Published:Updated:

குறுங்கதை : 4 - அஞ்சிறைத்தும்பி பிரெயில் எழுத்தில்

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுங்கதை

இளையராஜாவின் பார்வையாளர் நேரம்

“கண்டிப்பா பாடறோம் . உங்க கல்யாணத்துக்குப் பாடாம வேற யார் கல்யாணத்துக்குப் பாடப்போறோம்? ஆனா ஒரு கண்டிஷன் மேடம்” என்றார் மதுரைவீரன்.

“சொல்லுங்க” என்றாள் பூர்ணா.

“ராஜபார்வை, காசி படத்துப் பாட்டு மட்டும் பாட மாட்டோம்.”

ஏதோ சொல்ல வாயெடுத்த பூர்ணாவின் தொடையில் கிள்ளி அழுத்தினான் நீலகண்டன்.

“ஏன் சொல்றேன்னு புரியுதா?”

“ம், புரியுது” என்ற நீலகண்டனை இன்னும் புரியாமல் பார்த்தாள் பூர்ணா.

“அதுக்குப் பெயர்தான் சார். மேடம், சார் எங்களுக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்கார் தெரியுமா. எங்களுக்கு மட்டுமில்லை, எங்களை மாதிரி இருக்கிறவங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கார்”பூர்ணா காதல் ததும்ப நீலகண்டனின் கைகளை எடுத்துத் தன் மடியில் கோத்துக்கொண்டபோது, ஒரு தட்டில் நாலு டீ டம்ளருடன் வந்தார் அவர்.

“சார், டீ எடுத்துக்கங்க.”

“மூர்த்தி டீ சாப்பிட்டுப்பாருங்க. டீ போடுறது ஒரு கலை. பதனி, இளநி, ஜிகர்தண்டா எல்லாம் நேரா வயித்துக்குள்ள போய் சிலுசிலுன்னு ஆக்கும். ஆனா நல்ல டீ முதல்ல தொண்டையில நிக்கும். அதுக்கப்புறம்தான் குடலில இறங்கும். அடுத்த டீ சாப்பிடறவரைக்கும் அது ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும். மூர்த்தியோட டீ சாப்பிட்டுப் பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும்.”

மதுரைவீரன் சொல்லவும் இருவரும் டீ டம்ளர்களை எடுத்துக்கொண்டனர்.

“உங்களைப் பத்திச் சொல்லுங்க” என்றாள் பூர்ணா.

“சொல்றதுக்கு என்ன இருக்கு மேடம்? எல்லாப் பார்வையற்றவர்களுக்கும் இருக்கிற வழக்கமான கதைதான். ராஜூமுருகன், பாக்கியம் சங்கர்லாம் கூட ஏற்கெனவே எழுதியிருக்காங்களே, அதே கதைதான். இந்த இன்னிசைக்குழுவுக்கு இளையராஜா இன்னிசைக்குழுன்னு பேர் வெச்சது மூர்த்திதான். எங்களுக்கு இது முழுநேர வேலை கிடையாது. நான் பிளைண்ட் ஸ்கூலில டீச்சரா இருக்கேன். அவன் கிதாரிஸ்ட். கூப்பிட்டவங்களுக்கு எல்லாம் பாடப்போறதில்லை. மனசுக்குப் பிடிச்சிருந்தா போவோம்.”

குறுங்கதை : 4 - அஞ்சிறைத்தும்பி பிரெயில் எழுத்தில்

“உங்களுக்குப் பார்வை இல்லைன்னு வருத்தப்பட்டது கிடையாதா?”

“பூர்ணா, உனக்கு ரெக்கை இருந்தா எப்படி இருக்கும்?” என்றான் நீலகண்டன்.

“செம ஜாலியா இருக்கும் நீல்ஸ். டிராபிக் கவலை இல்லாம, பறந்தே உன்னைப் பார்க்க வந்திடுவேன்.”

“இப்போ ரெக்கை இல்லாததுக்கு நீ வருத்தப்படறியா?”

“இல்லையே?”

“அதேமாதிரிதான் மேடம் எங்களுக்கும். ஒருவேளை பொறக்கிறப்ப பார்வை இருந்து இடையில போனவங்க வருத்தப்படலாம். ஆனா எனக்கும் மூர்த்திக்கும் பிறவியில இருந்தே பார்வை கிடையாது. பார்வைன்னு ஒண்ணு தெரிஞ்சாத்தானே அது இல்லைன்னா வருத்தப்படணும்?”

“சூப்பர்ண்ணா. நாங்கல்லாம் மியூசிக் கேட்கிறப்போ பாட்டு சீன் ஞாபகத்துக்கு வரும். உங்களுக்கு எப்படி?”

“மேடம், மியூசிக்ங்கிறது சவுண்ட். மூர்த்தி, அந்த ஆர்மோனியத்தை எடு. ‘மடை திறந்து’ பாடு.”

மூர்த்தி ஆர்மோனியத்தை ட்யூன் செய்து ஆரம்பித்தார்.

“தல்லலலலா... தாலலலா...

குறுங்கதை : 4 - அஞ்சிறைத்தும்பி பிரெயில் எழுத்தில்

மடை திறந்து தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான்

இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்

நினைத்தது பலித்தது... ஹேய்...”

“போதும்டா. மேடம் அருவியில குளிச்சிருக்கீங்களா? இந்தப் பாட்டு அப்படியொரு அருவிதான். குளிக்கிறதுக்கு முன்னால குளிர் இருக்கும். அப்புறம் தலையில மொத்தமாக் கொட்டுற அருவியில நாம வேற, தண்ணி வேறன்னு இல்லாம முழுசாக் கரைஞ்சிடுவோம். தண்ணியோட உற்சாகம் நம்ம ரத்தத்தில பாயும். உடம்பு முழுக்க நனைஞ்சு மூச்சுத்திணறினாலும் மறுபடி மறுபடி நனைவோம்ல, அதான் ‘மடை திறந்து’ ”

மூர்த்தி மீண்டும் ஆர்மோனியத்தில் ‘ரபபபா ராபபபா ரபரபா’ என்று பாடி... `ஹேய்’ என்றான்.

“இந்த ஹேய் இந்தப் பாட்டுக்குன்னா இன்னொரு பாட்டு இருக்கு.

உம்ஹேய்...ஹேய்ஹேய்....ஹேய்...ஹேஹேய்....ஹேய்ய்ய்ய்ய்

இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே

வசந்தம் கண்டதம்மா வாழும் வாலிபமே....”

நிறுத்திய வீரன், “இது பேய்மழைப் பாட்டு. மழை ஆரம்பிக்கும்போது வானத்தை நோக்கி மூஞ்சியக் காட்டினா, முதல் மழைத்துளி எங்கே விழும் தெரியுமா? கண்ணு இமை மேல. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வேகமெடுக்கிற மழை நம்மை நனைக்குமே அதான் இது. அதேமாதிரி ஒரு திருவிழாவுக்குப் போனா நீங்க என்னென்னமோ பார்ப்பீங்க. ஆனா எங்களுக்குச் சத்தம்தான். விதவிதமான சத்தம். பஞ்சு மிட்டாய் வண்டி, கோயில் மணி, திருவிழாக்கடை சத்தம், பக்தர்கள் கூச்சல், குழந்தைகள் அழுகை... இப்படி ஒரு திருவிழாவில தொலைஞ்சுபோனா எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கும் இந்தப் பாட்டு.”

“ரொம்ப நல்லாயிருக்குண்ணா. ஆனா இந்தப் பாட்டை நான் கேட்டதே இல்லையே?”

“இது இளையராஜாவோட பெஸ்ட் பூர்ணா. ‘ஹேராம்’ படப்பாட்டு.”

“ஆமா. ஆனா நிறைய பேருக்குத் தெரியாது. ஆனா அதே படத்துல இன்னொரு பாட்டுப் பாடச்சொல்லி எங்களைக் கேட்பாங்க.”

‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.

நமைச்சேர்த்த இரவுக்கொரு நன்றி

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி’ என்று வீரன் பாட, இறுதியில் முடியும் ‘நன்றி’யை ஏந்தினான் மூர்த்தி.

“வேடிக்கையைப் பார்த்தீங்களா, பார்வையே கிடையாது. ஆனா ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ ’’ என்று சிரித்தார் வீரன். “இதைவிட ஒரு டெரர் பாட்டு இருக்கு” என்ற மூர்த்தி, டீ கிளாஸை அவர்களிடமிருந்து வாங்கினார்.

“என் ஊர் தொப்பம்பட்டி. பஸ்ல ஏறி உக்காந்தா கரெக்டா ஸ்டாப் தெரியும். ஒருநாள் பஸ்ல இந்தப் பாட்டுப் போட்டாங்க பாருங்க. பஸ் ஓடுது. என் மனசு எங்கேயோ ஓடுது. ஸ்டாப்பை மிஸ் பண்ணிட் டேன். பின்னே, பாட்டு எங்கெங்கேயோ டிராவல் பண்ணுது” என்றபடி மூர்த்தி பாடத்தொடங்கினார்.

“உன்னை நானறிவேன் என்னையன்றி யார் அறிவார்?....” - அறை முழுக்கத் தேன்.

“கேட்டீங்களா. அம்மா மடியில தலையைச் சாய்ச்சு, ‘உனக்குக் கண்ணில்லைன்னா என்னடா, கண்ணுக்குக் கண்ணா நான் இருக்கேன்’னு சொல்றமாதிரி இருக்கும். அதுல கிறங்கும்போது டக்குன்னு பாட்டு மாறும்பாருங்க. ஒரு கர்னாடக சங்கீத ஆலாபனை. அப்புறம்...”

“ஒயிலா லோ... ஒயிலா லோ...

லபோ லபோ லப்ஜினக்கா...”

பூர்ணாவுக்குக் காட்டுக்குள் இருப்பதைப்போலிருந்தது. பழங்குடியிசை மெல்ல ஆக்கிரமித்தது.

மீண்டும் காட்டிலிருந்து அம்மா மடியில் பாடலை இறக்கிவைத்தார் மூர்த்தி.

குறுங்கதை : 4 - அஞ்சிறைத்தும்பி பிரெயில் எழுத்தில்

“எனக்கே கேக்கிறப்ப சிலிர்க்கு துண்ணா. உங்ககிட்ட பேசினபிறகு மியூசிக்கை இன்னும் துல்லியமாக் கேக்கலாம், அனுபவிக்கலாம்னு தோணுது. நான் ஒரு பாட்டு சொல்றேன். ‘நெஞ்சோடு கலந்திடு உறவாலே... காயங்கள் மறந்திடு அன்பே’ ” என்று பூர்ணா பாட, “நல்லாப் பாடறீங்க மேடம்” என்றார் வீரன்.

“கிண்டலடிக்கிறீங்கன்னு தெரியுது. ஆனா அந்தப் பாட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சவுண்டு வரும். அது பூனை கத்துற மாதிரி இருக்கும் மியாவ்னு.”

“அது மியாவ் இல்லை மேடம். மிய்யூவ். மிய்யூவ்வ்வ்வ்... நெஞ்சோடு கலந்துடு உறவாலே” என்று பாடிய வீரனிடம் “மூர்த்திண்ணா உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு எது?” என்றாள் பூர்ணா.

“மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே, குக்கூம் குக்கூம், தினம் தினம் உன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே, குக்கூம் குக்கூம். பாட்டு முழுக்கக் குயில் கூவும்.”

“நல்லவேளை, அந்தப் பாட்டு சீனை நீங்க பார்க்கலை” என்றான் நீலகண்டன்.

“ஏன் சார்? லவ் சாங்தானே?”

“லவ் சாங்கா. ஹீரோயின் மேல விழுந்து புரண்டு டிரஸ்ஸைப் பிடிச்சு இழுத்து ரேப் சாங் மாதிரி இருக்கும்”

“ஆனா அதை ஹீரோ பண்ணுவாரு” என்ற பூர்ணா, “அண்ணா நீங்க இளையராஜா பாட்டு மட்டும்தான் பாடுவீங்களா?”

“இளையராஜா இன்னிசைக்குழுன்னு வெச்சிருக்கிறதால கேக்கிறீங்களா? எல்லாப் பாட்டும் பாடுவேன். ‘உன்னை அறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடுவேன். எம்.எஸ்.வி பாட்டு.”

“ம்க்கும். அது ஈவ்டீஸிங் பாட்டுண்ணா.”

நீலகண்டனின் போன் அடித்தது. ரிங்டோனுக்கு ஏற்றபடி விரல்களால் சொடக்குப் போட்டார் வீரன். போனை கட் செய்த நீலகண்டன் “சரிங்க வீரன். கிளம்புறேன். நிறைய வேலை இருக்கு. தேதி ஞாபகம் இருக்குல்ல?”

“நவம்பர் 20தானே? அதெல்லாம் கன் மாதிரி வந்துடுவோம்.”

“சரி வர்றேன். வர்றேன் மூர்த்தி.”

மாலை ஒரு சாலையோரத்து டீக்கடையில் பைக்கை நிறுத்தினான் நீலகண்டன். இறங்கிய பூர்ணா, “அண்ணா ரெண்டு டீ” என்றவள் “தொண்டையில நிக்கிற மாதிரி இருக்கணும் டீ” என்றாள்.

“தொண்டையில நிக்கிறதுக்கு அது என்ன சிவபெருமான் குடிச்ச விஷமா? உங்களுக்கு எந்த ஊர் மேடம்?” என்றார் டீக்கடைக்காரர்.

“கரூர்”

“அங்கே எப்படி டீ போடுவாங்க தெரியும்ல. டீ போட்டுட்டு, அதுக்குத் தொப்பி மாதிரி கொஞ்சம் பாலை ஊத்துவாங்க. அதைவிட இந்த டீ நல்லாத்தான் இருக்கும்.”

“ரைட்டு. உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படியே போடுங்க” என்ற பூர்ணா, ஸ்டால் போஸ்டர்களைப் பார்த்துக் கொண்டிருந்த நீலகண்டனிடம் வந்தாள்.

“காலையில வீரன், மூர்த்திகிட்ட பேசினது ஞாபகத்திலேயே இருக்கு. இசையை எப்படியெல்லாம் காட்சிப்படுத்து றாங்கல்ல, உனக்கு என்ன தோணுது?”

“எனக்கா? ம்... இளையராஜா மியூசிக் போட்ட எய்ட்டீஸ் பாட்டெல்லாம் டிவியில பார்க்கிறப்போ வீரன், மூர்த்தி மாதிரியே இருந்திருக்கலாம்னு தோணுது.”

சூடான டீ கிளாஸை நீட்டினார் டீக்கடைக்காரர். அப்போது முதல் மழைத்துளி அந்த டீ கிளாஸில் விழுந்தது.

- தும்பி பறக்கும்...