Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 25 : புதிர்தேசத்தின் தண்டனைக்காலம்

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை

குறுங்கதை

அஞ்சிறைத்தும்பி - 25 : புதிர்தேசத்தின் தண்டனைக்காலம்

குறுங்கதை

Published:Updated:
குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை
“நீங்கள் ஒரு தீவுக்குத் தனியாகச் செல்லவேண்டும் என்றால் உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்ல விரும்பும் பொருள் என்ன?”

வழக்கமாக ஃபேஸ்புக்கில் வரும் புதிர் விளையாட்டுதான் இது. மேற்கண்ட கேள்விக்கு நாஜுரா பதில் அளித்ததுதான் அவன் செய்த தவறு. தீவுக்குச் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தால் அவன் எடுத்துப்போகத் தேர்ந்தெடுத்த பொருள், ‘கடவுளின் ஆபரணம்’ என்று அழைக்கப்படும் அவன் மதநூல்.

‘கடவுள் முதன்முதலில் படைத்த பெண்ணின் நாக்கை இரண்டு துண்டாகப் பிளந்தபோது ஒரு துண்டு சூரியனாகவும் இன்னொரு துண்டு சந்திரனாகவும் மாறியது’ என்று தொடங்கும் தன் மதநூலைத் தலைமாட்டில் வைத்தபடி, கடவுளைப் பிரார்த்தித்தபடியே உறங்கிப் போனான் நாஜுரா.

“உங்களைப் புதிர் தேசத்துக்கு வரவழைக்கிறோம்” என்றவன்தான் அந்தத் தேசத்தின் தலைமை மக்கள் அதிகாரி.

“புதிர் தேசமா? நான் எப்படி இங்கே வந்தேன்?” என்றான் நாஜுரா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நீங்கள் எப்போது புதிருக்குப் பதில் அளித்தீர்களோ அப்போதே இந்தத் தேசத்துக்கு வந்துவிட்டீர்கள். இப்போது தேசம் உங்களிடம் பதில்களைத்தான் எதிர்பார்க்கிறதே தவிர கேள்விகளை அல்ல. கேள்விகள் என்பவை எங்கள் அதிபருக்கு உரித்தான செல்லப் பிராணிகள்” என்றான் அந்த அதிகாரி.

“உங்கள் அதிபர் யார்? ஏன் இப்படி விநோதமாகப் பேசுகிறீர்கள்?” என்றான் நாஜுரா.

“இப்போதுதானே சொன்னேன், பதிலளிக்க மட்டுமே நீங்கள் அனுமதிக்கப்பட்டவர்கள் என்று. ஏற்கெனவே நீ தண்டனைக்காலத்தில் இருக்கிறாய். இரண்டு கேள்விகளைக் கேட்டதால் உன் தண்டனைக்காலம் இன்னும் கூடியிருக்கிறது” என்று அந்த அதிகாரி சொன்னபோது நாஜுராவுக்கு முதல் வரியில் இருந்த மரியாதை, இரண்டாம் வரியில் குறைந்துபோனதைக் கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லை.

“தண்டனைக்காலமா?” என்று கேட்க வந்தவன், அதுவும் ஒரு கேள்வி என்பதை உணர்ந்து, “தண்டனைக்காலம்...” என்று இடைவெளி விட்டதுடன் நிறுத்திக்கொண்டான்.

“நீ இந்தத் தேசத்தில் நுழைந்ததற்கான ஆவணம் உன் முன் வைக்கப்பட்ட புதிர்தான். நீ எத்தனை கனவுக்குள் நுழைந்திருக்கிறாய் என்று உனக்குத் தெரியுமா?”

“ஒன்றுதான்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இல்லை. உன் கனவில் நீ வந்தது ஒருமுறைதான். ஆனால் நீ 27 பேரின் கனவுக்குள் சென்றிருக்கிறாய். அதில் 24 பேர் கனவில் உன்னை வெறுத்திருக்கிறார்கள்.

இத்தனை பேரால் வெறுக்கப்பட்டாய் என்ற ஒரே தகுதியில்தான் நீ இந்தத் தேசத்தில் நுழைந்திருக்கிறாய். ஆனாலும் இந்தத் தேசத்தின் குடிமகன் ஆவதற்கு அதுமட்டும் போதாது. அதற்கென்று நுழைவுத்தேர்வு இருக்கிறது. உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன். பதிலளிக்க உனக்கு இரண்டு வாய்ப்புகள். ஆமாம், உன் கையில் நீ எடுத்துவந்த பொருள் என்ன?”

“கடவுளின் ஆபரணம் - என் மதப்புனித நூல்” என்றான் நாஜுரா.

அதிகாரி, பக்கத்தில் இருந்த காவலனைப்போல் இருந்தவனைப் பார்த்துச் சிரித்தான். அவன் பக்கத்தில் இருந்த, நாஜுரா அறிந்திராத விநோத மிருகம், ஒருமுறை உடலைக்குலுக்கிச் சிலிர்த்துக்கொண்டது.

“உன் கடவுள், உன் மதமா? இந்தப் புதிர் தேசத்தில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே அதிபர்தான். பகல் நேரத்தில் கடவுளின் காலுக்கு அடியிலும் இரவு நேரத்தில் அவர் தலைக்கு மேலும் விழும் நிழல்தான் எங்கள், இல்லை, நம் அதிபர். இருக்கட்டும். உனக்கான கேள்வி, ஒரு பனிமலையில் காட்டுத்தீ பிடிக்கிறது. நீ ஒரு மரத்தின் உச்சியில் இருக்கிறாய். உன் கடவுள் உன்னை எப்படிக் காப்பாற்றுவார்?”

குறுங்கதை
குறுங்கதை

“மேலேயிருந்து மழையாகப் பொழிந்து...”

“தவறான பதில். இரண்டாவது வாய்ப்பு...”

“காட்டுத்தீயில் பனி உருகி, தீ அணைந்துவிடும். நான் பிழைத்துக்கொள்வேன்.”

“இரண்டாவது தவறான பதில். நுழைவுத் தேர்வில் நீ தோற்றுவிட்டாய். அதன்படி நீ 26 இரவுகள் தூங்காமல் புதிய தேசத்தை உருவாக்க உழைக்க வேண்டும். இன்னும் பல நுழைவுத் தேர்வுகளை நீ சந்திக்க வேண்டியிருக்கிறது” என்றவனின் குரலில் இருந்தது ஏளனமா, எச்சரிக்கையா என்று கணிக்க முடியவில்லை.

“சரியான பதில்களை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான் நாஜுரா.

“சரியான பதில்கள் உனக்கு எப்போது தெரியவில்லையோ அப்போதே நீ சரியான பதில்களைத் தெரிந்துகொள்ளும் தகுதியை இழந்துவிட்டாய்” என்றான் அந்த அதிகாரி.

‘புதிர் தேசம்’ என்ற பெயரின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டான் நாஜுரா. அவன் கையிலிருந்த மதநூலை வாங்கிய அதிகாரி, அருகில் இருந்தவனிடம் கொடுக்க, அவன் துணியால் சுற்றியபடி, ஒரு பக்கத்தைக் கிழித்து, விலங்கிடம் தின்னக்கொடுத்தான். அது தன் கண்களை வலப்பக்கம் இரண்டுமுறை சுழற்றியது.

“இந்த மதநூல் துவர்க்கிறது என்கிறது பலிமிருகம்” என்றான் அவன்.

“அப்படியானால் உனக்கு அளிக்கப்படும் உணவு என்னவென்று தீர்மானிக்கப் பட்டுவிட்டது” என்றான் அதிகாரி.

நாஜுராவின் நாக்கிலும் மூளையிலும் அப்பியுள்ள துவர்ப்பு ஓசையை நீக்குவதற்காக காலையில் புளிப்பும் இரவில் காரமும் நிறைந்த உணவுகளைக் கொடுத்தார்கள். நாஜுராவுக்குத் தன் நாவைத் துண்டித்து, அங்கு ஓடிக் கொண்டிருக்கும் நதியில் தூக்கி எறிந்துவிடலாம் போலிருந்தது. அங்கிருந்த ஓர் இளைஞன் இந்தத் தேசத்துக்குள் நுழையும்போது ஒரு நறுமணத் திரவியத்தை எடுத்து வந்தானாம். அவனுக்கு நாள் முழுவதும் பூக்களைப் பறிக்கும் பணியைக் கொடுத்திருக்கிறார்கள். அவன் விரல்களில் வழிந்த ரத்தத்தில் எல்லாப்பூக்களும் சிவப்பு நிறத்துக்கு மாறி, எல்லாப்பூக்களிலும் ரத்த வாடையடித்தது. தன் அம்மாவின் சேலையுடன் வந்த ஒரு பெண்ணைத் தவழ்ந்தே அங்கிருந்த மலையில் ஏறச்சொல்லி உத்தரவு.

“மொழி என்றால் என்ன?” என்று கேள்வி கேட்டான் இரண்டாம் தேர்வு அதிகாரி.

“நினைவுகளின் கிட்டங்கி”, “எண்ணங்களின் படகு” என்று அவன் அளித்த இரண்டு பதில்களும் நிராகரிக்கப்பட்டன. இப்போது அவன் தன்னுடைய தாய்மொழியை மறந்துவிட்டு அந்தத் தேசத்தின் ஒரே மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“நீங்கள் இதற்கு முன்பு பேசிய மொழிகள் எல்லாம், கடவுள் நகம் வெட்டித் தூக்கியெறிந்த துணுக்குகள். ஆனால் இந்தத் தேசத்தில் வழங்கப்படும் மொழியோ, கடவுள் தன் மீசையில் இருந்து கத்தரித்த நரைமுடி. கடவுளின் நரைமுடி என்றால் அதுதான் உலகின் பழைமையான மொழி என்பதை நீ தெரிந்திருப்பாய்” என்றான் அந்த அதிகாரி.

அந்த மொழியில் இரண்டுபடிநிலைகள் இருந்தன. சாதாரண மக்கள் பேசும் மொழியில் கேள்விச்சொற்கள் எவையும் கிடையாது. மெய்யெழுத்துகள் மட்டுமே உண்டு. மேல்நிலையைச் சேர்ந்தவர்கள் கற்ற மொழியில் மட்டும்தான் உயிரெழுத்துகளும் கேள்விச்சொற்களும் உண்டு. கூடுதலாக அதிபர் பேசும் மொழியில் மட்டும்தான் ஆயுத எழுத்து உண்டு.

மூன்று நுழைவுத்தேர்வுகளில் ஒருவழியாகத் தேர்ச்சியடைந்த பிறகு அந்தத் தேசத்தின் குடிமகன் ஆனான் நாஜுரா. அன்றிலிருந்து அவனுக்கு இனிப்பு உணவுகளும் வழங்கப்பட்டன. ஒரு நாள் தொடங்கும்போது, அந்த நாட்டுக்கான வணக்க கீதம் பாடப்படும். அந்த நாள் முடியும்போது அதிபர் தேசத்தின் முன்னேற்றம் குறித்தும் குடிமக்களின் கடமை குறித்தும் உரையாற்றுவார். வணக்க கீதத்தின்போதும் அதிபர் உரையின்போதும் குடிமக்கள் அனைவரும் தங்கள் குதிகால்களை உயர்த்தியபடி, கால் விரல்களின் பலத்திலேயே நிற்க வேண்டும். முதலில் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் நிற்க இயலாதவர்களுக்கு படிப்படியாக விரல்கள் துண்டிக்கப்படும் என்ற புதிர் சாசன விதியைக் கேட்டதிலிருந்து நாஜுரா, அப்படி நிற்கக் கற்றுக்கொண்டான்.

“நனவுலகத்தில் வாழும் மனிதர்களைவிட நீங்கள் ஓர் அங்குலம் உயர்ந்தவர் ஆகியிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் இப்போது உணர்ந்திருப் பீர்கள். இப்படியாக உங்களை உயர்த்திய இந்தப் புதிர் தேசத்துக்கும் தேசத்தின் தலைமகனான அதிபருக்கும் நீங்கள் என்றும் விசுவாசமாக இருக்கவேண்டும்” என்று அதிபர் தன் உரையை முடிப்பார்.

லகட்ட நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சியடைந்த நாஜுரா இப்போது அரசின் அபிமானத்துக்கும் கவனத்துக்கும் உரியவன் ஆனான். அவன் ஒரு கட்டுமானப் பொறியாளனாக இருந்தவன் என்பதால் தேசத்தின் வரைபடத்தைப் புதிதாக உருவாக்கும் பொறுப்பு அவனுக்குக் கிடைத்தது. மூன்றுமுறை அதிபரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அதிபர் மாளிகையின் இரண்டு அறைகளில் ஓர் அறை முழுக்க, ஊஞ்சல்கள் குவிந்து கிடந்தன. அவருக்கு ஊஞ்சலாடுவது என்றால் பிரியம் அதிகமாம். மரணதண்டனைக் கைதிகள்மீது அமர்ந்து ஊஞ்சலாடும் அவர் அடிக்கடி தன் ஊஞ்சல்களை மாற்றிக்கொள்வாராம். இன்னோர் அறை முழுக்க, அதிபரால் அவ்வப்போது ‘செல்லாதவை’ என்று அறிவிக்கப்பட்ட நாணயங்கள் குவிந்துகிடந்தன.

குறுங்கதை
குறுங்கதை

“முதலில் நம் வரைபடத்திலிருந்து ஆறுகளையும் மலைகளையும் அகற்றிவிட வேண்டும். பிறகு காடுகளை அகற்றுவது கடினமான காரியமில்லை. கண்ணீர்த்துளியின் வடிவத்தில் இருக்கும் நம் தேசத்தின் வடிவமைப்பை முகாம்களின் வடிவத்தில் மாற்றவேண்டும்” என்றார் அதிபர்.

கிட்டத்தட்ட அவன் வரைபடப் பணிகளை முடிக்கும் தருணத்தில் ஒருநாள் அவனுக்கே தெரியாமல் தன் பழைய மொழியிலிருந்து ஒரு வார்த்தையை உச்சரித்துவிட்டான். ‘அவனுக்குத் தன் தொப்புள் ஞாபகம் போகவில்லை’ என்று சொன்ன அதிபர், அவனை ஆறுவாரகாலம் ஒரு முகாமில் அடைக்க உத்தரவிட்டார். தினந்தோறும் அவன் தொப்புளில் பாம்புகள் கொத்தும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

வன் முகாமில் இருந்த காலத்தில் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் புதிய நோய் பரவியிருந்தது. வெறியேறிய மிருகங்கள் நகரங்களுக்குள் நுழைந்ததால் தேசத்தின் அமைதி குலைந்திருக்கிறது. அதிபரும் அதிகாரிகளில் பெரும்பான்மை யினரும் கணிசமான குடிமக்களும் மிருகங்களுக்கு இரையாகியிருந் தனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு புதிதாக முளைத்த ஒரு கிளர்ச்சிக்குழு, ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. ஊஞ்சல்களையும் நாணயங்களையும் உருக்கி, வெடிக்கக்கூடிய ஆயுதங்களை அவர்கள் உருவாக்கியிருந்தார்களாம்.

முகாம்களில் அடைபட்டவர்களை விடுவிப்பதற்காகக் கிளர்ச்சிக்குழுவைச் சேர்ந்த வீரன் வந்தபோதுதான் இந்தத் தகவல் முகாம் கைதிகளுக்குத் தெரிந்தது.

“இங்கிருந்து நான் என்னுடைய பழைய மண்ணுக்குச் செல்ல வழியே இல்லையா?” என்று கேட்டான் நாஜுரா.

“ஏனில்லை? நீங்கள் கண்களை மூடிக்கொண்டே இருந்தால் கனவுதானே காண்பீர்கள்! கண்களை நீங்கள் எப்போது திறக்கிறீர்களோ, அப்போதே உங்களுக்கு விடுதலை” என்றான் கிளர்ச்சி வீரன்.

- தும்பி பறக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism