Published:Updated:

குறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

ஜெயமோகன் நகர், சாருநிவேதிதா தெரு

குறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி

ஜெயமோகன் நகர், சாருநிவேதிதா தெரு

Published:Updated:
அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

“நீங்க வேணும்னா படுத்துக்கங்க சார்” என்றார் நாகராஜ்.

“இருக்கட்டும். இந்த நேரத்துல ஊரையும் ரோட்டையும் பார்க்கிறது நல்லாருக்கும்” என்றார் முரளி.

இரவுநேரப்பயணம் எப்போதுமே அலாதியானதுதான். நெடுஞ்சாலை யோரம் நிற்கும் பெயர் தெரிந்த, தெரியாத மரங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும். நெடுஞ்சாலை மட்டுமல்ல, இரவு நேரத்து நகரமும்கூடத் தனித்துத்தெரிவதுதான். மூடியிருக்கும் கடைகள், ஒட்டப்பட்டிருக்கும் விதவிதமான போஸ்டர்கள், தனித்து நிற்கும் தலைவர் சிலைகள், ஒன்றிரண்டு பேருடன் ஓடும் கடைசிப்பேருந்துகள், ஒருசில டீக்கடைகளில் ஆவிபறக்கும் அடுப்பும் விதவிதமான பலகாரங்களும், ஆளரவமற்ற மார்க்கெட்டில் சிதறிக்கிடக்கும் காய்கறிகள், பூக்கள் என இரவுநேரத்து நகரம் வித்தியாசமான சித்திரங்களைத் தரும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘இந்த அப்பளத்தைச் சாப்பிட்டால் இந்தியா வல்லரசு ஆகும்’ என்ற விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்களே, அந்த அப்பளமும் மசாலாப் பொருள்களும் நிறுவனத்தில்தான் நாகராஜும் முரளியும் வேலை செய்கிறார்கள். கணக்குவழக்குகள் எதுவும் முறைப்படி இருப்பதில்லை. சரக்கை ஏஜென்ட்டுகள் இருப்பிடத்தில் இறக்கிவைத்து, பணத்தை வாங்கிவருவது முரளியின் வேலை. நாகராஜ் லாரி டிரைவர்.

டேஷ்போர்டிலிருந்து மாணிக்சந்த் சரத்தை எடுத்த நாகராஜ் ஒன்றைப்பிய்த்து வாயில் போட்டுக்கொண்டார். ‘ஆத்தாடி என்ன உடம்பு...’ என்று ஸ்பீக்கர் அலறியது.

‘அடையாளம் சின்னத்தழும்பு’ என்று முணுமுணுத்துக்கொண்ட முரளி கேட்டார்.

“ஏன் நாகராஜ், இளையராஜா பாட்டெல்லாம் போட மாட்டீங்களா?”

“அய்யய்யே...”

“என்ன அய்யய்யே, அப்போ உங்களுக்கு இளையராஜா பாட்டு பிடிக்காதா?”

குறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி

“இளையராஜாவைப் பிடிக்காத தமிழன் யாரு சார்?”

“பின்னே, நைட் டிராவல், அதுவும் ரொம்ப தூரம் டிராவல்னா இளையராஜா பாட்டுதானே?”

“அதெல்லாம் கார் ஓட்டிட்டுப் போறவங்களுக்கு சார். ராஜா பாட்டு கேட்டு மனசு லேசாகிப் பறக்க ஆரம்பிச்சிடும். கொஞ்சம் கொஞ்சமா நம்மளை மறந்திடு வோம். தூங்கக்கூட செஞ்சிடுவோம். லாரியில எப்பவும் குத்துப்பாட்டு தான் சார். அப்பதான் ரொம்பதூரம் ஓட்ட முடியும். இதுக்குன்னே லாரி நிக்கிற இடம், மோட்டலில எல்லாம் ‘ஆத்தாடி என்ன உடம்பு’, ‘லாலாக்கு டோல் டப்பிம்மா’ன்னு கேசட் விக்கும்.”

“தூக்கம் வரக்கூடாதுன்னுதான் அண்ணன் மாணிக்சந்த் போடறார்” என்றான் கிளீனர் கணேசன்.

காலை 4 மணி. கடையநல்லூர் ஏஜென்ட்டை எழுப்பி, அப்பளப்பெட்டிகளையும் மசாலா சிப்பங்களையும் கணேசன் இறக்கிவைத்தான். எல்லாவற்றையும் சரிபார்த்த ஏஜென்ட், கணக்கு வழக்குகளைப் பார்த்துப் பணத்தைக் கொடுத்தார். எண்ணிப்பார்த்துக்கொண்டு கிளம்பும்போதுதான் ஓரத்தில் ஒரு புத்தகம் இருந்ததை முரளி பார்த்தார். ‘வெள்ளை யானை.’ ஜெயமோகனின் நாவல்.

“அண்ணாச்சி இதை எடுத்துக்கவா?”

“தாராளமா எடுத்துக்கங்க. இதெல்லாம் எம்பையன் படிப்பான். இப்போ மெட்ராஸ்ல ஹாஸ்டலில படிக்கிறான்.”

ஒரு டீயைச் சாப்பிட்டதும், லாரி கிளம்பியது.

“சார், நீங்க இலக்கியம்லாம் படிப்பீங்களா?”

“படிப்பேன் நாகராஜ்.”

“நானும் படிப்பேன் சார்.”

“ஆச்சர்யமா இருக்கு. லாரி டிரைவரா இருந்துக்கிட்டு இலக்கியம் படிப்பீங்களா?”

“ஏன் சார்? அது என் தொழில். சுந்தர ராமசாமி ஜவுளிக்கடை முதலாளி. தோப்பில் முகமது மீரான் மிளகாய் வத்தல் வியாபாரி. அதுமாதிரி நான் லாரி டிரைவர்.”

“நல்லாப் பேசுறீங்க. ஆமா, இந்த புக் படிச்சிருக்கீங்களா?”

“வெள்ளை யானைதானே, படிச்சிருக்கேன் சார். எனக்குப் பெரிசாப் பிடிக்கலை. இன்னும்கூட ஜெயமோகன் நல்லா எழுதியிருக்கலாம். ஆனா இந்தப் புத்தகத்தில எனக்கு ஒரு வரி மனசுல பதிஞ்சிடுச்சு. ஏய்டன்னு ஒரு வெள்ளைக்கார அதிகாரி கேரக்டர். அவனைப் பத்தி எழுதறப்போ ஜெயமோகன் ஒரு வரி எழுதியிருப்பார், ‘ஆழமான பெருமூச்சு விட்டாலும் மனத்தின் எடை குறைய வில்லை.’ சூப்பர் வரி சார். எனக்கு அடிக்கடி அது ஞாபகத்துக்கு வரும். ‘வெண்முரசு’ நாவலில ஒரு பகுதியோட பேர் ‘தீயின் எடை.’ எனக்கென்னமோ அந்த வெள்ளை யானை வரி அவர் மனசுல எங்கேயோ தங்கிதான் இந்தத் தலைப்பு உருவாகியிருக்கும்னு தோணுச்சு. நினைச்சுப்பார்க்க முடியாத தலைப்பு. என்ன ஒரு படிமம் சார்.”

“ண்ணே, பாயின்ட்ணே” என்று முரளிக்குக் கேட்காத குரலில் சொன்னான் கணேசன். கண்களைக் காட்டிவிட்டு, பேச்சைத் தொடர்ந்தார் நாகராஜ்.

“அப்போ நீங்க ஜெயமோகன் ரசிகனா நாகராஜ்?”

“அப்படியில்லை சார். எனக்கு சாருவை ரொம்பப் பிடிக்கும். காலச்சுவடுல ‘ஹேராம்’ படத்துக்கு அவர் எழுதின விமர்சனம் இன்னும் ஞாபகம் இருக்கு. ஸீரோடிகிரியில் ‘கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் செத்த மூளை’ன்னு ஒரு கேரக்டர் வரும். செம ஜாலியா இருக்கும்.”

“ஓ, நீங்க சாரு ரசிகர்ங்கிறதால் இளையராஜாவைப் பிடிக்காதோ?”

“சார், நான்தான் சொன்னேனே இளையராஜாவைப் பிடிக்காத தமிழன் கிடையாதுன்னு. சாருதான் லத்தீன் அமெரிக்கக்காரராச்சே?”

முரளி சிரிக்க ஆரம்பிக்க, “பத்து நிமிஷம் சார். வண்டியில இருங்க” என்று நாகராஜும் கணேசனும் இறங்கிப் பின்னால் போனார்கள். விளக்கைப் போட்டு வெள்ளை யானையின் சில பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார் முரளி.

இரண்டு அத்தியாயங்கள் தாண்டிய நிலையில் மீண்டும் லாரி கிளம்பியது.

“என்னாச்சு, நாகராஜ் எதுவும் பிரச்னையா?”

“ஒண்ணுமில்லை சார். டீசல் எடுத்தோம்.”

“டீசல் எடுத்தீங்களா? என்கிட்டயே சொல்றீங்க? இது திருட்டு இல்லையா நாகராஜ்?”

“சார், இவய்ங்க பண்ற வியாபாரம் உங்களுக்குத் தெரியாதா? இதெல்லாமா திருட்டு?”

நைட் டிராவல்
நைட் டிராவல்

கணேசன் மட்டும் ஓரக்கண்களால் முரளியைப் பார்த்தான். ‘நெருப்பு கூத்தடிக்குது... காத்தும் கூத்தடிக்குது’ பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. சில நிமிடங்கள் போனதும் முரளியே பேச ஆரம்பித்தார்.

“ஆமா, எப்படி உங்களுக்கு இலக்கியத்துல ஆர்வம் வந்தது?”

“எனக்குப் படிப்பு ஏறலை. ஆனா இலக்கியம் படிக்கப் பிடிக்கும். நைட்டு வண்டி ஓட்டினா பகலில படிப்பேன் சார்.”

“ஒரு லாரி டிரைவர் இலக்கியம் படிக்கிறது இன்னும் எனக்கு ஆச்சர்யமாத்தான் இருக்கு.”

“சார், ஜெயமோகன் ‘சர்கார்’க்கு வசனம் எழுதினா ஏத்துக்குவீங்க. சாரு, ‘நந்தலாலா’வில் ‘கன்னித்தீவுப் பொண்ணா கட்டழகுக் கண்ணா’ன்னு ஆடினா ஏத்துக்குவீங்க. ஒரு லாரி டிரைவர் இலக்கியம் படிச்சா ஏத்துக்க மாட்டீங்களா?”

“அண்ணே, அது ‘நந்தலாலா’ இல்லைண்ணே, ‘யுத்தம் செய்’ படம்ண்ணே” என்றான் கணேசன்.

‘நம்பிக்கைக்கு நாங்க; நகை வாங்க நீங்க’ என்று நெஞ்சில் கைவைத்தபடி பேசிக்கொண்டிருந்தார் நகைக்கடை முதலாளி. அவரது சட்டைப்பையின் மேல் ஸ்டெதஸ்கோப்பை வைத்துப் பரிசோதித்துக் கொண்டிருந்தார் பாண்டியன் நெடுஞ்செழியன்.

“சார். எனக்கு ஒரு கதை தோணுச்சு. ஜெயமோகன் ‘கொற்றவை’ படிச்சிருக்கேன். ‘தடம்’ல ஜான் ஆபிரகாம் இப்போ வந்தா எப்படி இருக்கும்னு கீரனூர் ஜாகீர் ராஜா ஒரு கதை எழுதியிருந்தார். இது ரெண்டையும் வெச்சுத்தான் அந்தக் கதை தோணுச்சு. பௌத்த மதத்திலதான் மறுபிறவி நம்பிக்கை இருக்குல்ல, இளங்கோவடிகள் இப்போ பொறந்திருக்கார். அவர் பேரு இந்தப் பிறவியில பழனிச்சாமி. அவர் பழங்கச்சாமின்னு பேரை மாத்திக்கிறார். தன் கதாபாத்திரங்கள் எங்கே இருக்காங்கன்னு தேடிப்போறதுதான் கதை. சென்னையில் ஒரு பிரபலமான நகைக்கடையில் செக்யூரிட்டி வேலை பார்க்கிறான் கோவலன். பக்கத்துலயே பிளாட்பாரத்தில செருப்புக்கடை போட்டிருக்கா கண்ணகி.”

“அப்போ பாண்டியன் நெடுஞ்செழியன்?”

“அவன் இந்தப் பிறவியில பிரபலமான ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரா இருக்கான். மாரடைப்பு வந்துதானே பாண்டிய மன்னன் செத்துப்போனான்” என்று நாகராஜ் சொல்லவும் முரளி சிரித்துவிட்டார்.

“கண்ணகி, கோவலன் ரெண்டுபேருமே கண்ணகி நகர்ல வசிக்கிறாங்க. நகரத்தோட சென்டர்ல இருக்கிற மக்களை கண்ணகி நகர்ல குடியேத்துறதை எதிர்த்து இளங்கோ மனு எழுதிப்போடறாரு, கோர்ட்டுக்குப் போறாரு, போராட்டம் பண்றாருன்னு கதை போகுது. ‘பூம்புகார்’னு தலைப்பு வெச்சிருக்கேன் சார்.”

“இளங்கோவடிகள் புகார் எழுதுறதால பூம்புகாரா? பார்த்திபன்தனமா இருக்கு நாகராஜ்.”

“அப்போ ‘இளங்கோ தெரு, கண்ணகி நகர்’னு தலைப்பு வைக்கலாமா சார்?”

“முதல்ல கதையை எழுதி முடிங்க. தலைப்பை அப்புறம் யோசிக்கலாம்.”

உரையாடல் தொடர, ஒரு கட்டத்தில் தூக்கத்தில் விழுந்தேன். “சர்கார் படம் உங்களுக்குப் பிடிக்குமாண்ணே?” என்று கணேசன் கேட்டது அரைகுறையாகக் கேட்டது. காற்று சில்லென்று வீசியது இதம்.

‘நம்பிக்கைக்கு நாங்க; நகை வாங்க நீங்க’ என்று நெஞ்சில் கைவைத்தபடி பேசிக்கொண்டிருந்தார் நகைக்கடை முதலாளி. அவரது சட்டைப்பையின் மேல் ஸ்டெதஸ்கோப்பை வைத்துப் பரிசோதித்துக்கொண்டிருந்தார் பாண்டியன் நெடுஞ்செழியன். “என்னா நம்பிக்கை? செய்கூலி மத்த கடையில எல்லாம் மூணு பர்சென்ட்தான். நீங்க ஆறு பர்சென்ட் வாங்குறீங்க?” என்றாள் தலைவிரிகோலமாய் கண்ணகி. “நான் உள்ளே விட மாட்டேன்னு தான் சொன்னேன். அதுவா வந்துடுச்சு. பார்த்தாலே திருட்டுநகை மாதிரி தெரியுது சார்” என்றான் செக்யூரிட்டி உடையில் கோவலன்.

முரளிக்கு விழிப்பு வந்துவிட்டது. திரும்பிப் பார்த்தால் கண்ணசந்து தூங்கிக்கொண்டி ருந்தார் நாகராஜ். வண்டி அதுபாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தது. அவசரமாக கணேசனை எழுப்பினார் முரளி.

“டிரைவர் தூங்குறார்டா!”

“பார்த்தேன் சார். பயமா இருந்துச்சு. அதான் கண்ணை மூடிட்டேன். உங்களுக்கும் பயமா இருந்தா கண்ணை மூடிக்கங்க சார்” என்றான் கணேசன்.

‘கண்ணை மூடுவதா’ என்று முரளி பதறவும், லாரி அதற்கு முன்னால் நின்ற எய்ஷர் மீது மோதவும் சரியாக இருந்தது. லெவல் கிராசிங்கிற்காக நின்றிருந்த கேரள வண்டி நகர்ந்த நேரத்தில்தான் எங்கள் லாரி மோதியது என்பதால் எந்தச் சேதாரமும் இல்லை. முன்னால் இருந்த வண்டிக்கு, மோதியதுகூடத் தெரியவில்லை.

நாகராஜ் விழித்துக்கொண்டார். ‘`கேரளா வண்டிண்ணே. எப்பவுமே இவனுக இப்படித்தான்” என்று ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னான் கணேசன்.

“அவய்ங்க மேல தப்பில்லைடா. நான் அசந்துட்டேன்.”

“நீங்க அசந்தது சரி. இவன் என்ன பண்ணினான் தெரியுமா?” என்று முரளி சொல்லிமுடிக்க நாகராஜ் வெடித்துச்சிரித்தார்.

“தம்பி, உன்னை மாதிரி கிளீனரைப் பத்தி இசைன்னு ஒரு கவிஞர் கவிதை எழுதி யிருப்பார். சார், உங்களுக்கு இசையோட கவிதை பிடிக்குமா?”

குறுங்கதை
குறுங்கதை

“ப்ச், மீம்ஸ் போடறதுக்குப் பதிலா அவர் கவிதை எழுதிக்கிட்டிருக்கார்” என்றார் முரளி.

“போங்க சார். டேய், நீ அந்தக் கவிதையைக் கேளு” என்றபடி சொல்லத்தொடங்கினார் நாகராஜ்...

அந்த சிமென்ட் லாரிக்கு வழி வேண்டும்.

டிரைவரின் கீழ்ப்படியும் ‘கிளி’

தன் ஒற்றைக்கையை வெளியே நீட்டுகிறது.

விறைத்து நீண்ட ஒரு உலக்கையைப் போலல்ல...

ஐயா... அவசரம்... என்று கெஞ்சுகிற பாவனையிலல்ல...

அது கையை நீட்டியதும்

அதன் மணிக்கட்டில் உதித்த சாம்பல்நிறப்பறவை

அலையலையாய் நீந்துகிறது.

நான் காண்கிறேன்...

இந்த மீப்பெருஞ்சாலையின் அந்தரத்தில்

ஓர் அற்புதநடனமுத்திரை.

அதன் நளினத்தின் முன்னே

உலகே! நீ வழிவிட்டொதுங்கு!

முரளி திரும்பிப்பார்த்தார். கணேசன் மலங்க மலங்க விழித்தபடி, என்ன செய்வது என்று தெரியாமல் லேசாகச் சிரித்துவைத்தான். முரளி பொத்தானைத் திருகி பாடலின் சத்தத்தை அதிகப்படுத்தினார். பாடல் லாரி முழுவதும் பரவத்தொடங்கியது

‘ஒயிட் லக்கான் கோழி ஒண்ணு கூவுது!

அது ஃபாஸ்ட்ஃபுட் கடையைப் பார்த்து ஏங்குது!’

- தும்பி பறக்கும்...