பிரீமியம் ஸ்டோரி
குளியலறையிலிருந்து வேணியின் அலறல் கேட்டதும் கிருஷ்ணம்மாவுக்கு உடல் உதற ஆரம்பித்தது.

“யாரோ பார்க்கிறாங்க. ச்சூ ச்சூ” என்று அலறினாள் வேணி. மேற்கூரையற்ற, தடுப்புகள் மட்டும்கொண்ட அந்தக் கீற்றுக் குளியலறையில் நுழைந்து பார்த்தபோது மேலே ஒரே ஒரு காகம் மட்டுமே இருந்தது.

“என்னடி, யாரு எட்டிப்பார்த்தது?”

வேணி காகத்தைக் காட்டினாள். இது முதல்நாள். பிறகு தொடர்ந்து வேணி அவ்வப்போது அலற ஆரம்பித்தாள். “நிறையபேர் இப்போ வர்றாங்க. என்னை உத்து உத்துப் பார்க்கிறாங்க” என்கிறாள். உடலில் தீப்பற்றியதைப்போல ஆடைகளை நெகிழ்த்தித் துடிக்கிறாள். காற்றில் கைகளை வீசிப் பறவைகளைத் துரத்துகிறாள்.

அஞ்சிறைத்தும்பி - 42 : நிழல் காகம்

“எல்லாம் அந்த மருந்து செஞ்ச வேலைதான். அந்தாள் எதை மந்திரிச்சுக் கொடுத்தானோ, எம் மக இப்படி ஆயிட்டா” என்று அழுது புலம்பினாள் கிருஷ்ணம்மா.

“சும்மா சொல்லாதடி. அவர் எவ்ளோ பெரிய சாமி தெரியுமா. மந்திரம் வைத்தியம் தெரிஞ்ச மனுஷன். ஒம் பொண்ணு சும்மா இருந்தா ஏன் அவர்கிட்ட போகப்போறோம்?” என்று முத்தையா சொன்னாலும் அவருக்கும் உள்ளுக்குள் உதறல் இருக்கத்தான் செய்தது. வேணியைப் பார்க்கும்போது மனசுக்குள் உடைந்து அழவே செய்தார்.

வேணிக்கு ஏன் காக்கா கோபாலைப் பிடித்துப்போனது என்பதற்கான காரணத்தை முத்தையா, கிருஷ்ணம்மா இருவராலுமே புரிந்துகொள்ள முடியவில்லை. ஏன் வேணியிடம்கூட, ‘உனக்கு ஏன் அவனைப் பிடிக்கிறது?’ என்று கேட்டால் அவளாலும் இன்ன காரணம் என்று விளக்கத் தெரியாது. வேணி ஒன்றும் அழகியல்ல. பருவம் அவள் உடலில் கூடு கட்டியிருந்ததால் இளமை வனப்பிருந்தது. ஆனால் அவளுடன் ஒப்பிடும்போது கோபால் சாதாரணத்துக்கும் கீழே.

கல்யாணம், இறப்பு, சடங்கு என்று எல்லாவற்றிலும் கோபால் முன்னால் நிற்பான். தலைமை தாங்க அல்ல; எல்லோரும் எடுப்பார் கைப்பிள்ளையாய் எடுபிடி ஏவல் சொல்ல. அவனுக்குக் காக்கா கோபால் என்று பெயர் வரக் காரணம் நிறமல்ல. காக்காவைப் போல தலையை அங்குமிங்கும் வெட்டி வெட்டிச் சாய்ப்பான். பார்வையும்கூட தலையைச் சாய்த்துத்தான் பார்ப்பான். காக்கா மின்சாரக்கம்பியில் தத்தித் தத்தித் தாவுவது போலத்தான் அங்குமிங்கும் சுற்றிச் சுழல்வான். உண்மையிலேயே அவன் ஒரு பாதத்துக்கும் இன்னொரு பாதத்துக்கும் இடையில் சீரான இடைவெளியுடன் நடக்கிறானா, காக்கையைப் போல் இரண்டு கால்களையும் சேர்த்துவைத்துத் தாவுகிறானா என்று சொல்ல முடியாத வேகம்.

எல்லா வேலைக்கும் பயன்படுத்திக்கொள்கிற ஊர், காக்கா கோபாலை ஒருபடி கீழாகத்தான் வைத்திருந்தது. ஆனால் அவன் ஒரு நல்ல ஓவியன் என்பதைக் கண்டுபிடித்தவள் வேணிதான். அதுவும் ஓர் இழவில்தான் அவள் அதைக் கண்டுபிடித்தாள். குணா மாமா இறந்து 16வது சடங்குக்குப் படம் வைத்துக் கும்பிட வேண்டும். அவர் தன் வாழ்க்கையில் புகைப்படமே எடுத்ததில்லை. அப்போதுதான் கோபால் தன் நினைவிலிருந்து குணா மாமாவை ஓவியமாகத் தீட்டி ஃப்ரேம் போட்டு எடுத்துவந்திருந்தான். அந்த ஓவியத்துக்காக நல்ல சொல் எதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை. வேணி மட்டும்தான் அந்தக் கைகளுக்குச் சில நாள் கழித்து முத்தம் தந்தாள்.

எப்போதுமே ஊருக்குக் கண்கள் பத்து, காதுகள் நூறு. வேணியும் காக்கா கோபாலும் ஆத்தங்கரையில், பிள்ளையார் கோயிலில் சந்திக்கும் செய்திகள், முத்தையா காதுக்கும் வந்து சேர்ந்தன. எத்தனைமுறை அடித்தாலும் தலைகலைந்து, உதடுகள் வீங்கி, மூக்கு வெடிக்க, கண்கள் கலங்கி ‘`அவரை எனக்குப் பிடிச்சிருக்கு” என்றுதான் வேணி நின்றாள். அப்போதுதான் நகரத்தில் இருந்த மாதவன் சாமி பற்றிப் பலர் முத்தையாவிடம் எடுத்துச் சொன்னார்கள்.

அஞ்சிறைத்தும்பி - 42 : நிழல் காகம்

மூன்றுவேளை உணவும் வெற்றிலைதானா என்னும்படி ஆட்டைப்போல் வெற்றிலையை அசைபோட்டுக்கொண்டிருந்தார் மாதவன் சாமி. தன் குறையை எடுத்துச்சொன்னார் முத்தையா.

“இது கண்டிப்பா பித்ரு தோஷம்தான்!”

“அப்படின்னா சாமி...?”

“பித்ருன்னா முன்னோர்கள். தோப்பனார், அவரோட தோப்பனார், அவரோட பாட்டனார்னு நம்ம வம்சம் வேர் விட்டுக் கிளை பிரிக்கும்ல. அந்த முன்னோர்கள்தான் பித்ரு. மகாநதியாட்டம் ஓடும் வம்சத்தில் எங்கேயாவது பிசகு இருந்தா, பாசம் பிடிச்சிருந்தா அது இப்படித்தான் வழுக்கச் சொல்லும். ஏழு தலைமுறை வரைக்கும் பித்ரு தோஷம் பாதிக்கும்.”

“அந்த தோஷம் எப்படி வரும் சாமி?”

“யாராவது தன் அப்பாவைக் கொன்னிருக்கலாம், அல்லது சித்தப்பா, பெரியப்பாவை. அம்மா, அம்மாவுக்குச் சோறு போடாமத் துரத்தியடிச்சிருக்கலாம். ஏன், கருக்கலைச்சாக்கூட பித்ரு தோஷம்தான். நமக்குத்தான் அது கரு. ஆனா அந்தக் கரு பிறந்து வளர்ந்திருந்தா பித்ரு, வம்சவிருத்திதானே? பித்ருதோஷம் ஏற்பட்டா புருஷன் பொஞ்சாதிக்குள்ள சண்டை, பிரிஞ்சிடுவாங்க, கலப்புக்கல்யாணம் நடக்கும், ரகசியக் கல்யாணம் நடக்கும்” என்று முழநீளப்பட்டியலை விவரித்த மாதவன் சாமி, கோயில்களில் செய்ய வேண்டிய பரிகாரங்கள், புரோகிதர்களுக்குச் செய்ய வேண்டிய தானங்கள், சாங்கியங்கள் என்று ஏராளமானவற்றைச் சொன்னார்.

“சிரத்தையுடன் செய்றதுதான் சிரார்த்தம். பித்ருக்களுக்குத் திதி, அமாவாசையில் தவறாம சடங்குகள் செய்யணும். சரியா?” என்றார். அத்துடன் நிற்கவில்லை. இதற்கென்றே சில பிரத்யேகமான மருத்துவர்களிடம் இருந்து வாங்கிய நாட்டுமருந்துகளையும் கொடுத்தார்.

“பொண்ணு சாப்பாட்டுல அவளுக்குத் தெரியாமக் கலந்துடுங்க. காதல், கத்திரிக்காய், அப்புறம் அந்தக் காக்கா எல்லாம் பறந்துடும்” என்றார்.

பத்துநாள்களிலேயே காக்கா கோபால் ஆற்றில் விழுந்து செத்துப்போனான். அவன் பையில் இருந்த காகிதத்தில் வேணியை அச்சு அசல் வரைந்திருந்தான். துணிவெளுக்கும் சண்முகம்தான் யாருக்கும் தெரியாமல் முத்தையாவிடம் கொண்டுவந்து கொடுத்தார். அதற்குப் பிறகுதான் வேணி இப்படி ஆகிவிட்டாள். ‘அவன் நினைப்பால பித்துப்பிடிச்சு இப்படி ஆகிட்டாளா, அந்த ஜோசியக்காரன் மருந்து மாயத்தில இப்படி ஆகிட்டாளான்னு தெரியலையே’ என்று புலம்பிக்கொண்டேயிருந்தாள் கிருஷ்ணம்மா.

“அப்பா, காக்காவுக்கு ஏன் சோறு வைக்கிறோம்?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“காக்கா நம்ம பித்ருவோட அடையாளம். பித்ருனா ஃபோர்பாதர்ஸ். அவங்க இறந்தபிறகு காகம் உருவமெடுத்து வருவாங்கங்கிறது ஐதிகம்.”

அஞ்சிறைத்தும்பி - 42 : நிழல் காகம்

“அது ஏன்பா அவங்க காக்காவா வரணும்? நல்ல அழகான பேர்ட்ஸ் நிறைய இருக்கே. பென்குயினா வரலாம். அப்புறம் நம்ம நேஷனல் பேர்டு பீகாக். முருகனுக்கும் பிடிக்கும். பீகாக்காக்கூட வரலாமே.”

தன் மகன் மாதவன் பேசுவதைக்கேட்டால் பார்த்தசாரதிக்கு எப்போதும் பூரிப்பு வந்துவிடும். தன் அப்பாவின் பெயரைத்தான் மகனுக்கு வைத்திருக்கிறான். பூ, காய்த்து, கனிந்து, அதிலிருந்து விதையுண்டாகி மீண்டும் பூக்கிறது. பெயர்களும் அப்படித்தான் வரவேண்டும் என்பது சாரதியின் விருப்பம். அப்பாவுக்கு சாஸ்திரங்களில் பாண்டித்யம் அதிகம். குற்றாலம் அருவியைப்போலப் பேசிக்கொண்டேயிருப்பார். என்ன கேள்வி கேட்டாலும் தர்க்கரீதியான பதில் சொல்வார். அப்படித்தான் இவனும் இருக்கிறான்.

“மாதவா, காக்கா சனிபகவான் வாகனம். எமலோகத்து வாசலில காக்காதான் இருக்குமாம். நாம இறந்து எமலோகம் போகும்போது நம்மோட நிறைவேறாத விருப்பம் என்ன, பாவ, புண்ணியக் கணக்கு என்னன்னு காக்காவுக்குத்தான் தெரியுமாம். அதான் நம்ம பித்ருக்கள் காக்காவா வர்றாங்க.”

அது என்னவோ தெரியவில்லை. வளர வளர இந்த மாதவன் ரொம்பவே மாறிவிட்டான். சிறுவயதில் அவன்தான் கிருஷ்ணன் வேஷம் போட்டுப் பாதம் பதிப்பான். உச்சிமுடியில் ரப்பர் போட்டுக் கையில் ஒரு குழலைக் கொடுத்தால் சாட்சாத் பகவான்தான். திருப்பாவை, திருவெம்பாவை தொடங்கி ஸ்லோகங்கள் வரை அத்துப்படி. அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மாமனார்போல ஆகிக்கொண்டி ருக்கிறானோ என்று தோன்றியது காயத்ரிக்கு. அப்படி அவன் மாமனார்போல ஆவது அவளுக்குப் பிடித்ததா, பிடிக்கவில்லையா என்று சொல்ல முடியவில்லை. ஆனால் சாரதிக்குத் தன் அப்பாவின் நகலாகத் தன் மகன் ஆவது ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் வளர வளர மாதவன் முற்றிலுமாக மாறிவிட்டான். சாரதியின் கடைசிக்காலத்திலும் பெரிய அளவு பேச்சுவார்த்தையில்லை. நல்லவேளை அவன் ஆஸ்திரேலியாவில் ஒரு வெள்ளைக்காரியைக் கட்டியபோது அவர் உயிருடனில்லை.

ஆனால் இப்போதெல்லாம் காயத்ரி அதிகம் நினைத்துக்கொள்வது மாதவன் தன் வயிற்றில் சூல்கொள்வதற்கு முன்னான காலத்தை. திருமணமாகி எட்டாண்டுகள் குழந்தையில்லை. மாமனார் இரண்டாம் ஆண்டு, மாமியார் ஐந்தாமாண்டு இறந்துவிட்டார்கள். தங்கள் வம்சம் விருத்தியடையுமா என்ற கவலை அவர்களின் மூடிய கண்களுக்குள் ரேகைகளாய் விரிந்திருக்கும். சாரதியும் காயத்ரியும் மட்டும் இருக்கும் சமயங்களில் அவர் அலுவலகம் போய்விட்டால் காயத்ரிக்கு சமையல், புத்தகம் படிப்பதுதான் வாழ்க்கை. சமையல்கட்டு சன்னல் வழியாக வந்து அமரும் காக்கைகளுடன் தான் அவள் பேசிக்கொண்டிருப்பாள். அவள் எத்தனைமணிக்கு சமைக்க வருவாள் என்று அந்தக் காக்கைகளுக்குத் தெரியும். கொஞ்சம் தாமதமானாலும் குரலெடுத்துக் கரையத் தொடங்கும். இவள் பேசுவதைக் காகமும் காகங்கள் பேசு வதை இவளும் புரிந்துகொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தினந்தோறும் சமைத்ததும் முதல் கைப்பிடிச் சாதமும் நீரும் காகங்களுக்கு வைத்துவிடுவாள்.

அன்றைக்கும் அவள் போன் செய்தபோது சண்டையில்தான் முடிந்தது. அப்பாவுக்குத் திதிகூடச் செய்வதில்லை. தலைகீழாக மாறிவிட்டான் மாதவன்.

“அப்பா பித்ரு, திதி, காகம்னு பலதைப்பத்திச் சொல்லியிருக்கார். நான் ஒருநாள் கேட்டேன், ‘நம்ம பித்ருக்கள்தான் காக்காவா வர்றாங்கன்னு சொல்றீங்களேப்பா, ஆனா காக்கா அசைவம் சாப்பிடுதே?’ன்னு. அதுக்கப்புறம் அவர் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்றதில்லை. அம்மா இந்தச் சடங்குகள் எல்லாமே ஆண்களுக்கானது தான். குலதெய்வம்கிறது அப்பாவோட குலதெய்வம். ஒரு குடும்பத்தில பொண்ணு பொறந்து கல்யாணம் பண்ணிட்டா அவ அப்பாவோட குலதெய்வத்தை மறந்து புருஷன் குலதெய்வத்தைக் கும்பிடணும். பித்ருக்களுக்கு சடங்கு செய்றது, விரதமிருக்கிறதும் ஆம்பளைங்கதான். ஒரு பொம்பளையா நீ ஏன் இதைப்பத்தியெல்லாம் கவலைப்படணும்?”

இதுவும் பித்ரு தோஷமோ என்னவோ! கணவர் போய்ச்சேர்ந்துவிட்டார். மகன் வெளிநாட்டில். மீண்டும் காயத்ரியைத் தனிமை சூழ்ந்துகொண்டது. வேலைக்காரப் பெண் வந்து எல்லா வேலையையும் செய்துவிடுகிறார். காயத்ரி சமையல்கட்டுப்பக்கம் போவதில்லை. பால்கனியில் நாற்காலியைப் போட்டபடி, கீழே காய்கறி வாங்கும் ஜனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அலகில் மீன் முள்ளுடன் ஒரு காகம் பால்கனி தாண்டிப் பறந்தது.

‘மாதவனும் இப்படித்தான் அயல்நாட்டில் மாமிசம் சாப்பிடுவானா, நம்ம பித்ருக்களில் யாராவது இப்படி இருந்ததாலதான் காகம் அசைவம் ஆச்சா, மாதவனின் மகன் எந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பான்’ என்று பலகேள்விகள் அவள் தலைக்கு மேலே பறந்துகொண்டிருந்தன. காகமோ மீன்முள்ளுடன் அதைத் தாண்டி பறந்தது

- தும்பி பறக்கும்....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு