கட்டுரைகள்
Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 26 :சொற்கள் நிரம்பிய தனிமை

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுங்கதை

குறுங்கதை

இன்னும் பூமியில் வாழ, தனக்கு விதிக்கப்பட்ட நாள்கள் எத்தனை என்று தெரியவில்லை ஜீவானந்தத்துக்கு. ஆனால் ஒவ்வொருநாள் கழிவதுமே இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததன் களைப்புடனே கழிகிறது. தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்று 14 ஆண்டுகள் ஆகிவிட்டன.

மனைவி இறந்து மூன்று வருடங்கள். ஒரே மகன். மகனும் மருமகளும் காலையில் அலுவலகம் சென்றுவிடுவார்கள். அதற்குமுன் பேத்தி பள்ளிக்குச் சென்றுவிடுவாள். அதற்கப்புறம் நாள் முழுக்க ஜீவானந்தத்தைச் சூழ்வது தனிமைதான்.

பேப்பர் படிப்பார். டிவி பார்ப்பார். ஆனால் இளமைக்காலத்தில் இருந்தே சினிமா என்றால் ஒவ்வாமை. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களைக்கூடப் பார்ப்பதில்லை. டிவியிலும் செய்திகள் மட்டும் பார்ப்பார். வீட்டின் ஒவ்வொரு டைல்ஸ் சதுரத்திலும் தனிமை அப்பிக்கிடக்கும். பால்கனியில் பூத்திருக்கும் செடி, கிச்சனில் எட்டிப்பார்க்கும் காகம், பேத்தி பீரோவில் ஒட்டியிருக்கும் டோரா புஜ்ஜி போஸ்டர், முருகன் காலண்டர், வாஸ்து புத்தர் சிலை இவற்றோடுதான் பேச வேண்டும், அதுவும் சத்தமில்லாமல்.

குறுங்கதை
குறுங்கதை

டக்கும் தூரத்தில் ஒரு பூங்கா இருக்கிறது. ஜீவானந்தம் சிலநாள்களாக, மகனும் மருமகளும் அலுவலகம் போனபிறகு அந்தப் பூங்காவில் போய் உட்கார ஆரம்பித்தார். அந்த நேரத்திலும் யாராவது நடந்துகொண்டிருப்பார்கள். சில காதலர்கள் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். வாசலில் தின்பண்டங்கள் விற்கும் பெண்மணியின் குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும். அங்கேயும் ஜீவானந்தத்தின் பேச்சுத்துணைக்கான வயசாளிகள் இல்லை. ஆனாலும் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடப்பதற்கு எவ்வளவோ மேல் என்ற எண்ணத்துடனே பூங்காவில் வந்தமர்ந்தார்.

அவரது தனிமையைப் போக்குவதற்கு என்றே வந்தவரைப்போல கனகரத்தினம் வந்தார். ஜீவானந்தத்தைவிட ஏழுவயது இளையவர் என்றாலும், முதியவர்தானே! சிலோன்காரர். அவரிடம் சொல்வதற்குப் பல கதைகள் இருக்கின்றன. தலைமைச் செயலகம் - வீடு என்று வாழ்ந்த ஜீவானந்தத்துக்கும் சொல்வதற்குச் சில கதைகள் இருந்தன.

“திடீர் திடீர்னு ஊரடங்கு வரும். ஆமி செல்லடிக்கும். பங்கர்ல பதுங்கிடுவோம். பலநாள் பாண்கூட கிடைக்காது” என்பார் கனகரத்தினம். பாண் என்றால் ரொட்டி என்பது அவர் விளக்கியபிறகுதான் புரியும் ஜீவானந்தத்துக்கு. நகரம் விட்டு நகரம், நாடு விட்டு நாடு உறவுகளைப் பிரிந்து, மரணங்களைச் சந்தித்து, உயிர்பிழைப்பதே பெருவரம் என எண்ணி வாழும் அவரது வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது ஜீவானந்தத்தின் துயரம் ஒன்றுமேயில்லைதான். டோரா - புஜ்ஜி போஸ்டர் காற்றில் சலசலத்தால் தன்னோடு பேசுவதாக நினைத்துக்கொள்வதில் சிரமமில்லை என்று எண்ணிக்கொண்டார் ஜீவானந்தம்.

“பாஸ்போர்ட் அலுவலகம் போகணும். பஸ்ஸில் போய் வரலாமா?” என்று கேட்டார் கனகரத்தினம். பேத்தி வீட்டுக்கு வரும்வரை சும்மாதானே இருக்கப்போகிறோம் என்று ஜீவானந்தமும் கிளம்பிப்போனார். அலுவலக நேரம் தாண்டிவிட்டதால் பஸ்ஸில் சொற்ப ஆட்கள். எல்லோரும் ஆளாளுக்குக் கையில் மொபைல்போனில் மூழ்கியிருந்தார்கள். கண்டக்டரும் டிக்கெட் கொடுத்துமுடித்தபிறகு செல்போனை எடுத்து ஆராய்ந்துகொண்டிருந்தார். ‘நல்லவேளை டிரைவர் செல்போனை நோண்டுவதில்லை’ என்று ஆறுதல்பட்டுக் கொண்டார் ஜீவானந்தம். சிக்னலில் நிற்கும்போது எட்டிப்பார்த்தார். சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் போனை எடுத்துப் பார்த்துக்கொண்டி ருந்தனர். ‘ஒரு சிக்னலுக்கும் அடுத்த சிக்னலுக்கும் இடையில் அவ்வளவு அவசரமான செய்திகள் இவர்களுக்கு வந்துவிடுமா?’ என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டார் ஜீவானந்தம்.

ருநாள் எக்மோர் செல்ல வேண்டியிருந்தது. மெட்ரோ ரயிலில் பயணித்தார்கள் இருவரும். அன்றுபோன டவுன் பஸ் வெக்கைக்கு இது ஆறுதலாக இருந்தது ஜீவானந்தத்துக்கு. தான் ஆபீஸ் சென்றுவந்த காலங்களில் பல்லாவரம் வரை மின்சார ரயிலில் சென்றதை நினைத்துக்கொண்டார். எவ்வளவு கசகசப்பு!

இப்போதெல்லாம் வெளியில் செல்வது என்பதே குறைந்துவிட்டது. வார இறுதிகளில் மகன், மருமகள், பேத்தி மூவரும் காரில் கிளம்பிவிடுவார்கள். அப்போதும் வீட்டைக் கவனிக்கும் வேலை தான் ஜீவானந்தத்துக்கு. உறவினர்கள் திருமணம், இறப்பு, தேர்தல் போன்ற நேரங்களில் மட்டும்தான் வெளியில் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. கனக ரத்தினம் பேசிக்கொண்டுவந்தார். சொல்லப்போனால் அந்த மெட்ரோ ரயிலில் பேசிக்கொண்டு வந்தது அவர்கள் இருவர் மட்டும்தான். எல்லோருமே செல்போனில்தான் மூழ்கியிருந்தார்கள். ஒருவர் ஆந்திராக்காரர்போல. சத்தமாக யூடியூப் வீடியோவில் தெலுங்குப் பாடல் ஒன்று வைத்துப்பார்க்க, “இவ்ளோ சவுண்டா இருந்தா மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகும்” என்று தன் காதில் கிடந்த இயர்போனைக் கழற்றிக்கொடுத்தார் அருகில் இருந்தவர். அந்த ஆந்திராக்காரரோ கௌரவப் பிரச்னையாக அதை வாங்க மறுத்துவிட்டு, ஒலியை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு வீடியோவைத் தொடர ஆரம்பித்தார்.

“உங்கட மட்டுமில்லை தனிமை. இங்கே எல்லோருமே தனிமையிலதான் நிக்கிறாங்க. பூங்கா, டவுன் பஸ், மெட்ரோ ரயில் எல்லாத்துலயும் தனிமைதான்.

இந்த உலகத்துல எப்போ செல்போன் வந்துச்சோ அப்போ இருந்து எல்லோருக்குள்ளயும் தனிமை வந்திடுச்சு. தனியா இருக்கிற தனிமை பிரச்னையில்லை. ஆனா சமூகம் சமூகமா இருந்துக்கிட்டே இப்போ தனிமையா இருக்கு. அதான் பிரச்னை. யார்கிட்டயும் வார்த்தையில்லாமலா இருக்கு? ஒருத்தர் தினந்தோறும் பார்க்கிற வீடியோ, பாட்டு, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் வழியா முந்நூறுல இருந்து எண்ணூறு வார்த்தை வரைக்கும் படிக்கிறார்; பதில் சொல்றார். ஆனாலும் இங்கே எல்லாரும் தனிமையாத்தான் இருக்காங்க. இது சொற்கள் நிரம்பிய தனிமை” என்றார் கனகரத்தினம்.

“நீங்க இலக்கியம்லாம் படிப்பீங்களோ, அதான் கொஞ்சம் புரியாத மாதிரி, ஆனா அழகாப் பேசுறீங்க” என்று சிரித்தார் ஜீவானந்தம்.

மூன்று மாதங்களில் கனடாவுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார் கனகரத்தினம், மகன் அழைப்பின்பேரில். மீண்டும் ஜீவானந்தத்தைத் தனிமை சூழ்ந்துவிட்டது. காகம், டோரா - புஜ்ஜி, வாஸ்து புத்தர், ரோஜாச் செடி, எதிர் பிளாட் ஏசி அவுட்டோரில் தண்ணீர் குடிக்கும் புறாக்கள், மதிய வெயிலில் தக்காளியும் மீனும் விற்பவர்கள் என்று பார்த்தவர்களை, பார்த்தவற்றை மீண்டும் மீண்டும் பார்க்கும் வாழ்க்கை. பூங்காவுக்குப் போவதால் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

ஒருநாள் தனியாக மெட்ரோ ரயிலில் சென்ட்ரல் வரை சென்றுவந்தார். கனகரத்தினம் சொன்னது சரிதான். எல்லோருமே மற்றவர்களிடம் தனித்தும் தனக்குத்தானே உரையாடிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் செல்போன் பார்க்கும்போது அவர்கள் கண்களைக் கவனித்தார் ஜீவானந்தம். கண்கள் சிரிக்கின்றன; நெகிழ்ச்சியில் ததும்புகின்றன; காமத்தின் ரகசியத்தில் திளைக்கின்றன; அதிர்ச்சியில் விரிகின்றன; புதிய தகவல் தெரிந்துகொண்ட ஆர்வத்தில் மிதக்கின்றன. அவர்கள் யாருக்கோ பதிலளித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரிடமோ உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனிமையில் இருக்கிறார்கள். அவர்களின் தனித்த உலக உருண்டை, இந்த மெட்ரோ ரயிலில் பிரமாண்டக் குமிழிகளாக மிதந்துகொண்டி ருக்கின்றன. ஒரு குமிழி இன்னொரு குமிழியை இடிக்காமல் அவ்வளவு கச்சிதமாக நகர்கிறது.

ஒரு குழந்தை, கழுத்தில் டை அணிந்தவரின் டையைப் பிடித்து இழுக்கிறது. சிரித்தபடியே அதை நகர்த்திய இளைஞர் மீண்டும் செல்போனுக்குள் மூழ்கிப்போனார். ஜீவானந்தம் தன் ரயில் பயணங்களை நினைத்துக்கொண்டார். முக்கியமான விசேஷங்கள், திருவிழாக்கள் என்றால் ரயிலில் பயணிப்பதுதான் வழக்கம். அப்போதெல்லாம் முன்பதிவு செய்யவேண்டிய அளவுக்கு கூட்ட நெருக்கடி இருக்காது. நாட்டு நடப்பு தொடங்கி ஊர் நிலவரம் வரை அலசும் அரட்டை, உணவைப் பகிர்ந்துகொள்ளும் சினேகம், குழந்தைகளுடன் நெருக்கமாகிவிடும் மனிதர்கள், குழந்தைகளுக்கு சன்னலோர சீட்டோ வயதானவர்களுக்குக் கீழ்ப்படுக்கையோ உடனடியாகக் கிடைத்துவிடும் நெருக்கம் என்று ரயில் பயணங்கள் அவ்வளவு இனிமையாக இருந்தன. ரயில் பயணங்களின் வழியாகவே அவருக்கு மூன்று நண்பர்கள் கிடைத்தார்கள். இருவர் இறந்துவிட்டார்கள். ஒருவர் கடைசி ஏழாண்டுகளாகத் தொடர்பில் இல்லை.

திருமங்கலம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது ஒருவர் தாமதமாக எழுந்து செல்போனைப் பார்த்தபடியே இறங்க முயன்றார். அதற்குள் கதவுகள் மூட ஆரம்பித்தன. கிட்டத்தட்ட அவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டார் ஜீவானந்தம். காப்பாற்றினார் என்றும் சொல்லலாம்.

“அப்பா கொரோனான்னு ஒரு நோய் சீனாவுல பரவி உலகம் முழுக்க வந்துகிட்டிருக்காம். வயசானவங்க டெத் ரேஸியோதான் அதிகம். எங்கேயும் போக வேணாம். வீட்டிலேயே இருங்க” என்றான் மகன்.

கொஞ்ச நாள்களாகப் போராட்டச் செய்திகளை டிவியில் பார்க்கும்போது உற்சாகமாக இருந்தது ஜீவானந்தத்துக்கு. கூட்டம் இருப்பதால்தான் அந்த உற்சாகம் என்பதைப் புரிந்துகொண்டார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களைத் தொலைக்காட்சியில் பார்க்கத் தொடங்கினார். தன்னைச் சுற்றி நூறுபேர் இருப்பதைப்போன்ற தைரியம் வந்தது ஜீவானந்தத்துக்கு.

‘`ஆசாதி, ஆசாதி” என்று போராட்ட முழக்கம் ஒலித்தது. “ஆசாதி, ஆசாதி” என்றார் ஜீவானந்தம் கொஞ்சம் சத்தமாக. பால்கனி கிரில்லில் வந்தமர்ந்த காகம், தலையைத் திருப்பிச் சில விநாடிகள் பார்த்தது. பின் உடலைச் சிலுப்பிக்கொண்டு பறந்துபோனது.

குறுங்கதை
குறுங்கதை

சிலநாள்களுக்கு முன்புவரை வெளிநாடுகளில் கொரோனா பரவும் செய்திகளைப் பார்த்தபோது கனகரத்தினத்தின் ஞாபகம் வந்தது. என்ன ஆனாரோ? பிரச்னையின் தீவிரம் இந்தியாவுக்கும் தெரிய ஆரம்பித்தது. மருத்துவப் பணியாளர்களுக்காகக் கைதட்டச் சொன்ன பிரதமர், ஒரே வாரத்தில் கைகூப்பி “யாரும் வீட்டை விட்டு வராதீர்கள்” என்று கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்.

இப்போது மகனுக்கும் மருமகளுக்கும் வீட்டில் இருந்தே அலுவலகப் பணி. இரண்டு படுக்கையறைகளில் ஆளுக்கு ஒன்றை அலுவலமாக்கிக்கொண்டார்கள். பேத்திக்குப் பள்ளி விடுமுறை. தொலைக்காட்சி, செல்போன் என்று மாற்றி மாற்றி மூழ்கிப்போனாள். ஜீவானந்தத்துடன் பேசுவதேயில்லை என்று சொல்லிவிட முடியாது. அவ்வப்போது சில வார்த்தைகள் பேசத்தான் செய்தாள்.

ஜீவானந்தம் சேனல்களை மாற்றி மாற்றி செய்திகள் பார்த்தார். போராட்டம் கைவிடப்பட்டிருந்தது. எட்டு மாதங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் வீட்டுச்சிறைக்குப் போயிருக்கிறது. “எட்டுமாத அனுபவம் இருக்கிறது. லாக்-டவுன் அனுபவங்கள் என்னிடம் ஏராளம் இருக்கின்றன” என்று நகைச்சுவையாகச் சொல்லியிருந்தார் உமர்.

எங்கும் கூட்டமில்லை. ‘மேம்பாலங்கள் மூடப்பட்டன’, ‘வணிக வளாகங்கள் மூடப்பட்டன’, ‘திரையரங்குகள் மூடப்பட்டன’ என்று பூட்டப் பட்ட அனைத்தின் முன்பும் முகமூடிகளுடன் செய்தியாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். எப்போதாவது பின்னணியில் ஒருசில மனிதர்கள் கடந்துபோனார்கள். இப்போது தொலைக்காட்சிகளையும் தனிமை சூழ்ந்திருந்தது.

“தாத்தா போரடிக்குது. ரிமோட் தாங்க” என்றாள் பேத்தி. கொடுத்துவிட்டு நகர்ந்தார். பால்கனிக்குச் செல்லும் வழியில் அறையில் மகன், காதில் ஹெட்போனுடன் லேப்டாப்பில் மூழ்கியிருந்தான். அப்பாவை நிமிர்ந்து பார்த்தான். ஜன்னல் காகம் பார்க்கும் அவகாசம்கூட இல்லை. மீண்டும் லேப்டாப்பில் மூழ்கினான், பால்கனியில் நாற்காலியில் சிறிதுநேரம் அமர்ந்துபார்த்தார் ஜீவானந்தம். தெரு முழுக்கத் தனிமை வெள்ளம்.

மீண்டும் ஹாலுக்கு வந்தார். டிவியில் டோரா புஜ்ஜி ஓடிக்கொண்டிருந்தது. அது பேசுவது சின்ன ஆசுவாசமாக இருந்தது. சோபாவில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். மெட்ரோ ரயிலில் பயணிப்பதைப் போலிருந்தது.

- தும்பி பறக்கும்...