சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 49 - தனுஷ் நடிக்க வேண்டிய படம்

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை

“ஒரு கலைஞன் எப்பவும் தன்னைப் புதுப்பிச்சுக்கிட்டே இருக்கணும். தனுஷ் நடிக்க வந்தப்போ 19 வயசு. மூணு படம் ஹாட்ரிக் ஹிட். தமிழ் சினிமாவில யாருக்குமே அந்த வயசுல அப்படி ஒரு ரீச் கிடைச்சதில்லை. அப்பல்லாம் தினத்தந்தியைப் பிரிச்சாலே தனுஷ் நடிக்கப்போற பட விளம்பரம் பக்கம் பக்கமா இருக்கும். ‘காதல் கொண்டேன்’ல தனுஷ் கெட்டுப்போன சாப்பாட்டைச் சாப்பிட்டப்போ நான் அழுதிட்டேன். ஏன்னா நானும் அப்படிச் சாப்பிட்டிருக்கேன். ‘புதுப்பேட்டை’ மாஸ்டர்பீஸ் சினிமா. ஆனா அப்போ தனுஷுக்கு ‘திவ்யா திவ்யா’ன்னு உரக்கக் கத்திப்பேசுற பாடி லாங்குவேஜ் இருந்தது. ஆனா முட்டையை உடைச்சு பறவை வர்றமாதிரி அந்த பாடி லாங்குவேஜை மாத்திக் கொஞ்சம் கொஞ்சமா வேற ஆளா மாறினாரு. ‘புதுப்பேட்டை’ தனுஷ் வேற, ‘பொல்லாதவன்’ல இருந்த தனுஷ் வேற. அஞ்சுவருஷத்துல ‘ஆடுகளம்’ தனுஷ் டோட்டலா வேற...”

பேசிக்கொண்டே போனார் பாரதி அண்ணன். தென் தமிழகத்தின் ஒரு கிராமத்திலிருந்து 30 வருடங்களுக்கு முன்பு சினிமா ஆசையில் சென்னை வந்தவர். பேருக்குப் பின்னால் சாதி போட்டுக்கொள்வதுபோல கவிதை ஆசை உள்ளவர்களெல்லாம் பேருக்குப் பின்னால் பாரதி என்று போட்டுக்கொள்வார்கள். இவரும் ‘கனல் பாரதி’ என்று புனைபெயர் வைத்துக்கொண்டு சினிமாப் பாடல் எழுத, படம் இயக்க முயற்சி செய்து பலரிடம் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். நான்கு படங்கள் பூஜை போட்டு இரண்டு பூஜையுடன் நின்றிருக்கின்றன. ஒரு படம் 15 நாள் ஷூட்டிங்கோடு உயிரை விட்டது. ஒரே ஒரு படம் மட்டும், ‘கனவே வராதே’ ரிலீஸ் ஆனது. மகேஷ் அதை மெகா டிவியில் பார்த்திருக்கிறான். யார் பார்த்தாலும் பாரதி அண்ணன்மீதான மரியாதை குறையும். ‘நான் நினைச்சதைப் பண்ண விடலைடா’ என்பார் அண்ணன். படம் தோல்வியடைய அதற்குப்பிறகு கதை விவாதம், வசன உதவி, உப்புமாப் படங்களுக்குப் பாடல் என்று வண்டி ஓடுகிறது. சாலிகிராமம் ‘காவேரி டீ ஸ்டால்’ மாஸ்டர் தொடங்கி பிரபல இயக்குநர்கள் வரை கனல் பாரதியைத் தெரியும். ஆனால் தமிழ் சினிமாப் பார்வையாளர்களுக்கு இன்னும் அவரைத் தெரியாது.

அஞ்சிறைத்தும்பி - 49 - தனுஷ் நடிக்க வேண்டிய படம்

கொஞ்சநாளாக அவர் தனுஷ் புராணம் பாடிக்கொண்டிருக்கிறார். மகேஷ் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து குறும்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறான். ஒரு பிலிம் பெஸ்டிவலில் பாரதி அண்ணன் பழக்கம். அவருக்கு அதிக மகிழ்ச்சியோ தாங்க முடியாத சோகமோ, சரக்கு, சிகரெட் பாக்கெட்டுடன் இப்போது மகேஷும் தேவை என்றாகிவிட்டது.

“தனுஷுக்கு பலம், பலவீனம் ரெண்டுமே உடம்புதான். கமல், விக்ரம் மாதிரி அவரால உடம்பை ஏற்றி இறக்க முடியாது. ‘புதுப்பேட்டை’ வந்தப்போ இப்படி ஒரு ரவுடியான்னு பேச்சு வந்தது. ஆனா பெரும்பாலான ரவுடி இப்படித்தான் இருப்பான். இன்னொருபக்கம் உடம்புதான் தனுஷோட மூலதனம், ஆயுதம். இப்போ நினைச்சாக்கூட அவரால ஒரு ஸ்கூல் ஸ்டூடன்டா நடிக்கமுடியும். ‘புதுப்பேட்டை’யில் விட்டதை ‘அசுரன்’ல பிடிச்சார். ‘புதுப்பேட்டை’யில் அவரை ரவுடியா நம்ப மறுத்தவன்கூட ‘அசுரன்’ல வயசானவரா நம்பினான். அந்த மாற்றம்தான் தனுஷ். ஊர் காலில விழுந்து மன்னிப்புக்கேட்டுட்டு தளர்வா வர்ற நடையில தெரியுற அவமானமும் வயோதிகமும்.... கலைஞன்டா!”

மகேஷ், சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான்.

“தனுஷுக்குன்னு ஒரு ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சிட்டேன். அதில தனுஷ் மட்டும்தான் நடிக்க முடியும். இப்போதைக்கு சீன் பிரிக்காம ஒன்லைன் ரெடி பண்ணிட்டிருக்கேன்.”

தனுஷ் நடிக்க வேண்டிய படம் :

(வாய்ஸ் ஓவர்)

“என் பேரு சிவக்குமார். சிவான்னு கூப்பிடுவாங்க. பிரெண்ட்ஸ் ‘சிறுத்தை சிவா’ன்னு கூப்பிடுவாங்க. ஏன்னா 100 மீட்டர், 200 மீட்டர்னு தடகளத்துல சிறுத்தை மாதிரி ஓடுவேன். ஒருதடவை அப்படித்தான் ஒரு போட்டியில கிரவுண்ட்ல சுபாவைப் பார்த்து லவ் ஆகி கல்யாணம் வரை போயிடுச்சு. நான் தடகளத்தில சிறுத்தைன்னா சுபா குண்டு எறிதல் விளையாட்டில சிங்கப்பெண். ரெண்டுபேருக்கும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில வேலை கிடைச்சது. ஒரு பையன், பேரு அபிஷேக். வாழ்க்கை நல்லாத்தான் போச்சு. 40 வயசைத் தாண்டியும் நான் காலேஜ் படிக்கிறப்ப எப்படி இருந்தேனோ அப்படியே இருந்தேன். என்கூடப் படிச்சவங்க ஆச்சர்யப்படுவாங்க. பின்னே என்ன ப்ரோ, அத்தனை பேருக்கும் தொப்பை விழுந்து, முடி விழுந்து வாழ்க்கையே விழுந்துகிடக்கிறப்போ நான் மட்டும் இளமையா இருந்தா பொறாமை வரத்தானே செய்யும்? ஆனா இப்படி ஜாலியா போயிட்டிருந்த வாழ்க்கையில பிரச்னைகளும் வந்தது.”

காவேரி டீ ஸ்டாலில் பாரதி அண்ணனைப் பார்த்ததும் கும்பலாக இளைஞர்கள் மரியாதை வணக்கம் வைத்தார்கள். ஒருவன் முதுகுக்குப் பின்னால் சிகரெட்டை மறைத்துக்கொண்டான்.

“டீக்கடை வெச்சு முதல்வராகிறாங்க, பிரதமர் ஆகிறாங்க. காவேரி டீ ஸ்டாலில் டீ குடிச்சவன் டைரக்டர் ஆகிடறான்.”

“நல்லாருக்குடா மகேசு. ஏதாவது ஒரு படத்தில யூஸ் பண்ணலாம். இல்லைன்னா ட்விட்டர்ல போடு. விகடன் ‘வலைபாயுதே’வில் போடுவான். காலையில டிவியில் ‘மாரி’ பாட்டு பார்த்தேன். தனுஷ்... சான்ஸே இல்லைடா”

அஞ்சிறைத்தும்பி - 49 - தனுஷ் நடிக்க வேண்டிய படம்

“அண்ணே ‘மாரி’ படமுமா?”

“மகேசு. ரவுடி படம்னாலும் இது ‘பாட்ஷா’ மாதிரி பெரிய டான் இல்லை. சின்னப்பசங்க பலூனை உடைச்சு விளையாடற, அதேநேரத்தில சம்பவமும் செய்ற ரவுடி. கொஞ்சம் ஸ்லிப் ஆனாக்கூட வடிவேலு மாதிரி சிரிப்பு ரவுடி ஆகிடும்டா. அதை பேலன்ஸ் பண்ணி நடிக்கிறதுக்கு ஒரு திறமை வேணும். பொதுவா நடிகர்கள் கண்ணுலதான் உணர்ச்சியைப் பிரதிபலிக்க முடியும். ஆனா ‘டானு டானு’ பாட்டுல காஜல் அகர்வால் பக்கத்துல நிக்கணும்னு தனுஷ் சார் மொட்டைமாடிக்கு வருவாரு. அங்கே இடிதாங்கி நின்னுட்டுக் கூப்பிடுவான். ‘வேணாம்’னு சொல்லிட்டு இறங்கிப் போறப்போ ஒரு எக்ஸ்பிரஷன் காட்டுவார் பாரு, கூலிங்கிளாஸுக்குள்ள பார்வை யோட உணர்ச்சியைக் காட்டுறதெல்லாம் உச்சம்”

“பேசிக்கிட்டே இருந்தா எப்படி, ஸ்கிரிப்ட் என்னாச்சு?”

“போயிட்டிருக்கு. டைட்டில்கூட முடிவு பண்ணிட்டேன். ‘மார்க்கண்டேயன்.’ தனுஷ் கேரக்டர் பேர் என்ன தெரியுமா?”

“சிவக்குமார்”

“எப்படிடா கரெக்டா சொன்னே?”

“தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன்னா சிவக்குமார்தானே?”

“ஓ, நீ அப்படி வர்றியா? என் ஒரிஜினல் பேர் உனக்குத் தெரியாதுல்ல. என் பேரும் சிவக்குமார்தான்.”

மார்க்கண்டேயன் :

“என் வாழ்க்கையில பிரச்னை வந்துச்சுன்னு சொன்னேன்ல, ஆமா, எல்லார் வாழ்க்கையிலும் எப்படி பிரச்னை வருமோ அதேமாதிரி என் வாழ்க்கையிலும் ஒரு பெண்ணாலதான் பிரச்னை வந்துச்சு. காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கிற பொண்ணு, பார்க்க நஸ்ரியா மாதிரி இருக்கும், என்னை லுக்விட ஆரம்பிச்சது. நான் ரொம்ப நாளா கவனிக்கலை. அந்தப் பொண்ணுக்கும் என் பையனுக்கும் ஒரே வயசு. ஆனா அது அந்தப் பொண்ணுக்குத் தெரியாதே! ஒரு வாலன்டைன்ஸ்டேவில் எனக்கு அந்தப் பொண்ணு புரபோஸ் பண்ணி விஷயம் என் பெண்டாட்டிக்குத் தெரிஞ்சு ஒரே ரணகளம்தான். ஏற்கெனவே அவ குண்டு வீசுறதில வீராங்கனை. நான் குண்டு இல்லை. ஆனா அவ வீசினா.

அதுக்கப்புறம் நான் அடங்கித்தான் இருந்தேன். ஆனா என்னைச் சுத்தியிருக்கிறவங்களுக்கு எல்லாம் வயசாக, எனக்கு வயசுங்கிறது கண்ணுக்கெட்டுற தூரத்தில தெரியலை. அப்போதான் என் பெண்டாட்டியோட பிரெண்ட், அமெரிக்காவில் டாக்டரா இருக்கிற மிருணாளினி ஊருக்கு வந்தா. அவதான் என்னை கிளினிக்குக்குக் கூப்பிட்டு டெஸ்ட் பண்ணினா. அப்ப வரைக்கும் அது ஒரு நோய்ன்னே எனக்குத் தெரியாது.

“உங்களுக்கு வந்திருக்கிறது ‘நோ ஏஜிங் சிண்ட்ரோம்’. சிண்ட்ரோம் எக்ஸ்னு சொல்வோம்.”

“ஷங்கர் படம் மாதிரி நாலஞ்சு பாரீன் வீடியோ போட்டு இங்கிலீஷ்ல புரியாமப் பேசுவீங்களே, நாலஞ்சு வெள்ளைக்காரங்களுக்கும் இதேமாதிரி வியாதி வந்துச்சுன்னு சொல்வீங்களே?”

“சிவா, நீங்க கிண்டலடிச்சாலும் அதான் நிஜம். அமெரிக்காவுல கேப்ரியல், ப்ரூக் க்ரீன்பெர்க்ன்னு நிறைய உதாரணம் சொல்ல முடியும். இதெல்லாம் வெளியிலதானே தவிர, உடம்புக்குள்ள வயசானா நடக்கிற மாற்றங்கள் நடந்துக்கிட்டேதான் இருக்கும். சிலபேருக்கு 10 வயசோட நின்னுடும். ப்ரூக் 20 வயசுல இறக்குறப்போ அவங்களோட உடல் எடை வெறும் 7 கிலோதான்.”

“ ‘தெய்வத்திருமகள்’ விக்ரம் மாதிரியா? நிலா வந்தாச்சு...” என்று நான் கிண்டலடிக்க, மிருணாளினி சிரிக்க, என் பெண்டாட்டி முறைக்க அதற்கப்புறம் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும்னு எனக்கு அப்போ தெரியலை.”

15 நாள்களாக மகேஷால் பாரதி அண்ணனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. போன் அடித்தாலும் எடுக்கவில்லை. இரண்டு வாரத்துக்குப் பிறகு அவரே அழைத்தார். வடபழனி பாரில் சந்தித்தான். கசக்கிப்போட்ட வாட்டர் பாக்கெட்போல இருந்தார்.

“ஒரே பிரச்னை மகேசு. சினிமா, சினிமான்னு திரிஞ்சு கல்யாணமும் பண்ணலையா? ஊர்ல தம்பிதான் அம்மாவைப் பார்த்துக்கிட்டிருந்தான். எவ்ளோநாள்தான் பார்ப்பான். தம்பிக்கும் பெண்டாட்டிக்கும் சண்டை. அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. என்ன பண்ணப்போறேன்னு தெரியலை.”

15 நாள்களில் 30 ஆண்டுகள் வயதானவரைப் போல இருந்தார் பாரதி அண்ணன்.

மார்க்கண்டேயன் :

“ ‘பவர் பாண்டி’ ராஜ்கிரண் மாதிரி என்னோட பழைய கேர்ள் பிரெண்ட்ஸ்லாம் தேடிப்போய்ப் பார்க்கிறது, ஃபேஸ்புக்ல சாட் பண்ணுறதுன்னு இருந்தேன். பல பொண்ணுங்களோட குழந்தைகளுக்கே கல்யாணம் ஆகியிருந்தது. அண்டா மாதிரி நிறையபேர் குண்டாகியிருந்தாங்க. எல்லாத்துக்கும் என்னைப் பார்க்கிறப்போ அப்படி ஒரு ஆச்சர்யம். அந்த ஆச்சர்யத்தைப் பார்க்கும்போது எனக்குள்ள அடைமழை மாதிரி சந்தோஷம், அவங்களைப் பொறாமைப்படுத்திப் பார்க்கிறதுல ஒரு வக்கிர சந்தோஷம். நான் ஒரு அதிசய மனிதன்னு பத்திரிகைகாரங்க, டிவிகாரங்கல்லாம் பேட்டியெடுக்க ஆரம்பிச்சாங்க. இதெல்லாம் ஒருபக்கம்னா இன்னொருபக்கம் பிரச்னையெல்லாம் வரிசையா வர ஆரம்பிச்சது.

அஞ்சிறைத்தும்பி - 49 - தனுஷ் நடிக்க வேண்டிய படம்

‘இவருக்கு வயசே ஆகாது. ரிட்டயர்டு ஆக வாய்ப்பில்லை’ன்னு ஒருத்தர் கோர்ட்ல கேஸ் போட, என்னை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க. அட, இன்ஷூரன்ஸ்கூட போட மாட்டேன்னுட்டாங்க. அப்பதான் எங்க சாதிக்கட்சிக்காரர் என்னை மண்டையைக் கழுவி அந்தச் சாதிக்கட்சியில் சேர்த்தாரு. “இளமையும் வலிமையும் நம்ம சாதிக்குத்தான் சொந்தம்” - தலைவர் எனக்கு வீரவாள் பரிசளித்து மேடையில பேசினார். ‘அட லூசுக்கூமுட்டை’னு மனசில நினைச்சாலும் கூட்டம் கைதட்டுச்சு. ஆனா அதே இளமைதான் எனக்கு அங்கேயும் பிரச்னை ஆச்சு. தலைவர் மகனுக்கு 55 வயசு, இளைஞரணித் தலைவரா இருந்தாரு. பக்கத்தில நான் நிக்கவும் அவருக்கு உறுத்தலா இருந்தது. கட்சியில இருந்து கட்டம் கட்டிட்டாங்க.

என்னதான் இருந்தாலும் என் பெண்டாட்டியும் பொம்பளைதானே, தலை நரைச்சு அவ கிழவியாக, நான் மட்டும் அப்படியே இருந்தா? என் மகனுடன் எந்தப் பிரச்னையும் வராதுன்னுதான் நினைச்சேன். ஆனா ஒவ்வொரு ஜெனரேஷனுக்கும் ஜெனரேஷன் கேப்பும் அவசியம்தான்னு லேட்டாத்தான் உறைச்சது. என்னதான் அப்பா நண்பனாப் பழகினாலும் தலை நரைச்சு, கை நரம்பெல்லாம் தளர்ந்து ஆறுதல் சொல்ற அப்பாவைத்தான் மகனுக்குப் பிடிச்சது. ‘சிறுத்தை’ சிவாவை விட்டு குண்டு எறிதல் வீராங்கனையும் அவ மகனும் பல ஆயிரம் மீட்டர் ஓடிப்போனாங்க. ஒருகட்டத்தில் மகனும் சுபாவும் பாரீன் போக, நான் என் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். அப்பதான் நம்மைச் சுத்தி எவ்வளவு பிரச்னை இருக்குன்னு புரிய ஆரம்பிச்சது. ஒரு கெமிக்கல் கம்பெனி எங்க கிராமத்தை, கிராமத்து நிலங்களை, ஆற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக் கொல்ல ஆரம்பிச்சது. அப்போ அதை எதிர்த்துப்போராடிக்கிட்டிருந்த கபிலன் எனக்கு அந்த ஆபத்தைப் பத்தி விளக்க ஆரம்பிச்சார். என்னைவிட அவர் எட்டு வயசு குறைவு. ஆனாலும் எனக்கு அவர் ஆசான். தொழிற்சாலைக் கழிவுகள் ஆத்திலும் காத்திலும் கலக்க, எங்க கிராமத்தில் பலபேருக்குப் பலவிதமான வியாதிகள். என்னோட உடம்பு வயசைத் தாண்டி நின்னது. ஆனா எங்க கிராமத்தில் பல குழந்தைகள் கருவிலேயே கலைஞ்சது. கபிலன் அண்ணனைத் தேசத்துரோகச் சட்டத்தில் கைது செஞ்சுட்டாங்க. அதுக்கப்புறம் நான் போராட்டத்தைக் கையிலெடுத்தேன். என் வாழ்க்கைக்கான அர்த்தம் அப்பதான் புரிஞ்சது. எது இளமை, எது வீரம், எது வாழ்க்கை, எது மகிழ்ச்சின்னு எனக்குப் போராட்டம்தான் கத்துக்கொடுத்தது. ‘மகிழ்ச்சி என்றால் என்ன?’ன்னு கேட்டப்போ ‘போராட்டம்’னு பதில் சொன்னாராம் காரல்மார்க்ஸ்.”

“ ‘3’ பட டைரக்டர் தனுஷின் மனைவிதான். ஆனா சென்டிமென்ட் நிறைஞ்ச தமிழ் சினிமாவில ஓப்பனிங் சீனே ஹீரோ கழுத்தறுத்துத் தற்கொலை பண்ணிக்கிறது. அசாத்திய துணிச்சல்டா மகேசு! தற்கொலை பண்ணிக்கிறதுக்கு முன்னால தனுஷ் நடத்துவாரே ஒரு உணர்வுப் போராட்டம், ப்பா! ஒரு பார்க்கிங் சண்டைக்காட்சியில தனுஷ் கண்ணில தெரியுற கோபம் இருக்கே, அதேமாதிரிதான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வில் அண்ணன் சசிகுமார் இறந்தது தெரிஞ்சதும் அந்தக் கண்ணில கோபம், வருத்தம், ஆத்தாமையெல்லாம் மின்னல் மின்னலா வந்து மறையும்டா. சத்தியமா சிவாஜிக்குப் பிறகு பெஸ்ட் ஆக்டர் தனுஷ்டா” - ஆறாவது ரவுண்டின் கிணற்றுமுனையில் இருந்தார் பாரதி.

“அண்ணே, சொன்னாக் கேளுங்க, உங்களுக்கு ஓவராகிடுச்சு” என்று அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வெளியேவந்தான் மகேஷ்.

“கண்ணில உணர்ச்சியைக் காட்டுறது மட்டுமில்லைடா, ‘மாரி’ படத்தில...”

“தெரியும்ண்ணே சொல்லிட்டீங்க. தனுஷ் கூலிங்கிளாஸ் போட்டும் உணர்ச்சியைக் காட்டியிருப்பாப்ல” என்று சொல்லியபடியே ஒருகையால் கண்ணாடிப்பொருளைக் கையாளும் லாகவத்துடன் பாரதியைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் ஓலா புக் செய்தான்.

மறுநாள்தான் மகேஷுக்குத் தெரிந்தது, காரில் போகும்போதே பாரதி அண்ணன் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று. வீட்டுக்குச் சென்றபோது அந்தச் சின்ன வீட்டின் வாசலில் செருப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ஆரம்பித்தன. பாரதி அண்ணனைத் தெரிந்த சினிமாக்காரர்கள் பிரபலங்களில் இருந்து முகம் தெரியாதவர்கள் வரை கூட்டம் கூடியது. எல்லாம் முடிந்தது, எல்லாமுமே!

மறுநாள் மின்னஞ்சலைத் திறந்தபோதுதான் பாரதி அண்ணன் அதுவரை தயார் செய்திருந்த கதையைத் தனக்கு அனுப்பியிருந்ததைக் கவனித்தான் மகேஷ்.

மார்க்கண்டேயன் :

“வாழ்க்கை வலதுகாலிலும் மரணம் இடதுகாலிலும் துரத்தத் துரத்த ஓடிக்கிட்டிருக்கேன். எத்தனையோ தடவை ஓடியிருக்கேன். ஆனா மரண ஓட்டம்னா என்னன்னு இப்போதான் தெரியுது. கபிலனை மூணுதடவை கொலை பண்ண முயற்சி செஞ்ச கூட்டம், என் மண்ணை, மக்களை, தலைமுறையை சிதைச்சு சீரழிச்ச கூட்டம்தான் இப்போ என்னைக் கொலைபண்ணத் துரத்துது. இந்த நட்டநடு ராத்திரியில ஆளே இல்லாத தெருக்களில ஓடிக்கிட்டிருக்கேன். சுபா, அவளை நான் சந்திச்ச அந்த கிரவுண்ட், என்னைவிட்டு விலகிப்போன மகன் அபிஷேக், நான் காதலிச்ச, என்னைக் காதலிச்ச பொண்ணுங்க, கபிலன், ஒருபாவமும் அறியாத இந்த மக்கள், சின்ன வயசுல சங்குல பாலூத்தின என் அம்மா எல்லார் முகமும் என் கண்ணுக்குத் தெரியுது. நான் ஓடிக்கிட்டிருக்கேன். எனக்கு முன்னால என் இளமையும் வாழ்க்கையும் ஓடிக்கிட்டிருக்கு. நான் துரத்தி ஓடிக்கிட்டிருக்கேன்.”

- தும்பி பறக்கும்....