Published:Updated:

குறுங்கதை : 6 - அஞ்சிறைத்தும்பி

நாயம்மை
பிரீமியம் ஸ்டோரி
நாயம்மை

நாயம்மை

குறுங்கதை : 6 - அஞ்சிறைத்தும்பி

நாயம்மை

Published:Updated:
நாயம்மை
பிரீமியம் ஸ்டோரி
நாயம்மை

மானக்கேடாகப் போய்விட்டது சுப்பிரமணியத்துக்கு. பேச்சியம்மை இப்படிச் செய்வார் என்று அவர் நினைத்திருக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு வரை யார்தான் அப்படி நினைத்திருப்பார்கள்? உறவுக்கார இளைஞர்கள்கூட ‘நாயம்மை’ என்று கிண்டலடித்துப் பேசுவது அவர் காதுகளுக்கு வரத்தான் செய்தது. பழைய சுப்பிரமணியம் என்றால் அவர்களின் நாக்கு நடுக்கூடத்தில் விழுந்திருக்கும். இப்போது அதிகமும் தளர்ந்துவிட்டிருந்தார்.

“ஐயாவோட கௌரவத்தில அம்மை மூத்திரம் பேஞ்சுட்டாங்க” என்றானாம் முருகனும். வலதுகரம்தான். நம்பிக்கையான ஆள். ஆனால் அவன் சொல்வதும் உண்மைதானே?

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

நாய்கள் வளர்ப்பதில் அப்படியொரு பெருமை சுப்பிரமணியத்துக்கு. அவர் வளர்த்த மூன்றும் உயர்சாதி நாய்கள். ஊருக்குள் யார் யார் நாய் வளர்க்கலாம், அதுவும் ஆண் நாய் யாரெல்லாம் வளர்க்கலாம் என்று கட்டுப்பாடுகள் இருந்தன. ஊரில் இருந்த ஒரு பட்டாளத்தான் முன்புதான், சுப்பிரமணியம் வளர்த்தவை நாய்களாகத் தெரியும். மற்றவர்களின் இடுப்புக்கு மேலான உயரத்தில் சிங்கம், புலி, சிறுத்தைகளாய்த்தான் காட்சியளிக்கும். சுப்பிரமணியம் நாய்களைக் கட்டிப்போடுவதுமில்லை. ஊர்ப்பஞ்சாயத்துக்குத் தாக்கீது செய்ய வருபவர்கள், கோயில் திருவிழாவுக்குப் பணம் வாங்க வருபவர்களெல்லாம் சுப்பிரமணியம் வீடு என்றால் பயந்து பயந்துதான் வருவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஏலே சுப்பிரமணி, நாய்கள கட்டிப்போட்ருக்லாம்லா” என்றார் மீசைக்கார பெரியப்பா.

“கட்டிப்போட்டு வளக்க அதெல்லாம் என்ன

சர்க்கஸ்ல வித்த காட்டுத சிங்கமா பெரியப்பா? எல்லாம் காட்டுச்சிங்கம்” என்றார் சுப்பிரமணியம்.

“சூப்பர்ப்பா. ஹரி ‘சிங்கம் 4’ எடுக்கிறப்போ சூர்யாவை இந்த டயலாக் பேசவைக்கலாம்” என்றாள் ஹேமா.

சுப்பிரமணியத்தைக் கிண்டலடிக்கும் உரிமையும் துணிச்சலும் ஹேமாவுக்கு மட்டும்தான். திருநெல்வேலி டவுனில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். ஒரே மகள் என்பதால் பாலும் நெய்யும் பருப்பும் இறைச்சியும் பாசமும் ஊட்டி வளர்த்திருந்தார்.

பவிசாக வலம் வந்துகொண்டிருந்த சுப்பிரமணியத்துக்கு ஓர் அமாவாசை ராத்திரி அன்றுதான் இடி வந்து விழுந்தது. ஹேமாவைக் காணவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் அதே திருநெல்வேலி டவுனில் இருந்த பாஸ்கர் என்பவனுடன் ஓடிப்போனது தெரியவந்தது. யாரை நாயினும் கீழாக சுப்பிரமணியம் பார்த்துப்பழகி யிருந்தாரோ அந்தச் சாதி என்பதுதான் அவருக்கு உடல் முழுக்க எரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“படிச்சா...? வேலைக்குப் போய்ட்டா? எல்லாம் மாறிருமால? காட்ல கம்பீரமா இருந்த யானையைக் கூட்டியாந்து ரோட்ல பிச்சை எடுக்கவெச்சா அது யானை இல்லன்னு ஆயிருமா, இல்ல பெட்டிக்குள்ள இருக்கிறதால பாம்புதான் இல்லன்னு ஆயிருமா?. ஆனா இந்த நாய்ப்பயலுவல பாரேன் படிச்சு, நல்லதும் பொல்லதுமா சட்டையும், குழாயும் போட்டுகிட்டா எல்லாம் மாறிரும்னு நினைச்சுக்கிடு தானுவ.” என்பார் மீசைக்கார பெரியப்பா.

நாயம்மை
நாயம்மை

சிங்கமாய் வளர்த்த நாய்களால் என்ன பிரயோஜனம்? அவன் வீடு வரை வந்து ஹேமாவை அழைத்துப்போயிருக்கிறான். ஹேமாவுக்குப் பழக்கப்பட்ட நாய்கள், அவளைத் தேடிவந்த அந்த நாய்க்கும் வாலாட்டியிருக்கும். முதன்முதலாக மூன்று நாய்களையும் கட்டிப்போட்டார் சுப்பிரமணியம். நீண்ட நாள்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த வேட்டைத் துப்பாக்கிக்கு அன்று வேலை வந்தது. மூன்று தோட்டாக்கள் சீறி அடங்கின. நாய்களின் அழுகை ஊளைச்சத்தம் ஊர் முழுக்க எதிரொலித்தது.

ஊரில் பயந்து அலறிய குழந்தைகளின் வாய்களை அம்மைகள் பொத்தி அடக்கினார்கள்.

இரண்டு மாதங்கள் மகளும் அவனும் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. சுப்பிரமணியம் ஆட்களின் தேடல் நிற்கவில்லை. பிறகுதான் அவர்கள் மதுரையில் இருப்பது தெரியவந்தது. ஒரு வழக்கறிஞரின் பாதுகாப்பில் இருந்தார்கள். அவர் ஒரு கட்சியின் மாவட்டப்பொறுப்பிலும் இருந்தார். ஏதேதோ என்.ஜி.ஓக்காரர்கள், பத்திரிகைக்காரர்கள் எப்போதும் இருவருக்கும் பாதுகாப்பாக இருந்தார்கள். சுப்பிரமணியம் கசப்புடன் காத்திருந்தார்.

ஒருநாள் பேச்சியம்மைக்குப் பெயர் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. விளம்பர கால் என்று அம்மை எடுக்கவில்லை. தொடர்ச்சியாக வந்ததால் எடுத்தாள். ஹேமாதான் பேசினாள். மூன்று மாதங்கள் முழுகாமல் இருக்கிறாளாம். அது என்னவோ மகள்கள் அம்மாவாகப் போகிறார்கள் என்று தெரிந்தால் அம்மாக்கள் குழந்தையாகிவிடுகிறார்கள்.

பொன்னம்மாக் கிழவியை வைத்துப் பேசித்தான் சுப்பிரமணியத்தைச் சம்மதிக்க வைத்திருந்தாள் பேச்சியம்மை. ‘ஒரே ஒரு விருந்து மட்டும். வேறெந்தத் தொடுப்பும் கிடையாது. பெறவு வளைகாப்பு அது இதுல்லாம் கிடையாது’ என்று கண்டிஷன் போட்ட சுப்பிரமணியம் தானும் ஊரில் அன்று இருக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தார். எப்படியோ ஒரு வாய், தன் நிறைந்த மகளுக்கு விருந்து போடுவதே அம்மைக்குப் பெரிய காரியமாய் இருந்தது.

தயங்கித் தயங்கித்தான் வீட்டுக்குள் வந்திருந்தான் பாஸ்கர். பேச்சுத்துணைக்கு யாருமில்லை. மொபைலை எடுத்துப் பார்ப்பதும் சட்டைப்பைக்குள் வைப்பதுமாயிருந்தான்.

மகளுக்கும் அவள் கணவனுக்குமாய்ப் பார்த்துப் பார்த்துச் சமைத்திருந்தாள் அம்மை. தலைவாழை இலையில் மட்டன், நாட்டுக்கோழி, இறால், மீன் என அனைத்தும் மணத்தன. நாலு கவளம் இறங்கியிருக்கும். பாஸ்கரின் முதுகில் ‘நங்’கென்று உதை விழுந்தது. இலையில் சோற்றின் மீது அப்படியே விழுந்தான். முருகனும் கூட்டாளிகளும் சுற்றிவளைத்து அடிக்கத் தொடங்கினார்கள்.

‘நாய குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சா வால தூக்கிகிட்டு வீல்,வீல்-ன்னு குலைக்குமாம். எம்புட்டு தைரியமிருந்தா எங்க வீட்டுக்குள்ள அதுவும் நடுமுத்தத்துல உக்காந்து வக்கணையா திம்ப நாயே’ தன் கணவன் அடிபடுவதைத் தடுக்கப் பாய்ந்தாள் ஹேமா. ஆனால் தலை சுற்றிக் கண்கள் செருகியது. எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தது பேச்சி அம்மைதான். ஆனால் அதில் நஞ்சு கலக்கப்பட்டதை அவள் பார்க்கவில்லை. பேச்சியம்மையின் கை,கால்களைக் கட்டிப்போட்டனர். சுப்பிரமணியத்தின் உத்தரவு.

பாஸ்கரைக் கைகளைக் கட்டிப்போட்டு, நாயைப்போல் நக்கிச்சாப்பிடப் பணித்தார்கள். அவன் எதையும் தடுக்கவில்லை; எதிர்க்கவுமில்லை. பாஸ்கரின் கண்கள், எல்லா வற்றையும் எதிர்பார்த்து வந்ததைப்போலவே சலனமற்று இருந்தன. சில நிமிடங்கள்தான். நீண்ட அரிவாளால் ஒரே போடு. பாஸ்கரின் தலை துண்டாகி முற்றத்தில் கிடந்தது. பேச்சியம்மை மயங்கியிருந்தாள். தன் மகள் உயிரை விட்டபோது, அவளுக்கு நினைவிருக்க வில்லை.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

எல்லாச் சட்ட சம்பிரதாயங்களும் முடிந்து முருகனும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டான். மூன்று நாள்கள், பேச்சியம்மை யாருடனும் பேசவில்லை, ஒரு பருக்கையும் உண்ணவில்லை. பொன்னம்மாக் கிழவி எவ்வளவோ வற்புறுத்தியும் எதுவும் நடக்கவில்லை. நான்காம் நாள், தன்னருகில் வைக்கப்பட்டிருந்த சோற்றை, மண்டியிட்டு நாயைப்போல் நக்கித் தின்னத் தொடங்கினாள் பேச்சியம்மை. அப்போதுதான் உள்ளே நுழைந்த கிழவி, அதிர்ந்துபோனது. ‘`என்னடி இப்படிப் பண்றே?” என்று கெஞ்சிப்பார்த்தது. அம்மை சாப்பிடுவதை நிறுத்தவில்லை. இரு கன்னங்களிலும் மாறிமாறி அறைந்தது கிழவி. அண்ணாந்து விட்டத்தைப் பார்த்து ஊளையிடத் தொடங்கினாள் பேச்சியம்மை. கிழவி இன்னும் பயந்துபோனது.

பிறகு ஒவ்வொரு நாளும் நரகம்தான் சுப்பிரமணியத்துக்கு. ஒருநாள் பொன்னம்மாக் கிழவியின் கைகளைக் கடித்துவைத்தாள் பேச்சியம்மை. திடீரென்று தெருவுக்கு ஓடி ஊளையிடத் தொடங்கினாள். தெருக்களில் ஒவ்வொரு வீட்டு வாசலையும் மோந்து பார்த்துக்கொண்டிருந்தவளை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து கட்டிப்போட்டார்கள். ஊளை மட்டும் நிற்கவேயில்லை. கைகளால் எடுத்துச் சாப்பிடத் தயாராயில்லை பேச்சியம்மை. சுப்பிரமணியமும் மனநல மருத்துவர் தொடங்கி எல்லா வைத்தியமும் செய்துபார்த்தார். எதுவும் மாறவில்லை.

அன்று தவிர்க்க முடியாமல் சுப்பிரமணியம் தென்காசியில் ஒரு கல்யாணத்துக்குப் போக வேண்டியிருந்தது. இத்தனைக்கும் கட்டிப்போட்டிருந்தார்கள். கூட ஆட்களும் இருந்தார்கள். என்ன நடந்தது என்று தெரியவில்லை. எப்படியோ வீட்டை விட்டு வெளியே வந்திருந்த பேச்சியம்மை, தெருவின் தொடக்கத்தில் இருந்த மின்கம்பத்தில், நாய் எப்படிச் சிறுநீர் கழிக்குமோ அதேபோல் கால்களைத் தூக்கிச் சிறுநீர் கழித்திருக்கிறாள். கால்களில் வழிந்தது மூத்திரம்.

சில இளைஞர்கள் கற்களை விட்டு எறிந்திரு க்கிறார்கள். பெண்கள் கூச்சலிட்டிருக்கிறார்கள். ஆனால் நிதானமாகப் பெய்து முடித்திருக்கிறாள் பேச்சியம்மை. ஊரே வேடிக்கை பார்த்திருக்கிறது.

அன்று இரவு. மீண்டும் சுப்பிரமணியம் வீட்டிலிருந்து துப்பாக்கிச்சத்தம் இருமுறை கேட்டது. இரண்டாம் முறை வெறுமனே துப்பாக்கியின் சத்தம் மட்டுமே. முதல்முறை வெடித்தபோது ஒரு பெரிய ஊளைச்சத்தம் ஊரையே உலுக்கியது. அழுகை, பரிதவிப்பு, நிராதரவு எல்லாம் கலந்த ஊளைச்சத்தம். ஊரில் பயந்து அலறிய குழந்தைகளின் வாய்களை அம்மைகள் பொத்தி அடக்கினார்கள்.

- தும்பி பறக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism