Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 40: அலை

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுங்கதை

குறுங்கதை

அலை 1.1

பெருத்த வயிற்றுடன் அங்குமிங்கும் அலைபாய்ந்தபடி தேடத்தொடங்கினாள் அவள். மூச்சிரைக்க ஒரு பெரும் காட்டுவிலங்கைப்போன்ற கோபத்துடன் அவள் பார்த்த பார்வை அவனுக்குக் குழப்பமாகத்தான் இருந்தது.

“என்ன செய்றே?” சைகையில்தான் கேட்டான்.

“நம்ம குழந்தையைக் காணோம், பார்த்தியா?”

“நம்ம குழந்தையா, எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?”

“சரி, அது என் குழந்தை. பார்த்தியா இல்லையா?”

“நான் எதுக்கு அதைப் பார்க்கிறேன்? ஏற்கெனவே எதைப் பார்த்தாலும் பயமா இருக்கு. வானத்தில கடமுடான்னு சத்தம் கேக்குது. திடீர் திடீர்னு வெளிச்சம் வருது. எது சாமி, எது பேய், எது மிருகம்னு தெரியலை. நீ வேற அடிக்கடி வயிறு வீங்கிடுறே. எனக்கு உன்னைப் பார்த்தாலும் பயமாயிருக்கு.”

ஆதித்தாயின் குழந்தைகளுக்கு அப்பனில்லை. அதுவாய் வளர்ந்து அறிவு பெறும்வரை, இரை தேடும்வரை குழந்தைகளைக் காக்க வேண்டியது தாயின் கடமை. ஏற்கெனவே பெற்ற குழந்தை கடும் மழையில் இறந்துபோனது. ஏனோ தெரியவில்லை. அதன் உடம்பு வெயிலில் காய்ந்த பாறையைப்போல் சுட்டுக்கொண்டேயிருந்தது. இந்தக் குழந்தையை இப்போது காணவில்லை.

ஆதித்தாய் ஒரு யானை அசைவதைப்போல பெரும்வயிற்றுடன் அசைந்து அசைந்து நடக்கத் தொடங்கியதைச் சலனமின்றி உற்றுப்பார்த்த அவன், பிறகு அவசரமாக அங்கிருந்த ஒரு கனியை உண்ணத்தொடங்கினான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

செல்லும் வழியெங்கும் புதர்களை விலக்கிப்பார்த்தபடி, குழிகளைக் குனிந்து பார்த்தபடி நடந்துகொண்டிருந்தாள். ஓவென்று இரையும் அருவியின் ஓசை அவள் அச்சத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ஒரு பெரும்பறவை பறந்து வந்து அமர்ந்ததில் மரக்கிளை முறியும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் கூட்டமாகக் கழுகுகள் தரையிலிருந்து அவசரமாகப் பறந்தன.

அங்கேதான் அந்தக் குழந்தை கிடந்தது. ஏதோ விலங்கு இழுத்துவந்து கடித்திருக்க வேண்டும். பாதி மாமிசமாகக் கிடந்த குழந்தையின் மூளையையும் கண்களையும் பறவைகள் கொத்தியிருந்தன. ஆதித்தாயின் பதைபதைப்புக்கு அவள் உடல் ஒத்துழைக்கவில்லை. நிதானமாகக் குத்துக்காலிட்டு அமர்ந்தவள், சிதையுண்ட குழந்தையின் உடலைத் தழுவிப் பெருங்குரலிட்டு அழுதாள்.

அஞ்சிறைத்தும்பி - 40: அலை

அப்போது மொழி பிறக்கவில்லை என்பதால் அவளால் அழ மட்டுமே முடிந்தது. அது ஒரு முடிவற்ற கேவலாக இருந்தது.

அவள் வாழ்ந்த நிலத்தையும் வனத்தையும் பின்னொருநாள் கடல்கொண்டது. அவள் அதற்குள் மூழ்கியபோது தன் குழந்தையின் மூத்திரம்தான் நினைவுக்கு வந்தது. இதுவும் அதுபோல் உப்புக்கரிக்கும் நீர் என்று அவள் நினைத்தபடியே...

(தொடர்ச்சி 1.2-ல்)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அலை 1.5

நிமிர்ந்து பார்த்தார்கள் கடற்கரையில் நடைப்பயிற்சியில் இருந்தவர்கள், சிறுகுழந்தைகள், பந்தாடிய இளைஞர்கள், அதிகாலையில் சுக்குக்காப்பியும் கற்றாழைச்சாறும் விற்றுக் கொண்டிருந்தவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், மூன்று தெருவோர மாடுகள், ஆக்ரோஷமாய்க் குலைத்த நாய்கள். அண்ணாந்து பார்க்கும்படிதான் அலைகள் எழுந்து வந்தன. இரண்டல்ல, மூன்றல்ல, எண்ண முடியாத அளவுக்கு அலைகள் சேர்ந்து பேரலைகளாய் உருமாறியிருந்தன. பெண்கள் விரிந்துகிடக்கும் கூந்தலை அள்ளி முடிவதைப்போல அத்தனை அலைகளும் ஒன்றிணைத்து ஒரு ராட்சத அலை எழுந்து வந்தது. மக்களும் மக்களுக்குப் பழக்கப்பட்ட விலங்குகளும் இதுவரை அப்படியொரு காட்சியைப் பார்த்ததில்லை. கடல் எழுந்து நகரத்துக்கு வருகிறது என்றுதான் எல்லோருக்கும் தோன்றியது. தங்கள் வாழ்நாளில் பார்த்திராத காட்சி என்பதால் எப்படிப் புரிந்துகொள்வது, என்ன பெயர் சூட்டுவது என்று தெரியாமல் ஆச்சர்யமும் திகைப்புமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை அலை மூழ்கடித்தது. அந்த அலையில் விலங்குகளின் எலும்புகள், அஸ்தி, காற்செருப்பு, கொலுசு, சலங்கை, ரொட்டித்துண்டுகள் என எல்லாமும் மிதந்துவந்தன.

அலை 1.3

பெரும் சத்தம். ஆனால் முதலில் அதை ராபர்ட்சன் கவனிக்கவில்லை. கப்பலில் இருந்த சிப்பந்திகளும் சக பயணிகளும் கவனித்தி ருந்தார்கள். ராபர்ட்சன் எதைத்தான் கவனித்தார்? இத்தனைக்கும் கவனித்தலுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். வெவ்வேறுவிதமான நிலப்பரப்புகளுக்கு ஆண்டு முழுதும் பயணம் செய்வது, அந்நிலத்து மக்களின் கலாசாரத்தைப் பயணக்குறிப்புகளாகப் பதிவு செய்வது அவரது வழக்கம். கடற்பயணம் அவருக்குச் சலித்துப்போன ஒன்று. அதில் கவனிக்க என்ன இருக்கிறது? பிரான்ஸ் கலகத்தில் தான் கண்ட காட்சிகளைத்தான் அவர் பயணக்குறிப்புகளாகப் பதிவு செய்துகொண்டி ருந்தார். இன்னமும் அந்தக் கொந்தளிப்பு அவரை விட்டுப் போகவில்லை. அதனால்தான் கடலின் கொந்தளிப்பையோ கப்பல் முன்னும் பின்னும் தாழ ஆடிக்கொண்டிருப்பதையோ அவர் கவனிக்கவில்லை. அவருக்குள் ஒரு கடல் இருக்கிறது. அது வெளியிலிருப்பதைவிட ஆழ்கடல். அங்கே ஓயாமல் அலைகள் சீறிக்கொண்டிருந்தன.

“ரொட்டிகள்... ரொட்டிகள்... ரொட்டிகள்... மக்களின் இதயங்களும் உதடுகளும் மீண்டும் மீண்டும் முணுமுணுத்தது அதைத்தான். பசி அவர்களை அடர்த்தியான பனியைப்போல் போர்த்தியிருந்தது. மக்கள் ஒரு துண்டு ரொட்டிக்காக அலைந்துகொண்டிருந்தார்கள். காணும் எல்லாமும் அவர்களுக்கு ரொட்டியாகத் தெரிந்தன. குழந்தைகளின் காலுறைகள், பழுப்புநிறத் தொப்பி, சவப்பெட்டி, மரப்பட்டைகள், பனியில் விறைத்து இறந்திருந்த ஓர்த்தோலன் பறவை என எல்லாமும் ரொட்டித்துண்டுகளாய்த்தான் தெரிந்தன. அப்போது பிரான்சே ஒரு பெரும் ரொட்டித்துண்டாக மாறியிருந்தது. மக்கள் அதை எறும்புகளைப்போல் மொய்த்திருந்தனர். அரண்மனையில் முறையிட்டு பதினாறாம் லூயியிடம் முழந்தாளிட்டு அழுதனர். ஆனால் கொஞ்சமும் இரக்கமின்றி சீமாட்டி அண்டோனேட் சொன்னாள், ‘ரொட்டி இல்லையென்றால் என்ன, கேக் சாப்பிட வேண்டியதுதானே?’ என்று. இதைச் சொல்லும்போது அவள் விறைத்த ரொட்டியைப் போலிருந்தாள். சிலகாலம்தான். மக்கள் புரட்சி வெடித்து லூயியும் அண்டோனேட்டும் கில்லட்டில் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார்கள். அப்போது அண்டோனெட் ரத்தத்தில் நனைக்கப்பட்ட ரொட்டித்துண்டு. அதை எறும்புகள் இழுத்துச்செல்வதைப்போல்தான் மக்கள் இரு சடலங்களை இழுத்துச்சென்ற.....

- ராபர்ட்சன் எழுதிக்கொண்டிருக்கும்போது கப்பல் பெருஞ்சத்தத்துடன் கவிழத் தொடங்கியது. முதலில் உடைந்தது...

(தொடர்ச்சி அலை 1.4-ல்)

அலை 1.2

மூழ்கிப்போனாள். கடலே வெண்ணிற ஆநிரைக்கூட்டம் எழுந்துவந்ததைப் போலிருந்தது.

எப்போதும் மாடுகளைக் கொஞ்சி விளையாடுவது நிலவொளிக்கும் அவள் தோழிகளுக்கும் பிடித்தமான விளையாட்டு. அவள் வீட்டு மாடுகள் பீய்ச்சியடிக்கும் பாலைக்கொண்டு அந்த நகரத்தையே மூழ்கடித்துவிடலாம் என்பார் சிற்றன்னை. நிறையனுக்கும் நிலவொளிக்கும் திருமணமாகிப் பல மண்டலங்கள் கடந்திருந்தன. ஆனால் இருவருக்கும் குழந்தையில்லை. குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டு, தீவினைகளே இதற்குக் காரணமென்றாள். தீவினை நீங்க வேண்டும் என்றால் நெய்தல் நிலமாம் உப்புமாங்குடியில் உள்ள நல்விழி அம்மனை தரிசித்துவர வேண்டும் என்றாள்.

மரக்கலம் வழியாகவும் நடைவழியாகவும் நிலவொளியும் நிறையனும் உப்புமாங்குடிக்கு வந்து சேர்ந்தார்கள். அன்று இரவு நடந்த சூதாட்டத்தில் தன் மனைவியின் காற்சிலம்பை வைத்துத் தோற்றான் நிறையன். ஆனால் அந்தச் சிலம்பே தலைமை அமைச்சரின் வீட்டில் திருடப்பட்டது என்ற குற்றச்சாட்டின்பேரில் நிறையன் இழுத்துச்செல்லப்பட்டான்.

இடிகண்டு மிரண்ட ஆநிரைபோல அழுது அரற்றியவாறு அவள் கொலைக்களத்துக்கு விரைந்தாள். ஊரார் கூடி நிற்க, கொலைக்கருவி நிறையனின் தலைக்கு மேல் உயர்த்தப்பட்டிருந்தது. அதன் கைப்பிடி மாட்டின் கொம்பால் செய்யப்பட்டிருந்தது. மாட்டுத்தோலால் செய்யப்பட்ட இசைக்கருவிகள் ஒலிக்க கொலைச்சடங்கு நடந்துகொண்டிருந்தது.

“நிலவொளி நான் இறக்கிறேன் என்பதைவிடவும் நமக்கு ஒரு மகவு இல்லாமல் இறக்கிறேன் என்பதுதான் என்னை வருத்துகிறது” என்று முணுமுணுத்துக்கொண்டான் நிறையன். அந்தக் கூட்டத்திரளில் யாருக்கும் அது கேட்டிருக்காது என்றாலும் அவனது வாயசைவு கொண்டே நிலவொளி அதைப் புரிந்துகொண்டாள்.

அவள் அந்தக் காட்சியைக் காண விரும்பவில்லை. வெயில் மணல்துகள்களைப் போல் அவள் தலையில் கொட்டிக்கொண்டிருந்தது. பாதங்களில் சுமையேறியிருந்தது. கண்கள் அழுதழுது காய்ந்திருந்தன. அவளுக்கு ஊர் செல்லும் வழி தெரியாது. சென்றாலும் அங்குபோய் என்ன செய்வதென்றும் அறியாள். அவள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கடல்நோக்கி நடந்தாள்.

குழந்தைகள் முற்றத்தில் அலைந்து திரிவதைப்போலவே அலைகள் வந்து வந்து திரும்பின. கடல் நோக்கி நடந்தாள். கடலுக்குள் நடந்தாள். பெருஞ்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அவள் அதன் ஒலியலைகளுக்குள் தன்னை ஒப்புவித்தாள். அவள் மூழ்கியபின்னும் இருந்தது...

(தொடர்ச்சி அலை 1.3-ல்)

அலை 1.4

விளக்கு மாடக்குழியையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள் புவனா. சுடர், பாம்பின் நாக்கைப்போல் தீண்டும் எத்தனத்துடன் அலைந்துகொண்டிருந்தது. புவனாவின் மனசும் அதேபோல்தான். வீட்டை விட்டுக் கிளம்பி 20 நாள்கள் ஆகிவிட்டன. அவளும் சக்தியும் தமிழ்நாடு முழுக்க அலைந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இருவரும் வெவ்வேறு சாதிகள். அதிலும் சக்திவேல் அவளைவிட ஒருபடி கீழ் என்பதால்தான் இவ்வளவு பதற்றமும்.

முதலில் அது வீட்டுப்பிரச்னையாக இருந்தது, புவனா அண்ணனின் தற்கொலைக்குப் பிறகு நாட்டுப்பிரச்னையாகிவிட்டது. சாதிப்பிரச்னை என்றாலே அது நாட்டுப்பிரச்னைதானே! சக்தியின் சித்தப்பா ஒருவர் இதில் பலியாகியிருந்தார். இருவரும் எங்கிருக்கிறார்கள் என்று புவனாவின் சொந்தங்களும் சாதிச்சங்கமும் தமிழ்நாடு முழுக்கத் தேடிக்கொண்டி ருக்கிறார்கள். அவர்களும் கைமாற்றிக் கைமாற்றி இப்போது மதுரை ஆவணி மூலவீதிக்கு வந்திருக்கிறார்கள்.

அஞ்சிறைத்தும்பி - 40: அலை

“என்னம்மா மாடக்குழியையே உத்துப்பார்க்கிறே? இந்த வீட்டுக்குன்னு ஒரு வரலாறு இருக்கு. சக்திவேல் தோழர், நீங்களும் கேளுங்க” என்றபடி அன்பரசன் சொல்லத்தொடங்கினார்.

“இந்த வீட்டில் வசிச்ச குஞ்சரம் மதுரையிலேயே ஃபேமஸான தாசி. இந்தத் தெருவிலேயே அவளுக்கு ரெண்டு பெரிய வீடு இருந்துச்சு. தாதுப்பஞ்சம் கேள்விப்பட்டிருப்பீங்க. அது கறையான் மாதிரி அன்னைக்குத் தமிழ்நாட்டையே அரிச்சுத் தின்னுச்சு.

பஞ்சம் ஆரம்பிச்சு மக்கள் சாப்பாட்டுக்கு அலையறப்போ பெரிய மனுஷங்க கண்டுக்கலை. தானியங்களைப் பதுக்க ஆரம்பிச்சாங்க. அப்போ மனசு கேக்காம, ரெண்டாவது வாரத்தில இந்தக் குஞ்சரம்தான் கஞ்சி காய்ச்சி ஊத்த ஆரம்பிச்சா. மக்கள் நூத்துக்கணக்கில் குவிய ஆரம்பிச்சாங்க. ஆவணி மூலவீதியே திணறிப்போயிடுச்சு. அவளால் ஒருநாளைக்கு ஒருவேளைதான் கஞ்சி ஊத்த முடிஞ்சது. ஆனா சனம் பெரிய வரிசையில் நாள்முச்சூடும் வரிசையில நின்னு வாங்கிட்டுப் போச்சு. குஞ்சரத்துக்குப் பிறகுதான் மதுரை கலெக்டரே கஞ்சித்தொட்டி திறந்தாரு.

தாது வருசம் முழுக்க குஞ்சரம் வீட்டு அடுப்பு எரிஞ்சுச்சு. 13 மாசம் அவ மக்களுக்குச் சாப்பாடு போட்டா. அவ வெச்சிருந்த தங்க நகை, வெள்ளி நகை, முத்து மாலை, காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு, ஜிமிக்கி எல்லாம் கஞ்சியா ஓடுச்சு. அடுப்பு எரிஞ்சு எரிஞ்சு கரி படிஞ்சு போன ரெண்டு பெரிய வீட்டையும் விக்க வேண்டிய நிலைமை. தாதுப்பஞ்சம் முடிஞ்ச கொஞ்ச நாளில படுத்த படுக்கையா இருந்த மகராசி, போய்ச் சேர்ந்தா. அப்படியொரு கூட்டம், தரையில விழுந்த பருக்கையை எறும்பு மொய்க்கிறமாதிரி மொய்ச்சது. ‘கோயிலு திருவிழாவைத் தவிர இப்படியொரு கூட்டம் கூடிப் பார்த்ததில்லை’ன்னு கலெக்டர் குறிப்பெழுதி அரசாங்கத்துக்கு அனுப்பிவெச்சாராம். ஊரே சேர்ந்து அந்த மகராசி உடலை எடுத்துட்டுப் போச்சாம். மக்க மனசில தெய்வமா நின்ன அவளுக்கு எதைப் படைக்கிறதுன்னு யோசிச்சு சலங்கையைப் படைச்சாங்க. சலங்கை தாசிகளோட முக்கியமான அடையாளம்ல?” என்று கண்கள் விரிய அவர் பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் ஒலித்தது. எடுத்துப் பேசியவர், கிளம்பினார்.

“சரி, நான் போயிட்டு நாளைக்கு வரேன். எதுவும் வேணும்னா போன் பண்ணுங்க. எல்லா வசதியும் இங்கே இருக்கு. தேவையில்லாம வெளியே வர வேணாம்.”

அவர் கிளம்பிப்போய்ச் சிலமணி நேரத்தில் வீட்டின் கதவு பலமாகத் தட்டும் சத்தம். அந்தச் சத்தமே ஆபத்தின் பேரொலி. புவனா சக்தியின் கைகளுக்குள் ஒடுங்கிப்போனாள். ஆனால் விடாமல் பெரிதாகிக் கொண்டிருந்தது அந்தச் சத்தம். பயத்துடன்...

(தொடர்ச்சி அலை 1.5-ல்)

- தும்பி பறக்கும்....