Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 47 - அவரவர் இடம்

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை

அஞ்சிறைத்தும்பி - 47 - அவரவர் இடம்

குறுங்கதை

Published:Updated:
அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

சுதர்சன் அந்தக் கேள்வியைக் கேட்கும்போது துளசிலிங்கத்தின் நினைவுதான் வந்தது கலையரசனுக்கு. எப்போது அவரை நினைத்தாலும் ஆச்சர்யமாகத்தானிருக்கும். ஒரு முதலாளிக்கான தோற்றத்தைப் பெற்றவரில்லை அவர். பிரபல நடிகர்களின் தோற்றத்தில் ‘ஆடலும் பாடலும்’ கலைக்குழுவில் ஆடும் மேடைக்கலைஞர்களைப் போலத்தான் அவர் முதலாளி போலொரு முதலாளி.

உண்மையில் ‘சந்தியா மசாலா’ நிறுவனத்தின் உரிமையாளர் ஜானகிராமன். சிறுவயதில் மூளைக்காய்ச்சலில் இறந்துபோன தன் மகள் சந்தியாவின் நினைவாகத்தான் இந்த மசாலா கம்பெனியை ஆரம்பித்திருந்தார். மூக்கன் சந்தில் இரண்டு அறைகள் உள்ள சிறிய நிறுவனம். ஆனால் நிறுவனம் என்ற வார்த்தையின் பாரத்தைத் தாங்கும் அளவுக்கான கம்பெனியில்லை அது. மூன்று அரைவை இயந்திரங்களுடன் ஒரே அறையில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி. கழிவறைகூடக் கிடையாது. சிறுநீர் கழிக்கவேண்டும் என்றால் தெருமுக்கு வந்து ரோட்டைத்தாண்டினால் வரிசையாய் நிற்கும் லாரிகளின் மறைப்பில்தான் நீர் இறக்கவேண்டும்.

அரைவை இயந்திரத்தில் அரைக்கத் தெரிந்த தொழில்காரர் துளசி. எந்த மசாலாவுக்கு எத்தனை விகிதத்தில் என்னென்ன பொருள்கள் சேர்க்க வேண்டும் என்ற விகிதம் தெரிந்தவர் அவர். அரைவை இயந்திரத்தின் முன்பு பணிபுரிவது என்பது கொடும் நரகத்தின் எரியும் தீயைக் காவல் காப்பதைப் போன்றதுதான். மின்விசிறி போட இயலாது. ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் வெப்பம் கொல்லும். இன்னொருபுறம் மிளகாய்த்தூள் அரைக்கும்போது அதன் நெடியும் காரமும் நாசிக்குள் நுழைந்து நுரையீரலைத் தீய்க்கும்.

அஞ்சிறைத்தும்பி - 47 - அவரவர் இடம்

ஜானகிராமன் கடனில் வாங்கி நிறுத்திய ஒரு ட்ரைசைக்கிளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு கடை கடையாக விநியோகிப்பதும் அவர்தான். துளசிலிங்கத்துடன் வேலை பார்த்த ராசுப்பெரியவருக்குக் காசநோய் வந்துவிட்டது. ஒருநாள் மாபெரும் நிலநடுக்கம்போல் அவர் இருமி சளியைத் துப்பும்போது ரத்தமும் வந்து விழுந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனார் துளசி.ஆனாலும் ஜானகிராமனுக்கு வலக்கரமாய் எப்போதும் நீடித்தார்.

இதையெல்லாம் பின்னாள்களில் கதைகதை யாகச் சொல்வார் சந்திரன் அண்ணாச்சி. அவரும் துளசிலிங்கமும் சிறுவயதிலிருந்து தோஸ்த். அரிசிக்கடையில் ட்ரைசைக்கிள் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவர். துளசி முதலாளியாக உயர்ந்தபோது கையோடு சந்திரனையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். நைட் ஷிப்ட் வேலை பார்க்கும்போது மூன்று புரோட்டாவைப் பிய்த்துப்போட்டு சால்னாவை ஊற்ற ஆரம்பித்து சந்திரன் அண்ணாச்சி பழைய கதை சொல்ல ஆரம்பித்தால், கதை சால்னாவுடன் சேர்ந்து இலை தாண்டி வழியும்.

மசாலாவை அரைத்து, இரண்டு மூன்று பெண்களுக்குச் சம்பளம் கொடுத்து பாக்கெட்டில் எடைபோட்டு நிறைத்து கடைகளுக்கு விநியோகம் செய்வார்கள். முதலில் பத்துக் கடைகளில் ஆரம்பித்த விநியோகம்தான்.

அப்போதெல்லாம் பாக்கெட்டில் மசாலா வாங்கும் பழக்கம் கிடையாது. வீடுகளிலேயே அம்மியில் அரைத்தால்தான் குழம்பு மணக்கும் என்ற மனமிருந்தது. காலம் செல்லச் செல்ல ஷாம்பு, மசாலாத்தூள், தேங்காய் எண்ணெய், பவுடர் என்று எல்லா மணமும் ருசியும் பாக்கெட்டுகளில் அடைபட்டு சரம் சரமாய்த் தொங்கத் தொடங்கின. அப்போது பிக்கப் ஆன ‘சந்தியா மசாலா’ கம்பெனியின் வளர்ச்சி அதற்குப்பிறகு ஏறுமுகம்தான்.

ஆனால் அந்த முகத்தை முழுதாய்ப் பார்ப்பதற்கான கொடுப்பினை ஜானகிராமனுக்கு இல்லை. சொந்த நகரத்தில் தொடங்கிய வளர்ச்சி மாவட்டந்தோறும் முகவர்களை நியமிப்பது வரை வளர்ந்தது. மூன்று ஆண்டுகள் இந்த வளர்ச்சியின் திளைப்பில் களித்த ஜானகிராமன் திடீரென்று ஒருநாள் இறந்துவிட்டார். அதன்பின் முழு நிர்வாகத்தையும் எடுத்துப்பார்த்தவர் துளசிலிங்கம்தான். முதலாளியம்மாவுக்கு லாபத்தின் பங்கைத் தர அவர் மறந்ததில்லை.

வளர்ந்தாலும் மூக்கன் சந்தில் பழைய கம்பெனியை மாற்றத் தயாராக இல்லை. அருகில் இருந்த நான்கு வீடுகளை விலை கொடுத்து வாங்கி, கட்டடங்களை இடித்து கம்பெனியை விரிவுபடுத்தினார். துளசிலிங்கம் முதலாளி ஆகிவிட்டாலும் தன்னை அவர் முதலாளி என்று சொல்லிக்கொண்டதில்லை. ‘பெரிய வேலையாள்’ என்றே அவரை ஜானகிராமன் அழைப்பார். அந்தப் பெயரே துளசிலிங்கத்துக்கு நிலைத்துப்போனது. அடுத்தடுத்த தலைமுறையில் அது பெரியாள், பெரியவர் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. ஆனால், தப்பித்தவறி யாரும் அவரை ‘முதலாளி’ என்று அழைத்ததில்லை.

ஒரு முதலாளியின் கம்பீரம் என்பது அவர் நாற்காலியில் அமரும் தோரணையில் அழகாகிறது என்பது கலையரசனின் எண்ணம். ஆனால் ‘பெரியாள்’ எப்போதும் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு தொடை தெரியத்தான் நாற்காலியில் அமர்ந்திருப்பார். சட்டையின் மேல் இரண்டு பட்டன்கள் திறந்து, புலிமீசை போல வெளுத்த முடி மார்பில் அடர்ந்திருக்கும். முழுக்கைச் சட்டைதான் அணிவார். ஆனால் அதை முழங்கை வரை சுருட்டியிருப்பார். சமயங்களில் அவர் விரல்களில் ரப்பர் பேண்ட் மாட்டியிருக்கும். அப்படியே அலுவலகம் வந்துவிடுவார். ஏதோ ஒன்றைப் பிரித்து, ரப்பர் பேண்டை விரல்களில் மாட்டியிருப்போம். பிறகு தூக்கியெறிந்து விடுவோம். ஆனால் பெரியாள் அதை மறந்து விரல்களில் சுற்றியபடியே காரில் இருந்து இறங்கிவந்துவிடுவார்.

பெரியாள் உட்கார்வதற்கு என்று ஒரு கண்ணாடி அறை இருக்கும். கதவுகள் இருந்தாலும் அது எப்போதும் திறந்தே இருக்கும். கம்பெனி விளம்பரம் டிவியில் வரும் என்பதால் சிறிய டிவி அவர் நாற்காலிக்கு எதிரில் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்தது. அவ்வப்போது பழைய பாடல்களைச் சத்தமாக வைத்தபடி வாய் பிளந்து பார்த்தபடியிருப்பார். கலையரசனுக்கு எரிச்சலாக இருக்கும். வேலையில் மனதைச் செலுத்த முடியாது.

இவையெல்லாம்கூடப் பரவாயில்லை. ஆனால் பெரியாள் வாயைத் திறந்தாலே வண்டை வண்டையாக வந்துவிழும் கெட்ட வார்த்தைகள்தான் அவனுக்கு நெருப்பை மிதித்ததைப் போலிருக்கும். ட்ரைசைக்கிள் காரர்கள், வசூலுக்குப் போய் வருகிறவர்கள், எடுபிடிக்கு இருக்கும் சுரேசு என்று எல்லோரையும், கோபம் வந்துவிட்டால் மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தைகளால் தாளித்தெடுப்பார். ஆனால் ட்ரைசைக்கிள் காரர்களைத் திட்டும்போது மட்டும் அது செல்லமாகக் கடிந்துகொள்வதைப்போல இருக்கும். அப்படித் தோன்றுவது தனக்குத்தானா என்றும் எண்ணிக்கொள்வான் கலை.

ஒருநாள்கூட அப்படி கெட்ட வார்த்தையால் திட்டு வாங்கிவிடக்கூடாது என்றே பார்த்துப் பார்த்து வேலை செய்தான் கலை. கம்ப்யூட்டர்களில் பில் போடுவதும் வெளியூர்களிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளைப் பேசித் தகவல்களை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிப்பதும் தான் அவன் வேலை.

அவன் பெரியாளைப் பார்த்து அதிகம் அதிசயிப்பது சம்பளநாளில்தான். யாருக்கும் முறையான கணக்கு வழக்குகள் கிடையாது. பி.எஃப், கிராஜுவிட்டியையெல்லாம் அவன் ‘சந்தியா மசாலா’ கம்பெனியில் இருந்தவரை கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. எல்லோருக்கும் சின்ன பாக்கெட் சைஸ் நோட்டு கொடுக்கப்பட்டிருக்கும். முகப்பில் அவரவர் பெயர் எழுதிக் கீழே தொகை எழுதப்பட்டிருக்கும். இன்னமும் கலையரசனுக்கு சிவப்புநிற பாக்கெட் சைஸ் நோட் ஞாபகமிருக்கிறது. கலையரசன் என்ற பெயருக்குக் கீழ் 1250 என்று எழுதப்பட்டிருக்கும்.

அஞ்சிறைத்தும்பி - 47 - அவரவர் இடம்

சம்பளநாள் அன்று டிராயரில் பத்துரூபாய்க் கட்டுகள் இருக்கும். பரபரவென்று துளசிலிங்கம் எண்ணி, இடதுகையால் மேஜையின் மீது வீசுவார். கொத்தாக வந்துவிழும் நோட்டுகளை எண்ணினால் 1800 ரூபாய் இருக்கும். அதுதான் அவன் சம்பளம். அது என்ன கணக்கு என்று தெரியாது. எல்லோருக்கும் பாக்கெட் சைஸ் நோட்டில் உள்ளதுடன் கூடுதலான தொகை சம்பளமாக அளிக்கப்படும். இவை எல்லாவற்றையும் மனக்கணக்காகவே வைத்திருப்பார் பெரியாள். அலுவலகத்தையும் மில்லையும் சேர்த்தால் ஊழியர்கள் எப்படியும் 250 பேர் இருப்பார்கள். அத்தனைபேருக்கும் ஒரு ரூபாய் மிகாமல், குறையாமல் சம்பளம் வழங்குவார். இத்தனைக்கும் அவருக்குப் பெரிய எழுத்துவாசனையில்லை. காசோலையில் அவர் கையெழுத்து போட்டு முடிக்க 40 விநாடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்வார். அதைக் கையெழுத்து என்று சொல்ல முடியாது. பெயரின் ஒவ்வோர் எழுத்தும் தெருவிளக்குக் கம்பங்களைப்போல் தனித்தனியாக நிற்கும்.

“வலதுகையில் பணம் தந்தா தங்காதுன்னு பெரியாளுக்கு ஒரு நம்பிக்கை” என்பார் சந்திரன் அண்ணாச்சி. முதலில் என்னவோபோல இருந்தாலும் கலையரசனுக்குப் பழகிவிட்டது.

நன்றாக, தேதி வரை ஞாபகமிருக்கிறது. மார்ச் 13. அன்று தென்காசி ஏஜென்ட் போனில் சொன்ன ஆர்டர்களை அவன்தான் குறித்து சரக்குகளை அனுப்பிவைத்தான். ஆனால் “நான் மல்லித்தூள் சிப்பம்தான் கேட்டேன். வந்திருப்பது மிளகாய்த்தூள்” என்று தென்காசிக்காரரிடமிருந்து மறுப்பு வந்துவிட்டது. சத்யா அண்ணன்தான் அதைச் சமாளித்தார். பக்கத்திலிருந்த செங்கோட்டை ஏஜென்டுக்கு மிளகாய்த்தூள் தேவை இருக்கவும் அதை அப்படியே மாற்றிவிட்டார். நல்லவேளையாகப் பெரியாள் அன்று ஊரில் இல்லை. திருப்பதி போயிருந்தார்.

நாலுநாள் கழித்து அவர் திரும்பும்போது எல்லாம் மாறியிருக்கும் என்றுதான் கலை நினைத்தான். ஆனால் ஞாபகமாக சத்யா அண்ணன் பெரியாளிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். கண்ணாடி ரூமிலிருந்து தலையசைத்து அழைத்தார் பெரியாள்.

கலையரசனுக்குக் கால் நழுவியது. அதற்கு முன்னால் கேட்ட அத்தனை வார்த்தைகளும் வெப்ப அலைகளாகக் காதுமடலைத் தாக்கின. முடிந்தால் கண்களை மூடி மயங்கிவிடலாம் என்று நினைத்தான். தொண்டை உலர்ந்திருந்தது. ஆடைகளைந்த மனப்பிம்பத்துடன் கண்ணாடி ரூமுக்குள் போய் நின்றான். அவனை ஏற இறங்கப் பார்த்தார் பெரியாள். உடனடியாக அவரிடமிருந்து எந்த வார்த்தையும் வராததும் அவஸ்தையாகத்தான் இருந்தது. சத்யா அண்ணனைக் கூர்ந்து பார்த்தார்.

அஞ்சிறைத்தும்பி - 47 - அவரவர் இடம்

“கவன மயிறு இல்லாம என்ன வேலை பார்க்கிறே நீ?” என்றார். குரல் உயரவில்லை. அவனுக்கே அது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ‘அவ்வளவுதானா’ என்றிருந்தது. கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. அவர் அதற்குமேல் ஒரு வார்த்தையும் பேசாமல் சத்தம் அதிகம் வைத்து டிவி பார்க்க ஆரம்பித்தார். கலையரசன் தன் நாற்காலிக்குத் திரும்பினான்.

மறுநாளே வேலையிலிருந்து நின்றுவிடத் தீர்மானித்தான். ‘`சென்னையில் வேலை கிடைத்திருக்கிறது” என்று பொய் சொன்னான். ஒருவாரத்துக்குப் பிறகு கணக்கு செட்டில் செய்யும்போது பணத்தை எண்ணி இடதுகையால் மேஜைமீது வீசினார்.

பிறகு சென்னைக்கு வந்த கலையரசன் எட்டுத்திசைகளிலும் காற்றில் அலையும் பிளாஸ்டிக் குப்பை போல் அலைவுற்று ஒருவழியாக சினிமாவில் செட்டில் ஆகிவிட்டான். அவனுக்கு உண்மையில் சினிமா ஆசையெல்லாம் தொடக்கத்தில் இல்லை என்றாலும் அதன் ஓட்டத்தில் ஓடி, ஒரு படத்தை இயக்கி, அதுவும் சுமாராக ஓடிவிட்டது. “நீங்க வாங்கின முதல் சம்பளம் என்ன?” என்று சுதர்சன் என்ற பத்திரிகையாளர் அவனிடம் நேர்காணலுக்காகக் கேட்டபோது, அவனுக்குத் துளசிலிங்கம்தான் தொடை தெரிய நினைவில் வந்தார்.

அவன் இப்போது ஒரு பிரபலம் என்பதால் சொந்த ஊரில் நடக்கும் கிரிக்கெட் டோர்னமென்டிற்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தான். ‘தேவ்’ என்னும் விளையாட்டு வீரருக்கென்று தனியாக ரசிகர்கள் இருந்ததையும் கண்டுகொண்டான்.

“இது யார் தெரியும்ல, ‘சந்தியா மசாலா’ குடும்பப் பையன். சின்னவன் வாரிசு.”

“பெரியாள் வந்திருக்காரா, என்ன பண்ணுறார்?”

“உங்களுக்கு விஷயம் தெரியாதா தம்பி, ஆவணி வந்தா அவர் இறந்து நாலு வருஷம் ஆகுதே?’’ என்றார் ‘எஸ்.ஆர்.ஜே ஜுவல்லர்ஸ்’ முதலாளி.

ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க இளைஞன் ஒருவன் மைதானத்தில் இறங்கியதுமே கலையரசனுக்குத் தெரிந்துபோனது. “இந்தத் தம்பிதான்” என்று உறுதிப்படுத்தினார் நகைக்கடை முதலாளி.

முதல் ஓவரின் மூன்றாம் பந்தை இடதுகை வீச்சில் சுழற்றியடித்தான் தேவ். பந்து கீழே ஒலித்த ஆரவாரத்தையும் தூக்கிக்கொண்டு மேலே பறந்தது.

- தும்பி பறக்கும்....