Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 30: காவியத் தலைவன்

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை

அஞ்சிறைத்தும்பி - 30: காவியத் தலைவன்

குறுங்கதை

Published:Updated:
அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி
“இந்தப் பையன் யாருடா, ஜெய்சங்கர் மாதிரியே இருக்கான்?” என்றார் அம்மா. “இது ஜெயம் ரவிம்மா. போன வருஷம் ‘கோமாளி’ன்னு ஒரு படம் பயங்கர ஹிட். இவன் நடிச்சதுதான்” என்றான் மணிமாறன்.

“இந்தப் பையன் ஜெய்சங்கருக்கு சொந்தக்காரப் பையனா?”

“இல்லை. ஏன் அப்படிக் கேட்கிறீங்க?”

“இல்லைடா. பார்த்தா அப்படித் தெரிஞ்சது. ஆனா இவன் கண்ணு வேறமாதிரி. ஜெய்சங்கருக்கு பூனை மாதிரி சின்னக்கண்ணு.”

அம்மா சினிமா பற்றிப் பேசுவதை சந்தோஷமாகவும் ஆச்சர்யமாகவும் பார்த்தான் மணிமாறன். சிறுவயதில் சினிமா என்றாலே அம்மாவுக்கு அப்படியொரு கோபம் வரும். கண்களில் தீ எரியும். கூந்தல் விரிய ஆவேச தேவதையாக மாறிவிடுவார். ஜெயக்குமாருக்கு அம்மாவை ஏறிட்டுப் பார்க்கவே அச்சம் பின்னும். சினிமா என்பது அம்மாவைப் பொறுத்தவரை பாவங்களின் ஊற்று.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ருநாள் மணிமாறன் தன் நண்பன் நந்தாவின் நோட்டுப்புத்தகம் வாங்கி வந்திருந்தான். இரண்டுநாள் காய்ச்சலால் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதால்தான் நந்தாவின் நோட்டுப்புத்தகத்தை வாங்கி வந்திருந்தான். அந்த நோட்டுப்புத்தகத்துக்குள் கத்தரிக்கப்பட்ட ராதாவின் புகைப்படம் இருந்தது. ‘அம்மன் கோயில் கிழக்காலே’ படத்தில் விஜயகாந்த் துரத்தித் துரத்திக் கிண்டலடிப்பாராம். அப்போது ராதா படகில் அமர்ந்திருக்கும்போது அணிந்திருக்கும் உடையாம். இதெல்லாம் பின்னால் நந்தா சொல்லித்தான் மாறனுக்குத் தெரியும். சிவப்புநிறச் சேலையில் தலைநிறைய மல்லிகைப்பூவுடன் இருப்பார் ராதா. மாறனுக்குத் தெரியாமலே அவன் நோட்டுப்புத்தகத்திலிருந்து ராதாவின் புகைப்படம் நழுவி விழ, அம்மாவுக்குள் இருந்த துர்தேவதை தன் கூந்தல் அவிழ்த்தாள். நடிகரின் படம் பார்த்தாலே ஆவேசமாகிவிடும் அம்மா, நோட்டுப்புத்தகத்தில் நடிகையின் படம் பார்த்தால் சும்மா இருப்பாரா?

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

உடல் முழுக்க சிவப்பாய் தடித்தபிறகுதான் ‘இது நந்தாவின் நோட்டு’ என்று சொல்ல முடிந்தது. இது நடந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு பொங்கலை ஒட்டிய சமயம். அப்போதெல்லாம் பொங்கல் என்றால் பொங்கல், கரும்புடன் பொங்கல் வாழ்த்தும் உண்டு. இப்போதுபோல ‘இந்த லிங்க்கை ஓப்பன் செய்தால் நாகராஜ் உங்களுக்குப் பொங்கல் வாழ்த்து சொல்வார்’ என்பது மாதிரியான வாட்ஸப் வாழ்த்தல்ல. பொங்கல் வாழ்த்து அட்டைகள் விற்கப்படும். சாமிப்படம், நடிகர் நடிகை படம், உழவர் படம், குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் படம் என்று விதவிதமான பொங்கல் வாழ்த்துப்படங்களைப் பார்ப்பதே உற்சாகம்தான். வகுப்பு நண்பன் ஸ்டீபன் மணிமாறனுக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்தில் கமல்ஹாசன் சிரித்துக்கொண்டிருந்தார். அம்மாவுக்குள் இருந்த நாகம் கண்களில் எட்டிப்பார்த்தது. எல்லாவற்றுக்கும் காரணம் அப்பாதான். அம்மா இப்படி ஆனதற்கு, மணிமாறன் சினிமாவால் சந்திக்கும் துயரங்களுக்குக் காரணம் அவர்தான்.

முத்துராசுத் தாத்தா பெரிய மீசையும் முன்வழுக்கையும் அதை மறைப்பதற்கான அகலமான விபூதிப்பட்டையும் தண்ணீர்க்குடம் போன்ற வயிறும் கொண்டவர். முத்துராசு கறிக்கடை என்றால் அந்த ஊரில் அவ்வளவு பிரபலம். அப்போதெல்லாம் மட்டன் ஸ்டால் என்ற வார்த்தையெல்லாம் புழக்கத்தில் இல்லை.

தொடைக்கறி, நெஞ்சுக்கறி, கொழுப்புக்கறி என்று ஒவ்வொரு ஆளுக்கும் என்னென்ன கறிவகை பிடிக்கும் என்பது அவருக்கு அத்துப்படி. சனி, ஞாயிறு, பண்டிகை நாள்களில் முத்துராசுத் தாத்தா மும்முரமாகிவிடுவார். சுவரொட்டி, ஈரலுக்குத் தனிக்கூட்டம் உண்டு. ‘மாங்கா வேண்டும்’ என்று வெட்கத்துடன் கேட்கும் பெண்களும் உண்டு. மாங்கா என்றால் ஆட்டின் விதைப்பை. ஈரலைப்போல்தான் இருக்கும்.

மகன் சேகருக்கு சிறுவயதில் இருந்தே செல்லம். படிப்பு எப்படி ஏறும்? ஆனால் ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. இருந்த ஒரே பழக்கம், எம்.ஜி.ஆர் படங்களாகப் பார்த்ததுதான். முதல் ரிலீஸ், ரெண்டாம் ரிலீஸ் என்று எத்தனை ரிலீஸ் ஆனாலும் பார்த்துக்கொண்டே இருப்பாராம் சேகர். எம்.ஜி.ஆரின் பாடல்கள், உடலைசைவுகள், கைச்சுழற்றல்கள், மூக்குச்சுளிப்புகள் எல்லாம் அப்படியே இமிடேட் செய்வாராம். நாலு குழந்தைகள் கையில் கிடைத்தால் தலைக்கு மேலே தூக்கிவைத்து ஆட்டம் ஆடுவார். கதறித் தீர்ப்பார்கள் குழந்தைகள். பிறகு முத்துராசுத் தாத்தா கனைக்கும் சப்தம்தான் அவர்களைக் காப்பாற்றும்.

எம்.ஜி.ஆர் இறந்ததாகக் காலையில் ஆல் இண்டியா ரேடியோ செய்தி சொன்னதிலிருந்து சேகர் ஆட்டம் அடங்கிப்போனது. யாரிடமும் பேசவில்லை. சாப்பிடவில்லை. சுவரில் ஒட்டியிருந்த, கழுத்தில் கர்ச்சீப் கட்டி, இறகு வைத்த தொப்பி அணிந்த எம்.ஜி.ஆரின் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர் அன்று இரவு மின்விசிறியில் தூக்குப்போட்டுச் செத்துப்போனார்.

உடைந்துபோனார் தாத்தா. அப்பா செத்துப் போனபோது மணிமாறனுக்கு ஏழு வயது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர் பெயர் என்று அப்பா வைத்தது. அடுத்து பெண் பிறந்தால் சரோஜா என்று பெயர் வைக்கலாம் என்று சொன்ன அப்பாதான்

குறுங்கதை
குறுங்கதை

எம்.ஜி.ஆர் இறந்த துக்கம் தாளாமல் தூக்கில் தொங்கிவிட்டார். பள்ளியில் பசங்களோடு விளையாடிக்கொண்டிருந்த மணிமாறனைத் திடீரென்று வீட்டுக்குக் கூட்டிவந்தார்கள். மாறனுக்கு ஒன்றும் விவரம் புரியவில்லை. அப்பா ஏன் பகலில் படுத்திருக்கிறார்? எப்போதும் துண்டைச் சுருட்டித் தலைமாட்டில் வைத்துத் தரையில் படுக்கிற அப்பா இப்போது ஏன் முகம் முழுக்க துணியால் மூடிப் படுத்திருக்கிறார் என்று மாறனுக்குத் தெரியவில்லை. அப்பா அவ்வப்போது எம்.ஜி.ஆர் வேஷம் போடுவார் என்பதால் இதுவும் ஏதோ எம்.ஜி.ஆர் வேஷம் என்று நினைத்தான். ஆனால் கூடியிருந்த கூட்டத்தின் அழுகையையும் புழுக்கத்தையும் பார்த்து மணிமாறனும் ஓங்கிக் குரலெடுத்து அழத்தொடங்கினான்.

தன்னைத் தேற்றிக்கொண்டு மகனின் இறுதிச்சடங்கை பிரமாண்டமாக நடத்தி முடித்தார் முத்துராசுத் தாத்தா. அதிர்வேட்டுகள் முழங்க, ரதத்தில் கறுப்புக்கண்ணாடியும் இறகு வைத்த தொப்பியும் அணிந்தபடி அப்பாவின் இறுதி ஊர்வலம் நடந்தது மட்டும் நினைவிலிருந்து மறையவே இல்லை மணிமாறனுக்கு.

மூன்றே வருடங்களில் தாத்தா இறந்துவிட, இருந்த ஒரு துணையும் போனது. அம்மாவுக்கு கைத்துணை, வழித்துணை இல்லாத மன விரக்தி. சேகர் விரும்பினான் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இல்லாதப்பட்ட குடும்பத்திலிருந்து பெண் எடுத்திருந்தார் முத்துராசு. சேகரின் முதல் இரண்டு அண்ணன்களுக்கோ அண்ணிமார்களுக்கோ இவள் என்றால் எப்போதும் இளப்பம்தான்.

ஒருகட்டத்தில் உறவுத்தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்ட அம்மாவும் மணிமாறனும் ஒரு சிறிய வீட்டைப் பிடித்து வாழ்ந்தார்கள். அம்மா தீப்பெட்டி ஆலைக்குப் போய்த்தான் மணிமாறனை வளர்த்தார். ‘அப்பனோட எல்லாம் போகட்டும்’ என்ற மனோபாவம்தான் அவரை சினிமாவை வெறுக்க வைத்திருந்தது. அவரைப் பொறுத்தவரை சினிமா என்பது பெரிய பூதம். அது குழந்தைகளை, கணவன்களை விழுங்கிவிடும் பசித்த பூதம்.

ணிமாறன் கல்லூரி முடிக்கும்வரை அவன் வீட்டில் டி.விகூட இல்லை. ஆனால் அம்மாவுக்குத் தெரியாமல் அவன் அவ்வப்போது படங்கள் பார்த்துதான் வந்தான். அது எப்போதாவது மூன்று மாதம், ஆறு மாதத்துக்கு ஒருமுறை. ஆனால் அந்த மோகம் அவனுக்குப் பிடித்திருந்தது. எது விலக்கப்பட்டதோ அதுவே மோகத்துக் குரியதாகிறது. ஆனாலும் அம்மாவிடம் சினிமாவைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவதில்லை.

கல்லூரி முடித்து வேலைக்குப் போய் நல்ல சம்பளம் வாங்கிய எட்டாவது மாதம் வீட்டில் ஒரு எல்.இ.டி டிவி வாங்கி மாட்டினான். அதற்கு முன்பே வீட்டுக்கு ஃபிரிட்ஜ், வாசிங் மிஷின் எல்லாம் வந்திருந்தது. அதன் வாலைப் பிடித்துக்கொண்டுதான் டி.வி வந்தது.

“இது எதுக்குடா கருமம்? இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியும்ல?” என்றார் அம்மா.

“டி.வின்னா சினிமாதான் பார்க்கணும்னு ஒண்ணும் அவசியம் கிடையாது. ஒரு நியூஸ் தெரிஞ்சுக்க முடியலைம்மா. நியூஸ், ஸ்போர்ட்ஸ்னு டிவியில் பார்க்கிறதுக்கு ஏகப்பட்ட விஷயம் இருக்கும்மா” என்றான் மணிமாறன். சம்பாத்தியம் என்பது உரத்துப் பேசும் ஆற்றலை வழங்குகிறது.

ஏதோ ஒருநாளில் டி.வியில் சினிமாவையும் பாடல்களையும் பார்க்கத் தொடங்கினான் மணிமாறன். அம்மாவும் தயங்கித் தயங்கிப் பார்க்கத் தொடங்கினாள். பிறகு அவன் அலுவலகம் சென்றபிறகு அம்மா நாள் முழுக்க டி.வி பார்க்கும் தடயம் தெரிந்தது.

அப்போதுதான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தான் மணிமாறன். அவன் பாத்ரூமில் இருக்கும்போதெல்லாம் ஜெய்சங்கர் பட வசனமோ பாடல்களோ காதில் விழும். அவன் குளித்துமுடித்து வரும்போது செய்திகளுக்கோ சமையலுக்கோ மாற்றியிருப்பார் அம்மா. போகப்போக சேனலை மாற்றாமலே ஜெய்சங்கர் படங்களைப் பார்க்கத் தொடங்கியிருந்தார் அம்மா. டி.வியில் எந்த நடிகரைப் பார்த்தாலும் அதில் ஜெய்சங்கரின் சாயலைத் தேடினார்.

ணிமாறனுக்குத் திருமணம் நிச்சயமாகி கோடம்பாக்கம் மேம்பாலத்தின்கீழ் இருக்கும் கடையில் அழைப்பிதழ் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திரும்பினார்கள். மதியம் என்பதால் அவ்வளவாகக் கூட்டமில்லை. ஆனாலும் பார்க் ஹோட்டலுக்கு முன்பு சிக்னல் விழுந்துவிட்டது. இவனாக ஏதோ பேசிக்கொண்டு சிக்னலில் நின்றிருந்தான். ஆனால் அம்மாவிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. திரும்பிப் பார்த்தான். எதிரில் பார்சன் காம்ப்ளெக்ஸில் ‘சங்கர் ஐ கேர்’ என்று எழுதப்பட்டு அருகில் ஜெய்சங்கர் படம் வரையப்பட்டிருந்தது. அம்மா அதையே உற்றுப்பார்த்தபடியிருந்தார்.

- தும்பி பறக்கும்...