Published:Updated:

குறுங்கதை : 8 - அஞ்சிறைத்தும்பி

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

அந்த நெருப்பு, பாம்பின் தலையைப் போலிருந்தது

ரலாற்றில் மனிதர்களின் முதல் கண்டுபிடிப்பு நெருப்பு. அதற்குப்பின் அது அணைந்ததேயில்லை. காலத்தின் இடுக்குகளில் கசியும் அகதியின் பாடலைப்போலவும் தன்பால் புணர்ச்சியாளனின் ரகசிய அழைப்பைப்போலவும் மெல்லக் கசிந்த நெருப்பு, பின் கொஞ்சம் கொஞ்சமாக வரலாற்றில் பற்றிப்படர்ந்தது. அதற்குக் கடந்தகாலமே இல்லை. அழிவின் கையெழுத்தாய் சாம்பல் உதிர்த்துச்செல்லும் நெருப்பு, நிகழ்காலத்தின் கிளைகளில் ஏறிப்படரும். எதிர்காலத்தை உற்றுநோக்கும் திறம் வாய்த்திருந்தால் அங்கும் நெருப்பு எரிவதை நீங்கள் உணர முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பூமியிலிருந்து மெல்ல எழும்பி வானத்திலிருந்து கீழே உற்றுநோக்கினால், ஏதேனும் ஒரு மூலையில் நெருப்பு எரிந்துகொண்டேயிருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆப்பிரிக்க காங்கோ இனக்கலவரமொன்றில் தனித்து விடப்பட்ட கால்பந்தின் மீதோ, சிவகாசித் தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் ஓடுகளிலோ, சிரியாவில் வீசப்பட்ட குண்டுகளிலிருந்து தெறித்து விழும் பொறிகளிலோ, தாராவியின் சேரிக்குடிசைகளிலோ எங்கேனும் எப்போதும் நெருப்பு எரிந்துகொண்டேயிருப்பதை உணர முடியும். ஆதரவற்ற பிணத்தை அணைந்துகொண்டு எரியும் நெருப்பு. கங்கையின் நடுமார்பில் எரிந்தபடி மிதக்கும் சடலத்தின் கண்களை நோக்கி முன்னேறும் தீ.

குறுங்கதை : 8 - அஞ்சிறைத்தும்பி

எலீ வீசலின் ‘இரவு’ படித்திருக்கி றீர்களா? இரவுகளைக் கொன்ற இரவு அது. தூக்கத்தின்மீது புரண்டெழுந்த இரவு. கனவுகளில் ஒரு மிருகத்தைப்போல் துரத்திய இரவு. ஹிட்லரின் நாஜி வதைமுகாமில் வதைபட்டு மீட்கப்பட்ட எலீ வீசலின் ‘இரவு’ புத்தகத்தைத் திறந்தாலே உங்கள் அறையைப் புகை சூழ்வதை உணரமுடியும். அந்தப் புகை, நாஜிவதைமுகாமின் புகைக்கூண்டிலிருந்துதான் கிளம்பியது. ஒரு வதைமுகாமிலிருந்து இன்னொரு வதைமுகாமுக்கு யூதர்களை மாற்றும்போது, மிருகங்களைப்போல், அவர்கள் நெருக்கி அடுக்கப்பட்ட ஒரு பெட்டியில் தீப்பற்றும். பின் அது புகைவண்டி முழுவதும் பரவத்தொடங்கும். தீப்பற்றியபடி ஒரு புகைவண்டி விரைந்துவருவதைக் கற்பனை செய்யுங்கள். அதுதான் நம் எதிர்காலம். நம் எதிர்காலம் அப்படித்தான் நம்மை நோக்கிவருகிறது. தீயும் அப்படித்தான் வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காண்டவப்பிரஸ்தம் என்னும் காட்டை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்னும் நகரை உருவாக்கினார்கள் அர்ஜுனனும் கிருஷ்ணனும். காடுகள் எரிந்தன. விதவிதமான கூக்குரலோடு பறவைகள் எரிந்தன. ஓலங்கள் பாதியில் மடிய விலங்குகள் எரிந்தன. பழங்குடிகள் எரிந்தனர். அவர்களின் மொழிகளும் எரிந்தன. அவர்களின் இசைகளும் கருவிகளோடு கருகின. பிறகு வரலாற்றில் மீண்டும் மீண்டும் தீப்பற்றியது. சத்தீஸ்கரில், உத்தரகாண்டில் காடுகள் எரிந்தன. பழங்குடிகள் கருகினர். ஆதியினத்தின் எச்சங்கள் எரிந்தன. நெருப்பு அமேசான் காட்டுக்கு இடம்பெயர்ந்தது. காலம் தீப்பிடித்த புகைவண்டியாய் விரைந்து ஓடுவது தெரிகிறதா? பைத்தியம் பிடித்து பூமிப்பந்தின் மூலைகளுக்கு அங்கும் இங்குமாய் அலைவது தெரிகிறதா?

காலத்தைக் கொஞ்சம் முன்னோக்குங்கள். அங்கேயும் தீ. சிறிய மயானமாய் யாகச்சாலையில் தீ வளர்க்கத்தொடங்கினர் வேதியர். ஆடும் மாடும் குதிரையும் நெருப்பில் எறியப்பட்டன. பற்றியெரிந்த நெருப்பில் உருகி வழிந்தன விலங்குகளின் மாமிசம். உருகி வீழ்ந்த கொழுப்பு நெய்யாய் மாற, வேள்வித்தீ பற்றியெரிந்தது. புத்தர் கிளம்பினார். ‘நெருப்பு அணையட்டும், அன்பு மலரட்டும்’ என்றார். புத்தர் புன்னகைத்தார். மீண்டும் பலநூற்றாண்டுகளுக்குப் பிறகு அணுகுண்டாய் நெருப்பு வெடித்தது. அதற்கு ‘புத்தர் புன்னகைத்தார்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இப்போது புத்தர்மீது தீ பற்றியெரிந்தது.

குறுங்கதை
குறுங்கதை

தெய்விக வானரம் தூதுக்குச் சென்ற இடத்தில் கடவுளின் மனைவியை மீட்டுவர முடியவில்லை. பேச்சுவார்த்தை முறிந்த கோபம் தலை தொடங்கி வால்வரை எரியத்தொடங்கியது. வாலே சீறும் நாகமானது. அந்த நெருப்பின் தலை பாம்பைப்போல் இருந்தது. தெய்விகத் தூது கிளைகளுக்குக் கிளை தாவியது. நகரம் எரிந்தது. காலத்தின் வாலில் பற்றிய தீயில் அதே நகரத்தில் நூலகம் எரிந்தது. மூன்று தசாப்தங்களுக்குத் தமிழர்கள்மீது தீப்பற்றியது. புத்தகங்கள் எரிந்தன; புத்தகங்களை எழுதிய தமிழர்கள் எரிந்தனர்; புத்தகங்களைப் படித்த தமிழர்கள் எரிந்தனர். வரலாற்றின், ஞாபகத்தின், மனிதர்களின் சாம்பல்களை அள்ளிச்சென்றனர் துவராடை அணிந்த துறவிகள். பிக்குகளின் வாலில் பற்றிய நெருப்பு புத்தனை எரித்தது.

அந்தப் பெண் தலைவிரிகோலத்துடன் அரண்மனை வந்தாள். அவள் அவிழ்ந்து விழுந்த கூந்தலில், அலைபாய்ந்த முடிக்கற்றைகளில் தீ. சிலம்பை வீசியெறிந்தாள். தெறித்து விழுந்த பரல்களில் பற்றியது தீ. நெஞ்சடைத்து விழுந்த மன்னனின் சடலத்தின்மீது பற்றியெரிந்தது தீ. அவள் இடதுமுலைக்காம்புகள், தீக்குச்சியின் முனைபோல் கருகி, கனன்றன. பாஸ்பரஸ் குண்டாய்த் தன் முலை திருகி வீசினாள். மீண்டுமொரு நகரம் பற்றியெரிந்தது. பசு, பார்ப்பார், பத்தினிப்பெண்டிர் தவிர்த்து நகரத்தை விழுங்கியது தீ.

நெருப்புக்கு சமகாலம் என்று எதுவுமில்லை. எல்லாக்காலமும் நெருப்புக்காலம்தான். எல்லாக்காலங்களிலும் நெருப்பு எரிவதைக் கடவுள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். யார் கண்டது? பிணங்களைப் புதைக்கும் வேலையை அவரே ஏற்றிருக்கக்கூடும். நெருப்பு...நெருப்பு... அந்த நெருப்பு ஒரு பாம்பின் தலையைப்போலிருந்தது. பாம்பு புரண்டு படுத்தது. வரலாற்றின் கீழ்ப்பகுதியில் தீப்பிடித்தது. யுகங்களை விழுங்கி வயிறு புடைத்த மலைப்பாம்பு நெருப்பு. ஒரு குடிசையில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று 44 பேரைத் தின்றபிறகும் பாம்பின் பசி அடங்கியதில்லை. பாம்பு காலந்தோறும் வளைந்து நெளிந்து ஆடியபடியே பயணிக்கிறது. காலத்தின் மகுடி ஓசைக்கேற்ப நடனமாடுகிறது. அது ஓர் அழகிய நடனம் என்று சொல்வதற்கில்லை. பட்டினத்தார் தன் கரும்புகளை எரியும் சுள்ளிகளோடு நெருப்பில் எறிகிறார். முன்னையிட்ட தீ, பின்னையிட்ட தீ, அன்னையிட்ட தீ, கொங்கையிட்ட தீ. தீயோடு தீ சேர்ந்து தீ எரிகிறது.

நீங்கள் ஒரு குறுங்கதையை எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றமடைந்திருப்பீர்கள். இது நெடுங்கதை. வரலாற்றில் இனியும் நடக்கப்போகும் நெடுங்கதை. நாம் நடக்கும் பாதைகளெங்கும் சாம்பல் அப்பியிருக்கிறது. நாம் இழந்தவர்களின் கல்லறைகளில் சாம்பல்நிற மலர்கள் பூத்தி ருக்கின்றன. சாம்பல்நிறக் கண்களுடன் தங்கள் கணவர்களை இழந்த பெண்களும் தந்தைகளை இழந்த குழந்தைகளும் காத்திருக்கி றார்கள். அனைவரின் கைகளிலும் தீப்பந்தங்கள்.

குறுங்கதை : 8 - அஞ்சிறைத்தும்பி

தன் ஆடைகள் அனைத்தையும் களைந்து நெருப்பில் வீசும் ஒருவன் நிர்வாண நடனம் ஆடத்தொடங்குகிறான். தன் பழைய காதல் கடிதங்களைத் தீயில் எரித்தபடி விம்மத்தொடங்கு கிறாள் ஒரு பெண். நெருப்பு அணையத் தொடங்கும் சமயத்திலெல்லாம் ஒரு விம்மலால் மீண்டும் அதைப் பற்றவைக்கிறாள். நெருப்பு பற்றிய உடலுடன் துண்டுப்பிரசுரங்களை விநியோ கித்தபடி அலைபாய்ந்து கொண்டிருக்கிறது ஒரு உடல். நாம் அதன் சாம்பலைப் புசித்துக்கொண்டி ருக்கிறோம்.

மதவழிபாட்டிடங்கள் எரிகின்றன. குண்டுவீச்சில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களும், ஓட இயலாதோர் நிறைந்த மருத்துவமனைகளும் எரிகின்றன. பச்சைக் காய்கறிகளுடன் சந்தைகள் எரிகின்றன. உலோக பாகங்கள் கருக, தொழிற்கூடங்கள் எரிகின்றன. அவர்கள் இவர்களை எரிக்கிறார்கள். இவர்கள் அவர்களை எரிக்கிறார்கள். நீங்கள் என்னை எரிக்கிறீர்கள். நான் உங்களை. நீங்கள் உங்களையே எரிக்கிறீர்கள். நான் என்னையே. நம் அடிவயிற்று மாமிசம் எரிகிறது. அது மிக மென்மையானது. பின் நம் தலைமுடி, மணிக்கட்டு, 16 பற்கள், பழுப்புநிற மீசை... அத்தனையும் எரிகின்றன.

இதைப்படிக்கும்போது இந்தக் காகிதம் தீப்பற்றியிருக்க வேண்டும்; கணினி என்றால், கணினி. ஒவ்வொரு எழுத்தின் தலையிலும் தீப்பற்றியிருக்கிறது. தீப்பிடித்த புகைவண்டியைப்போல் காலம் நம்மை நோக்கித்தான் வருகிறது.

- தும்பி பறக்கும்...