Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 45: நூற்றாண்டின் விதைகள்

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை

அஞ்சிறைத்தும்பி - 45: நூற்றாண்டின் விதைகள்

குறுங்கதை

Published:Updated:
அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

செய்யவேண்டிய வேலைகளை நினைக்கும்போது மலைப்பாக இருந்தது கரிகாலனுக்கு. இன்றுதான் புதுமனை புகுவிழா முடிந்திருக்கிறது. புதுவீட்டில் பால் காய்ச்சிவிட்டால் அன்று காலியாக விடக்கூடாது. யாராவது இரவு தங்கவேண்டும் என்பதால் கரிகாலன் மட்டும் தங்கியிருக்கிறான். மனைவியும் குழந்தைகளும் உறவினர்களுடன் பழைய வீட்டிலிருக்கிறார்கள். இன்னமும் ஆணியடித்து ஒரு காலண்டரோ கடிகாரமோகூட மாட்டவில்லை. சோபா, கட்டில் என்று எந்தப் பொருளும் நிரப்பப்படாததால் வீடு பெரியதாகத் தோன்றியது. புதுவீட்டுக்கே உரிய மணம் அவனுக்குள் உற்சாகத்தைக் கிளப்பியது. சொந்தவீடு வாங்குவது என்பது எப்போதும் ஓர் அசைக்கமுடியாத நம்பிக்கையை ரத்தத்துக்குள் இறக்கும். இத்தனைக்கும் இது புதுவீடு அல்ல. எட்டாண்டுகள் பழைய அப்பார்ட்மென்ட். அவ்வப்போது வந்துபோனதில் சில குடித்தனக்காரர்களுடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது. எதிர் ஃபிளாட்டில் எப்போதும் கூச்சல் சப்தம் கேட்கும் என்று பக்கத்து வீடுகளில் சொல்லியிருந்தார்கள். அந்த வீட்டில் குடியிருந்தவர் கோயம்பேட்டில் பழக்கடை வைத்திருக்கிறார். குழந்தையில்லை. மனைவிமீது சந்தேகம் என்பதால் அடிக்கடி சண்டைகள் நடக்கும் என்றும் ஒருமுறை துப்பாக்கியைத் தூக்கி பிரச்னை பெரிதாகிவிட்டது என்றும் பக்கத்து வீடுகளில் கதைகதையாகச் சொல்லியிருந்தார்கள்.

அஞ்சிறைத்தும்பி - 45: நூற்றாண்டின் விதைகள்

இரவு ஆகிவிட்டது. இப்போதும் எதிர் ஃபிளாட் சண்டைக்கூச்சலும் அழுகுரலும் புதுவீட்டின் உள்ளே கேட்டது. வீட்டில் எந்தப் பொருளும் இல்லாததால் அந்த சத்தம் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தியது. கதவைச் சாத்திய கரிகாலன் ஒருமுறை காலிவீட்டைக் கண்களால் துழாவினான். நல்லவேளையாக இரண்டு பாட்டில் தண்ணீர் இருந்தது. குடித்துவிட்டு பாத்ரூம் போய்விட்டுப் படுக்கலாம் என்று நினைத்தான் கரிகாலன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாத்ரூமில் சிறுநீர் கழித்து முடித்தபோதுதான் இன்னொரு பாத்ரூமில் தண்ணீர் சொட்டும் சத்தம் கேட்டது. க்ளக் களக் என்ற சத்தம் கேட்டதும்தான் அவனுக்கு காலையில் பரிசாக வந்த மணல் கடிகாரம் நினைவுக்கு வந்தது. மதியம் பரிசுப்பொட்டலங்களைப் பிரித்தபோது இதுமட்டும் தனியாகத் தெரிந்தது. மூலையில் குவிக்கப்பட்டிருந்த பரிசுப்பொருள்களிலிருந்து மணல் கடிகாரத்தை எடுத்தவன் அதன் சாவியை இயக்கினான். இப்போது மணல் கொஞ்சம் கொஞ்சமாய்க் கசியத்தொடங்கியது. சிலநிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, ‘கீழே உள்ள மெயின்கேட் பூட்டப்பட்டிருக்கிறதா?’ என்ற சந்தேகம் வந்தது. சாவியை எடுத்துக்கொண்டு லிப்ட் பட்டனை அழுத்தினான். எதிர்வீட்டில் கூச்சல் உச்சம் எட்டியிருந்தது. லிப்ட்டுக்குள் நுழைந்தபோது பெருஞ்சத்தம் அங்கிருந்து வந்தது. கதவு அறைந்து சாத்தப்படுகிறதோ என்று நினைத்தான். ‘இல்லையே, இது துப்பாக்கி வெடிக்கும் சத்தம்போல இருக்கிறதே’ என்று அவன் நினைத்தபோது லிப்ட் கீழே இறங்கியது. சில நிமிடங்கள் ஆனபிறகும் லிப்ட் இறங்கிக்கொண்டேயிருந்தது. பழுதா என்று நினைத்தபடி அதன் கதவை ஆட்டினான். ஒன்றும் நடக்கவில்லை. பலம்கொண்டமட்டும் கதவைப் பிடித்து இழுத்தான். பெருஞ்சத்தத்துடன் லிப்ட் அதிவேகமாக, தரையில் மோதப்போவதைப்போல பெருவிசையுடன் கீழே இறங்கியது. கரிகாலன் பயந்துபோனான்.

லிப்ட் கதவு திறந்து கீழே விழுந்தான். எதிரில் அமர்ந்திருந்தவன் இவனைக் கண்கள் சுருக்கிப் பார்த்து, “யார் நீ? நான்கூட மரத்திலிருந்து ஆப்பிள் விழுந்திருச்சுன்னு நினைச்சேன்” என்றான்.

யார் இவன், இது எந்த இடம் என்று புரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் சொன்னபடி அது ஓர் ஆப்பிள் மரம்தான். இங்கே எப்படி வந்துசேர்ந்தேன் என்று குழம்பிப்போனான் கரிகாலன். எதிரில் அமர்ந்திருந்தவன் தோல் சீவப்பட்ட ஆப்பிளைப்போல வெளுத்திருந்தான்.

அஞ்சிறைத்தும்பி - 45: நூற்றாண்டின் விதைகள்

“நீங்க யாரு, இது என்ன இடம், என்ன பண்ணுறீங்க?” என்றான் கரிகாலன். வேட்டைநாயின் மூச்சிரைப்பு அவன் கேள்விகளில்.

“நானா, தினமும் இந்த மரத்துக்கு வருவேன். ஆப்பிள் எப்படிக் கீழே விழுதுன்னு யோசிப்பேன். எப்படியும் ஒருநாளைக்கு மூணு ஆப்பிள் விழும்” என்றான்.

“13 ஆப்பிள் விழும்போது இந்த உலகம் அழிஞ்சுடும்” என்று மரத்துக்குப் பின்னாலிருந்து குரல் கேட்டது.

கரிகாலன் குழம்பிப்பார்த்தபோது, மெல்ல இருவர் மரத்தின் பின்னாலிருந்து வந்தார்கள்.

“யார் இவங்க?” என்றான் கரிகாலன்.

“ஒருத்தன் பேர் மட்டும்தான் தெரியும். பழைமை தாமஸ். இன்னொருத்தனிடம் பேசியதுகூட கிடையாது. அவன் பேசும் மொழி தவளைகள் கத்துவதைப்போல இருக்கும். நான் ஆப்பிளைப் பற்றி ஆராய்ச்சி செய்யத்தான் வந்தேன். இவர்களைப் பற்றியில்லை” என்றவன், கீழே விழுந்த ஆப்பிளை எடுத்து, படிந்திருந்த தூசியைத் துடைத்தான்.

“ஆப்பிள் விழுவது என்பது கடவுளுக்குப் பற்கள் விழுவதைப்போலத்தான். விழுந்து விழுந்து முளைக்கும்” என்றான் பழைமை தாமஸ்.

“நானே எப்படி விழுந்தேன்னு தெரியலை. ஒரு சாதாரண ஆப்பிள் விழுந்ததுக்கு ஆராய்ச்சியா?”

“ஆப்பிள்னா சாதாரணமா?” பழைமை தாமஸின் குரலில் கோபம் பாய்ந்தது. “அது இயற்கையின் விதைப்பை. ஆப்பிளைக் கடித்ததால்தான் நீ, நான், இந்த ஆப்பிள் ஆராய்ச்சிக்காரன், இந்தக் குதிரைக்காரன்னு எல்லா மனுஷங்களும் வந்தோம். அதுவும் பாம்பு சொன்னதால் கடிச்ச ஆப்பிள். ஆனா பாம்பு ஆப்பிளை முழுங்கலை” என்றான்.

“ஆனா பாம்பு நிலாவை விழுங்கிடும். அதனாலதான் உலகம் இருட்டாகிடும்” என்றான் அந்தக் குதிரைக்காரன். நெருப்பு அணைந்தபின் மிஞ்சும் சாம்பல் நிறத்தில் இருந்தவன் கைகளில் புல். நாடோடியாக இருக்கவேண்டும். குதிரையை உற்றுப்பார்த்தான். குடுமியைப்போல பிடரியில் முடி செழித்திருந்தது. அதன் முதுகில் ஆச்சர்யமாக வெள்ளைக்கோடுகள் தெரிந்தன.

“துடிப்பான குதிரை. ரெண்டு கணவாயைக் கடந்து ஓடினாலும் களைப்பாகாது” என்றான் அந்தக் குதிரைக்காரன்.

இவர்கள் யார், எந்தக் காலத்தில் இருக்கிறோம், என்ன பேசுகிறார்கள் என்று கரிகாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது ஆப்பிள்கள் சடசடவென்று மரத்திலிருந்து விழத்தொடங்கின. குதிரை பிரளயத்தைக் கண்டதைப்போல கனைத்தபடி ஓடத்தொடங்கியது. வேர்களுடன் அந்த ஆப்பிள் மரம் கரிகாலன்மீது விழுந்ததில், பாரம் தாங்காமல் புதைந்துபோனான்.

“இவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லையே, மண்ணுக்குள் புதைந்திருக்கிறாரே” என்ற குரல் கேட்டபோது கரிகாலன் விழித்துப்பார்த்தான்.

கூட்டமாக நின்றிருந்த மனிதர்கள் தினவுசெழித்த மேனியுடன், இதுவரை காணாத ஆடையணிந்து, மேகத்தின் கறுப்பேறியிருந்தார்கள். அவர்கள் யார் என்று தெரியா விட்டாலும் அவர்களைப் பார்க்கும் போது கரிகாலனுக்குத் தோழமை திரவம் மனசுக்குள் பொங்கிப்பெருகி, ஆன்ம நரம்பு துடித்தது.

“யார் நீங்கள், இது எந்த இடம்?”

“நான் ஆதன். இவர் சேந்தன் அவதி. இடத்தின் பெயர் கீழடி. நீங்கள் மண்ணுக்குள் புதைந்திருந் தீர்கள். பலநூற்றாண்டுக்கு முந்தைய புதையுண்ட நகரத்தைச் சேர்ந்த வர்கள் என்று நினைத்தோம்” என்றவர், கண்களால் ஆணையிட்டதும் கறுப்பும் சிவப்பும் இழைந்த மண்பாண்டம் முழுக்க திரவம் கொண்டுவந்து கொடுத்தார்கள். கரிகாலனுக்குப் பசியோ தாகமோ இல்லை யென்றாலும் உபசரிப்பை மறுக்கக்கூடாது என்னும் மனமும் அந்தத் திரவத்தின் ருசியறியும் ஆவலும் மேலிட வாங்கிக்குடித்தான். ஆதாம் ஆப்பிள் தொண்டையில் ஏறியிறங்க முதல் மிடறு குடித்ததுமே அவனுக்குள் கூட்டம் கூட்டமாய் முயல்கள் ஓடியதைப்போன்ற குறுகுறுப்பு.

“என்ன இது, இந்த திரவத்தின் பெயர் என்ன?” என்றான்.

“தேட் கடுப்பு அன்ன நாட்படு தேறல்” என்றார் சேந்தன் அவதி. பலநாள்கள் ஊறவைத்த சாராயம், குடித்தவர்களுக்குத் தேளோ பாம்போ கடித்ததைப்போல் போதையேறும் என்று கரிகாலனுக்கு உறைத்தது.

“சாப்பிட ஏதுமிருக்கிறதா?” என்றான்.

“ஊன்சோறு கொடுக்கலாம்” என்ற சேந்தனை மறுத்த ஆதன் “தண்பனிப்பழம் சாப்பிடட்டும்” என்றபடி ஒரு பழத்தை எடுத்துக்கொடுத்தான். மேலே தோலை உரித்ததும் உள்ளே பல் பல்லாக மஞ்சளும் நீலமும் கலந்த விதைகள் இருந்தன. கரிகாலனுக்கு மாதுளை நினைவுவந்தது.

அஞ்சிறைத்தும்பி - 45: நூற்றாண்டின் விதைகள்

“இது என் அன்னைக்கும் தந்தைக்கும் பிடித்த கனி. கொழுத்த காளையின் இறைச்சியும் இந்தத் தண்பனிப்பழமும் இருந்தால் போதும், வேறு உணவே இல்லாமல் மூன்று செங்கல் கட்டடங்களை எழுப்பி விடுவார்கள். என் அன்னை இறந்துவிட்டார். தந்தையைத் தான் இன்று முது மக்கள் தாழியில் இடப்போகிறோம். தண்பனிப்பழத்தின் விதைகளைப் போல்தான் மென்மையான பற்கள் என் அன்னைக்கு இருந்தன. கீழ்த்திசை விண்மீன்கள் விழும்போதெல்லாம் பற்கள் விழும் என்பார்கள். ஆனால் விண்மீண்கள் எரிந்து விழுந்தனவே தவிர என் அன்னையின் பற்கள் விழவில்லை” என்றான் அருகில் இருந்த ஓர் இளைஞன்.

“கடவுளின் பற்கள்” என்று முணுமுணுத்தான் கரிகாலன்.

“அது யார், அப்படியோர் மனிதனையோ விலங்கினத்தையோ நாங்கள் அறிந்ததில்லையே?” என்றான் ஆதன்.

அப்போது ஆரவாரத்துடன் அந்த முதுபெரும் கிழவரைச் சுமந்துவந்து அந்தத் தாழியின் அருகில் வைத்தார்கள். பிறகு தோல்கருவிகள் இசைக்க, கிழவரை அந்தத் தாழிக்குள் இறக்கினார்கள். கரிகாலன் உள்ளே எட்டிப்பார்த்தான். வேண்டுமளவு தானியங்களும் இரு கூடைகளில் தண்பனிப்பழங்களும் இருந்தன. இன்னும் கொஞ்சம் கண்களை விரித்து உள்ளே துழாவிப்பார்த்தபோது கரிகாலனுக்குத் தலைசுழன்றது.

அவனுக்குப் பரிசாக வந்ததைப்போன்ற ஒரு மணல்கடிகை அங்கேயும் இருந்தது. மேலும், அந்தக் கிழவரின் அருகில் சொற்ப இறைச்சியுடன் ஒரு நீண்ட எலும்புத்துண்டும் இருந்தது. அது ஒரு வேட்டைத்துப்பாக்கியைப்போல இருந்தது.

- தும்பி பறக்கும்....