Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 29: ஆச்சர்யங்களின் நிகழ்தகவு

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை

லியார்னோ டி காப்ரியோவைப் பார்க்கும்போதெல்லாம் மதுசூதனனுக்கு பாலுச்சாமியின் ஞாபகம்தான் வரும். ஆசியச் சாயல், மேற்கத்தியச் சாயல், வெள்ளை நிறம் எல்லாம் கலந்த கலவையாகத்தான் டிகாப்ரியோ இருந்ததைப்போல் தெரிந்தது அவனுக்கு.

பாலுச்சாமியும் இப்படித்தான் இருப்பான். தனித்த இன அடையாளம் கண்டுபிடிக்க முடியாததைப்போன்றதொரு முகம். தலைமுடியை நாலாபக்கமும் இழுத்து வாரியிருப்பான். உடைகளில் கவனம் இருந்ததில்லை. சட்டையின் முதல் பட்டன் திறந்திருக்கும். ரப்பர் செருப்புதான். அவனைப் பார்த்து எத்தனை ஆண்டுகள் இருக்கும்? சரியாக 13 ஆண்டுகள் இருக்கும். அவனைப் பற்றிக் கடைசித் தகவல் கேள்விப்பட்டு மிகச்சரியாக எட்டாண்டுகள் இருக்கும். பாலு என்பதால்தான் கணக்கு இவ்வளவு கறாராக இருக்கிறது.

துசூதனன் தவிப்புடன் அமர்ந்திருக்கிறான். புரொபசர் சேவியர்தான் வினாத்தாள்களைத் தருகிறார். வாங்கிப் பார்க்கிறான். ஒன்றும் தெரியவில்லை. மீண்டும் புரட்டிப்பார்க்கிறான். ஒரு கேள்விக்கும் விடை தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் என்ன கேள்வி என்றே புரியவில்லை. திரும்பிப் பார்க்கிறான் ஹரிணி கண்கள் கலங்க இன்னொரு டெஸ்க்கில் அமர்ந்திருக்கிறாள். அவளுக்கும் ஒன்றும் புரியவில்லைபோல. தேர்வறையை விட்டு வெளியே வந்து ஓடத் தொடங்கினான் மதுசூதனன். கல்லூரி வாசலுக்கு வெளியே அலைகளுடன் சீறிக்கொண்டிருந்தது கடல். எப்படியும் அதில் இறங்கிவிட வேண்டும். ஓடும்போது தோளைத் தொட்டு திருப்புகிறான் பாலு. ஒரு சிகரெட் பாக்கெட்டைத் திறந்து சிகரெட்டை நீட்டுகிறான். அதைத் தள்ளிவிட்டுக் கடலை நோக்கி மதுசூதனன் ஓடும்போது, இடையில் ஒரு ரயில் வேகமாக அவனை அடித்துத் தள்ளிக் கடக்கிறது.

குறுங்கதை
குறுங்கதை

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். கனவுதான். ஹரிஷ் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கிறான். ஏ.சியின் மெல்லிய சத்தம். புரண்டு படுத்த ஹரிணி, “வாட் ஹேப்பன்ட்?” என்றாள்.

“நத்திங். கனவும்மா” என்றபடி தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தான் மதுசூதனன்.

காலையில் எழுந்து பல் துலக்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. ‘இன்னமுமா தனக்குத் தேர்வுகள் பற்றிக் கெட்ட கனவுகள் வருகின்றன? இன்னும் தேர்வு பற்றிய பயம் நீங்கவில்லையா?’ என்று நினைத்துக்கொண்டான். அடையாற்றில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடர். காபியைக் குடித்தபடியே நாளிதழை எடுத்தான். ‘என்னது இது தமிழ் நாளிதழ்? எப்போதும் ஆங்கில நாளிதழ் படிப்பதுதானே வழக்கம். புது பேப்பர் பையன்போல. அடிக்கடி இது ஒரு பிரச்னை. இந்த ஏரியா முழுக்கப் பார்க்கிறவருக்கு யார் யார் என்னென்ன வாங்குவார்கள் என்று தெரியும். ஆனால் பேப்பர் பாய் எப்போதாவது மாறினால், இப்படித்தான் மாற்றிமாற்றிப் போடுவார்கள். வேறு வழியில்லை’ என்றபடி எடுத்துப் பார்த்தான்.

உள்ளே வழுக்கிக்கொண்டு வந்தது ‘எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கான வினா - விடை இலவச இணைப்பு.’ புரட்டிப் பார்த்தான். எல்லாப் பக்கமும் கணிதம். ஆனால் அவனுக்கு மொத்தம் மூன்று கணக்குக்குத்தான் விடை தெரிந்தது. பி.எஸ்ஸி மேத்ஸ் படித்து எம்.சி.ஏ முடித்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர் என்று நினைக்கும்போதே கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது.

ரேநாளில்தான் மதுசூதனனுக்கும் பாலுவுக்கும் காலேஜ் அட்மிஷன். அட்மிஷன் ஃபீஸ் கட்டிவிட்டு மதுவும் அப்பாவும் எதிரில் இருந்த டீக்கடைக்கு டீ சாப்பிடப் போனார்கள். அங்கே சிகரெட் குடித்துக்கொண்டிருந்தான் பாலு. எந்தத் தயக்கமும் இல்லை. அவன்பாட்டுக்குப் புகைவிட்டுக்கொண்டிருந்தான். மதுசூதனனுக்குத்தான் தயக்கமாக இருந்தது. அவனைப் பார்த்துப் புன்னகைப்பதா, வேண்டாமா என்ற குழப்பம். அப்பா கல்லூரியின் தரம் பற்றியும் கல்வியின் எதிர்காலம் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். டீ குடித்தபடியே கேட்டுக்கொண்டிருந்தான் மது.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

பாலு ஒரு விநோதப் பேர்வழி. கணிதத்தில் அவனுக்கு இருக்கும் அறிவுக்கு அவனை ஜீனியஸ் என்றுதான் சொல்லவேண்டும். எல்லோரும் முதலாமாண்டு மாணவர்கள்தான். ஆனால் பாலுவோ மூன்றாவது செமஸ்டருக்கான கணக்குப் புத்தகத்தைப் படித்துக்கொண்டி ருப்பான். அவனுக்குக் கணிதம் என்பது கலையாத போதை. ‘உங்களுக்குப் பிடிக்காத சப்ஜெக்ட் எது?’ என்று கணக்கெடுப்பு நடத்தினால் உலகத்தில் அதிக வாக்கு விழுவது கணிதத்துக்காகத்தான் இருக்கும். அதேபோல் ‘உங்களுக்கு அதிகம் பிடித்த சப்ஜெக்ட் எது?’ என்று வாக்கெடுப்பு நடத்தினாலும் அதிக வாக்குகள் கணிதத்துக்கு விழும். அது ஒரு புதிர். அது ஒரு இம்சை. அது ஒரு விளையாட்டு. அது ஒரு கொடும் போர்க்களம்.

பாலு கணிதத்தில் எவ்வளவு மேதையாக இருந்தாலும் அவன் எல்லா சப்ஜெக்டிலும் தேர்ச்சிபெற வேண்டும். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் சுத்தமாக வரவில்லை. தமிழில் அவன் கையெழுத்தைப் பார்த்தால் அது வட்டெழுத்தா, பிராமி எழுத்தா என்ற குழப்பம் வரும். நமக்கே இவ்வளவு குழப்பம் என்றால் தேர்வுத்தாளைத் திருத்துபவர்களுக்கு...? பாலுவுக்கு ஆங்கிலம் என்பது அந்தரக் கயிற்றுக்குக் கீழ் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக்குண்டம். மற்ற சப்ஜெக்ட்களில் தமிழ் உட்பட கஷ்டப்பட்டுத் தேர்ச்சி பெற்றுவிடும் பாலுவுக்கு, ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது சவாலான காரியமாகவே இருந்தது.

“நான் ஏன்டா எல்லா சப்ஜெக்டும் படிக்கணும்? நான் மேத்ஸ் ஸ்டூடன்ட்தானே?” என்றான் பாலு.

உண்மைதான். கணிதம் படிக்க மொழியறிவு பெரிதாகத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் கணிதம் என்பதே கிட்டத்தட்ட ஒரு மொழிதான். ஒரு மொழிக்கு இலக்கணம் என்றால் கணிதத்துக்குத் தேற்றங்களும் சூத்திரங்களும். அவை பாலுவுக்கு அத்துப்படி. ஆனால் ஆங்கில இலக்கணம், புரியாத புதிர்கள்.

“ஏன்டா, உனக்கு மேத்ஸ் மட்டும் தெரிஞ்சா போதுமா, இங்கிலீஷ் தெரிய வேணாமா?” என்றான் மது.

“தெரிஞ்சு என்ன பண்ணப்போறேன்? ஒருத்தனுக்கு எந்த சப்ஜெக்ட் நல்லா வருதோ, புரிஞ்சு படிக்கிறானோ அதை ஒழுங்காக் கத்துக்கிட்டா போதாதா? வராதது, புரியாததை எல்லாம் படிச்சே ஆகணும்னு என்ன அவசியம்?” என்றான் பாலு.

“இதெல்லாம் படிச்சு நீ கல்வி அமைச்சர் ஆனபிறகு மாத்திக்க. இப்போ இங்கிலீஷ் எக்ஸாமுக்குப் படி” என்றான் மது.

“படிப்புக்கும் கல்வி அமைச்சருக்கும் என்னடா சம்பந்தம்? முட்டாள்” என்றான் பாலு.

‘ரொம்பப் பேசுறான். இந்தத் தடவையும் அரியர்’ என்று நினைத்துக்கொண்டான் மது. கடைசிவரை அந்த ஆங்கில அரியர்களால் பாலுவால் டிகிரி முடிக்கமுடியாமல்போனது.

அஞ்சிறைத்தும்பி - 29: ஆச்சர்யங்களின் நிகழ்தகவு

துசூதனன், பாலு இருவருமே சிலகாலம் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். மது படித்து முடித்துவிட்டு வேலைக்காக அலைந்துகொண்டிருந்தான். பாலு ராயபுரத்தில் உள்ள ஒரு கார்மென்ட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தான். நன்றாக நினைவிருக்கிறது, ஒரு செவ்வாய்க்கிழமை காலையில் இன்டர்வியூ.

‘போயும் போயும் செவ்வாய்க்கிழமை இன்டர்வியூ வைக்கிறாய்ங்க. என்ன ஆகப்போகுதோ? அமெரிக்கா கம்பெனிக்கு இந்த சென்டிமென்ட் இல்லையே’ என்று அலுத்துக்கொண்டேதான் கிளம்பினான் மது. இன்டர்வியூ போக நல்ல ஷூ இல்லை என்று பாலுவிடம் வாங்கிப்போட்டுக்கொண்டுதான் சென்றான். அவனே எதிர்பாராமல் மது இன்டர்வியூவில் தேர்வாகிவிட்டான்.

தாங்க முடியாத ஆச்சர்யமாக இருந்தது. இயற்பியல் செய்முறைத் தேர்வுக்கு பிட் எடுத்துப்போனவன் மது. ஆனால் இப்போது அமெரிக்காவில் வேலை. இரண்டு மாதங்களில் சேர வேண்டும். ஆங்கிலம் ஓரளவுக்குத் தெரியும்தான். அமெரிக்க உச்சரிப்புக்காகச் சிறப்பு வகுப்புகள் போகத் தொடங்கினான் மது.

தற்குப் பிறகு இந்தியா வந்த இரண்டு சந்தர்ப்பங்களில் பாலுவைப் பார்த்தான். வேறு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது போன் தொடர்புகள் இருந்தன. ஒருகட்டத்துக்குப் பிறகு முற்றிலும் தொடர்புகள் அறுந்தன. பாலுவும் மதுசூதனனும்தான் நெருக்கமான நண்பர்கள். ஆனால் அவர்களுக்குள் தொடர்புகள் நின்றுபோயின. ஆனால் பழைய நண்பர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்ட் இன் என்று பல ஊடகங்கள் வழியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். கல்லூரி வாட்ஸப் குரூப்பில்கூட பாலு இல்லை. இப்போது சென்னையில்தான் இருக்கிறான் மது.

“டாடி நேத்து நைட் ஒரு பேட் ட்ரீம். நான் எக்ஸாம்ல மேத்ஸ் ஃபெயில் ஆகறமாதிரி கனவு வந்துச்சு. ஒரு கொஸ்டீனுக்குக்கூட எனக்கு ஆன்சர் தெரியலை டாடி” என்றான் ஹரீஷ்.

ஆறாவதுதான் படிக்கிறான். ‘இவனுக்கும் இதேபோல் கனவா?’ என்று நினைத்துக் கொண்டான் மது. அவன் நண்பர்களிடம் பேசும்போதுதான் தெரிந்தது பலருக்கும் இந்தக் கனவுகள் வருமென்று. ‘அப்படியானால் தேர்வு என்பது இந்தத் தேசத்துக்கே கொடுங்கனவுபோல’ என்று நினைத்துக்கொண்டான் மது.

வீடு மாற்றிவந்துவிட்டார்கள். ஹரீஷ் படிக்கும் பள்ளி இங்கிருந்து தூரம். வண்டி ஏற்பாடு செய்ய வேண்டும். “ரெகுலர் ஆட்டோ ஒண்ணு வரும். நான் சொல்றேன்” என்றார் பக்கத்து ஃபிளாட்காரர்.

மறுநாள் காலையில் ஷார்ட்ஸுடன் போய் நின்றால் பக்கத்து ஃபிளாட்காரர் அறிமுகப்படுத்தி வைத்த ஆட்டோக்காரர் பாலு. வாழ்க்கை என்பது ஆச்சர்யங்களின் கணிதம். ஹரீஷைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல சம்மதித்தான் பாலு.

ஒருநாள் சாவகாசமாகத் தன் கதையை விலாவாரியாகச் சொன்னான் பாலு. பல வேலைகள் பார்த்து எதுவும் செட் ஆகாமல்தான் இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறான். காதல் திருமணம். மனைவி ஒரு மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்ட். பள்ளிக்குச் செல்லும் மகள்.

“உனக்கு மேத்ஸ் நல்லா வருமேடா, ட்யூஷன் எடுக்கலாமே?” என்றான் மது.

“டிகிரி முடிக்காதவன்கிட்ட யாருடா டியூஷன் படிப்பாங்க?” என்றான் பாலு.

“இன்னமும் உனக்கு மேத்ஸ்லாம் ஞாபகமிருக்கா? பழைய புக்ஸ்லாம் படிப்பியா?”

“நீ வேற. ஆட்டோவுக்கு மீட்டர் போட்டுக்கூட ஓட்டுறதில்லை. இத்தனை கிலோமீட்டருக்கு இவ்வளவு காசுங்கிற கணக்குக்கூட இல்லை” என்றபடி சிகரெட் பற்றவைத்தான் பாலு.

ன்று இரவும் அதே கனவு. தேர்வறையில் இருந்து மதுசூதனன் ஓடிக்கொண்டிருக்கிறான். கல்லூரி வாசலைத் தாண்டினால் கடல். அலைகள் சீறிக்கொண்டிருக்கின்றன. கடலில் கால் வைக்கும்போது குறுக்கே ஒரு ரயில் ஓடிவருகிறது. ரயிலின் சன்னலில் இருந்தபடி பாலுச்சாமி ஏதோ ஒன்றைத் தூக்கி விசிறுகிறான். அது ஒரு புத்தகம். Fundamentals of Matrix Algebra –Gregory Hartman.

- தும்பி பறக்கும்...