கடையைத் திறப்பான். அவன் சைக்கிளுக்குக் காற்று அடிக்கும் ஸ்டைலும் தனிதான்.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

றுமாதம் கடை ஓடியிருக்கும். பாலன் அண்ணன் ஒருநாள் கடைக்கு வந்தார். “நீ இல்லாம ஷோ டல்லடிக்குது கணேசு” என்றார். மறுநாளே சைக்கிள் கடையைத் தன் கூட்டாளி ரமேஷிடம் கொடுத்துவிட்டு மேடையேறத் தொடங்கிவிட்டான்.

ரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டன. ஆணுக்கு அருணாசலம், பெண்ணுக்கு வள்ளி என்று பெயர் வைத்தான். திடீரென்று ‘ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகள் ஆபாசமாக நடைபெறுவதாக’த் தடை விதித்தது நீதிமன்றம். போலீஸ் கெடுபிடியும் அதிகமானது. திருவிழாக்காரர்கள் ரொம்ப யோசித்துதான் ‘ஆடலும் பாடலும்’ குழுவைக் கூப்பிட ஆரம்பித்தார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. சைக்கிள் கடையை ரமேஷ் எப்போதோ குடித்து அழித்திருந்தான். ட்ரைசைக்கிள் ஓட்டத் தொடங்கினான் கணேஷ்.

அவன் ட்ரைசைக்கிள் ஓட்டினாலும் ரஜினி ஸ்டைலிலேயே அட்டைப்பெட்டிகளை அடுக்குவது, மூட்டையைத் தூக்கிப்போடுவது என்று ஸ்டைல் மட்டும் மாறவில்லை. சிலர் ரசித்தார்கள். சிலருக்குப் பிடிக்கவில்லை. தலைவருக்கு முடியெல்லாம் உதிர்ந்திருந்தது. ஆனால் கணேஷுக்கு இன்னும் அடர்த்தியாகத் தான் இருந்தது. எண்ணெய் தடவி, படிய தலைவாரிக்கொண்டான்.

ணி அண்ணாச்சி கடையில் மூட்டைகளை இறக்கும்போதுதான் தகவல் வந்தது. ஆயா செத்துவிட்டதாம். ஒருகணம் கணேஷுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வியர்த்ததில் கைமுடிகளெல்லாம் சொதசொதவென்று நனைந்துவிட்டன. ஆயா ஒன்றும் அவனுக்குச் சொந்தம் கிடையாது. மகன் துரத்திவிட, ‘`திண்ணையில பணியாரக் கடை போட்டுக்கிறேன்” என்று அம்மாவிடம் உரிமையோடு கேட்டு அப்படியே செட்டிலாகிவிட்டது.

‘ஆயா அடக்கத்தை நல்லபடி நடத்தவேண்டும்’ என்று நினைத்துக்கொண்ட கணேஷ், அண்ணாச்சியிடம் சொல்லிப் பணம் வாங்கிக்கொண்டு போனான். வள்ளியின் அழுகையைத்தான் சமாதானப்படுத்த முடியவில்லை. கிழவியைத் திண்ணையில் இருந்து தூக்கும்போது நைந்துபோன பழைய தலையணையிலிருந்து ரூபாய் நோட்டுகள் சிதறிக்கொட்டின. எல்லோருக்கும் ஆச்சர்யம். கிழவி அழுத்தக்காரிதான். மொத்தம் 16,000 ரூபாய் இருந்தது. 1,500 ரூபாய்க்கு நூறுரூபாய், ஐம்பது ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. மற்ற அத்தனையும் 500 ரூபாய் நோட்டுகள்.

“இதெல்லாம் செல்லாதுன்னு கவர்மென்ட் சொன்னது கிழவிக்குத் தெரியாதா?”

என்றார் துரை அண்ணன்.

“அதை வெச்சு என்ன பண்றது? தூக்கிப்போட்டுடுவோம்” என்றாள் மீனாட்சி.

“இல்லையில்லை. ஆயாவைப் புதைக்கும்போது அதையும் சேர்த்துப் புதைச்சுடுவோம். அது ஆயா பணம்” என்றான் கணேஷ்.

ட்ரைசைக்கிளில் சிக்னல் தாண்டும்போது வேகமாக வந்த மினிடோர் ஒன்று அடித்துச் சாத்தியது. பேலன்ஸ் கிடைக்காமல் பக்கத்தில் இருந்த காரில் சாய்ந்தான் கணேஷ். இடதுகால் சிக்கிக்கொண்டது. பெரியாஸ்பத்திரி கொண்டுபோய் ட்ரீட்மென்ட் செய்ததில், இப்போது நொண்டி நொண்டித்தான் நடக்க முடிந்தது கணேஷால்.

“என்ன கணேசு, இப்பெல்லாம் உங்க தலைவர் ஸ்டைலே குறைஞ்சிடுச்சே?” என்றார் சம்பத். சிப்பங்களை எண்ணி முடித்திருந்தார்.

“அட ஏண்ணே நீங்க வேற...”

“உங்காளு சந்திரமுகி பேயை விரட்டினமாதிரி நீ உனக்குள்ள இருக்கிற ரஜினியை விரட்டிக்கிருக்கே” என்றவர், ரகசியம் பேசுபவர் போல் அருகில் வந்தார்.

“ஒண்ணு கவனிச்சியா. நாம ஸ்கிரீன்ல பார்க்கிற ரஜினி வேற, நிஜ ரஜினி வேற. நீயும் நானும் உண்ணாவிரதம்னுதானே சொல்லுவோம்? அவர் காவிரிப் பிரச்னைக்காக உண்ணா விர்தம்னாரு. நாம ராமன்னு சொன்னா, அவர் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தின்னாரு. அட, இப்பக்கூட ‘சி.ஏ.ஏ-வால பிரச்னையில்லை. இந்திய முஸ்லிம்களுக்கு இது ஜென்மபூமி’ங்கிறாரு. இந்த வார்த்தையெல்லாம் நம்ம வாயிலேயே வராதேப்பா. ஆமா இந்த வருஷமாவது கட்சி ஆரம்பிச்சிடுவாரா?” என்றார். அந்தநேரம் பார்த்து அவர் கடையிலிருந்த டி.வியில் ரஜினி பாட்டுதான் ஓடிக்கொண்டிருந்தது. ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ...’

பிடி கொடுக்காமல், “பொழைப்பைப் பார்ப்போம்ண்ணே” என்றபடி பணத்தை எண்ணியபடி அங்கிருந்து நகர்ந்தான் கணேஷ்.

“ஏதோ டிக்டாக்கோ, டொக்டாக்கோ. ஸ்கூல் முடிஞ்சு வந்தா இதே பொழப்பாப்போச்சு”
என்று அலுத்துக்கொண்டாள் மீனாட்சி.

வீட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழற்றிவிட்டு, சாப்பிட வந்தபோது வாசலில் மகன் அருணாசலம், போனைத் தூக்கிப்பிடித்தபடி சிரித்துக்கொண்டிருந்தான்.

“என்ன செய்றான் இவன்?”

“ஏதோ டிக்டாக்கோ, டொக்டாக்கோ. ஸ்கூல் முடிஞ்சு வந்தா இதே பொழப்பாப்போச்சு” என்று அலுத்துக்கொண்டாள் மீனாட்சி.

‘நான்தாண்டா இனிமேலு

வந்துநின்னா தர்பாரு’ என்றபடி 30 ரூபாய் கண்ணாடியை மாட்டியபடி தலையைச் சிலுப்பிக்கொண்டான் அருணாசலம்.

எங்கிருந்து வெறிவந்தது என்று தெரியவில்லை. திடீரென்று பக்கத்தில் கிடந்த பிளாஸ்டிக் கிரிக்கெட் பேட்டை எடுத்து அவன் காலிலேயே நாலு அடி அடித்தான் கணேஷ். வலி தாங்காமல் அதிர்ச்சியுடன் அப்பாவை ஏறிட்டுப் பார்த்தான் அருணாசலம்.

பேட்டைத் தூக்கிவீசிவிட்டு, திண்ணையில் உட்கார்ந்து, உடைந்து அழத்தொடங்கினான் ரஜினி கணேஷ்.

- தும்பி பறக்கும்...