Published:Updated:

குறுங்கதை : 9 - அஞ்சிறைத்தும்பி

போலீஸ்காரனுக்கு என்னடி லீவு?

பிரீமியம் ஸ்டோரி

“ஒழுங்கா ஷூவுக்கு பாலீஷ் போடத்தெரியுதா? ப்ளஸ் ஒன் படிக்கிறே. சொட்டை சொட்டையா பாலீஷ் போடறே?” என்று அலுத்துக்கொண்டாள் மீனாட்சி.

“ஏண்டி, அவன் என்ன செருப்புக் கடையிலேயா வேலை பார்க்கிறான், ஷூ பாலீஷ் போட்டுப்பழக?” என்றார் பெரியசாமி.

“ஆமா, பையனை ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதே, கோபம் வந்திடுமே? வீட்டுல ரெண்டு ஆம்பளைங்க இருக்கீங் கன்னுதான் பேரு. ஒரு லீவு நாளில ஒட்டடை அடிக்கிறது, பாத்திரம் கழுவுறதுன்னு ஏதாவது உதவி பண்ணியிருக்கீங்களா?”

“போலீஸ்காரனுக்கு என்னடி லீவு? எப்போ அர்ஜென்ட்னு கூப்பிட்டாலும் போகணும்”“அதுசரி. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலைன்னு எங்கூர்ல சொல்லுவாங்க. ஒரு வாத்தியார் சம்பந்தமும் வந்துச்சு. அந்தாளைக் கட்டியிருந்தா, வாரத்துக்கு ரெண்டுநாள் லீவு. எனக்கு ஒத்தாசையா இருந்திருக்கும்.”

குறுங்கதை : 9 - அஞ்சிறைத்தும்பி

“ஐ ஜாலி! அப்போ நான் யாருக்குப் பிறந்திருப்பேன். அம்மா உனக்கா, அப்பாவுக்கா?” என்று கேட்ட சத்யனைச் செல்லமாக மண்டையில் தட்டினாள் மீனாட்சி.

“பேச்சைப்பாரு. ஸ்கூலுக்குக் கிளம்புடா” - மகனை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் மீனாட்சி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘மூத்திரத்தைக் குடிக்கிறமாதிரி குடிக்கிறியேன்னு சொல்லிட்டியேய்யா. கூல்ட்ரிங்ஸைக் குடிக்கிறப்பெல்லாம் அதுதானேய்யா ஞாபகம் வரும்?’ - சிங்கமுத்து காமெடியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார் பெரியசாமி. கையிலிருந்த டம்ளரில் இருந்த டீ தெறித்து, பனியனில் பட்டது.

“ஏங்க டூட்டிக்குக் கிளம்பலையா? காலையில டிவியைப் பார்த்து உக்காந் திருக்கீங்க. சுடுதண்ணி போட்டிருக்கேன். போய்க் குளிங்க” என்றாள் மீனாட்சி.

சென்னை நந்தனம் சிக்னல். மேலே தகித்துக்கொண்டிருந்த சூரியன் நடுமண்டையில் ஏறியது. என்ன காலம் இது, காலையில் அந்தக் குளிர் குளிர்கிறது, 11 மணியானால் வெயில் கொளுத்துகிறது, போனவாரம் இரண்டு நாள்கள் மழைவேறு. இந்தக் காலத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உச்சிமண்டையில் ஏறிய வெயில் கொஞ்சம் கொஞ்சமாய் உருகி, நெற்றி, மூக்குநுனி வழியே வழிய ஆரம்பித்திருந்தது. கன்னச்சதைகளில் வெம்மை. கொஞ்சம் கொஞ்சமாக வெயில் ஏறத்தொடங்கியது. ஆம்புலன்ஸின் சைரன் சத்தத்துக்கு சடசடவென்று வாகனங்கள் விலகத்தொடங்கின. பாக்கெட்டில் இருந்த செல்போன் அடித்தது. எடுத்துப் பேசிவிட்டு வைத்தபோது, சடாரென்று இடதுபக்கம் ஒதுங்கிய ஷேர் ஆட்டோ மீது, பின்னால் வந்த பைக் மோதியது. கீழே இறங்கிவந்த ஷேர் ஆட்டோ டிரைவருக்கும் பைக் இளைஞனுக்கும் இடையில் வெயில் இறங்கியது.

“பார்த்துவர மாட்டியா, கண்ணு பொடனியிலயா இருக்கு?” என்று ஆட்டோ டிரைவர் கேட்க, “யோவ், நீ முதல்ல இண்டிகேட்டர் போட்டியா? சடார்னு திரும்புறே” என்றான் உஷ்ணத்துடன் பைக் இளைஞன். பெரியசாமி அருகே போய் நின்றார்.

குறுங்கதை : 9 - அஞ்சிறைத்தும்பி

“என்னா தம்பி புதுசாப் பேசுறீங்க. ஆட்டோக்காரங்க, அதுவும் ஷேர் ஆட்டோக்காரங்க என்னைக்கு இண்டிகேட்டர் போட்டாங்க? ஷேர் ஆட்டோ, டவுன் பஸ், அரசியல் கட்சித்தலைவரு இவங்க பின்னாடில்லாம் போகவே கூடாது. எப்போ எங்கே நிறுத்துவாங்க, எங்கே டர்ன் ஆவாங்கன்னு யாருக்கும் தெரியாது” என்றார் அங்கேயிருந்த முதியவர் ஒருவர்.

“யோவ் பெரிசு, உங்கிட்ட கருத்து கேட்டாங்களா... போவியா” என்று விரட்டினார் பெரியசாமி. அந்தப் பஞ்சாயத்தை முடித்துவிட்டு மீண்டும் சிக்னல் அருகே வந்தார். பச்சை முடிந்து சிவப்பு ஒளிர்ந்த நேரம். ஒரு பைக் தாண்டியது. நடுத்தர வயது இளைஞன். இவர் கைகாட்டியதைக் கவனிக்காமல் கொஞ்ச தூரம் போய் நின்றான்.

“என்னடா, மயிரு மாதிரிப்போறே, கண்ணு தெரியலையா?” என்றார் பெரியசாமி.

“சார், மரியாதையாப் பேசுங்க.”

“என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு. ரெட் சிக்னல் போட்ட பிறகும் கிராஸ் பண்றே?”

“கவனிக்கலை சார். கவனிச்சிருந்தா கண்டிப்பா நின்னிருப்பேன்.”

குறுங்கதை : 6 - அஞ்சிறைத்தும்பி

“அப்படி என்னத்த கலெக்டர் வேலையைக் கழட்டுறே? என்ன வேலைடா பார்க்கிறே?”

“சார். ஃபைன் போடுங்க. கோர்ட்டுக்குக் கூட்டிட்டுப்போங்க. போடா, வாடான்னு பேசாதீங்க.”

“என்ன வேலை பார்க்கிறே?”

“கார்ப்பென்டர்.”

“பார்க்கிற வேலைக்கு உனக்கு மரியாதை ஒரு கேடு. பேப்பர்ஸை எடு.”

எல்லா பேப்பர்ஸும் சரியாகத்தான் இருந்தன. எச்சரித்து அனுப்பினார். வெயிலின் கடுமை அதிகமாகிக்கொண்டேயிருந்தது. ஹெல்மெட் போடாதவர்கள், சிக்னல் மீறுபவர்கள், ட்ரிபிள்ஸ் பயணிப்பவர்கள், குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்கள் என ஒவ்வொருவருக்கும் தக்கபடி வெயிலின் கொதிநிலை மாறியது. ஆனால் கார்களிடம் கடுமை காட்டமுடிவதில்லை. எந்தக் காரில் எந்தப் பாம்போ?

குறுங்கதை : 9 - அஞ்சிறைத்தும்பி

வழக்கமாகத்தான் அன்றைய நாளும் கழிந்தது. ஆனால் அந்த பைக் சம்பவம் இப்படி விபரீதமாக மாறும் என்று பெரியசாமி நினைக்கவில்லை. கார்ப்பென்டர், பெரியசாமி தன்னை அவதூறான வார்த்தைகளால் திட்டி இழிவுபடுத்தியதாக மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருந்தான். உடனே வந்து பார்க்கும்படி டிராபிக் சார்ஜன்டிடம் இருந்து அழைப்பு.

“ஏன்யா எழவைக்கூட்டுறீங்க? இந்த மாசத்தோட உன்னோட சேர்த்து இது நாலாவது கேஸ். திருச்சியில உன்னைய மாதிரி ஒருத்தன், ஹெல்மெட் போடலைன்னு பைக்கை எட்டி உதைச்சிருக்கான். பின்னாடி இருந்த பொண்ணு, புள்ளைத்தாச்சி விழுந்து கர்ப்பம் கலைஞ்சிருக்கு. கள்ளக்குறிச்சியில ஒரு வயசான அம்மா செத்திருக்கு. சிவகங்கையில ஒரு போலீஸ் வீல்ல குச்சியை விட்டு ஆட்டியிருக்கான். பையன் ஸ்பாட் அவுட். எல்லாரும் சேர்ந்து தாலியை அறுங்க” என்று சீறினார் சார்ஜன்ட்.

“சார், நானும் ஒண்ணும் செய்யலை. சும்மாத் திட்டத்தான் செஞ்சேன்.”

“அவன் கம்யூனிஸ்ட் கட்சியில இருக்கானாம். கட்சி சப்போர்ட் பண்ணுது. முதல்ல அவனைப் போய்ப் பார்த்து சமாதானம் பேசு. கேஸை வாபஸ் வாங்கச் சொல்லு.”

‘நானும் வருகிறேன்’ என்று ஆரோக்கியம் சாரும் கூட வந்தார். சீனியர். விஷயங்களைப் பக்குவமாகக் கையாள்பவர்.

“தம்பி, வேணும்னு பண்ணலை. டூட்டியில இதெல்லாம் சகஜம். பெரிசுபடுத்தாம விடுங்க.”

குறுங்கதை : 9 - அஞ்சிறைத்தும்பி

“எப்படி சார் விட முடியும்? நான் தப்பு செஞ்சிருந்தா ஃபைன் போடுங்க. கோர்ட்ல நிறுத்துங்க. அதென்ன சார், போலீஸ் யூனிஃபார்ம் மாட்டினா யாரை வேணும்னாலும் அவன், இவன், போடா, வாடான்னு கூப்பிடுவீங்களா? அந்த அதிகாரத்தை உங்களுக்கு யார் சார் கொடுத்தது?”

“தம்பி. உங்க கருத்தை நீங்க சொல்றீங்க. போலீஸ்காரனுக்கு எவ்ளோ பிரச்னை இருக்கு தெரியுமா? ஏகப்பட்ட வொர்க் லோடு, பிரஷர். விஐபி பாதுகாப்பு, பந்தோபஸ்துன்னு மணிக்கணக்கில நிக்கவெச்சிடுவாங்க. பொம்பளை போலீஸ் நிலைமையெல்லாம் ரொம்ப மோசம். நீங்க கம்யூனிஸ்ட் கட்சிதானே தம்பி, உங்க பிரச்னையைப் பேச சங்கம் இருக்கு. எங்களுக்கு என்ன இருக்கு?”

“அதுசரி சார். ஆனா நீங்க எல்லாரையுமா அவன், இவன்னு திட்டுறீங்க? உங்க பிரச்னைக்கு யார் காரணமோ அவங்ககிட்ட உங்க அதிகாரத்தையோ ஆத்திரத்தையோ காட்டுறதில்லை. கறுப்பா இருக்கிறவன், கைலி கட்டியிருக்கிறவன், தாடி வெச்சிருக்கிறவன், கூலித்தொழிலாளி, ஆட்டோ டிரைவர்... இவங்களைத்தானே மட்டமாத் திட்டுறீங்க?”

என்ன சொல்லியும் அவன் சமாதானமாக வில்லை. போதாததற்கு இந்தச் சம்பவத்துக்கு ஆதாரமும் இருக்கிறது. ஒரு ஆட்டோ டிரைவர் நடந்ததைத் தன் மொபைல்போனில் வீடியோ எடுத்திருக்கிறான். விசாரணை முடிவில் ஆறுமாதம் சஸ்பெண்டு. வாய் பேசாத குழந்தைகள் இல்லத்தை ஒருநாள் முழுவதும் சுத்தம் செய்யவேண்டுமென்று விநோதமான தீர்ப்பு அளித்தார் மனித உரிமை ஆணையத் தலைவரான, ஓய்வுபெற்ற நீதிபதி.

சஸ்பெண்டு முடிந்து வேலைக்குச் சேர்ந்ததற்குப் பிறகும் பெரியசாமிக்குத் தயக்கமும் பயமும் முழுமையாக நீங்கவில்லை. யாரைத் திட்டுவது, யாரிடம் பணிந்துபோவது என்று தெரியவில்லை. காலத்துக்கும் ஒரு களங்கமாகவே நின்றுபோனது. ‘யாரையாவது அடிச்சுட்டு சஸ்பெண்ட் ஆனாக்கூட பரவாயில்லை. ‘போடா’ன்னு சொன்னதுக்கு சஸ்பெண்ட் ஆயிருக்கார் இந்தாளு’ என்று சிரித்தது காவல்துறை வட்டாரம். ஆனால் தான் செய்ததில் என்ன தவறு, எதற்கு அவ்வளவு பெரிய தண்டனை என்று பெரியசாமிக்குத் தெரியாமலே ஓய்வுபெற்றுவிட்டார்.

இரவு 11 மணி ஆகிவிட்டது. சத்யனை இன்னும் காணவில்லை. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, பிரபலமான மோட்டார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒருமாதம் முடிந்துவிட்டது. ‘வந்துடுவான். படுங்க’ என்று மீனாட்சி சொன்னாலும் கேட்கவில்லை. வாசலுக்கும் ஹாலுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அரைமணிநேரத்துக்குப் பிறகு வந்த சத்யனின் கண்களில் அப்பாவைப் பார்த்த பதற்றம். குனிந்து ஷூக்களைக் கழற்றத் தொடங்கினான்.

“ஏன் இவ்ளோ நேரம்?”

“ஆபீஸ்ல வேலைப்பா.”

“நைட்டு 12 மணிவரைக்குமா வேலை?” என்று கேட்டவர், அந்த வாசனையைக் கண்டுபிடித்துவிட்டார். குடித்துவிட்டு வந்திருக்கிறானா?

“என்னடா குடிச்சிருக்கியா?”

“இல்லைப்பா. வேலை. ஆபீஸ்ல இருந்து வர்றேன்.”

“இல்லையே. நாத்தம் அடிக்குது. எங்க, ஊது”

வெயில் சத்யனின் ரத்தத்துக்குள் பாய்ந்தது. மதுவின் தீவிரமும் கோபமும் அவனை உச்சத்துக்குக் கொண்டுசென்றது.

“ஏன், மெஷின் ஏதும் இருக்கா, கொண்டுவந்து காட்டுங்க, ஊதுறேன். பெரிய புடுங்கியாட்டம் என்கொயரி பண்ணிட்டு... கிழட்டு...”

கழற்றிய ஷூவைக் கோபத்தில் வீசியெறிந்தான். நல்லவேளையாகப் பெரியசாமியின்மீது படவில்லை.

- தும்பி பறக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு