Published:Updated:

குறுங்கதை : 5 - அஞ்சிறைத்தும்பி

ஜீன்ஸ் பெரியார்
பிரீமியம் ஸ்டோரி
ஜீன்ஸ் பெரியார்

ஜீன்ஸ் பெரியார்

குறுங்கதை : 5 - அஞ்சிறைத்தும்பி

ஜீன்ஸ் பெரியார்

Published:Updated:
ஜீன்ஸ் பெரியார்
பிரீமியம் ஸ்டோரி
ஜீன்ஸ் பெரியார்

‘இது உண்மைதானா என்று நம்ப முடியவில்லை’ என்பது ஒரு தேய்வழக்கான வாக்கியம்தான். ஆனால் என் இப்போதைய மனநிலையை விளக்க இதைவிடப் பொருத்தமான வாக்கியம் வேறில்லை. அனுபவம் தரும் பரவசம், இது நிஜம்தானா என்ற நம்பகத்தன்மைமீதான குழப்பம் இரண்டும் கலந்ததோர் உணர்வு உடல் முழுக்க ஊறிக்கொண்டிருந்தது. அருகில் இருந்தவரைப் பார்க்கும்போது அது இன்னும் அதிகரித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் ஐயா?”

“ஒளியோட வேகம் ஒரு விநாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர். அந்த வேகத்தை மனிதர்கள் கடந்துட்டா காலத்தைத் தாண்ட முடியும். இதுதாங்கய்யா அடிப்படை. நாம இன்னும் 46 விநாடியில போயிடுவோம்.”

குறுங்கதை : 5 - அஞ்சிறைத்தும்பி

டைம் மெஷின் எனப்படும் கால இயந்திரம். 1895-ல் ஹெஜ்.ஜி வெல்ஸ் என்ற எழுத்தாளனின் கற்பனையில் உதித்தது. காலத்தைக் கடக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. ஐன்ஸ்டீன் காலத்திலிருந்து இந்த முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. இப்போதுதான் அது சாத்தியமாகியிருக்கிறது. சாதித்த நான் தமிழன். இந்தச் சாதனையை வெளியுலகுக்குச் சொல்வதற்கு முன்னால் கடந்தகாலத்தைச் சேர்ந்த ஒரு மகத்தான மனிதரோடு இந்தக் கால இயந்திரத்தில் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 50 ஆண்டுகளுக்கு முன்பான காலத்துக்குப் போய் அவரை அழைத்துக்கொண்டு இப்போது நிகழ்காலம் நோக்கிப் பயணிக்கிறேன்.

“எந்த வருஷத்தில இருந்து வர்றீங்கய்யா?”

“2019.”

“இப்போ 1969. கண்டிப்பா உங்க காலத்தில நான் உயிரோட இருந்திருக்க மாட்டேன். நான் எந்த வருஷம் செத்துப்போனேன்?”

“அது வந்துங்கய்யா...”

“எதுக்குத் தயங்குறீங்க? இப்பவே எனக்கு 91 வயசு. மிஞ்சிப்போனா நூறு வயசு இருப்பேனா? சொல்லுங்க, எப்போ இறந்துபோனேன்?”

“1973, டிசம்பர் 24.”

“அப்போ 95 வயசு. ராஜாஜியைவிட ஒரு வயசு அதிகமாத்தான் வாழ்ந்திருக்கேன்.”

தாடியைத் தடவியபடி சிரித்தார். அவர் பெரியார். தமிழர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை விதைத்த அவருடன்தான் முதன்முதலில் கால இயந்திரத்தில் பயணிக்க வேண்டும் என்பது நெடுநாள் கனவு. இயந்திரத்தின் வேகம் உள்ளே தெரியாமல் இருப்பதற்கான பொத்தானை அழுத்தினேன்.

“இப்போ நாம எங்கே இறங்கப்போறோம்?”

“சென்னைதாங்கய்யா. ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலில் ரூம் போட்டுடறேன்.”

“ரூமா? எவ்வளவு வாடகை ஆகுங்கையா?”

“ஆறாயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை.”

“என்னங்கய்யா இப்படிச் சொல்றீங்க? இதில ஒரு மாகாண மாநாடே நடத்தலாமே, செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டுச் செலவே ஆயிரம் ரூபாய்க்குள்ள தானே. அதெல்லாம் வேணாங்கய்யா. உங்க வீட்டுக்கே போயிடலாம்.”

“எனக்கு வீடு இல்லைங்கய்யா. ரூம் எடுத்துதான் தங்கியிருக்கேன்.”

“கல்யாணம்..?”

“இல்லைங்கய்யா.”

``கல்யாணத்தைக் கிரிமினல் குற்றமாக்கணும்னு நான் சொன்னேனே, அரசாங்கம் ஆக்கிடுச்சா? சந்தோஷங்கய்யா!”

“எவனோ கண்டுபிடிச்ச சாதனங்களையும் சாதி வளர்க்கறதுக்குப் பயன்படுத்துறாய்ங்க காட்டுமிராண்டிப் பசங்க. அறிவியல் வளர்ந்தா பத்தாதுங்கய்யா, அறிவு வளரணும்”

“ஐயோ அப்படில்லாம் இல்லைங்கய்யா. அரசாங்கம் அந்த அளவுக்கெல்லாம் யோசிக்கலை. நானும் இன்னும் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலை. உங்களை ஐயான்னு கூப்பிடறது எனக்கு ஒருமாதிரி இருக்கு.”

“சார்ங்கிற ஆங்கில வார்த்தை மாதிரி ஐயா. உங்களுக்கு சங்கடமா இருந்தா ராமசாமின்னு கூப்பிடுங்க. அதானே என் பேரு?”

“இருக்கட்டுங்கய்யா. ஐயான்னே கூப்பிடறேன்” - சொல்லி முடிக்கும்போது என் அறை வந்திருந்தது.

அவருக்கு என் அறையில் இருந்த, நான் நீண்ட நாள்கள் பயன்படுத்தாமல் இருந்த கம்ப்யூட்டரை ஆன் செய்து காண்பித்து அதைப்பற்றி விளக்கினேன். பிறகு என் லேப்டாப்பையும் மொபைல் போனையும் காண்பித்து விளக்கினேன். அவருக்கு ஆச்சர்யம்.

“ ‘இனி வரும் உலகம்’ புத்தகத்தில ‘எதிர் காலத்தில் அனைவரின் சட்டைப்பையிலும் கம்பியில்லாத் தந்தி சாதனம் இருக்கும்’னு எழுதியிருப்பீங்க. இந்த செல்போன் அப்படித்தான். ‘ஆண், பெண் சேர்க்கை இல்லாமலே குழந்தை பிறக்கும்’னு எழுதியிருப்பீங்க. டெஸ்ட் ட்யூப் பேபி வந்திருச்சுங்கய்யா” என்று அதைப்பற்றி விளக்கினேன்.

ஒரு குழந்தையைப்போல் குதூகலித்தவர், “ரொம்ப மகிழ்ச்சிங்கய்யா. ஆனா ஒண்ணு, இதெல்லாம் நான் முன்னாடியே சொல்லிட்டேன்னு என்னைக் கடவுள், மகான், தீர்க்கதரிசி ஆக்காம இருக்கணும். அப்படி எதுவும் நடக்கலைல?”

“நீங்க வேற. சிலபேர் உங்க சிலைக்கு செருப்புமாலை அணிவிக்கிறவங்கல்லாம் இருக்காங்க.”

“சந்தோஷம். சந்தோஷம். என் போட்டோவையே சிலபேர் செருப்பால அடிக்கிற போராட்டம் அறிவிச்சாங்க. நானே சொந்தச் செலவுல போட்டோ அனுப்புறேன்னேன். யாரையும் சாமி ஆக்கிடக்கூடாதுங்கய்யா. நான் சொல்றதை உங்க பகுத்தறிவு ஏத்துக்கிட்டா மட்டும்தான் பின்பற்றணும். இல்லைன்னா தூக்கிக் கடாசிடணும்” என்றவரிடம், மரபணு அறிவியல் தொடங்கி அறிவியல் உலகிலும் சமூகத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விளக்கினேன்.

“இவ்ளோ நடந்திருக்கிறது நல்ல விஷயங்கய்யா. ஆமா, சூத்திரப்பட்டம் ஒழிஞ்சதா? அதை ஒழிக்கணும்னுதானே நான் குரல் கொடுத்துக்கிட்டேயிருந்தேன்?”

“உங்க கன்டெக்ஸ்ட்ல அது ஒழிஞ்சதா, இல்லையான்னு எனக்குச் சொல்லத் தெரியலை. ஆனா இப்ப இருக்கிற இளைஞர்களுக்கு அந்த வார்த்தையே தெரியாது. உங்களை ஃபாலோ பண்றவங்கதான் அந்த வார்த்தையோட ஆபத்தான அர்த்தத்தை விளக்கிக்கிட்டி ருக்காங்க” என்றபடி சில ஃபேஸ்புக் பக்கங்களையும் ட்விட்டர் பக்கங்களையும் காட்டினேன். டிக்டாக் வீடியோக்கள் சிலவற்றைப் பார்த்தவர், “இதென்ன கூத்தாடிப் பசங்களாட்டம் நம்மாளுக நடந்திருக்கிறாங்க. படிச்சு முன்னேறுறதை விட்டுட்டு இதென்ன வெங்காயம்?” என்றார்.

“இல்லைங்கய்யா. சினிமா பத்தின உங்க கருத்தில எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கு. இப்போ பாலாஜி சக்திவேல், ஜனநாதன், பா.இரஞ்சித், வெற்றிமாறன், சுசீந்திரன், மாரி செல்வராஜ், கோபி நயினார்னு சினிமாக்காரங்களும் சாதியை எதிர்த்துப் படம் எடுக்கிறாங்க. அதில இரஞ்சித் உங்க போட்டோவை சினிமாக்களில் காட்டுறதில்லைன்னு விமர்சிக்கிறவங்களும் இருக்காங்க.”

“என்னங்கய்யா இது, அந்தத் தம்பிங்கல்லாம் சாதியை எதிர்த்து சினிமாவில பேசுறாங்களா?”

“ஆமாங்கய்யா.”

“நான் 50 வருஷமா பேசினதை அவங்க சினிமாவில பேசுறாங்கல்ல, அதுதானே முக்கியம். என் முகத்தைக் காட்டுறதா முக்கியம்? எனக்கு நானேதான் சிலை வெச்சுக்கிட்டேன். இன்னொருபக்கம் செருப்பால அடிக்கிறதுக்கு என் போட்டோவையும் நானே அனுப்புறேன்னும் சொன்னேன். ரெண்டுக்கும் ஒரே காரணம்தான். நம்ம கொள்கை பரவணும், அவ்ளோதான்.”

ஜீன்ஸ் பெரியார்
ஜீன்ஸ் பெரியார்

“அது உண்மைதாங்கய்யா. ஆனா நீங்க போராடி வாங்கின உரிமைகளை அனுபவிக்கிறவங்களே, கீழ்சாதின்னு சொல்லி மத்தவங்களைக் கொடுமைப்படுத்துறாங்க. ஆணவக்கொலைகள் நடக்குதுங்கய்யா.”

“ஆணவக்கொலைகளா, அப்படின்னா...?”

அவரிடம் விளக்கியதுடன் சில சாதிவெறி டிக்டாக் வீடியோக்களையும் ஃபேஸ்புக் பக்கங்களையும் காட்டினேன்.

“பார்த்தீங்களா, ஏதோ சில மன்னர்கள் போட்டோவை வெச்சு அவனும் நானும் ஒரே சாதிங்கிறான். வெங்காயப் பசங்க. அந்த மன்னனா இந்த கம்ப்யூட்டர், போன்லாம் கண்டுபிடிச்சான்? எவனோ கண்டுபிடிச்ச சாதனங்களையும் சாதி வளர்க்கறதுக்குப் பயன்படுத்துறாய்ங்க காட்டுமிராண்டிப் பசங்க. அறிவியல் வளர்ந்தா பத்தாதுங்கய்யா, அறிவு வளரணும்” என்றபடி ஆவேசமானார்.

“ஐயா, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நீங்க உழைக்கலைன்னும், உங்க போராட்டங்களால சூத்திரச் சாதிகள்தான் வளர்ந்துச்சுன்னும் விமர்சிக்கிறவங்க இருக்காங்க.”

“அப்படியா சொல்றாங்க? நீங்க எந்த வருஷம் பொறந்தீங்க?”

“1978.”

“நான் செத்து அஞ்சு வருஷம் கழிச்சுப் பொறந்திருக்கீங்க. உங்களுக்கே 40 வயசாகுது. நான் செத்து அம்பது வருஷம் ஆகப்போகுது. ‘எல்லாத்துக்கும் கடவுள்தான் காரணம்’னு சொல்றமாதிரி ‘எல்லாத்துக்கும் ராமசாமிதான் காரணம்’னு சொல்றது எப்படிங்கய்யா சரியாயிருக்கும்? நான் ஏதோ எனக்குத் தெரிஞ்சவகையில போராடினேன். நான் மட்டுமா, அம்பேத்கர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, எல்.சி.குருசாமி, ஜெகந்நாதம், சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ்னு நிறைய ஆதிதிராவிடர் தலைவர்கள் அவங்க வழியில போராடியிருக்காங்களே, என்னோட பாதை தப்புன்னா அதைப் பின்னாடி வந்தவங்க சரிபண்ணிக்க வேண்டியதுதான். ஆனா விமர்சனம் பண்றது நல்ல விஷயம்தானேங்கய்யா?” என்றபடி அலமாரி பக்கம் சென்றவர் ஒரு பச்சை நிற பாட்டிலைக் கையிலெடுத்தார்.

“இது என்னங்கய்யா? ஏதும் திராவகமா, இல்லை மருந்து பாட்டிலா?”

“இல்லைங்கய்யா, அது வந்து...வேணாங்கய்யா, வெச்சிடுங்கய்யா.”

“ஏதும் ஆபத்தான திரவம்ங்களா?”

“இல்லைங்கய்யா, அது சரக்கு பாட்டில்.”

“சரக்கா, என்ன சரக்கு? நான்கூட ஈரோட்டில மஞ்சள் மண்டி நடத்தினப்போ நிறைய சரக்கு அனுப்பியிருக்கேன்.”

“இல்லைங்கய்யா. இது வந்து... லிக்கர், அதாவது மது.”

“அவ்ளோதானே, இதுக்கு ஏன் தயங்குறீங்க?”

“இல்லைங்கய்யா, நீங்க கள்ளை ஒழிக்கணும்னு 500 தென்னைமரங் களையெல்லாம் வெட்டியிருக்கீங்க...”

“அது நான் காங்கிரஸுல இருந்தப்போ. ஒருத்தன் பிறந்தப்போ அம்மணமா இருந்தான்கிறதுக்காக கடைசிவரைக்கும் அப்படியேவா இருப்பான்? காங்கிரஸை விட்டு வெளியே வந்தபிறகு ராஜாஜி காலத்தில இருந்து நம்ம கலைஞர் காலம் வரைக்கும் மதுவிலக்கை எதிர்த்துக்கிட்டுதான் இருக்கேன். மது அருந்துறது அவங்க சுதந்திரம். ஆனா எதுக்கும் ஒரு கட்டுப்பாடு இருக்கணும்னு நினைக்கிறேன்.”

“ஐயய்யோ, ஒரு கிளாஸ்தாங்கய்யா இருக்கு. இன்னொண்ணு வாங்கிட்டு வந்துடவா?”

“எனக்கா? நான் ஈரோட்டில மைனரா, காலியா திரிஞ்சுக்கிட்டிருந்தப்பவே குடிக்கிற பழக்கம் கிடையாது. என் வாயிலகூட சாராயத்தை ஊத்தியிருக்காங்க. ஆனா எனக்கு என்னமோ அதைக் குடிக்கப் பிடிக்கலை. அதுக்காக மத்தவங்க உரிமையை நான் தடுக்க விரும்பலை.”

“எங்க காலத்தில இருந்த மோட்டார் கார், ஆகாய விமானம், இப்போ உங்க காலத்தில கம்ப்யூட்டர், போன் இதெல்லாம் பெரிய கண்டுபிடிப்பு கிடையாது. கேள்வி... அதான் மனிதக் கண்டுபிடிப்பிலேயே பெரிசு”

“சரிங்கய்யா. நாம ரூம்லயே இருக்காம கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம்” என்று ஒரு கால் டாக்ஸி புக் செய்தேன்.

முதலில் பெரியார் திடலுக்குச் சென்றோம். தன் சமாதி முன்பே அவர் நின்றபோது ஒரு பரவசம் கலந்த பதைப்பு அவர் நரம்புகளுக்குள் ஓடியதை என்னால் உணர முடிந்தது.

“பார்க்க நம்ம ஐயா மாதிரியே இருக்காரில்ல?!” - தூரத்தில் ஒரு கறுப்புச்சட்டை இளைஞன் இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

“ஐயா, நம்ம பெண்களோட நிலைமையில் மாற்றம் இருக்கா?”

“நிறைய மாறியிருக்குங்கய்யா. ஒருபக்கம் குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் பண்றது தொடங்கிப் பல மோசமான விஷயங்கள் இருக்கு. அதேநேரத்தில் பெண்கள் நிறைய படிக்கிறாங்க. ஆண்களைவிட சம்பாதிக்கிறாங்க. அவங்க நடை உடைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்திருக்கு. நீங்களே பார்ப்பீங்க” என்றபடி அவரை மெட்ரோ ரயில், ஷாப்பிங் மால், காபி ஷாப் உள்ளிட்ட பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றேன். ஒவ்வோர் இடத்தையும் புதிதாய்ப் பிறந்த குழந்தையைப்போல் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ததும்பப் பார்த்தார்.

“ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்கய்யா. நிறைய பொண்ணுங்க கிராப் வெட்டியிருக்காங்க. குழாய் மாட்டியிருக்காங்க. பல பொண்ணுங்க நகை மாட்டுற ஸ்டாண்டா இல்லாம இருக்காங்க. நான்லாம் அப்போ கிராப் வெட்டுற பொண்ணுக்கு 50 ரூபாய் பரிசு கொடுத்துக்கிட்டிருந்தேன். இப்போ கொடுக்கிறதாயிருந்தா திடலைத்தான் விக்கணும்போல இருக்கு” என்று சிரித்தார்.

“எனக்கு ஒரு சந்தேகம்” என்றவுடன் “கேளுங்க, கேளுங்க” என்றார் உற்சாகமாய்.

“பெண்கள் விடுதலைன்னு சொல்லி பெண்களை ஆண்களைப்போல் முடி வெட்டச் சொல்றது, பேன்ட் போடச் சொல்றதுன்னு ஆண்களாகவே மாத்துறது ஒரு அதிகாரம் இல்லையா? ஏன் ஆம்பளைங்க பொம்பளைங்க மாதிரி மாறக்கூடாது?”

“நல்ல கேள்வி கேட்டீங்க. சேலையும் நகைகளும் கூந்தலும் சௌகர்யமான விஷயங்கள் கிடையாது. கடினமான வேலை செய்ய, முன்னேற அதுவே பொண்ணுங்களுக்குத் தடையா இருக்கு. அதனாலதான் அவங்களை சௌகர்யமா இருக்க அதையெல்லாம் மாத்திக்கச் சொன்னேன். சௌகர்யமான விஷயங்களை எல்லாம் ஆம்பளைதானே வெச்சுக்கிறான்? அதை இவங்களும் பண்ண வேணாமா?”

“உண்மைதான். என் நண்பர் ஒருத்தர் சுனாமி வந்தப்போ ஆவணப்படம் எடுக்கப்போயிருந்தார். நிறைய பொண்ணுங்க சுனாமி வந்தப்போ சேலை கட்டியிருந்ததால ஓட முடியாம, கூந்தல் மரத்துல மாட்டிச் செத்துப்போனாங்கன்னு அவர் சொன்னார். ஓடுற பஸ்லகூட சேலை கட்டிட்டு ஏற முடியாதே?” என்று சொன்னபிறகுதான் அவருக்கு சுனாமியைப் பற்றி விளக்கவேண்டும் என்பது உறைத்தது. விளக்கினேன்.

“இன்னும் ரெண்டு சந்தேகங்கள். பெண்கள் விடுதலைக்காக இவ்ளோ பேசினீங்க. ஆனா மணியம்மை தன் பேருக்குப் பின்னால உங்க பேரைப் போட்டுக்கிட்டது அடிமைத்தனம்னு நீங்க நினைக்கலையா?”

ஒருகணம் தடுமாறியவர், “அட ஆமாங்க. நீங்க சொல்றது உண்மைதான். ஏன் சாதிப்பெயரை ஒழிக்கணும்னு சொன்னேன்? இலை நிறைய சாப்பாடு வெச்சு, ஓரத்தில மலம் வைக்கிறமாதிரிதான் பேருக்குப் பின்னால சாதி போடுறதும். இப்போ நீங்க சொல்றதை யோசிச்சா பொம்பளைங்க புருஷன் பேரைப் போட்டுக்கிறதும் தப்புதான். பார்த்தீங்களா, காலம் வளர வளர எவ்ளோ கேள்வி வருதுன்னு. அறிவு வளரணும்.”

“அதேமாதிரி, நம்ம மொழியிலேயே ஆணாதிக்கம் இருக்குங்கிறதை நீங்க விளக்கியிருக்கீங்க. ஆனா நீங்களே ‘கடவுளை மற, மனிதனை நினை’ன்னு சொல்லும்போது அது ஆணை மையப்படுத்திடுதே. அதுவும் ஆணாதிக்கம்தானே?”

“ஆமாமா. அப்போ ‘கடவுளை மற, மனிதரை நினை’ன்னு சொல்லணும். சரியாங்கய்யா? பார்த்தீங்களா, எவ்ளோ விஷயத்தை மாத்த வேண்டியிருக்கு. மனிதர்கள் கண்டுபிடிப்பிலேயே அற்புதமானது எது தெரியுமா? எங்க காலத்தில இருந்த மோட்டார் கார், ஆகாய விமானம், இப்போ உங்க காலத்தில கம்ப்யூட்டர், போன் இதெல்லாம் பெரிய கண்டுபிடிப்பு கிடையாது. கேள்வி... அதான் மனிதக் கண்டுபிடிப்பிலேயே பெரிசு. கேள்வி கேட்டதாலதான் அறிவு வளர்ந்தது. புத்தர் கேள்வி கேட்டார். நம்ம அம்பேத்கர் எவ்ளோ விஷயங்களைப் படிச்சுக் கேள்வி கேட்டார். காரல் மார்க்ஸ், லெனின்லாம் எவ்ளோ கேள்வி கேட்டாங்க. இப்போ நீங்க இவ்ளோ யோசிச்சு கேள்வி கேக்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்கய்யா” என்றபடி கைகளைப் பிடித்துக்கொண்டார்.

“உங்களுக்கு ஒரு பரிசு வாங்கித் தரணும்” என்றபடி ஓர் ஆடையகத்துக்கு அழைத்துச் சென்றேன். “உங்களுக்குப் பிடிச்ச உடையை எடுத்துக்கங்க” என்றேன்.

எல்லாவற்றின் விலைச்சீட்டையும் புரட்டிப் பார்த்தவர், “இல்லைங்கய்யா... வேணாம்” என்று இழுத்தார். “என்ன, மாகாண மாநாடா? ஐயா, எனக்கு மாசம் மூணு லட்சம் சம்பளம். இந்தச் சம்பளத்துக்கு நீங்களும் உங்க போராட்டங்களும் ஒரு காரணம்னு நான் நினைக்கிறேன். இதை நீங்க நிச்சயம் மறுக்கக்கூடாது” என்றேன்.

தலையாட்டியவாறே, “இது என்ன?” என்றார். “டி-ஷர்ட்” என்றேன்.

ஒரு கறுப்புநிற டி-ஷர்ட்டையும் நீலநிற பேன்ட்டையும் எடுத்துக்கொண்டு டிரையல் ரூம் சென்றவர், பத்து நிமிடங்களுக்குப்பிறகு திரும்பினார்.

ஜீன்ஸ், டி-ஷர்ட்டில்... அட்டகாசமாய் இருந்தார் பெரியார். அவரே தன்னைக் கண்ணாடியில் ஏற இறங்கப் பார்த்துக்கொண்டார்.

“ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமாய்யா?”

“இந்த ‘ஐயா’ வேணாம். வயசான மாதிரி இருக்கு. தோழர்ன்னே கூப்பிடுங்க. ஆமா, அது என்னமோ சொன்னீங்களே, என்னது?” என்றார்.

அவர் தோளில் கைபோட்டு ஒரு செல்ஃபி எடுத்து உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றினேன். நிச்சயம் லட்சக்கணக்கில் ஹார்ட்டின்கள் அள்ளும்.

- தும்பி பறக்கும்...