Published:Updated:

குறுங்கதை : 36 - அஞ்சிறைத்தும்பி

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

ஜீவநதி

குறுங்கதை : 36 - அஞ்சிறைத்தும்பி

ஜீவநதி

Published:Updated:
அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி
“பத்து வயசாச்சு. இன்னும் பெட்ல மூத்தா இருந்துக்கிட்டிருக்கே?” சரஸ்வதி, சரயுவைப் பார்த்துக் கேட்டாள்.

‘வெட்கமா இல்லையா?’ என்று பத்துவயதுச் சிறுவனைப் பார்த்து எப்படிக் கேட்பது? ஆனால் வெட்கமே இல்லாமல்தான் சரயு சிரித்தான். சரஸ்வதிக்கு எப்போதும் இருக்கும் பத்துப் புகார்களில் இதுவும் ஒன்று. அவளும் இது எப்போதாவது நின்றுவிடும் என்றுதான் எதிர்பார்க்கிறாள். ஆனால் சரயு பத்துவயதாகியும் படுக்கையை நனைக்கும் பழக்கத்தை விடவில்லை. வாரம் ஒருமுறை பெட்ஷீட்டையும் வாரம் இருமுறை போர்வைகளையும் துவைத்தே ஆகவேண்டிய கட்டாயம். சரஸ்வதி சில துணிகளை வாஷிங் மெஷினில் போட மாட்டாள். கைகளில் துவைத்தால்தான் அவளுக்குத் திருப்தி. கனமான போர்வைகளையும் பெட்ஷீட்டையும் துவைத்துப் பிழிவதற்குள் உயிர் மணிக்கட்டு வழியாக வெளியேறும். அதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் யாராவது படுக்கையறைக்குள் நுழைந்தால் கட்டிலில் மூத்திர நாற்றம் அடிக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“எவ்ளோ கஷ்டப்பட்டு, கடை கடையா ஏறி இறங்கி மெத்தை வாங்குறோம். இவனால வீணாகிடுது” என்று அலுத்துக்கொள்வாள். சரஸ்வதி கடுமையாகவும் கங்காதரன் மென்மையாகவும் சொல்லிப் பார்த்தும் சரயு படுக்கையை நனைப்பதை நிறுத்தவேயில்லை.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

“ரெண்டுநாளா இந்தத் தொல்லை வேற. செப்டிங் டேங்க் சுத்தம் பண்றவனைக் கூப்பிடுங்கன்னா எனக்கென்னான்னு இருக்கீங்க” என்றாள் சரசு. போர்வையை முறுக்கிய வலியும் அந்தக் கோபத்தில் கலந்திருந்தது.

“என்ன பண்ணச்சொல்றே, நானும் எல்லார்கிட்டயும் சொல்லியிருக்கேன். ஆனா யாரும் கிடைக்க மாட்டேங்கிறாங்களே?”

“கிழிச்சீங்க. காலையில வாக்கிங் போறீங்க. வந்து டீ சாப்பிட்டு, பேப்பர் படிச்சுட்டு, குளிச்சு டிபன் பாக்ஸ் எடுத்துட்டு ஆபீஸ் போயிடறீங்க. காலையில போனா நைட்டுதான் வருவீங்க. வீட்டுல இருக்கிறது நான்தானே. அந்தப்பக்கம் போனாலே நாத்தமடிக்குது. சாப்பிடக்கூட முடியலை. அருவருப்பா இருக்கு.”

ஒரு பாத்ரூமில் மலக்குழி நிரம்பி வழிந்து மேலே வெளியேறி மிதக்கிறது. இரண்டு பாத்ரூம் இருந்ததால் தப்பித்தார்கள். ஆனால் மூவருக்கும் ஒரே பாத்ரூம் என்பதால் சமயங்களில் ஒரேநேரத்தில் இயற்கை அழைத்தால் பிரச்னை. கிட்டத்தட்ட ஒருவாரமாக நீடித்தும் கங்கா சரிசெய்யவில்லை என்பதால்தான் சரஸ்வதிக்கு இவ்வளவு கோபம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஹவுஸ் ஓனர்கிட்ட சொல்லியிருக்கேன். மத்த வேலைக்கெல்லாம் ஆள் கிடைச்சுடுவாங்க. இந்த எலெக்ட்ரிசியன், பிளம்பர், செப்டிங் டேங்க் சுத்தம் பண்ணுறவன் கிடைக்கிறதுதான் கஷ்டம்.’’

“இப்படி எதையாவது சொல்லிக்கிட்டேயிருங்க” என்று அவள் பெட்ஷீட்டை உதறியபோது ஈரம் தெறித்தது. எரிச்சல் வந்தாலும் ஒன்றும் சொல்லாமல் கடந்தான்.

றுநாள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துவிட்டான். 11 மணிக்கு செப்டிங் டேங்க் சுத்தம் செய்வதற்கு ஆள் வருவதாக ஹவுஸ் ஓனர் சொல்லியிருந்தார். அவனும் காத்துக் காத்து எரிச்சல் கொதிநிலையை அடையும்போது ஒருமணிநேரம் தாமதமாக அவன் வந்து சேர்ந்தான். 40 வயதுதான் இருக்கும் என்றாலும் வயதான தோற்றத்தில் இருந்தான். தலைமுடி கலைந்து, அழுக்குக் கைலி, கரையேறிய பற்கள், கையில் ஏதோ விநோதமாகப் பச்சை குத்தி, தூரத்தில் வரும்போதே ‘இவன்மீது நாற்றமடிக்கும்’ என்பதைப்போல இருந்தான்.

குறுங்கதை : 36 - அஞ்சிறைத்தும்பி

“என்னங்க, இவன் மூஞ்சியும் ஆளும்... பார்க்கவே ஆள் சரியில்லையே?” என்றாள் சரசு.

“நீ என்ன அவனுக்குப் பொண்ணு பார்த்துத் தரப்போறியா, இல்லைன்னா இன்டர்வியூவுக்கு ஆள் எடுக்கிறோமா? செப்டிங் டேங்க் சுத்தம் பண்றவன் விஜய் தேவரகொண்டா மாதிரியா இருப்பான்?”

“பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆளைப் பார்த்தா ஏமாத்துறவன் மாதிரி இருக்கான். கரெக்டா சுத்தம் பண்ணுறானான்னு கூட இருந்து பாருங்க. காசு விஷயம்லாம் கரெக்டா பேசிக்கங்க. தலையைத் தலையை ஆட்டாதீங்க” என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது ஹவுஸ் ஓனர் அருகில் வந்தார்.

“கங்கா, நான் சொன்ன ஆள் இவன்தான். நல்ல வேலைக்காரன். அடைப்பெல்லாம் எடுத்து விட்டுடுவான். ரெண்டு, மூணு வருஷத்துக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. சண்முகம், சார் தங்கமானவர். கக்கூஸ் அடைச்சு ரொம்பக் கஷ்டப்படுறார். பார்த்து கரெக்டா வேலை பார்த்துடு” என்றவரிடம் தலையாட்டினான் சண்முகம்.

“எவ்ளோ காசு?”

“500 கொடுத்திடுங்க.”

“500 ரூபாய்லாம் அதிகம். 300 ரூபா வாங்கிக்க.”

“என்ன சார், இதெல்லாம் பேரம் பேசுறீங்க. மூணுநாள் கக்கூஸ் அடைச்சதுக்கே நாறுதே. நான் உள்ளே இறங்கி கருமத்தையெல்லாம் எடுத்து வெளியில போட்டு க்ளீன் பண்ணணும். கேஸ் அடிச்சுச்சுன்னா சாவுதான் சார்.”

கங்காதரனைத் தனியே அழைத்துவந்த ஹவுஸ் ஓனர் தணிந்த குரலில் பேசினார்.

“காசைப் பார்க்காதீங்க கங்கா. இந்த வேலைக்கு ஆள் கிடைக்கிறது கஷ்டம். இப்பெல்லாம் செப்டிங் டேங்கைச் சுத்தம் பண்ண இவனுகளைப் பயன்படுத்தக்கூடாது. தெரிஞ்சா ஃபைன் போடுவாங்க. மிஷினை எடுத்து அடைப்பை எடுக்கணும்னா ஆயிரக்கணக்கில ஆகும்.”

கங்கா சம்மதித்து, சண்முகம் வேலையை ஆரம்பிக்கும் முன்பு, கைலிக்குள் இருந்து ஒரு குவார்ட்டர் பாட்டிலை எடுத்தான். பாதி சரக்கை எதையும் கலக்காமல் அப்படியே குடித்தான்.

“என்னப்பா, பொம்பளைங்கல்லாம் இருக்காங்க. பப்ளிக்கா குடிக்கிறே?”

“குடிக்காம பார்க்கிறதுக்கு இதென்ன டீச்சர் வேலை, கம்ப்யூட்டர் வேலையா? நாத்தம் குடலை உருவும். இறங்கிப்பார்க்கிறியா?”

அதற்குப்பிறகு கங்கா ஒன்றும் பேசவில்லை. சண்முகம் வேலையை ஆரம்பித்திருந்தான். வேறுவழியில்லாமல் கங்கா சிறிதுநேரம் அங்கே நின்றுகொண்டிருந்தான். 4 மணிவாக்கில் வேலை முடிந்தது. மேலே குவியல் குவியலாய் ஈரத்துடன் கிடந்த குப்பைகளையும் கறுப்புமணலையும் சட்டியில் வைத்துத் தலையில் தூக்கிப்போய்த் தெருமுனையில் கொட்டிவிட்டு வந்தான்.

“எட்டுநூறு ரூபா கொடு சார்.”

“500ரூபாதானே பேசினே?”

“ஆமா. எவ்ளோ வேலை பார்த்தேன்னு பார்த்தேல்ல? ஊருப்பட்ட அடைப்பு இருக்குது. குனிஞ்சு குனிஞ்சு எடுக்கிறதுக்குள்ள இடுப்பு செத்துப்போச்சு.”

“அம்பதுரூபா வேணும்னா கூடப்போட்டுத் தர்றேன்.”

“சார் செல்வாஸ் ஜவுளிக்கடை, பேட்டா செருப்புக்கடைலாம் போனா பேரம் பேசாம வாங்குவே. என்னைமாதிரி தொழிலாளிங்ககிட்ட பேரம் பேசிக்கிட்டிருக்கே?”

செல்வாஸ் ஜவுளிக்கடையும் செப்டிக் டேங்கும் ஒன்றா என்ன? இவன் என்ன பேசுகிறான். சந்துருவை வைத்துப் பேசி ஒருவழியாக 650 ரூபாய் கொடுத்து அனுப்பினான்.

“இந்தக் காசு எங்கே போகும்னு நினைக்கிறீங்க? டாஸ்மாக்தான்” என்றார் சந்துரு.

“சில குழந்தைங்க 12 வயசு வரைக்கும்கூட பெட் வெட்டிங் பண்ணும். நோ பிராப்ளம்” என்றார் டாக்டர்.

சரஸ்வதி பலநாள் பிடுங்கிய பிடுங்கலில்தான் மருத்துவமனைக்கு அழைத்துவந்திருந்தான் கங்கா. சரயு முகத்தில் வெட்கம் அப்ப, நெளிந்துகொண்டிருந்தான்.

“வீட்ல இருந்தாக்கூட பரவாயில்லை. வெளியூர் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போகும்போதுகூட இருந்துடறான். அசிங்கமா இருக்கு” என்று சரசு குறைப்பட்டுக்கொள்வதில் உண்மை இருக்கிறது. ஸ்லீப்பர் பஸ்ஸில் போகும்போதோ ரயிலில் அப்பர் அல்லது மிடில் பர்த்தில் பயணம் செய்யும்போதோ, சரயு சிறுநீர் கழித்து கீழே படுத்திருப்பவர்கள்மீது வழிந்துவிடுமோ என்று பயம். ஆனால் அது என்னவோ தெரியவில்லை. பயணங்களில் அப்படி நடந்ததில்லை என்பது ஆச்சர்யம்தான். உறவினர்களிலும் நெருங்கிய உறவினர்கள் வீட்டுப் படுக்கையைத்தான் நனைத்துவிடுகிறான்.

“நைட்டு இவனுக்குப் பால் கொடுப்பீங்களா?”

“ஆமா டாக்டர். டெய்லி ஒரு முட்டை, நைட்டு பால் கம்பல்சரியா கொடுப்போம்.”

“அதான். இனிமே நைட்டு பால் கொடுக்காதீங்க. எத்தனை மணிக்குப் படுப்பான்?”

“பத்துமணி ஆகிடும் டாக்டர்”

“எட்டுமணிக்கெல்லாம் சாப்பிடச் சொல்லுங்க. அப்பவே தண்ணி குடிக்க வெச்சிடுங்க. படுக்கப்போறதுக்கு ஒருமணி நேரம் முன்னாடி பால், தண்ணி குடிக்க வேணாம்.”

“மருந்து டாக்டர்...”

“தேவையில்லை. இது ஒண்ணும் வியாதியில்லை.”

அரைமனதுடன்தான் கிளம்பினாள் சரஸ்வதி.

“சார் அந்த செப்டிங் டேங்க் சுத்தம் பண்ற ஆளை வரச்சொல்றீங்களா?”

“மறுபடியும் அடைச்சிடுச்சா? இப்பதானே வேலை பார்த்தோம்?” என்றார் ஹவுஸ் ஓனர்.

குறுங்கதை : 36 - அஞ்சிறைத்தும்பி

“நம்ம வீட்டுக்கு இல்லை சார். காலையில் வாக்கிங் வருவாரே, ரிட்டயர்ட் ஈ.பி ஆபீஸர் காவேரிநாதன், அவருக்குத்தான். அந்தாள் பேர் என்ன?”

“சண்முகம். அவனைப் பிடிக்கிறதுதான் பெரும்பாடு. இவனுகல்லாம் எங்கே இருப்பானுகன்னே தெரியாது. கையில கொஞ்சம் காசு சேர்ந்தா குடிச்சுட்டு எங்கேயாவது விழுந்து கிடப்பானுங்க. தேடிப்பார்த்துட்டுச் சொல்றேன் கங்கா.”

தன் வீட்டில் குடியிருப்பவர்கள் பிரச்னை என்றாலே சாதாரணமாகத் தீர்க்க மாட்டார். யாரோ ஒரு காவேரிநாதனுக்கு எப்படி சீக்கிரம் ஆள் பார்ப்பார்? பத்துநாள்களாகிவிட்டது. தினமும் வாக்கிங் போகும்போது எல்லாம் காவேரிநாதன் கேட்கிறார். இங்கே சரஸ்வதியைப்போல காவேரிநாதனுக்கும் ஒரு மனைவி.

பிடுங்கல் இருக்கும்தானே?

ஹவுஸ் ஓனர் வேறு வெளியூர் போய்விட்டாராம். அவர் மனைவி சொல்லவும், அந்த விஷயத்தைக் கிட்டத்தட்ட மறந்துவிட்டிருந்தான் கங்கா.

“சரயு, டிவி பார்த்தது போதும். போய்ப்படு. காலையில் ஸ்கூலுக்குப் போகணும். உன்னை எழுப்பிக் கிளப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது.”

“அம்மா பால்” என்றான் சரயு.

“அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. டாக்டர் சொன்னதைக் கேட்டேல்ல?”

“எனக்குப் பால் வேணும்.”

“ஒருவாரமாக் குடிக்காமதானே இருக்கே?”

“அம்மா, பால் வேணும்மா...” என்று சிணுங்கலில் ஆரம்பித்து அழத்தொடங்கினான். அப்போதுதான் ஹவுஸ் ஓனர் போன் வந்தது.

“கங்கா, அந்த சண்முகம் செப்டிங் டேங்க்ல இறங்கும்போது கேஸ் அடிச்சு செத்துட்டானாம். நாலு நாள் ஆகுதாம். வேற ஆளைப் பார்ப்போம். அவர்கிட்ட சொல்லிடுங்க” என்றார். போனை வைத்தபோதும் சரயு அழுகையை நிறுத்தியபாடில்லை.

“சரி, பாலைக் கொடுத்துத்தொலை” என்ற கங்காவை முறைத்துப்பார்த்தாள். நெற்றிக்கண்.

“எல்லாம் உங்களாலதான் இவன் கெட்டுப்போறான். அதெல்லாம் ஒண்ணும் கொடுக்க முடியாது.”

அழுதவனை இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினாள். பிட்டுக்கு மண் சுமந்த சிவன் முதுகில் பட்ட பிரம்படிபோல் கங்கா முதுகும் வலித்தது.

குறுங்கதை : 36 - அஞ்சிறைத்தும்பி

ழை கண்தெரியாத அளவுக்குப் பெய்துகொண்டிருந்தது. தொப்பலாக நனைந்ததில் எடை கூடியிருந்தது. எந்த நேரம் வேண்டுமானாலும் பைக் நின்றுவிடலாம்போல் இழுவைச்சத்தம். வேறு வழியில்லை. இழுத்துப்பிடித்து வீடுபோய்ச் சேர்ந்துவிட வேண்டும். எங்கேயும் ஒதுங்குவதை நினைத்துப்பார்க்க முடியாது. முடிந்தவரை ஆக்சிலேட்டரைத் திருகினான் கங்கா. பாதை முழுக்கத் தண்ணீர் வெள்ளம். எங்கே ஸ்பீடு பிரேக்கர், எங்கே பள்ளம், எங்கே சாலை என்று தெரியவில்லை, வண்டியைத் தண்ணீர் தள்ளியது. தடுமாறியபடி ஓட்டிப்போனான். திடீரென்று பெரும் சத்தம். பெரிய பள்ளம். வண்டி பெருஞ்சத்தத்துடன் தடுமாறி விழுந்தது. பள்ளத்துக்குள் விழுந்த சிலநொடிகளில்தான் பாதாள சாக்கடை என்று தெரிந்தது கங்காவுக்கு. தண்ணீர் வெள்ளமாய்ப் பாய்ந்துகொண்டிருக்க என்னென்னவோ குப்பைகள் அவனோடு சேர்ந்து மிதந்தன, அவன்மேல் பட்டு மூடின.

மஞ்சள் இலைகள், லேஸ் பாக்கெட்டுகள், சிகரெட் துண்டுகள், அழுகிய காய்கறிகள், மூத்திரம், அம்மாவின் மாதவிடாய்த் துணி, கண் ஆபரேஷன் செய்திருந்த அப்பாவின் பேண்டேஜ் துணி, சிறுவயதில் காணாமல்போன தங்கையின் திருகாணி, கிழிந்த பாடப்புத்தகத் தாள், எலெக்ட்ரிக் வயர் ஒன்று, கோழிக்கால், பிளாஸ்டிக் பாட்டில் மூடி, மூக்குக் கண்ணாடியின் காதுப்பகுதி, குக்கர் விசில், பழைய ரேடியோவின் கைப்பிடி, மழிக்கப்பட்ட மயிர்க்கற்றைகள், கைப்பையின் கிழிந்த காது, ஆணுறைகள், பேட்டரி செல்கள், அரசியல் பொதுக்கூட்ட நோட்டீஸ், கேசட்டில் இருந்து வெளியேறியிருந்த சுருள்சுருளான நாடாக்கள், எண்ணெய் பிசுபிசுத்த கடலை மிட்டாய், குடைக்கம்பி, ரத்தக்கறையுடன் பிச்சுவாக் கத்தி, உடைந்த, முகம்பார்க்கும் கண்ணாடி, அறுந்த செருப்பு, சட்டை பட்டன், கண்மை டப்பா, பழைய குழம்பு, கற்றாழைச் செடி, ஹேர் பின், டாஸ்மாக் பாட்டில் ஸ்டிக்கர், பேனா நிப், சின்ன சாமி சிலை, ஏதோ பிசுபிசுப்புத் திரவம்...

கங்காவுக்கு மூச்சுத்திணறியது. கைகளைப் படபடவென்று அடித்தபடி கண்களைத் திறக்க முயன்றான். மீண்டும் மீண்டும் தண்ணீர் அவனை அழுத்தியது.

உயிரைத் திரட்டி வலுவுடன் கண்களைத் திறந்தான். படுக்கை ஈரமாகியிருந்தது. ஏதும் அறியாதவனாய் பக்கத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான் சரயு.

- தும்பி பறக்கும்....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism