Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 35: அப்பாவின் சைக்கிள்

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை

அஞ்சிறைத்தும்பி - 35: அப்பாவின் சைக்கிள்

குறுங்கதை

Published:Updated:
அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி
வெளியில் மெல்லிய தூறல் ஆரம்பித்திருந்தது. கோடைக்காலத்தில் எலிப்புழுக்கைபோல் பெய்யும் மழை, சூட்டைக் கிளப்பிவிடும் என்பார் அப்பா.

`எப்போ நிற்குமோ?’ என்று செல்போனில் நேரம் பார்ப்பதும் பின் வைப்பதுமாக தனக்குள் பரபரத்துக் கிடந்தான் ராஜேஷ். அப்போதுதான் ஸ்கூல் வாட்ஸப் குரூப்பில் ரபீக்கின் அப்பா இறந்த தகவல் வந்திருந்தது. ரபீக் அப்பாவை நினைக்கும்போதே அவர் சைக்கிள் ஓட்டும் பிம்பம்தான் முன்னால் வந்தது. அப்போதெல்லாம் அப்பாக்கள் என்றாலே அவர்கள் பிம்பங்களில் சைக்கிளுடன்தான் வருவார்கள். அழைப்புமணி ஒலித்தது. பைக் மெக்கானிக்தான் வந்திருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“என்ன சார் ஆச்சு?”

“செல்ஃப் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. கஷ்டப்பட்டு உதைக்க வேண்டியதா இருக்கு.”

“லாக் டௌன் காலம்ல சார். வெளியிலேயே எடுக்காம போட்டு வெச்சிருப்பீங்க. நிறைய வண்டி இந்தமாதிரி சர்வீஸுக்கு வருது.”

“இல்லையில்லை. நான் ரெகுலரா காலையில அரைமணி நேரம் ஓட்டிடுவேன்” என்றான் ராஜேஷ்.

அஞ்சிறைத்தும்பி - 35: 
அப்பாவின் சைக்கிள்

“சரிங்க சார். பேட்டரி சார்ஜ் கம்மியா இருக்கும். கிக்கர் ஸ்டார்ட் பண்ணி எடுத்துட்டுப் போறேன்” என்றபடி மெக்கானிக் இறங்கிப்போனார்.

செல்போனை எடுத்துப்பார்த்தான். ரபீக் அப்பா இறந்ததற்கு நண்பர்கள் அஞ்சலிச் செய்திகளைக் குவித்திருந்தார்கள். ‘ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று ராஜேஷும் ஒரு செய்தியைப் பதிவிட்டான். பாய் கடை என்றால் அந்தத் தெருவில் பிரசித்தம். ரபீக்கின் அப்பா பெயர் அலாவுதீன் என்பது ராஜேஷ் உள்ளிட்ட நண்பர்களுக்கு மட்டும்தான் தெரியும். மற்றபடி தெருவுக்கே அவர் ‘பாய்’தான். சிறிய மளிகைக்கடைதான். ஆனால் மாசக்கணக்கில் பொருள்கள் கொடுப்பதால் வாடிக்கையாளர்கள் நிறைய இருந்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜேஷ் பார்க்கும்போதெல்லாம் அவர் சைக்கிளில் மளிகை மூட்டைகளைப் பின்னால் வைத்து வண்டி ஓட்டிச் சென்றிருக்கிறார், கடைக்குப் போகும்போது எப்போதாவது சிரித்துப் பேசுவாரே தவிர அவ்வளவு நெருக்கம் என்று சொல்ல முடியாது. ரபீக்கின் சினேகம் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பள்ளியோ கல்லூரியோ முடித்ததும் ஒரு வெற்றிடம் ஏற்படும். சிலர்தான் எதிர்காலம் குறித்த துல்லியமான கணிப்புடன் தனக்கான சாலைகளைத் தானே சமைத்திருப்பார்கள். பெரும்பாலானோருக்கு எந்தக் கணிப்பும் இல்லாத வாழ்க்கைதான். அப்போது குடும்பத்துக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஒரு பள்ளம் விழும். சக பள்ளத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஒன்றுகூடி ஒரு குழு ஆவார்கள். அப்படி நண்பன் ஆனவன்தான் ரபீக். இந்தக் குழு நண்பர்கள்மீது எப்போதுமே பெற்றோர் களுக்கு மரியாதை இருப்பதில்லை.இன்னும் சொல்லப்போனால், பார்வையிலேயே சிறு வெறுப்பு இருக்கும். அதனாலேயே என்னவோ அலாவுதீன் பாயுடன் ராஜேஷுக்குப் பெரிய நெருக்கமான உறவு இருந்ததில்லை. ஆனாலும் அவர் இறந்துவிட்டார் என்றதும் அவரும் அவர் சைக்கிளும் நினைவுக்கு வந்தார்கள். சைக்கிள் பிம்பத்தில் பின்சீட்டில் உட்கார்ந்தபடி அப்பாவும் நினைவுக்கு வந்தார்.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

அப்பா மதிய வெயிலில் வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டி வருவார். வீட்டுக்கு முன்பு வேட்டியை ஒருபுறம் ஒதுக்கியபடி அவர் சைக்கிளை விட்டு இறங்கும் பிம்பம் இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது ராஜேஷுக்கு. சிறுவயதில் அந்த சைக்கிளைத் தொட்டுப் பார்ப்பதும் திண்ணையில் உட்கார்ந்தபடி கைகளாலேயே பெடலைச் சுற்றிப் பார்ப்பதும் அவனுக்குப் பிடித்தமான விளையாட்டுகள். அப்பாவுக்கு ஜவுளிக்கடையில் சேல்ஸ்மேன் வேலை. தீபாவளி, ரம்ஜான் காலங்களில் நின்றுகொண்டே சேலையை எடுத்து எடுத்துக் காட்ட வேண்டும். நள்ளிரவில் தாமதமாக வருபவரின் முட்டியில் அம்மா தைலம் தேய்த்துவிடுவதைத் தூக்கக்கலக்கத்துடன் கவனித்திருக்கிறான் ராஜேஷ்.

சைக்கிள் ஓட்டப் பழகிய ஆரம்பக்காலங் களில் வாரம் ஒருமுறையோ இரு வாரங்களுக்கு ஒருமுறையோ வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவது என்பது ராஜேஷுக்குக் குட்டித்திருவிழாதான். இதற்கென்றே இரண்டு மூன்று பசங்க சேர்ந்துவிடுவார்கள். பசங்க என்றால் அந்த வயதுப் பெண்களும் உண்டுதான். ஒருமணி நேரத்துக்கு ஐந்து ரூபாய் வாடகை. இரண்டு வகைகளில் அதிர்ஷ்டம் வாய்க்க வேண்டும். போனவுடன் ஓட்டுவதற்கு சைக்கிள் கிடைக்க வேண்டும். சமயங்களில் எல்லா சைக்கிளையும் எடுத்துப்போயிருப்பார்கள். ஒருமணி நேரம் வண்டி ஓட்டுவதற்காக, சைக்கிளுக்கு ஒன்றரைமணி நேரம்கூடக் காத்திருக்கிறான். இரண்டாவது விஷயம், தனக்குக் கிடைக்கும் சைக்கிள் எந்தப் பழுதும் இல்லாமல் ஒழுங்காக இருக்க வேண்டும். “பிரேக், பெல், டயர் மூணும் முக்கியம்” என்பார் அப்பா.

அஞ்சிறைத்தும்பி - 35: 
அப்பாவின் சைக்கிள்

ஆனால் இந்த மூன்றும் ஒழுங்காக அமைந்த சைக்கிள் கிடைப்பது தேவதை விறகுவெட்டிக்கு மூன்று கோடரிகள் கொடுப்பதுபோல எப்போதாவதுதான் கிடைக்கும் வரம். ஒழுங்காக பெல் அடிக்காது. யார்மீதாவது வண்டியை விட்டால் பெரும் தகராறு ஆகும். பிரேக் பிடிக்காவிட்டாலும் இதே பிரச்னை. சமயங்களில் உட்காரும் சீட் ஒழுங்காக இருக்காது. வண்டி ஓட்ட ஓட்ட சீட் நழுவிக்கொண்டே செல்லும். அதற்கேற்ப உடம்பை வளைத்து ஓட்டிப் பழக வேண்டும். இல்லையென்றால் முக்கால்வாசி நின்ற நிலையில் சைக்கிள் ஓட்ட வேண்டும்.

அப்பாவுக்கு நின்றபடி வேலை பார்த்ததால் மூட்டுவலி வந்திருந்தது. சின்ன ஆபரேஷனுக்குப் பிறகு அவரால் சைக்கிள் ஓட்ட முடியாத நிலை. ராஜேஷ் வசம் சைக்கிள் வந்து சேர்ந்திருந்தது. அப்பாவைக் காலையில் சைக்கிளில் கொண்டுபோய் கடையில் விடுவதும் இரவில் அழைத்துவருவதும் ராஜேஷின் வேலை. சமயங்களில் அவரே மெதுவாக நடந்து இரவு வீடு வந்து சேர்ந்துவிடுவார். அம்மாவிடம் திட்டு வாங்குவார்.

“விடுடி, இப்போ நடக்க முடியுது. அப்படியே இருந்துட முடியுமா?” என்பார்.

நீண்டநாள் பணி அனுபவம் என்பதால் அவருக்கு மட்டும் நாற்காலியில் அமர்ந்து துணிகளை எடுத்துக்கொடுக்க அனுமதி கிடைத்திருந்தது. ராஜேஷுக்குப் படிப்பில் மட்டுமல்லாது புத்தகம் படிப்பதிலும் ஆர்வம் இருந்தது. அவன் எட்டாவது படிக்கும்போது மாவட்ட மைய நூலகத்தில் சேர்த்துவிட்டிருந்தார் அப்பா. கவுன்சிலர் அல்லது பச்சை மையில் கையெழுத்திடும் கெஜெட் ஆபீசரின் கையெழுத்துடன் 50 ரூபாய் உறுப்பினர் கட்டணம் கட்டினால் நூலகத்தில் உறுப்பினர் ஆகிவிடலாம். ஆண்டுக்கு ஒருமுறை 70 ரூபாய் கட்டணம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு நூலகம் சென்றால் அவன் நூலகத்தை விட்டுக் கிளம்பும்போது மாலை 4 மணியாகிவிடும். சாண்டில்யன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், ராஜம் கிருஷ்ணன் என்று பலரும் அறிமுகமானது அந்த நூலகத்தில்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30க்கு பசி வயிற்றைக் கிள்ளியது. புத்தகத்துடன் கீழே வந்து பார்த்தால் சைக்கிளைக் காணவில்லை. அவனும் எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தான். கூட்டம் அதிகமுள்ள கடைவீதி, பேருந்து நிலையத்தில் எல்லாம் தொலையாத சைக்கிள் நூலகத்தில் தொலைந்ததை நினைத்து அவனுக்கு ஆச்சர்யத்துடன் அழுகை அழுகையாக வந்தது.

நடந்தே வீடு வந்தவனுக்கு அப்பாவைப் பார்த்ததும் அழுகை இன்னும் அதிகமானது. அப்போது மின்வெட்டு என்பதால் சட்டையில்லாத உடம்பில் துண்டுடன் திண்ணையில் அமர்ந்து ஒரு பழைய பேப்பரில் விசிறிக்கொண்டிருந்தார் அப்பா. ராஜேஷ் குமுறி அழுதபடி விஷயத்தைச் சொன்னான். அவர் கண்களில் வலி தெரிந்தது என்றாலும், “சரி விட்றா பார்த்துக்கலாம். போய்ச் சாப்பிடு” என்றார். ஆனால் இன்னொரு சைக்கிள் வாங்குவதற்குள் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். சைக்கிள் ஓட்ட முடியவில்லை என்றாலும் சைக்கிளின் முடுக்குகளிலெல்லாம் அவர் எண்ணெய் விடுவதில் காட்டும் சிரத்தையே அதைச் சொல்லும். இங்க் பில்லரைப் போல் சைக்கிளில் எண்ணெய் விடுவதற்கு என்று சிறிய சாதனம் இருக்கும். ஒவ்வொரு வாரமும் சைக்கிளைத் துடைத்து அதன் இடுக்குகளில் எண்ணெய் விடுவார்.

பிறகு ராஜேஷ் அந்த சைக்கிளைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டான். சைக்கிளை யாரும் திருடிச் சென்றுவிடாமல் இருப்பதற்காக டயருடன் சேர்த்துப் பூட்டுவதற்காக சிறு பூட்டு வாங்கிக்கொண்டான்.

பிறகு எப்போதும் சைக்கிள் திருடுபோகவில்லை. ஆனால் வேறொரு பிரச்னை கவிதை வடிவில் வந்தது. பாரதி நூலகத்தில் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடப்பது வழக்கம். 30 பேர் கவிதை வாசிக்கிறார்கள் என்றால் இருபது பேரின் பெயருக்குப் பின்னால் பாரதி என்றிருக்கும். ராஜேஷும் அக்கினி பாரதி என்ற புனைபெயரில் கவிதை வாசித்து பாரதியார் கவிதைகள், குறிஞ்சி மலர், கள்ளோ காவியமோ போன்ற புத்தகங்களைப் பரிசாகவும் வாங்கியிருக்கிறான். கவிதை வாசிப்பு நிகழ்வை நடத்திக்கொண்டிருந்தவர் கவிஞர் நெஞ்சத்தரசு. பள்ளி ஆசிரியரான இருதயராஜ்தான் தன் பெயரை இப்படி மாற்றியிருந்தார். அவர் அந்த ஊர் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து ஒரு தொகுப்பு கொண்டு வரத் திட்டமிட்டார். அதற்காகக் கவிதை வாசிப்புக் கவிஞர்களிடம் 50 ரூபாய், கவிதை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தைக் கொண்டுவரச் சொல்லியிருந்தார்.

அஞ்சிறைத்தும்பி - 35: 
அப்பாவின் சைக்கிள்

அப்பாவிடம் 50 ரூபாய் வாங்கிக்கொண்டு ராஜேஷ் சைக்கிளில் தூய மரியன்னை சர்ச்சைக் கடந்து ராயப்பன் சாலைக்கு வந்தபோது எதிரில் ஆட்டோ வந்தது. உள்ளேயிருந்தவன் வலதுபக்கம் கைகாட்ட, ஆட்டோவோ இடதுபக்கம் திரும்பும் தோரணையில் வந்தது. எப்படிச் செல்வது என்று கணிக்க முடியாமல் கண்களை மூடியபடி சைக்கிளை அழுத்தினான். ஆட்டோவில் மோதியதில் சைக்கிள் மட்கார்டு நெளிந்து டயர் திருகிக்கொண்டது. ஆட்டோகாரரும் உள்ளே இருந்தவர்களும் கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். கையில் வைத்திருந்த 50 ரூபாய், சைக்கிள் பழுது பார்ப்பதற்காகச் செலவாகிப்போனது.

தன் மகனுடன் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படம் பார்த்தபோது “இது கிட்டத்தட்ட என் வாழ்க்கை” என்றான் ராஜேஷ்.

“என்னப்பா சொல்றீங்க?”

“நான் ஆறாவது படிக்கிறப்போதான்டா செருப்பே போட்டேன். அதுவும் கவர்மென்ட் கொடுத்த செருப்பு. பத்தும் பத்தாம இருக்கும்.”

“ரியல்லி? சோ சேட்!”

“இன்னொரு படமும் எனக்கு கனெக்ட் ஆன படம் ‘பை சைக்கிள் தீவ்ஸ்.’ நாளைக்குப் பார்க்கலாம்” என்றான்.

ராஜேஷும் மகனும்தான் போய் பைக்கை எடுத்துவந்தார்கள்.

“பேட்டரி சார்ஜ் பண்ணியிருக்கு சார். ஆனா கிட்டத்தட்ட பேட்டரி போற கண்டிஷன். எத்தனை நாள் தாங்கும்னு தெரியலை” என்றார் மெக்கானிக்.

“அப்பா, என் சைக்கிளும் ரிப்பேரா இருக்குல்ல. இந்த அங்கிள்கிட்ட கொடுத்தா பார்ப்பாரா?” என்றான் மகன், போகும் வழியில்.

“இவர் பைக் மெக்கானிக்டா. என்ன, பிரேக் பிடிக்கலை. பெல் அடிக்க மாட்டேங்குது, அதானே? நானே பார்த்துடுவேன்” என்றான்.

வீட்டுக்கு வந்ததும் ராஜேஷ் தன் மகன் சைக்கிள் பெல்லில் எண்ணெய் விட்டான். ஆங்காங்கே துருப்பிடித்த பகுதிகளிலும் எண்ணெய் விட்டான்.

“கொஞ்சம் காய்ஞ்சதும் சரியாகிடும்” என்றபடி சைக்கிளைப் படுக்கவைத்து பிரேக்கை டைட் செய்ய ஸ்பானரை எடுத்தான். இந்நேரம் ரபீக் அப்பாவை அடக்கம் செய்திருப்பார்கள் என்ற நினைப்பு வந்தது ராஜேஷுக்கு.

- தும்பி பறக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism