Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 41: தமிழ்ப்பிணம்

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை

ங்களுக்கு நிச்சயம் துப்பறியும் ஆசை இருக்கும். எத்தனை நாள்களுக்குத்தான் துப்பறியும் நாவல்களைப் படிப்பது, துப்பறியும் கதைகளைத் திரைப்படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் பார்ப்பது! நீங்கள் துப்பறிவதற்காகவே ஒரு பிணம் காத்திருக்கிறது. இது ஐரோப்பிய நாடொன்றின் மெட்ரோ ரயில் நிலைய சப் வே வாசலில் கிடக்கும் பிணம். ஐரோப்பா என்றதும் நீங்கள் பதற வேண்டாம். இது தமிழ்ப்பிணம்தான். செத்துக்கிடப்பவன் ஒரு தமிழ் இளைஞன். 25 வயதுக்குள் இருக்கும். ஒரு பிணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றால் துப்பறிவாளர், மருத்துவர், பிணவறைத் தொழிலாளி என்று உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. பிணவறைத் தொழிலாளி என்றதும் நீங்கள் முகம் சுளிக்கிறீர்கள். சரி, நீங்கள் காவல்துறை துப்பறியும் அதிகாரியாகவோ பிணக்கூராய்வு மருத்துவராகவோ இருக்கலாம். மேலும் பிணவறைத் தொழிலாளிக்கும் புலனாய்வுக்கும் என்ன தொடர்பு இருக்கப்போகிறது?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்போது நீங்கள் மருத்துவர் :

அவனுடலை ஒரு மேசையில் கிடத்தியிருக்கிறீர்கள். கறுத்த தமிழ்நிறம். முடி வளர்ந்து பின்னங்கழுத்தைத் தாண்டி இறங்கியிருக்கிறது. அவனுடலின் கட்டுமானம், உடற்பயிற்சிகளில் ஈடுபடாவிட்டாலும் அவனொரு கடும் உடலுழைப்புக்காரன் என்பதைச் சொல்கிறது. நீங்கள் அவன் உடலின் வெவ்வேறு பாகங்களின் மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதனையில் ஈடுபடுகிறீர்கள். அவன் குடலுக்குள் இறங்கிய சாராயத் தடத்தை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். அவனது சிறுமூளை, முகுளம் உள்ளிட்ட உறுப்புகளை ஆராய்ந்தபின் நீங்கள் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள். இப்போது பெருமிதத்துடன் மோவாயைத் தடவலாம். நீங்கள் ஓர் இளைஞர் என்றால் முழங்கையைக் கீழிறக்கி ‘யெஸ்ஸ்’ சொல்லிக்கொள்ளலாம். இவன் இறப்பதற்கு மூன்றுமணி நேரத்துக்கு முன்பு மதுவருந்தியிருக்கிறான். மதுவில் விஷம் கலந்திருக்கலாம் அல்லது விஷச்சாராயத்தை அருந்தியிருக்கலாம்.

அஞ்சிறைத்தும்பி - 41: தமிழ்ப்பிணம்

இப்போது நீங்கள் காவல்துறை அதிகாரி :

உங்களுக்கு இந்த வழக்குகளைத் துப்புத்துலக்குவதில் எரிச்சலும் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது. என்னதான் இது தமிழ்ப்பிணத்தைப் பற்றிய புலனாய்வாக இருந்தாலும் இப்போது நீங்கள் ஒரு ஐரோப்பிய காவல்துறை அதிகாரி. இறந்து கிடந்தவனின் உடைகளில் இருந்து கிடைத்த ஆவணங்கள் வழியே அவன் ஓர் அகதி என்று தெரிகிறது.

அகதி, அதிலும் கறுப்புநிற அகதிகள், இந்தத் தேசத்தின் சுவர்ப்பொந்துகளில் ஒளிந்துகொண்டு நம் ரொட்டிகளைக் களவாடும் எலிகள் என்று கோபப்படுகிறீர்கள். உங்கள் மூக்கு ஏற்கெனவே சிவந்திருக்கிறது. ஏன் இந்தத் தேசத்தின் அதிபர் பெருந்தன்மையாக இருக்கிறார்? லார்ஜ் சைஸ் பாப்கார்ன் பாக்கெட்டைப்போல அகதிகளை அடைத்து அடைத்து தேசம் வீங்கிப்போய்க் கிடக்கிறது. இந்த அகதிகள் பெரும்பாலோர் கள்ள பாஸ்போர்ட்டில் வந்தவர்கள், சமூகவிரோதச் செயல்களின் நிழல்கள். இவன் யார் என்று தெரியவில்லை. இவன் குடித்திருக் கிறான் என்று மட்டும் தெரிகிறது. இவன் புகைப்படத்தை அனுப்பி மதுக்கூடங்களின் வாசல்களில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளில் இருக்கிறானா என்று தேடச்சொல்கிறீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இரண்டே மணி நேரத்தில் இவனும் இன்னொரு வனும் ‘லா விக்டோரியா’ மதுக்கூடத்தின் வாசலிலிருந்து கிளம்பியதை உறுதிசெய்து கொள்கிறீர்கள். அது இவன் விழுந்து கிடந்த சப்வேயிலிருந்து 12 கி.மீ. அங்கிருந்து விழுந்து சாகவா இவன் 12 கிமீ பயணித்தான்?

சிலமணி நேரத்தில் அந்த இன்னொருவனைக் கண்டுபிடித்துவிடுகிறீர்கள். ஓமர் மொஹம்மத், பாலஸ்தீனன், கார் டிரைவர். மட்டுமல்ல, அகதிகளுக்கான சிறு அமைப்பின் தலைவனாகவும் இருந்தான். அப்படியானால் இவனிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன்தான் இருக்கவேண்டும்.

“அவன் பேர் சுண்டர். சிலோன் அகதி. ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை செய்தான். ஒருநாள் அவன் கடையில் வாங்கிய சீஸ் பாக்கெட்டுகளில் புழுக்கள் இருந்ததாகப் புகார் செய்ய வந்த பெண்ணொருத்தி, சம்பந்தமேயில்லாமல் இவன் முகத்தில் அந்தப் பாக்கெட்டுகளை விசிறியெறிந்தது மட்டுமல்லாது அவன் நிறத்தைக் குறித்தும் இழிவாகப் பேசினாள். இவன் இறைச்சி பதப்படுத்துவதற்காக வைத்திருந்த ஐஸ் கட்டிகளை அவள் முகத்தில் விட்டெறிந்தான். இது அப்போது பத்திரிகைகளிலும் இணையத்திலும் பரபரப்பான செய்தியானதே, இதை நீங்கள் கவனிக்க வில்லையா?”

எரிச்சலை அடக்கிக்கொண்டு மறுத்துத் தலையாட்டுகிறீர்கள்.

“எங்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞரை நியமித்து வாதாடினோம். அதற்குப்பிறகு அவன் நிறைய உதிரி வேலைகள் பார்த்துவந்தான். நான் அவனைச் சிலமாதங்களுக்குப் பிறகுதான் பார்த்தேன். பிறகு நானும் அவனும் விக்டோரியா ஹோட்டலுக்குச் சென்று மதுவருந்தினோம். கார் ஓட்டும்போது அவனுக்கு ஓர் அழைப்பு வந்தது. பிறகு அவன் பாதிவழியில் இறங்கிக்கொண்டான்.”

“அவனுடைய குடும்பம், காதல்...?”

“அவனுக்கு ஒரு சகோதரி இருந்ததாகவும் அவள் மூலம்தான் இந்த நாட்டுக்கு வந்ததாகவும் மர்மக்காய்ச்சலில் அவள் இறந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறான். வேறு விவரங்கள் எனக்குத் தெரியாது. வேண்டுமானால் நீங்கள் பிராக் சிரின் - மோவை விசாரிக்கலாம்.”

இப்போது நீங்கள் மருத்துவர் :

அவன் இடுப்பிலிருக்கும் மச்சம் ஓர் இந்திய நாணயத்தைப்போல் இருப்பதைப் பார்க்கிறீர்கள். இவன் பழைய தமிழ் நம்பிக்கைகளில் ஊறிப்போனவனாக இருக்கக்கூடும். அல்லது, பார்க்கப் புதுமையாக இருக்கிறது என்பதற்காகக்கூட இருக்கலாம். கைகளில் பச்சைநிறத் தாயத்துகளையும் கழுத்தில் ஒரு கறுப்புக் கயிற்றையும் கட்டியிருந்தான். கயிற்றின் முனைகள் இணையுமிடத்தில் சதுர உலோகத்தில் பாம்பின் படமிருந்தது. அவன் வலதுகையில் ஆழமான கத்திக்காயம் இருப்பதைப் பார்க்கிறீர்கள். நிச்சயம் அது பழைய காயமில்லை. அவன் அடர்ந்த தலைமுடிக்குள் புதைந்துகிடக்கும், நத்தையோட்டைப்போன்ற தழும்புதான் சிறுவயதுத் தழும்பாயிருக்க வேண்டும். இந்தக் கத்திக்குத்துக் காயம் நிச்சயம் இவன் மரணத்துக்கு 24மணி நேரத்துக்கு முன்னால் ஆனது. எப்படியும் இவன் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறீர்கள். அது மதுவில் கலக்கப்படாமலிருந்தால் இந்தக் கத்தியில் தடவப்பட்டிருக்கலாம்.

இப்போது நீங்கள் காவல்துறை அதிகாரி :

பிராக் சிரின் - மோ ஒரு திபெத்தியக் கிழவி. எதிர்பார்த்ததுபோலவே அகதி. சுண்டர் இறந்த செய்தியைச் சொன்னதும் அவள் பதறிப்போய் அழுதாள். சிறுகூட்டம் கூடிவிட்டது. கிழவியுடன் இருந்த இளம்பெண் அவளைத் தோளில் சாய்த்து, நரைத்த தலைமுடி வருடித் தேற்றினாள். பிறகு ஒரு சிறு புத்தர் சிலையை மூதாட்டியின் உள்ளங்கையில் வைத்து அழுத்தினாள்.

ஆன்டன் சதுக்கத்துக்கு அருகில் தெருவோர உணவகத்தை நடத்திவருகிறாள் சிரின் - மோ. சிறுவண்டியில் அந்த உணவகம் அடக்கம். அவளுக்குத் துணையாக இருப்பவள் பேத்தி. அந்த சிலோன் இளைஞன் பார்த்த உதிரி வேலைகளில், இவளுக்கு எடுபிடியாக இருந்ததும் ஒன்று. கிழவியின் முகம் மலைப்பாம்புத் தோலைப்போல் இருந்தது.

“உம் பேத்திக்கும் அவனுக்கும் காதல் அல்லது வேறு உறவு இருந்ததா?”

“சாஷியைச் சொல்றீங்களா? அவன் அவளை பேபின்னுதான் கூப்பிடுவான். இவள் அவனை ஒரு தமிழ் வார்த்தை சொல்லிக்கூப்பிடுவா, ஆ...அண்ணா. பிரதர்னு அர்த்தம். ஆனா அவனுக்கு ஒரு காதல் இருந்துச்சு. அதில் பிரச்னை வந்தப்போ அவன் இந்தக் கத்தியை எடுத்துக் கையை அறுத்துக்கிட்டான். சாஷிதான் அதைத் தடுத்தா. அவ கை முழுக்க ரத்தம், புத்த பகவானே! ஏன் அந்தக் கிறுக்கு இளைஞன் அப்படிப் பண்ணினான்னு தெரியலை. அன்னைக்கு மாலை அவன் சீக்கிரமாக் கிளம்பிட்டான். நீங்க சொல்றபடி பார்த்தா மறுநாள் காலையிலதான் அவன் இறந்திருக்கணும். அந்தப் பொண்ணு பேரு... சாஷி, அவ பேரு என்ன?”

“ராடி” என்றாள் சாஷி.

இப்போது நீங்கள் மருத்துவர் :

இப்போதுதான் நீங்கள் அவன் உடலை முழுவதுமாகக் கவனிக்கிறீர்கள். அவன் வலதுகையில் கத்திக்காயத்தைக் கவனித்த நீங்கள் இடதுகையில் இருந்த பச்சையைக் கவனிக்கத் தவறியிருக்கிறீர்கள். கரும்பு உருவத்தைப் பச்சையாகக் குத்தியிருந்தான். அது தோகை விரித்து செழித்திருந்தது. அவன் முதுகிலும் ஒரு பெரிய பச்சை உருவம் இருந்ததைக் கண்கள் விரித்து ஆச்சர்யத்துடன் பார்க்கிறீர்கள். கிட்டத்தட்ட அவன் முதுகு முழுதும் ஆக்கிரமித்து அதில் புலி படுத்திருந்தது. அவன் எழுந்து நின்றால் அது எழக்கூடும். புலி உருவம் அகலக் கால்விரித்து இடப்பக்கம் தலை திருப்பியிருக்கிறது. அதன் ஒருகையில் வில் இருக்கிறது. இன்னொரு கையில் மீன் உருவம் பொறித்த கொடி.

இப்போது நீங்கள் காவல்துறை அதிகாரி :

நீங்கள் என்னதான் ஐரோப்பியக் காவல் அதிகாரியாக இருந்தாலும் உங்களுக்குள் இருக்கும் தமிழ்மனம் அந்த உண்மையைக் கண்டுபிடித்துவிடுகிறது. அந்த இளைஞனின் பெயர் சுந்தர், அவன் காதலித்த பெண்ணின் பெயர் ரதி.

அவள் பலமணி நேரமாக அழுதுகொண்டி ருந்தாள், இப்போது அவளை விசாரிப்பது சரியல்ல என்று மறுநாள் காலையில்தான் அவளைச் சந்திக்கப்போகிறீர்கள். இப்போது அவள் கொஞ்சம் ஓய்ந்து தெளிவடைந்திருந்தாள். ஆனால் வெறுமையும் பெருஞ்சோகமும் முகத்தில் அப்பியிருந்தன.

“நாங்க இந்தியா, தமிழ்நாட்டுக்காரங்க. மூணு தலைமுறையா இங்க இருக்கோம். அப்பா இறந்துட்டார். அம்மாவுக்கு இன்னொரு கல்யாணம் நடந்துடுச்சு. அண்ணன் தேசிய விநாயகம் மட்டும்தான். ஒரு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் நடத்துறான். அவனைப் பற்றி ஆசிய ஊடகங்களில் நிறைய கட்டுரைகள் வந்திருக்கு. இங்கேயிருக்கும் தமிழர்களுக்காக நான் வானொலி நடத்திட்டு வரேன். மாலை நேர வானொலி. நான்குமணிநேர ஒளிபரப்பு. கவியரங்கம், விடுகதை, பழைய தமிழ் இலக்கியம், சமையல்குறிப்பு, அப்புறம் நேயர் விருப்பத்தின்படி திரைப்பாடல்கள்.

அஞ்சிறைத்தும்பி - 41: தமிழ்ப்பிணம்

ஒருநாள் இவன் போன் பண்ணினான். என் பேர் ரதிங்கிறதால் ‘மீன்கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான்’ பாட்டை ஒலிபரப்பச் சொன்னான். நானும் ஒலிபரப்பினேன். அப்புறம் தொடர்ச்சியா அஞ்சுநாள்கள் அதே போன். அதே பாடலுக்கான நேயர் விருப்பம். மீண்டும் மீண்டும் அந்த மீன்கொடித் தேர் ஓடியது. அவன் போதையில்தான் கேட்கிறான் என்பது எனக்குத் தெரியும். இப்படித்தான் அவன் பழக்கமானான்.

பிறகு நேரில் பார்த்தோம். சுந்தர் - சுந்தரம் என்றால் அழகு என்று அர்த்தம். மன்மதன் அழகுக்கடவுள். நான் ரதி, அவன் மன்மதன். மன்மதனின் ஆயுதம் கரும்பு வில். அதை நான்தான் அவனுக்குப் பச்சை குத்தினேன். அவனுக்கு அந்தப் பாடலில் வரும் மீன்கொடியைப் பச்சையாகக் குத்த வேண்டும் என்று கொள்ளை ஆசை” என்றவள் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

இப்போது நீங்கள் மருத்துவர் :

அந்த இளைஞனின் முதுகில் மற்றும் கையில் குத்தப்பட்டிருந்த பச்சையைச் சுரண்டியெடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறீர்கள். எப்படியும் இரண்டொரு நாள்களில் அவன் முதுகில் குத்தப்பட்ட பச்சையும் அதில் கலந்திருந்த நஞ்சுமே அவன் மரணத்துக்குக் காரணம் என்று உறுதிசெய்யப்பட்டு நீங்கள் பிணக்கூராய்வு அறிக்கையைச் சமர்ப்பித்து விடுவீர்கள்.

இப்போது நீங்கள் காவல்துறை அதிகாரி :

தேசியவிநாயகத்தை விசாரிக்கும்போது நீங்கள் இந்தக் கொலைவழக்கின் இறுதிக்கட்டத்துக்கு வந்திருப்பீர்கள். ஓமரின் காரில் பயணிக்கும்போது சுந்தரத்தைப் போனில் அழைத்தவன் தேசியம்தான். பிறகு அவனை அழைத்துச்சென்று மேலும் மேலும் மதுவருந்தச் செய்தான். மீன்கொடித் தேர் மதுவில் மூழ்கியது. மன்மதனும். சுந்தரத்தின் நீண்டநாள் விருப்பத்தின்பேரில் அவன் முதுகில் மீன்கொடித்தேரையும் புலி மற்றும் வில்லம்புப் பச்சையையும் தேசியவிநாயகம், தானே வரைந்தான். அதில்தான் விஷமிருந்தது.

இப்போது நீங்கள் மருத்துவர்/காவல்துறை அதிகாரி :

யாராக இருந்தபோதும் நீங்கள் ஓர் ஐரோப்பியராக இருந்தால் இந்தக் கொலைக்கான காரணத்தை உங்களால் புரிந்துகொள்ள இயலாது. இந்தக் கதையில் நீங்கள் ஐரோப்பிய வேடம் அணிந்திருந்தாலும் அதைத்தாண்டி உங்கள் தமிழ்மனம் மேலெழுந்து பார்க்குமானால் உங்களால் இந்தக் கொலை ஏன் நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள இயலும். இது உண்மையிலேயே ஒரு தனித்துவமான தமிழ்ப்புலனாய்வு.

- தும்பி பறக்கும்....