பிரீமியம் ஸ்டோரி
கபிலனுக்கு சலிப்புதான் ரத்தமாய் ஓடுகிறது. ஓடுகிறது என்றால் பாய்வது அல்ல. மெல்ல மெல்ல திக்கித் திக்கித் திக்கி நகர்வது. சலிப்புதான் சுவாசமாய் நுரையீரலில் இருந்து நிதானமாய் ஆவியாகி நாசியை எட்டுகிறது.

மனித ஆயுள் சராசரியில் 40 சதவிகிதத்தை எட்டும்போதே அவனுக்கு வாழ்க்கையில் சலிப்பு தட்டத் தொடங்கியிருந்தது. ‘வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்ன?’ என்ற கேள்விக்கான பதிலை ஞானிகள் நீண்ட தியானத்தில் ஆழ்ந்து தேடிக்கொண்டிருந்தார்கள். கபிலனோ அந்தக் கேள்விக்குறியின் வாலைப் பிடித்து இழுத்து ‘சலிப்பு’ என்று பதில் சொன்னான். சலிப்பு குறித்த அவன் தேடலில்தான் சிசிபஸ் அறிமுகமானான். அறிமுகமானது என்றும் சொல்லலாம்.

அஞ்சிறைத்தும்பி - 39: சலிப்பின் கடவுள்

“சிசிபஸ் நீ ஒரு கிரேக்க புராணப் பாத்திரம். போர் வீரனான உனக்குத் தெய்வங்கள் சாபமிட்டன. அந்த சாபத்தின்படி நீ ஒரு பாறையை உருட்டி மலையுச்சிக்குக் கொண்டுசெல்ல வேண்டும். பிறகு அதை மீண்டும் அடிவாரத்துக்குக் கொண்டு செல்லவேண்டும். பிறகு மீண்டும் மலையுச்சிக்கும் மீண்டும் மீண்டும் அடிவாரத்துக்கும் என ஒருநாள் முழுவதும் நீ இதையே செய்ய வேண்டும். உன் வாழ்நாள் பணியும் இதுவே. இதைத்தான் மனிதர்களும் செய்துகொண்டிருக்கிறார்கள். காலையில் எழுந்து குளித்து, சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறார்கள். பிறகு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு உறங்குகிறார்கள். மீண்டும் காலையில் எழுந்து குளித்து, சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் சென்று, பிறகு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு உறங்குகிறார்கள். திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். அந்தக் குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். பிறகு அந்தக் குழந்தைகள் வளர்ந்து... இப்படித்தான் இவர்களும் பாறையை உருட்டிக் கொண்டிருக் கிறார்கள். உண்மையில் மனிதர்களுக்கு, சிசிபஸ் நீதான் கடவுள்; சலிப்பின் கடவுள். ஆனால் இவர்களோ அற்புதம் நிகழ்த்தும் கடவுள்களை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். கடலைப் பிளந்தும் மழையை மேல்நோக்கிப் பெய்யவும் செய்யும் கடவுள்களை வணங்குகிறார்கள். ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் அற்புதங்கள் நிகழப்போவதில்லை. சிசிபஸ், நீதான் மனிதர்களுக்குத் தகுதியான கடவுள். நீயே வணங்கத்தக்கவன்.”

“கபிலன், என்ன உளறுகிறாய்? இதுபோன்ற கதைகளை நீ உன் ஊரில் கேட்டதில்லையா? வேதாளத்தை விக்கிரமாதித்யன் சுமப்பதும் கதையின் புதிரை விக்கிரமாதித்யன் அவிழ்த்ததும் வேதாளம் பறப்பதும் மீண்டும் வேதாளத்தை விக்கிரமாதித்யன் சுமப்பதும் சக்கரம்தானே! நான் பாறையைச் சுமக்கிறேன். விக்கிரமாதித்யன் வேதாளத்தைச் சுமக்கிறான். நான் மலையில் உருட்டுகிறேன். வேதாளம் கதையில் உருட்டுகிறது.”

“இல்லை சிசிபஸ். வேதாளம் - விக்கிரமாதித்யன் கதையின் நுட்பம் சலிப்பில் இல்லை. அது கதைகளில், அதன் புதிர்களில், சுவாரஸ்யங்களில் இருக்கிறது. ஆனால் மனிதர்களின் வாழ்க்கையில் புதிர்களும் சுவாரஸ்யங்களும் இல்லை. அவர்கள் வேதாளங்களைச் சுமக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த வேதாளங்கள் எந்தப் புதிரையும் சொல்வதில்லை. எந்த சுவாரஸ்யமான கதைகளையும் பகிர்வதில்லை. உண்மையாகவே அவர்கள் உன்னைப்போல்தான் பாறைகளை மலையுச்சிக்கு ஏற்றி இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்.”

அஞ்சிறைத்தும்பி - 39: சலிப்பின் கடவுள்

கபிலன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவன். கல்வி, வேலை என்று எதுவும் அமைவதில் அவனுக்குத் தடைகளோ சிக்கல்களோ இருந்ததில்லை. முப்பது வயதுக்குள் அவனுக்கு எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய எல்லாமும் கிடைத்திருந்தன. அதனாலோ என்னவோ வாழ்க்கையில் சலிப்பு தட்ட ஆரம்பித்திருந்தது. அவன் கையில் இப்போது ஐந்து கோடி இருக்கிறது. எப்படி வந்தது என்று கதை சொல்லும் என்னிடம்கூட அவன் சொன்னதில்லை. நிச்சயமாக அது அவன் சேமிப்பின் மூலமாக வந்ததாக இருக்க வாய்ப்பில்லை. அவனுக்கு நாளை குறித்த எந்தக் கவலையும் அச்சமும் குழப்பமும் இல்லை. அவன் பிரச்னை ‘இன்று’தான். நேற்றும் இன்றும் நாளையும் மறுநாளும் ஒரேமாதிரி இருப்பதுதான். சலிப்பைப் போக்கிக்கொள்ளத்தான் அவன் நிறைய வாசிக்க ஆரம்பித்தான். புத்தகம் சலிப்பு தட்டியபோது இணையத்தில், பிறகு இணையம் சலித்தபோது புத்தகத்தில். அவன் படிக்கப் படிக்க சலிப்பு என்பது இரவு நேரத்து நிழலைப்போல அவனைவிடவும் வளர்ந்துகொண்டேபோனது.

“நீ காதலித்ததில்லையா கபிலன்? உன் சலிப்புக்கான மருந்து காதல்தான்.”

“சிசிபஸ். நான் என்ன சிறுகுழந்தை என்று நினைத்தாயா? என் வயதுக்கு இந்நேரம் திருமணமாகியிருக்க வேண்டும். ஏழு காதல்கள்.”

நான் வாழ்க்கையை விட்டு விலகி ஓடவில்லை. வாழ்க்கையை நோக்கி ஓடுகிறேன். வாழ்க்கையில் தோற்றால்தான் தற்கொலை. வாழ்க்கைதான் என்னிடம் தோற்கிறது. அதுதான் நான் விரும்பும்வகையில் தன்னிடம் என்ன இருக்கிறது என்று திறந்துகாட்ட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஏழு பேரைக் காதலித்தாயா?”

“ஆமாம். அதில் மூன்றுபேர் என்னைக் காதலித்தார்கள். காதல் என்பதுதான் இருப்பதிலேயே பெரிய சலிப்பு. ‘சாப்பிட்டியா’, ‘தூங்கினியா?’, ‘இது எனக்கு நல்லாருக்கா?’, ‘என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும்?’, ‘நிஜமாவே லவ் பண்ணுறியா?’, ‘அவகூட ஏன் பேசினே?’, ‘இது உண்மையான காதல் இல்லை’, ‘அப்புறம்...’, ‘சொல்லு’, ‘அப்புறம்’.... அதிகபட்சம் 20 வார்த்தைகள். என் மூன்று காதலிகளும் இதையேதான் மீண்டும் மீண்டும் பேசினார்கள். அப்புறம்...அப்புறம்... அதுவும் சலித்துப்போனது.”

கபிலன் ஒரு வாடகை வீட்டில் வசிக்கும்போது அந்த வீட்டு உரிமையாளரிடம் அவர் மனைவி தினமும் கேட்கும் கேள்வி, ‘`இன்னைக்கு என்ன குழம்பு வைக்க?” இதைச் சலிக்காமல் அவர் தினமும் கேட்பார். வீட்டு உரிமையாளர் மட்டுமல்ல, கபிலனின் திருமணமான நண்பர்கள் வீட்டிலும் இதையேதான் நண்பனின் மனைவிகள் கேட்டார்கள். சாம்பார், புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், கறிக்குழம்பு, மீன் குழம்பு, மீண்டும் சாம்பார், புளிக்குழம்பு என்று அதிகபட்சம் ஏழு குழம்புகளையே அவர்கள் வாரம் முழுவதும் சமைத்தார்கள். பிறகு அடுத்த வாரத்துக்கு அதே சாம்பாரில் ஆரம்பித்து மீன்குழம்பில் முடித்தார்கள். சமயங்களில் வரிசை மாறும் என்றாலும் அதன் எண்ணிக்கை இவ்வளவுதான். ‘`இன்னைக்கு என்ன குழம்பு வைக்க?” என்ற கேள்வியை மனைவிகள் ஒரு சிலுவையைப்போல் இழுத்தபடி வீட்டின் நான்கு மூலைகளிலும் அலைந்ததை அவன் பார்த்தான்.

அஞ்சிறைத்தும்பி - 39: சலிப்பின் கடவுள்

பிறகுதான் அவன் எல்லா நாட்டு உணவுகளையும் தேடித் தேடி உண்ணத் தொடங்கினான். காலை ஆசிய உணவு, மதியம் லத்தீன் அமெரிக்க உணவு, இடையில் ஆப்பிரிக்க சூப், இரவு ஆஸ்திரேலிய உணவு என்று. அதுவும்கூட ஒருகட்டத்தில் ஒரு வட்டத்தில் வந்து முடிந்தது.

விளையாட்டு, உணவு, காமம், அரசியல், இலக்கியம், மர்மம் என எல்லாமும் சலித்த பிறகு ஒருகட்டத்தில் தற்கொலைகள் குறித்துத் தேடித்தேடிப் பார்க்கவும் படிக்கவும் தொடங்கினான். தூக்கிடுவது, மாத்திரைகள், தண்டவாள ரயில், கைநரம்பு துண்டித்தல், அளவு கூடிய போதை ஊசி என வழக்கமான தற்கொலை முயற்சிகளைத் தாண்டி புதுமையான தற்கொலை முயற்சிகள் இருக்கின்றனவா என்று தேடிப்பார்க்கத் தொடங்கினான்.

“சிசிபஸ் நேற்று ஒரு கனவு கண்டேன். நீ மலையில் கால் தடுக்கிக் கீழே விழுகிறாய். உன் கையிலிருந்து நழுவிய பாறை என் தலையை நோக்கி வருகிறது.”

“என்ன இப்படி தற்கொலைகளைத் தேட ஆரம்பித்துவிட்டாய், வாழ்க்கை சலித்ததால் தற்கொலை செய்யப்போகிறாயா?”

“இல்லை. தற்கொலை, மரணம் என்பது வாழ்க்கையைவிடப் பெரிய சலிப்பு. நான் வாழ்க்கையை விட்டு விலகி ஓடவில்லை. வாழ்க்கையை நோக்கி ஓடுகிறேன். வாழ்க்கையில் தோற்றால்தான் தற்கொலை. வாழ்க்கைதான் என்னிடம் தோற்கிறது. அதுதான் நான் விரும்பும்வகையில் தன்னிடம் என்ன இருக்கிறது என்று திறந்துகாட்ட வேண்டும். மரணத்திடம் காட்டுவதற்கு என்ன இருக்கிறது? அது இருள்கிணறு.”

சிசிபஸ் சொல்லும் சில ஆலோசனைகள் அவனுக்குப் பிடித்திருக்கின்றன. வழக்கமான வேலையை விட்டுவிட்டு ஒரு கிராமத்தில் தங்கி விவசாயம் பார்த்தான். அதே மரம், பறவைகள், தண்ணீர், மதிய வெயில். தன் பழைய வேலையைவிட இது சலிப்பாக இருப்பதாகக் குறைப்பட்டுக்கொண்டான்.

“நீ ஏன் ஒரே இடத்தில் ஆணியடித்திருக்கிறாய்? உலகம் முழுதும் சுற்றி வரலாமே. எத்தனை மனிதர்கள், எத்தனை பண்பாடுகள், எத்தனை நிறங்கள், எத்தனை நறுமணங்கள்.”

கையில் பணமிருக்கிறது என்பதால் கபிலன் உலகத்தைச் சுற்றிவர ஆரம்பித்தான். ஆனால் எங்கே போனாலும் சலிப்பு வேதாளத்தைப்போல் அவன் தோள்மீது ஏறிவந்தது.

“உங்களுக்கு வந்திருக்கிறது உளவியல் நோய்தான். தொடர்ச்சியான கவுன்சலிங், மருந்துகள் மூலமா சரிபண்ணலாம்.”

“தெரியலை டாக்டர். ஆனால் எதையும் ரசிக்க முடியலை. ஈடுபாடு இல்லை. ஒருகட்டத்தில் சலிப்பும் சுவாரஸ்யமாக இல்லை. நான் சரியா, தப்பான்னும் தெரியலை. எதுக்கும் ஒரு டாக்டரைப் பார்க்கலாம்னுதான் வந்தேன்.”

“உங்களுக்குக் காதல், திருமணத்தில் நம்பிக்கையில்லாம இருக்கலாம். ஆனா குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கலாமே?”

“எதுக்கு டாக்டர், எல்லாக் குழந்தைகளும் ஒரேமாதிரிதானே வளர்வாங்க?”

``அப்போ நீங்க செல்லப்பிராணிகள் வளர்த்துப் பார்க்கலாமே?”

“என்ன டாக்டர், குழந்தைகளில் இருந்து நாய்க்குட்டி வரைக்கும் இறங்கி வந்துட்டீங்க?”

40 நிமிடங்களுக்கு வாங்கி வைத்திருந்த அப்பாயின்ட்மென்ட் மூன்றுமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

நான்கு நாள்களில் அந்த மருத்துவமனை பரபரப்பில் மூழ்கியது. மருத்துவரைக் காணவில்லை என்ற புகாரின்பேரில் பல திசைகளிலும் தேடத் தொடங்கினார்கள்.

“நீட்ஷேன்னு ஒரு ஜெர்மன் பிலாசபர் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்தாராம். என் நண்பர் ஒருத்தர் சொன்னார். ‘நீ இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை மறுபடியும் மறுபடியும் இன்ஃபினிட்டி டைம்ஸ் வாழணும்னு சொன்னா நீ என்ன செய்வே?’ன்னு. நல்ல கேள்வியில்ல? 23 வயசுன்னா மறுபடி 23 வருஷம் வாழணும். 77 வயசுன்னா மறுபடி மறுபடி 77 வருஷம் வாழணும்” என்று சொன்ன டாக்டரின் கையில் கஞ்சா சிகரெட் புகைந்துகொண்டிருந்தது.

ஒரு பதிலும் சொல்லாமல் சிசிபஸ் மலையுச்சியை நோக்கி நகர்ந்தான்.

- தும்பி பறக்கும்....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு