Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 37: பழுது

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை

குறுங்கதை

அஞ்சிறைத்தும்பி - 37: பழுது

குறுங்கதை

Published:Updated:
குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை

“வா வீரா” என்றபடி படுக்கையறைக் கதவைத் திறந்து வெளியே வந்தார் கோபால் மேனன்.

“என்ன சார், இது எத்தனாவது ஆள்?” என்றான் வீரா.

“உனக்குத் தெரியாததா, மூணாவது ஆள். ஆனா இந்தத் தடவை சரியாகிடும்னு நம்புறேன்” என்றார் மேனன்.

அவர் புதிதாக ஏ.சி வாங்கி இரண்டு ஆண்டுகள்தான் இருக்கும். வாரன்டி முடிந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு பிரச்னை ஆரம்பித்தது. எல்லா வாரன்டிகளும் காலாவதியான பிறகுதான் பிரச்னைகளே ஆரம்பிக்கின்றன. ‘வாரன்டி என்பதே பிரச்னை ஆரம்பிப்பதற்கு முன்பான காலமோ’ என்ற சந்தேகம் வீராவுக்கு உண்டு. கோபால் மேனன் வாங்கி இரண்டே ஆண்டுகள் ஆகியிருந்த ஏ.சி, கடந்த ஆறுமாதங்களில் நான்குமுறை பழுதாகியிருந்தது. முதலில் ஏ.சியில் இருந்து சொட்டுச் சொட்டாய்த் தண்ணீர் விழும். பிறகு சிலநாள்களில் தண்ணீர் கொஞ்சம் விசையுடன் ஊற்ற ஆரம்பிக்கும். ஏ.சியை நிறுத்தும்போது ஐஸ்கட்டிகள் உடையும் சத்தம் கேட்கும். சமயங்களில் ஏ.சி ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்த சத்தம் வரும். பிறகு ஏ.சியின் குளுமை குறையத் தொடங்கி வெறும் ஃபேன் மட்டும் ஓடும். ஏ.சி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பலமுறை சொல்லியும் ஆட்கள் வரவில்லை. பிறகு நண்பர் ஒருவர் சொல்லி ஏ.சி மெக்கானிக் ஒருவர் வந்து பார்த்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஒண்ணுமில்லை சார். இண்டோர் ஃபில்டர்ல தூசி இருக்கு” என்று அதைச் சுத்தம் செய்துவிட்டுப் போனார். நன்றாக ஏ.சி ஓடத்தொடங்கியது. பத்தே நாள்களில் மீண்டும் பழுது. இன்னொரு ஏ.சி மெக்கானிக் வந்தார். அவர் சரிசெய்தபிறகு மறுபடியும் பழுது. அதனால் இப்போது மூன்றாவதாக ஒருவர் பார்த்துக் கொண்டி ருக்கிறார். இவர் திறமைக்காரர் என்று நெருங்கிய நண்பர் சொல்லியிருக்கிறார். இரண்டுபேர் பழுது பார்த்ததில் இண்டோர், அவுட்டோர், கம்ப்ரஸர், காயில், கேஸ் என்று சில தொழில்நுட்ப வார்த்தைகளைக் கற்றிருக்கிறார். இப்போது மூன்றாமவர் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சில தொழில்நுட்ப வார்த்தைகளை விளக்கிக்கொண்டிருந்தார்.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

“வீரா, ரிப்பேர் பார்க்கிற டெக்னீஷியன்கிட்ட ரெண்டு குணம் இருக்கும். ஒண்ணு முன்னாடி வேலை செஞ்சவங்க சரியாச் செய்யலைன்னு சொல்வாங்க. அதேமாதிரி நமக்குப் புரியுதோ இல்லையோ டெக்னிக்கலா நிறைய சொல்லுவாங்க. அப்பதான் அவங்களுக்கு நல்லா வேலை தெரியுதுன்னு நாம நம்புவோம்கிறது அவங்க நினைப்பு.”

வீரா படிக்கும் கல்லூரியில் ஆங்கில ஆசிரியர் கோபால் மேனன். மற்ற ஆசிரியர்களுடன் ஒப்பிடும்போது இறுக்கம் குறைந்த நட்பான ஆசிரியர். கேரளாக்காரர் என்பதாலோ என்னவோ கம்யூனிஸ்ட் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு முற்போக்கானவர். ஆனால் அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது. எந்த ஒரு பொருள் பழுதானாலும் அவருக்கே ஏதோ ஒரு அங்கம் வெட்டப்பட்டதைப்போல தவித்துப்போவார். வீரா எல்லாம் மொபைல் போனின் கண்ணாடி கீறல் விழுந்து, கொடூரமான மிருகத்தைப்போல் மாறியபோதும் எந்தக் கவலையும் இன்றிப் பயன்படுத்துவான். ஆனால் மேனன் சாரோ சிறு கீறல், சிறு பழுது வந்தால் பதறிப்போவார்.

அவர் பைக்கை மூன்று மாதத்துக்கு ஒருமுறை சர்வீஸ் செய்துகொண்டிருந்தார் என்பது ஓர் ஆச்சர்யம் என்றால் அதையும் அதே கம்பெனியின் சர்வீஸ் சென்டரிலேயே செய்துகொண்டிருந்தார் என்பது வீராவுக்கு இரட்டிப்பு ஆச்சர்யம்.

“என்ன சார், கம்யூனிசம் பேசறீங்க? எல்லாத்திலும் பெர்பெக்‌ஷன் பார்க்கிறீங்க?”

“நான் எங்கே கம்யூனிசம் பேசினேன்? நான் பேசுறது உனக்கு கம்யூனிசமாத் தெரியுது. கம்யூனிசம்கிறது ஒரு பெர்பெக்‌ஷன்தானே? உலகத்தில மனுஷங்களுக்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாதுன்னு பழுது பார்க்கிறதுதானே கம்யூனிசம்.”என்றவர் ஒரு பழைய கடிகாரத்தை எடுத்து நீட்டினார்.

“வீரா, எங்க கிராமத்துப் பேரு தச்சப்புரா. என் அப்பா ஒரு வாட்ச் மெக்கானிக். அவர் பரம்பரையாச் சேர்த்துவெச்ச விஷயம் இந்தக் கடிகாரம். அவர் எனக்குக் கத்துக்கொடுத்தது இந்த வாட்ச் மெக்கானிக் வேலை. இந்தக் கடிகாரத்தைப் பழுது பார்க்கிறப்போ, கடைசி காலத்தில் டி.பி வந்து இருமி இருமித் துப்பிக்கிட்டே இருந்த எங்க அப்பாவுக்கு வைத்தியம் செஞ்ச மாதிரியே இருக்கு” என்றவர் மிக இயல்பான தோரணையில் பேச ஆரம்பித்தார்.

“எங்க கிராமத்தில ஒரு நாட்டுப்புறக்கதை சொல்வாங்க. ஒரு வல்லிய தேர்த்தச்சன் இருந்தானாம். சக்கரத்துக்கு எவ்வளவு ஆரம் இருக்கணும், அச்சாணியின் நீளம் என்ன, தேர் எடை எவ்வளவுன்னு அவ்வளவு துல்லியமாச் சொல்லக்கூடியவன். அரச படையின் அத்தனை தேர்களும் அவன் உருவாக்கினது. அதன் பழுதை நீக்கக்கூடியவனும் அவனே. கூலியாக வரும் காசுகளைக் கட்டி அரண்மனையில் இருந்து அனுப்பும் பையில் ஒருமுறை காதல் கடிதமும் வந்துச்சாம். இளவரசியின் கடிதம். இவனும் ஒருகட்டத்தில் காதலில் விழுந்திருக்கான். ஒருமுறை இந்தக் கடிதம் அரசனின் கைகளுக்கே போய்ச் சேர்ந்திருக்கு.

“பழுது நீக்கும் தேர்த்தச்சனே!

ஆரங்களுக்கு இடையிலான இடைவெளியை

அறிந்துகொள்வதைப்போலவே

முத்தத்துக்கான கணிதத்தையும்

நீ அறிந்துகொள்ள வேண்டும்”னு இளவரசி எழுதிய அந்தக் காதல் கடிதத்தைப் படித்த அரசன், அந்தத் தேர்த்தச்சனுக்கு மரணதண்டனை விதிச்சான். ஆறு தேர்கள் அவன்மீது ஏற்றிக் கொல்ல உத்தரவு. தச்சன் இறந்தபிறகு தேருக்குப் பழுது பார்க்க ஒரு திறமையானவர்கூட ஊரில் இல்லை. ஒருகட்டத்தில் அரசனே இறங்கிப் பழுதுபார்த்தும் தேர்கள் சரியா அமையலையாம். ‘போரால் வீழ்ந்தது பல ராஜ்ஜியம்னா தேரால் வீழ்ந்தது அவன் ராஜ்ஜியம்’னு சொல்வாங்க. அந்தத் தச்சனின் ஞாபகமாத்தான் என் ஊருக்குத் தச்சப்புரான்னு பேர் வந்தது. ‘தேசத்தைப் பழுது பார்ப்பவனால் தேரைப் பழுதுபார்க்க முடியாது’ங்கிறதும் இந்தக் கதையின் மோரல்” என்று சிரித்தார்.

“எங்கே இருக்கே வீரா? உன் ரூம் பக்கம்தான் இருக்கேன். மெயின்ரோடு வந்திடு” என்றார் கோபால் மேனன்.

வீரா வந்து சேர்ந்ததும் “வா, வீட்டுக்குப் போவோம். போறவழியில் ஹரிஹரன் சார்கிட்ட இந்த புக்ஸைக் கொடுக்கணும். உன்கிட்ட அவர் நம்பர் இருக்கா?” என்றார்.

வீரா போனில் தேடிப்பார்த்து “இல்லையே சார்?” என்றான்.

“சரி வா. போற வழிதான். கொடுத்துட்டுப் போவோம்” என்றபடி பைக்கில் ஏற்றிக் கொண்டார்.

ஆனால் ஹரிஹரன் அங்கு இல்லை. அவர் மனைவிதான் இருந்தார். இருவருக்கும் டீ போட்டு எடுத்துவந்தார். குடித்துவிட்டு, புத்தகத்தைக் கொடுத்துவிட்டு நன்றி சொல்லிக்கிளம்பும்போது, “தம்பி ஒரு நிமிஷம். இந்த சாமி விளக்கை மட்டும் ஏத்திக்கொடுக் கிறீங்களா? அவரை இன்னும் காணோம்” என்றார் அவர் மனைவி. வீராவும் விளக்கை ஏற்றி, அவர் கொடுத்த விபூதியைப் பூசாமல் கைகளில் வாங்கிக்கொண்டு கிளம்பினான்.

அஞ்சிறைத்தும்பி - 37: பழுது

கீழே பார்க்கிங்கில் கோபால் கேட்டார், “ஏன் உன்னை அவங்க ஏத்தச் சொன்னாங்க?”

“அவங்களுக்கு பீரியட் டைமா இருக்கும். தீட்டுன்னு ஏத்தாம இருந்திருப்பாங்க. நான் யாருன்னு தெரிஞ்சிருந்தா ஏத்தச் சொல்லாமக்கூட இருந்திருக்கலாம்” என்றான் வீரா. வழிநெடுக அதன் அபத்தம் குறித்துப் பேசியபடி வந்தார் கோபால் மேனன்.

அறையில் உரையாடல்களுக்கிடையே வீரா கேட்டான் “சார், அந்தத் தேர்த்தச்சன் கதை சொன்னீங்களே, அவனவன் அந்தந்த இடத்தில் இருக்கணும்கிறதும்தானே அந்தக் கதையோட மாரல்?”

“ஒப்கோர்ஸ் வீரா. உனக்குத் தெரியாததா? அந்தக் கதையில் சாதியும் வர்க்கமும் இருக்கு. இந்தியாவோட பெரிய பழுதே சாதிதானே?”

“சார். நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்கல்ல. இவ்ளோ பேசுறீங்களே, எதுக்கு மேனன் பட்டம்?”

“அது என் அப்பா பேர் வீரன். என்னளவில அதுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. மோதிரம் போடுற மாதிரி, ஜட்டி போடுற மாதிரின்னு வெச்சுக்கயேன்.”

“அப்போ நாங்க நிர்வாணமா இருக்கோம்னு சொல்றீங்களா?”

“வாட்? சைல்டிஷ்... சரி வீரா. நான் ஒண்ணு கேக்கிறேன். நீங்க தமிழ்நாட்டில சாதிப்பெயர் போடலை. சாதி ஒழிஞ்சிடுச்சா? இங்கேயும் ஹானர் கில்லிங் இருக்கு. கேஸ்ட் பாலிட்டிக்ஸ் இருக்கு. எதுவும் மாறலையே?”

“சார், நீங்க சொன்ன உதாரணத்தையே நானும் சொல்றேன். சின்ன வயசுல பிறப்புறுப்பைக் காட்டிக்கிட்டுத் திரிஞ்சோம். பின்னால் அதை மறைக்க ஜட்டி போட்டோம். அதுமாதிரிதான் சாதிப்பெயரும். அது இருக்குங்கிறதுக்காக மறுபடியும் அம்மணமாக வேண்டியதில்லை. நீங்க சொல்றது உண்மைதான். இன்னமும் சாதி பார்த்துத்தான் கல்யாணம் பண்ணுறாங்க. வெளியில இல்லைன்னாலும் கல்யாணப்பத்திரிகையில சாதி இருக்கு. ஆனா ஏதோ மறைக்க வேண்டிய விஷயம்னு ஒரு பாவலாவாவது இருக்கே? இங்கேயும் ஒரு கிராமத்துக்குப் போனா என் ஊரு என்ன, தெரு என்ன, அப்பா பேரு என்ன, நான் கும்பிடற சாமி என்னான்னு கேட்டு சாதியைக் கண்டுபிடிக்கப் பார்ப்பாங்க. ஆனாலும் அதைக் கேட்டு விசாரிச்சுத்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனா உங்களுக்கு அது பப்பரப்பான்னு வெளிப்படையாவே இருக்கே?”

“அண்டர்ஸ்டுட் வீரா. ஆனா என்கிட்ட சாதியுணர்வு இருக்குன்னு ஃபீல் பண்ணறியா?”

“நம்ம காலேஜ் பல புரபசர்களைவிட நீங்க முற்போக்கானவர்தான். ஆனா எனக்கு ஒரே ஒரு கேள்விதான் சார். உங்களுக்குச் சாதி எண்ணம் இல்லாம இருக்கலாம். உங்க அப்பாவோட பேராவும் இருக்கலாம். ஆனா அது பெருமையா இருக்கு, இல்லைன்னா சங்கடமா இல்லைங்கிறதுக்காகத்தான் அதைப் பேருக்குப் பின்னால போட்டிருக்கீங்க. உங்களுக்கு இருக்கிற மாதிரி எனக்கும் ஒரு சாதி அடையாளம் இருக்கு. ஆனா அதை நான் பேருக்குப் பின்னாடி போட முடியாது. ஏன்னா எனக்கு அது இழிவு. நீங்க உங்க பேருக்குப் பின்னாடி சாதி போட்டிருக்கிறது, நீங்க என்ன சாதின்னு மட்டும் சொல்லலை, உங்க எதிரில் இருக்கிற நான் என்ன சாதி, அது எவ்வளவு இழிவானது, பேருக்குப் பின்னால போட முடியாததுங்கிறதையும் சேர்த்துத்தான் சொல்லுது. உங்க சாதிப்பெயர் உங்களுக்குப் பெருமையா இல்லாமக்கூட இருக்கலாம். ஆனா அது எனக்கு அவமானமாத்தான் இருக்கும்.”

பிறகு உரையாடல் வேறு திசையில் திரும்பினாலும் அவ்வளவு இணக்கமாக இல்லை. வீரா அறைக்கு வந்து உறங்கச் செல்வதற்கு முன் அவரிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

“யூ ஆர் ரைட் வீரா. நான் கெஜட்ல பேர் மாற்ற விண்ணப்பிக்கப்போகிறேன். இனி வெறும் கோபால்தான் நான்.”

- தும்பி பறக்கும்....