நாகரிக நாடோடிகள் ! - வாசகியின் நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan
``பகட்டாய்த் தோன்றும் பணமதை ஈட்ட பாசமதை விலையாய்க் கொடுத்துவிட்டுச் செல்கின்றேன். ’’

ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை ஆதிகால மனிதன் பெற்றிருக்கவில்லை. ஆதலால், அவன் உயிர் வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைத் தேடுவதிலேயே தம் காலத்தைக் கழித்து, தமக்கென்று நிலையானதொரு வாழ்விடமோ... வழக்கமோ அற்ற நாடோடி வாழ்க்கையைப் பின்பற்றினான். நாள்கள் செல்லச்செல்ல காலத்தில் மாற்றமும் கருத்தில் புதுமையும் கண்டான். வாழ்வதற்குத் தேவையான வாழ்வாதாரங்களின் இருப்பிடம் தேடிச் செல்வதை விடுத்து, வாழ்வாதாரங்களைத் தன் இருப்பிடம் தேடி வரச்செய்யும் யுக்திகள் கண்டான். விலங்கின் வழித்தோன்றல்கள் என்ற போதும் விலங்கல்ல நாம், அதன் விதிவிலக்கு என்றும் உணர்ந்தான். வாழ்வின் அர்த்தம் உணர்ந்தான், நியதிகள் வகுத்தான், நிபந்தனைகள் கொண்டான், மொழிகள் கண்டான், நன்மை தீமைகள் அறிந்தான், கற்களை உரசித் தீப்பொறி கண்டான், சக்கரம் மற்றும் கண்டுபிடிப்புகள் பல கண்டான். படிப்படியாய் புல் முதல் புவி வரை அனைத்தையும் கண்டான் என்பவை சிறுவயதில் பள்ளிக்காலத்திலே நாம் கற்றறிந்ததே. இத்தனைக்கும் மூலமாக, இறுதியில் நாகரிகமென்னும் சிறு தீப்பொறிக்கு வித்திட்டான் மனிதன்.

காட்டில் விழுந்த சிறு தீப்பொறி, அக்காட்டையே தன்வயப்படுத்தும் நாகரிகமென்னும் தன் ஈர்ப்பால் இப்புவியையே தன் வயப்படுத்தியது. எனினும் காட்டுத் தீயின் தொடக்கம் தெளிவற்ற புகைசூழ் மண்டலமே. தொடக்கத்தில் இப்புதுமைகள், பழக்கவழக்கங்கள், நாகரிகம் என்பதெல்லாம் மனிதனின் பார்வையில் தெளிவற்றதோர் புகைசூழ் மண்டலமாகவே தோன்றியது. பிற்பாடு, பிரகாசத்தின் உச்சமாய் விண்ணை முட்டும் ஜுவாலையாய் மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்த ஓர் அங்கமாகிப்போனது, நாகரிகம் என்னும் தீ. இன்றோ, மனிதன் அதன் உச்சமாய் விளங்குகின்றான்.
"அன்று 'நாம்' என்னும் வார்த்தைக்கு வித்திட்ட நாகரிகமோ,
இன்று 'நான்' என்னும் அகந்தைக்கு வித்திட்டது.
உடுத்தும் உடைதனில் கொண்ட நாகரிகம்
உள்ளத் தெளிவினில் இல்லை
பேசும் பாஷையில் கொண்ட நாகரிகம்
பேணும் பண்பில் இல்லை."

பழைமைக்கும் புதுமைக்கும் இடையே மாற்றமென்பதே பாலமாய், என்றும் மாறாததாய் நிலைத்திருக்கும். பழைமையின் பரிமாணம், பரிணாமம் மற்றும் அதன் மூலாதாரத்தில் ஏற்படும் மாற்றமே புதுமை என்று சொல்லப்படும். அந்த வகையில், ஆதிகால மனிதன் தன் அடிப்படைத் தேவைகளின் மூலாதாரமாய்க் கருதியது இயற்கையைத்தான். இன்றோ, மனிதன் தன் அடிப்படைத் தேவைகளின் மூலாதாரமாய்க் கருதுவது, 'பணம்' என்னும் செயற்கையைத்தான். இன்றைய சூழலில் பணமென்னும் மூன்றெழுத்து, மக்களின் மூச்சுக்காற்றாய் மாறியுள்ளது. அன்றோ, அலைந்து திரிந்து அடிப்படைத் தேவைகளை ஈட்டிய மனிதன், இன்று அலைந்து திரிந்து ஊர் ஊராய்ச் சுற்றி பணத்தை ஈட்டுகிறான். மனிதனின் திறமையால் உருவாக்கப்பட்டு, அவன் ஆளுமைக்கு உட்பட்ட பணம், இன்று அவன் திறமையை நிர்ணயிக்கும் கருவியாய் அவனையே ஆளுமை செய்யும் நிலையில் உள்ளது என்றால், இதற்கு மனிதனின் மோகமே காரணம்.
அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo
இன்றைய நிலையில், ஒரு மனிதன் பிறப்பது முதல் இறப்பது வரை அவன் குவியப் புள்ளி பணமென்ற ஒன்றைத்தான் குறிக்கிறது. குழந்தை பிறக்கும் முன்னரே அதன் பணி, வாழ்க்கைத் தரம் வாழ்க்கை முறை எல்லாம் அதன் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது. கைப்பாவைக் கூத்து என்றொரு கலை நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் பல நேரங்களில் யாரேனும் ஒருவருடைய கைப்பாவையாகித்தான் வாழ்க்கையைக் கழிக்கின்றோம்.
பிள்ளைத்தமிழ் என்றொரு சிற்றிலக்கியம் தமிழில் உண்டு. அது, மிகவும் அருமையாய் குழந்தையின் வளர் பருவங்களைப் பத்தாகப் பிரித்து, வருணனை மழையோடு கேட்போர் மனம் மயங்கும்படி அமைந்திருக்கும். அச்சிற்றிலக்கியத்தில் உள்ளதுபோல் இன்றைய குழந்தைகள் பத்துப் பருவங்களைக் காண்கின்றனரோ இல்லையோ, பிறந்த பத்து மாதத்திற்குள் பள்ளியில் பயில ஆயத்தமாகின்றனர். இரண்டரை வயதில் பள்ளி செல்லத் தொடங்கி, குறைந்தபட்சம் 18-லிருந்து 21 வயது வரை கல்விக் கடலில் கை நனைக்கிறது. பட்டாம் பூச்சியாய் சிறகடிக்க வேண்டிய வயதில் படிப்பு. அதன் பின்பு, அக்கம்பக்கத்து வீட்டார் மற்றும் சுற்றத்தாரின் பரிகாசப் பேச்சுகளுக்குப் பயந்து அலைந்து தேடி வெளிமாநிலத்திலோ இல்லை வெளிநாட்டிலோ, ஒரு வேலையையும் பெற்றுக்கொள்கிறான்.

அன்பையும் அரவணைப்பையும் பெறத் துடிக்கும் வயதில் பரிச்சயமில்லாத சூழலில், தனிமையின் பிடியில் கைப்பேசியின் சிறைக்குள் அகப்பட்டுக்கொண்டு, பிறப்பு இறப்பு சுபநிகழ்ச்சிகளான திருமணம், புதுமனைப் புகுவிழா, திருவிழா போன்ற அனைத்துக்கும் இன்றைய தொழில்நுட்பத் திறவுகளின் உதவியால் காணொலிக் காட்சியாகக் கண்டு, கண்ணீர் சிந்தித் தவிக்கிறான். அகிலத்தைத் தன் திறமையால் வெல்லவேண்டிய வயதில், நான்கு சுவர்களுக்கிடையில், காற்றும் புக முடியாத கட்டுமாடிக் குடியிருப்பில், தன் திறமைகள் அனைத்தும் காற்று வெளிதேடி முட்டிமோதி நொறுங்கி உடைந்துபோவதைக் கண்டு மனம் உடைந்து, சிந்தவும் கண்ணீர் அற்று தேம்பித்தேம்பி காலம் கழிக்கிறான்.
விண்ணை முட்டும் அடுக்குமாடி குடியிருப்புகள், வீதியின் இருபுறமும் அழகுக்காக வளர்க்கப்பட்டு ஒப்பனை செய்யப்பட்ட செடிகள், எந்நேரமும் துடைத்துவைத்தது போல் காட்சியளிக்கும் தார் சாலைகள், விடுதியில் உணவு, மொழி புரியாத வேளையிலும் தொழில் நிபந்தனைக்காக பேசக்கூடிய நட்புகள், தானியங்கிப் படிகள், தலைநிமிர்ந்து பார்க்கையில் கண் கட்டும் வனப்புடைய mall-கள், தனிமையில் நிவர்த்திதரும் பொழுதுபோக்கு அம்சங்கள், கண்கவரும் கண்ணாடியால் எதிரொலிக்கும் அலுவலகங்கள், குளுகுளு அறையில் பணி நேரம் தவராமல் அமர்ந்திருக்கும் பணி முடிந்ததும் தெரிந்த ஓரிரு நண்பர்களுடன் பேசிக்கொண்டே உண்ணும் சிற்றுண்டி, இன்னும் எத்தனையோ பிரமிப்பூட்டும் அம்சங்கள் கொண்டிருப்பினும், அலைமோதும் மனமோ அழகை ரசிக்க ஆயத்தமாகவில்லை. அதி காலையில் கேட்கும் சேவலின் கொக்கரக்கோ ஒலி மிதிவண்டியின் சலசலப்பு சத்தம் குளிர்ந்த தென்றல் பட்ஷிகளின் ஓசை, கடைத்தெருவின் பேரம், கூச்சல். மாலையில் வீட்டுத் திண்ணையில் அரட்டை, குழந்தைகளுடன் கொஞ்சல், அக்கம் பக்கம் வீட்டாருடன் அண்ணன் தம்பிபோல் உறவாடும் மனங்கள், சாலையோரக் கடைகளில் உண்ணும் சிறுபண்டம், அன்னையவள் கைமணத்தில் மதியம் அறுசுவை உணவு, அப்பாவின் அறிவுரையுடன் கிடைக்கும் இரவு உணவு, எப்போதும் சண்டைபோடும் சகோதரன், கேட்பவற்றை வாங்கித் தரும் சகோதரி, வார விடுமுறைகளில் வயல்வெளிகளில் செய்யும் வேலை. இதுபோன்ற இயற்கையோடு இணைந்த வாழ்வில் அங்கமாகிப்போன மனதால், ஆடம்பர செயற்கைத் தனமானதொரு வாழ்வை ரசிக்க இயலும். எனினும், அதனோடு இணைந்து வாழ்தலென்பது அவ்வளவு எளிதல்ல.

ஒவ்வொரு முறை சொந்த ஊருக்குச் செல்லும்போதும் மனதில் தோன்றும் குதூகலமே அதற்கு மிகப்பெரிய சான்று. கைநிறைய சம்பாதிப்பது, குடும்பத்தின் நலனுக்காக என்பதில் மனநிறைவு கொண்டாலும் கைக்கெட்டும் தூரத்தில் குடும்பம் இல்லையே என்ற மனக்குறையே மேலோங்கி இருக்கிறது.
சொந்த ஊரை நோக்கித் தொடங்கும் பயணமதில், ஊரை நெருங்க நெருங்க எத்தனையோ உல்லாசம், இனம்புரியா மகிழ்ச்சி, பயணம் முழுக்க வீட்டாரின் முகங்கள் ஒவ்வொன்றாய் வந்துபோக, இவனிடம் இந்தக் கதை சொல்ல வேண்டும் அம்மாவுக்காக வாங்கிய புடவைய குடுக்கும்போது, அவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க... நம்ம குட்டி வாண்டுக்கு Dress நல்லா இருக்கான்னு கேக்கணும், நண்பர்களைப் போய் பாக்கணும்... இதுபோன்ற எத்தனையோ எண்ணங்கள் மனதை நிறைத்து மகிழ்ச்சியில் தூங்காத பயணமாகிப்போகிறது அன்றைய பயணம். இருக்கத்தானே செய்யும். ஏனெனில், எத்தனையோ நாள்கள் இவர்களை என்று காண்போமோ என்ற ஏக்கத்திலும், உடன் யாருமில்லையே என்ற துன்பத்திலும் தூங்காமல் கழிந்திருக்கும். இன்று, கனவிலும் நினைவிலும் எண்ணிய மகிழ்ச்சியை எட்டிப்பிடிக்கும் வேளையில் அமைதியும் தூக்கமும் மாயமாய்ப் போவதில் வியப்பென்ன?

பணியாற்றும் இடம்தனில் பற்பல மொழிகள் பேசக்கேட்டு, நம் தாய்மொழியை எவரேனும் பேசமாட்டார்களா? என ஏங்கிய செவிகளுக்கு, திரும்பிய திசையெல்லாம் தாய்மொழி பேசுவதை கேட்கையில், காதினில் தேன் வந்து பாயுதென்று கவி சொன்னாரே... அது இதுதானோ? என்று மனம் மலைத்துப் பார்க்கிறது. இதுபோன்ற பல இனிய நினைவுகள் வழிநெடுக இன்பமாய் இதயத்தை நிரப்பிக்கொண்டிருந்தாலும், இன்னும் ஒரு வாரம்தான் விடுமுறை. பின்னர், மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நினைவும், பாலில் கலந்த ஒரு துளி தயிராய் மனத்தை வாட்டத்தான் செய்கிறது. ஊரில் இறங்கியதிலிருந்து பார்க்கும் ஒவ்வொரு முகமும் நமக்கு பரிச்சயப்பட்டதாய் இருக்கிறது. அவர்கள், அன்புடன் முகத்தில் புன்முறுவலுடன் "எப்படிபா இருக்க... எத்தனை நாள் லீவு... வா வீட்டுல சாப்பிட்டுப் போ" என்று கேட்கையில், அளவிட முடியாத மகிழ்ச்சி மனதைத் துளைத்துக்கொண்டு வெளிவர திக்குமுக்காடி, புன்சிரிப்புடன் வார்த்தை தடுமாறி "நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கிங்க" என்னும்போது, அளப்பரிய ஆனந்தமும் விருந்தோம்பலின் இருப்பிடமும் இதுவல்லவோ... என்ற எண்ணமும் உண்டாகுது.
அன்பின் விளைநிலமான என் அன்னையவள், காலை முதல் என் வருகைக்காக வாசலை எதிர்நோக்கி காத்திருந்து என்னைக் காணாமல், கண்ணிரண்டும் களைத்து வியர்வையின் துளிகள் முகத்தில் துளிர்விட, கண்ணீர் கண்ணில் பெருக்கெடுக்க என்னைக் கட்டியணைத்து உச்சி மோந்து, முத்தமிட்டு, அழுகையில் ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் என் அன்னையின் அன்பைச் சுமந்த இந்த ஒற்றை முத்தத்திற்கு ஈடாகுமா?

அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo
உன்னைப் பிரிந்த இத்தனை நாள்கள் என் வாழ்வின் மிகப்பெரிய இழப்பல்லவா? இதை என்ன விலை கொடுத்து நான் ஈடு செய்வேன். நீ மகிழ்வாய் என நான் அனுப்பிய பணம் அது. உன் மகிழ்ச்சியல்ல என் முகம் கண்ட இந்நொடியே மகிழ்ச்சி என்பதை உணர்த்தினாய் உன் துளிக் கண்ணீரால். கண்ணீர் மல்க உன் கையால் சமத்த உணவை ஊட்டினாய், அந்தச் சுவையின் அனுபவத்தை எந்த பெரிய உணவகமும் தந்திட முடியாது என்பதையும் அறிவேன். கண்ணீர்த் துளியதில் அன்பைப் பொழிந்த உன் அன்புக்கு நேரெதிர் அப்பாவின் அன்பு. கணிந்த பார்வையில், "என்னடா காலைல பஸ் ரொம்ப லேட் ஆயிடுச்சா?" என்று கேட்கையில், முகமதில் சிரிப்பைக் காட்டி, அகமதில் அன்பை மறைக்கும் அப்பாவின் அன்பை விவரிக்க எழுத்துக்களோ சொற்களோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறிது நேரம் இளைப்பாறி ஊர்சுற்றிப் பார்க்கையில், இயற்கை எழில்கொஞ்சும் இந்தச் சூழலை எத்தனை கோடிகள் கொடுத்தாலும் செயற்கையாய் செய்துவிட முடியுமா? இப்படி இன்பமும் மகிழ்ச்சியுமாய் வாரம் என்பது நொடியாய்ச் சுழல, திரும்ப பணிக்குச் செல்லும் நாள் நெருங்கையில் இன்னும் எத்தனை மாதங்கள் கழித்து உங்களைக் காண்பேனோ? வயதான பெற்றோருக்கு உடல்நிலை குறைபாடென்றால்கூட உடனே வர இயலாத நிலையில் இருக்கும் பாவியாய் ஆனேனே. மறுபடியும் அலைபேசியதில் குரல் கேட்டு அழும் நிலைக்குத் திரும்புகின்றேன்.
பகட்டாய்த் தோன்றும் பணமதை ஈட்ட பாசமதை விலையாய்க் கொடுத்துவிட்டுச் செல்கிறேன். இனிவரும் காலங்களில், எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் உண்மைப் பாசத்தை வாங்க முடியுமா என்று தோன்றவில்லை. சராசரி மனிதனாய் இருப்பதாலேயே சுழலும் காலத்தோடு போட்டிபோட்டு வாழ்க்கைப் பயணமதைத் தொடர, பாசத்தை விலையாய்க் கொடுத்து வாழ்கிறேன். சரித்திரம் படைப்பவனாய் சக்தி படைத்தவனாய் இருந்திருந்தால், சுழலும் காலமதை ஒரு நொடியில் சுழற்றிப் பிடித்திருப்பேன். பணமென்னும் மோகம் பற்றி விலைமதிப்பில்லாத பாசமதைப் பலியிடாதே! என்று காலத்தை மாற்றிச் சுழற்றியிருப்பேன். ஆயிரம் பொருமல்கள் நெஞ்சில் இருப்பினும், அனுதினமும் வாழ்வை பற்பல இன்னல்களுக்கு இடையே நடத்தும் சராசரி மனிதனால் நியதிகளை அனுசரித்து, காலம் இட்டுச் செல்லும் பாதையில் வாழ்வைத் தொடர்வதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்.

தொடக்கத்தில் சொன்னதுபோல், மனிதன் நாகரிகத்தின் உச்சமாய் மணிமுடியாய்த் திகழ்ந்தாலும், தன் அன்றாடத் தேவையான பணத்திற்காக அலைந்துதிரியும் நாடோடி வாழ்க்கையிலிருந்து இன்றும் மீளவில்லை. எனில், இன்றைய சூழலில் நவீன உலகின் நாகரிக நாடோடிகள் நாம்தானே!
-ஐஷ்வர்யா சந்திரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/