Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 51 - சிவப்புநிற சவப்பெட்டி

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

எப்போதுமே டிரையல் பார்த்து ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது செல்வனின் வழக்கம். ஆனால் அன்று கடையில் அளவுக்கு மீறிய கூட்டம் இருந்ததால் நம்பிக்கையில் சட்டையை எடுத்துவந்துவிட்டான்.

அஞ்சிறைத்தும்பி - 51 - சிவப்புநிற சவப்பெட்டி

எப்போதுமே டிரையல் பார்த்து ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது செல்வனின் வழக்கம். ஆனால் அன்று கடையில் அளவுக்கு மீறிய கூட்டம் இருந்ததால் நம்பிக்கையில் சட்டையை எடுத்துவந்துவிட்டான்.

Published:Updated:
அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி
செல்வனுக்கு சட்டையின் இரண்டாவது பட்டனைப் போடும்போதே தெரிந்துவிட்டது, இது நிச்சயம் டைட்டாகத்தான் இருக்கும் என்று. ஒருவழியாக சிரமப்பட்டு பட்டன்களைப் போட்டு முடித்தபோது சிறிய உறைக்குள் பொருந்தாத தலையணையை நுழைத்ததைப் போலிருந்தது. தொப்பை மட்டும் தனியாகத் துருத்திக்கொண்டு நின்றது. இது முதல்முறையல்ல, எப்போதுமே நடக்கும் பிரச்னைதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இதுக்குத்தான் உங்களை டிரையல் பார்த்து எடுக்கச்சொன்னேன்” என்றாள் அனுஷா.

எப்போதுமே டிரையல் பார்த்து ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது செல்வனின் வழக்கம். ஆனால் அன்று கடையில் அளவுக்கு மீறிய கூட்டம் இருந்ததால் நம்பிக்கையில் சட்டையை எடுத்துவந்துவிட்டான். சமயங்களில் நான்கு சட்டை, பேன்ட்களை டிரையல் பார்த்தபிறகும் எதுவும் பொருந்தாமல் போய்விடுவதும் உண்டு. இதிலேயே நேரம் எப்படியும் ஒருமணி நேரத்தைத் தாண்டிவிடும்.

அனுஷாவின் கதை வேறு. அவளுக்கு எதையும் டிரையல் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் செல்வனுக்கு ஆகும் ஒருமணிநேரத்தில் அரைப்பங்கு, முக்கால்பங்கு கூடுதலாகவே ஆகும். நேரம் ஆவதுகூட பிரச்னையில்லை. அவ்வளவு நேரத்துக்குப் பிறகு ‘`எதுவும் பிடிக்கலை. இன்னொருநாள் வந்து பார்க்கலாம்” என்பாள். அப்போதுதான் செல்வனுக்குக் கோபம் உச்சந்தலைக்கு ஏறும். “உங்களுக்கு மட்டும் ஒருமணி நேரம் ஆகலையா?” என்பாள்.

செல்வனின் பிரச்னைக்கு இரண்டே தீர்வுகள்தான். ஒன்று தொப்பையைக் குறைக்கவேண்டும் அல்லது துணி எடுத்து டெய்லரிடம் தைக்கக் கொடுக்கவேண்டும். அப்போது அப்பாவின் ஞாபகம்தான் வந்தது செல்வனுக்கு.

வளரும்காலத்தில் உடை என்பது எட்டாத உயரத்தில் பறக்கும் தேவதையின் சிறகு. வருடத்துக்கொரு முறை தீபாவளிக்குத்தான் அப்பா ஆடைகள் வாங்கித்தருவார். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளிக்கு முதல்நாள்தான் அப்பாவுக்கு போனஸ் கிடைக்கும். அன்றுதான் உடைகள், பனியன், ஜட்டி, சொற்ப பட்டாசுகள் எடுக்க வேண்டும்.

தள்ளுவண்டிக்கடைகளில் மலிவாக விற்கும் ஆடைகள்தான் செல்வனுக்குத் தீபாவளி டிரஸ். நடுரோட்டிலேயே டவுசரைக் கழற்றி, புது டவுசரைப் போட்டுப்பார்க்கச் சொல்வார் அப்பா. ஏழை நிர்வாணம் கூச்சமறியாது. அப்பாவுக்கு நிரந்தர நிறுவனமோ நிரந்தர வருமானமோ கிடையாது. சில நிறுவனங்களில் தீபாவளிக்கு ஒருவாரம் முன்பு போனஸ் கிடைக்கும்போது துணி எடுத்துக்கொடுத்து டெய்லரிடம் தைக்கக்கொடுக்கலாம். காலரில் பட்டன், சட்டைப்பையில் மாங்கா டிசைன், கைப்பட்டையில் பட்டன் என்று ஒவ்வோராண்டும் விதவிதமாகத் தைத்துத் தருவார் ராமநாதன் டெய்லர். ‘சூப்பர் டெய்லர்ஸ்’ என்று போர்டு மாட்டிய கடையில் சூப்பர் எல்லாம் தீபாவளி சீசனில்தான்.

தீபாவளி முதல்நாள்வரை டெய்லர் கடையில் கூட்டம் மணிக்கணக்கில் காத்திருந்து ஆடைகளை வாங்கிச்செல்லும். இரண்டு நாள்களில் தருவேன் என்று சொன்ன எந்தச் சட்டை, பேன்டையும் அவர் சொன்ன தேதியில் தைத்துக்கொடுத்தது கிடையாது. ஒருவழியாகப் பழுப்புநிறக் காகிதப்பையில் புதிய உடைகளை மடித்து வீட்டுக்கு எடுத்துவரும்போதே செல்வன் மனசில் மத்தாப்புகளுடன் தீபாவளி பிறந்துவிடும்.

வளர வளர செல்வனுக்குக் கிடைத்தவை யெல்லாம் இரண்டு அண்ணன்கள் அணிந்த பழைய ஆடைகள்தான். கொடிது கொடிது இளமையில் வறுமை; அதனினும் கொடிது வறுமைக்குடும்பத்தில் தம்பியாய்ப் பிறத்தல்.

படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்ததற்குப் பிறகு நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் புத்தாடைகள் வாங்கலாம். ஆனாலும் நடுரோட்டில் டவுசரைக் கழற்றி புது டவுசர் மாட்டிய உற்சாகம் மட்டும் தொலைந்துபோனது. இப்போது ஆடைகள் கிடைக்காதது பிரச்னையில்லை. கிடைத்த ஆடைகள் பொருந்தாத அளவுக்குத் தொப்பை பெருத்ததே பிரச்னை.

அஞ்சிறைத்தும்பி - 51 - சிவப்புநிற சவப்பெட்டி

நினைவுகளில் மூழ்கியபடியே பொருந்தாத சட்டையை மடித்து பீரோவில் வைக்கும்போது, கௌதமின் சின்னஞ்சிறு உடைகள் கண்ணில் பட்டன. எட்டு மாதங்களாகிவிட்டன, மூன்று வயது கௌதம் இறந்து. பிறக்கும்போதே அவன் மூளையில் இருந்த கட்டி, அவனோடு சேர்ந்து மூன்றாண்டுகள் வளர்ந்தது. செல்வனும் தன்னால் முடிந்த அளவு பணம் சேர்த்தும் கௌதமைக் காப்பாற்ற இயலவில்லை. அனுஷாவுக்கு கௌதமின் உடைகளை எறிந்துவிட மனமில்லை. கனத்த மனதுடன் அந்த ஆடைகளை வருடிக்கொடுத்தான் செல்வன்.

ராஜனை 15 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கப்போகிறோம் என்ற உற்சாகத்துடன் பைக் ஓட்டினான் செல்வன். கல்லூரிக் காலத்தி லேயே நாடகம், பாடல், இலக்கியம், அரசியல் என்று திரிந்தவன் ராஜன். பேச்சுப்போட்டியில் எல்லோரும் திருவள்ளுவர், காந்தி, விவேகானந்தர் பொன்மொழிகளை வைத்துப்பேசினால் ராஜன் மட்டும், “முதலாளித்துவம் எப்போது தொழிலாளி வர்க்கத்தைப் படைத்ததோ அப்போதே அது தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தயாரித்துவிட்டது” என்பான். அவனுக்குப் பெரும்பாலும் பேச்சுப்போட்டியில் பரிசு கிடைக்காது, அல்லது, மூன்றாவது பரிசு கிடைக்கும்.

ஏற்கெனவே பாடப்புத்தகத்திலிருக்கும் பாதி விஷயங்கள் புரியாமல் திணறும் செல்வனிடம் பூர்ஷ்வா, பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரம், சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் பேசி அலறவிடுவான் ராஜன். கல்லூரி இறுதியாண்டில் திடீரென்று காணாமல்போன அவன், ஒரு தீவிர கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராகிவிட்டதாக அறிந்தான். ஒருமுறை ஆயுதப்பயிற்சியின்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட தகவலையும் கல்லூரி நண்பர்கள்மூலம் தெரிந்துகொண்டான். இப்போது அவன் கட்சிகள் எதிலும் இல்லை. ஹைதராபாத்தில் தங்கி நாடகம் போடுவது, ஆவணப்படங்களை இயக்குவது என்றிருந்ததையும் அறிந்துகொண்டான். அவனைத்தான் இப்போது சந்திக்கப்போகிறான். அவன் பார்த்தால் சந்தோஷப்படுவான் என்று ஒரு சே குவேரா டி-ஷர்ட்டையும் அணிந்திருந்தான் செல்வன். மேலும், இது அணிவதற்குக் கொஞ்சம் தாராளமாகவும் தொப்பையை அவ்வளவாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்ததும் மறைமுகக் காரணம். தன் வாழ்நாளின் கணிசமான பகுதியைத் தலைமறைவு வாழ்க்கையில் கழித்த சே குவேரா, இப்போது செல்வனின் தொப்பையை மறைக்கப் பயன்பட்டார். செல்வனைப் பார்த்ததும் கைகுலுக்கி உற்சாகமாகப் பேசத்தொடங்கினான் ராஜன்.

“இவங்க தோழர் வித்யா. ‘குரல்கள்’ நாடகக்குழுவை நடத்துறாங்க” என்று ராஜனால் அறிமுகப்படுத்தப்பட்ட வித்யா, ஒரு டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்திருந்தாள். அவன் சென்னை வந்தபோதே துப்பட்டா அணியாத, டிஷர்ட் அணிந்த பெண்கள் அதிர்ச்சியளித்தார்கள். போகப்போகப் பழகிவிட்டாலும் ஷார்ட்ஸ் அணிந்த ஒரு பெண்ணை அருகில் பார்த்தது அதிர்ச்சியாக இருக்க, ஒரு வணக்கத்தை மட்டும் செலுத்திவிட்டு, அவசரமாக வித்யாவைத் தவிர்த்துவிட்டு செல்வாவைப் பார்த்தபோது, இன்னொரு பெண் சுடிதாரில் வந்து நின்றாள்.

“இவங்க அமுதா தோழர். அமுதா, இவன் என் காலேஜ் பிரெண்ட், செல்வன்” என்றான் ராஜன்.

“வணக்கம் தோழர்” என்ற அமுதாவின் குரலில் தெரிந்த ஆண்மை செல்வனுக்கு இரண்டாவது அதிர்ச்சி.

புரிந்துகொண்ட ராஜன் “அமுதா திருநங்கை. டிரான்ஸ்ஜெண்டர் உரிமை களுக்காகப் போராடிக் கிட்டிருக் காங்க. அவங்களுக்காக மட்டுமல்ல; நெடுவாசல், கதிராமங்கலம், சிஏஏ எதிர்ப்புன்னு எல்லாப் போராட்டங் களிலும் அவங்களைப் பார்க்கலாம்” என்றான்.

செல்வன் அவன் ஊரிலேயே இப்படி இரண்டு பேரைச் சந்தித்திருக்கிறான். பிறகு கடைகளில், ரயில் பயணத்தின்போது சேலை அணிந்துவரும் இதுபோன்றவர் களைப் பார்க்கும்போது ஒருபுறம் எரிச்சலும் இன்னொருபுறம் அருவருப்பும் தான் வரும். இப்போது என்ன ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் சின்னதாகப் புன்னகைத்தான். ஷார்ட்ஸ் அணிந்த பெண்ணையும், அது என்ன, திருநங்கையையும் சந்தித்தையும் அவர்கள் இயல்பாக இருந்ததையும் அனுஷாவிடம் சொல்லவேண்டும். கண்கள் விரியக் கேட்பாள். ‘இந்தப் புரட்சிகரப் பெண்களாவது துணிக்கடையில் சீக்கிரம் ஆடைகளைத் தேர்ந்தெடுத்துவிடுவார்களா?’ என்றும் தோன்றியது செல்வனுக்கு.

அஞ்சிறைத்தும்பி - 51 - சிவப்புநிற சவப்பெட்டி

“சே டிஷர்ட் போட்டிருக்கார். தோழர் எந்த இயக்கத்தில் இருக்கார்?” என்றாள் அமுதா.

“தோழரா, இவனா?” என்று சிரித்த ராஜன், “சே குவேரா டிஷர்ட் போடுறதெல்லாம் இப்போ ஃபேஷன். அவ்ளோதான்” என்று சொன்னபோது செல்வனுக்கு உள்ளுக்குள் கோபம் வந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“அதுவும் சரிதான் தோழர். பெரியாரிஸ்ட்டும் கறுப்புச்சட்டை போடுறாங்க. அய்யப்ப பக்தரும் போடுறார். கம்யூனிஸ்ட்டுக்கும் சிவப்புச்சட்டை. பங்காரு அடிகளார் வழிபாட்டுக்கும் சிவப்புச்சட்டை. கலர், டிரஸ்ஸை வெச்சு எந்த முடிவுக்கும் வந்துட முடியறதில்லை” என்றார் அமுதா.

“இப்பெல்லாம் டிஷர்ட்லதானே புரட்சி பண்றாங்க. ‘இந்தி தெரியாது போடா’ன்னு டிஷர்ட் போட்டா இந்தி போயிடுமா?” என்றான் செல்வன். குரலில் கோபமும் அவர்களைப் பழிவாங்கிய திருப்தியும் தெரிந்தது.

“அப்படி ஒரேடியா சொல்லிட முடியாது அமுதா. ஆடைகளிலும் அரசியல் இருக்கத்தான் செய்யுது. இன்னமும் தீபாவளி, பொங்கல், பிறந்தநாளைக்கு டிரஸ் எடுக்கிறப்போ அதில் கொஞ்சம்கூட கறுப்பு இருந்திடக்கூடாதுன்னு நினைக்கிறவங்கதான் அதிகம்” என்று ராஜன் சொல்லும்போதும் அனுஷாவின் நினைவு வந்தது செல்வனுக்கு. அவள் கறுப்பைத் தவிர்ப்பதில் கறார்த்தனம் காட்டுவாள்.

“இப்போ நாலுபேர் பேசிக்கிட்டிருக்கோம். ரோட்டில் நின்னு பேசிக்கிட்டிருக்கப்போ போலீஸ் ரோந்து வந்துச்சுன்னா முதல்ல கூப்பிட்டு விசாரிக்கிறது யாரைன்னு பார்த்தா அது லுங்கி கட்டினவரா இருக்கும். ஆனா பெரியார் மேடையிலேயே லுங்கி கட்டி வந்து பேசினார். அதுவும் அரசியல்தானே?” என்றார் அமுதா.

“ஆமாமா, காந்தி சட்டையைக் கழட்டினதுக்குப் பின்னாலயும் அரசியல் இருக்கு, அம்பேத்கர் கோட் மாத்தினதுக்குப் பின்னாலயும் அரசியல் இருக்குன்னு ‘கபாலி’யில் வசனம் வருமே?” என்று செல்வன் சொன்னபோது, தானும் இந்த உரையாடலுக்குத் தகுதியானவன்தான் என்று நிரூபிக்கும் வேகம் தெரிந்தது.

“காரல் மார்க்ஸ் கோட்டைக் கழட்டினதிலும் அரசியல் இருக்கு” என்றான் ராஜன்.

“அவரும் காந்தி சட்டையைக் கழட்டினமாதிரி கோட்டைக் கழட்டினாரா?” என்று கேட்ட செல்வனுக்கு, ‘தான் சரியாகத்தான் கேட்டோமா?’ என்ற சந்தேகம், கேட்டபின் தோன்றியது.

“உனக்கு காரல் மார்க்ஸ் பற்றி என்ன தெரியும்னு தெரியலை. அவரோட 200வது பிறந்தநாளைக்குத்தான் நாடகம் போடப் போறோம். அதுக்கான பயிற்சிக்குத்தான் நான் வந்திருக்கேன். மார்க்ஸ் அரசுகளையும் முதலாளித்துவத்தையும் விமர்சித்துப் பேசினதால, எழுதினதால் அவரை ஒவ்வொரு நாடும் துரத்துச்சு. அவர் வயித்துல பசியையும் மூளையில் புரட்சியையும் எடுத்துட்டு ஒவ்வொரு நாடாப் போனார். மார்க்ஸின் காதல் மனைவி ஜென்னி மார்க்ஸ். ஜென்னிக்கும் மார்க்ஸுக்கும் பிறந்த ஏழு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் மட்டும்தான் உயிரோட இருந்தது. காரணம் வறுமை. ஒருமுறை ஜென்னி தன் குழந்தைகளுக்குப் பால் கொடுத்தப்போ அவங்க மார்பில் பால் வரலை தோழர், ரத்தம் வந்தது ரத்தம்” என்று ராஜன் சொல்லும்போதே உணர்ச்சிவசப்பட்டான். அமுதா, வித்யா இருவரின் முகங்களிலுமே உணர்ச்சி ஒரு தீப்பந்தத்தைப்போல சுழன்றதை செல்வனால் உணர முடிந்தது.

“செல்வா தோழர், ஒரு குழந்தை இறந்தப்போ அதைப் புதைக்கக்கூட காரல் மார்க்ஸிடம் பணமில்லை. நம்ம நாட்டில் கோட் போடறது ஆடம்பரம். ஆனால் மேலைநாடுகளில் அது அத்தியாவசியம். கடும் குளிரைத் தடுக்கிறது மேல் கோட்டுதான். குழந்தையைப் புதைக்க காசு இல்லாம தன் கோட்டை வித்துப்புதைச்சார் மார்க்ஸ். ஆனா அவர் அதைத் தன்னோட சோகமா, வறுமையா நினைக்கலை. உலகத்தில் உழைக்கும் மக்கள் ஏன் வறுமையில் இருக்காங்கன்னு யோசிச்சார்.”

செல்வனுக்கு எல்லாமே புதிய தகவல்களாக இருந்தன. ஒருமணிநேரத்துக்கும் மேலாக உரையாடல் நீண்டது.

செல்வன் நினைத்ததற்கு மாறாக நாடகத்துக்குப் பெருங்கூட்டம் வந்திருந்தது. அந்தக் கூட்டம், அங்கே விற்கப்பட்ட புத்தகங்கள், மேடை அமைப்பு என எல்லாமே அவனுக்கு விசித்திரமாகத்தான் இருந்தது. ஆனால் ஒவ்வொருவர் கண்களிலும் தெரிந்த கனவு வேட்கை, தீபாவளியைப்போல இதுபோன்ற நிகழ்வுகளிலும் உற்சாகமிருக்கும் என்று உணர்த்தியது.

ராஜன், காரல் மார்க்ஸின் நண்பன் ஏங்கெல்ஸாக நடித்தான். வழக்கம்போல் பாதிக்கும் மேற்பட்ட விஷயங்கள் புரியவில்லை என்றாலும் ஏதோ ஓர் உணர்ச்சிக்கொந்தளிப்பில் நாடகத்தில் மூழ்கிப்போனான்.

அமுதா, குழந்தை மடியில் படுத்திருப்பதைப் போன்ற பாவனையில் வசனத்தைப் பேசத்தொடங்கினாள்.

“பால் என்பதும் ரத்தத்திலிருந்து வந்ததுதான்.

ரத்தமே பாலாக மாறியது.

இப்போது பாலுக்குப் பதில் ரத்தம்

என் மார்புகளில்.

இந்த ரத்தத்தின் நிறம்

என் காதலனுக்குப் பிடித்த நிறம்.

ஒருநாள் உலகம் முழுதும் அந்த நிறம் பரவும்.

அஞ்சிறைத்தும்பி - 51 - சிவப்புநிற சவப்பெட்டி

இப்போதைக்கு உன் சிறுவாயில் மட்டும்” என்று அவள் பாடும்போதே கண்களில் நீர் வழிந்தது செல்வனுக்கு. காரல் மார்க்ஸ் தன் கோட்டைக் கழற்றி குழந்தையின் சடலத்தை மூடுவதைப்போன்ற காட்சி வந்தபோது அவனால் தாளவே முடியாமல், வேகமாக நடந்து அருகிலிருந்த மைதானத்துக்குப் போய் வெடித்து அழுதான்.

மீண்டும் அவன் நாடகம் நடக்கும் இடத்துக்கு வந்தபோது அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் யாரோ அமர்ந்திருந்தார்கள். மேடை அருகில் நின்ற கூட்டத்தில் கலந்தவன் காதுகளில் ராஜனின் குரல் கேட்டது.

“குழந்தைக்கு சவப்பெட்டி வாங்க இயலாது தவித்த மார்க்ஸ்தான் உழைக்கும் மக்களின் நிலை மாறச் சிந்தித்தார். தோழர்களே, முதலாளித்துவம் பாட்டாளி வர்க்கத்தைப் படைத்ததன் மூலம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத்தானே தயாரித்துவிட்டது.”

நள்ளிரவு உறக்கத்தில் எழுந்த அனுஷா திடுக்கிட்டுத்தான் போனாள். செல்வன் தன் மகனின் உடைகளைத் தடவியபடி இருட்டில் அமர்ந்திருந்தான். அவன் ஒரு கண்ணில் அப்பாவும் மறுகண்ணில் மார்க்ஸும் நீராய் வழிந்தார்கள்.

- தும்பி பறக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism