Published:Updated:

படைப்பிலக்கியமே என் காயத்துக்கான ஒரே மருந்து! `ஸரமாகோ: நாவல்களின் பயணம்'அனுபவம் பகிரும் எஸ்.வி.ஆர்.

எஸ்.வி.ராஜதுரை.
News
எஸ்.வி.ராஜதுரை.

அனைத்து காயங்களுக்கும் காலம் ஒன்றே ஒரே மருந்து என்பார்கள். ஆனால், தீராத வலியிலிருந்தும் வேதனையிலுருந்தும் தப்பிக்க படைப்பிலயக்கியத்துக்குள் மூழ்கி அந்த கூற்றை மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் எஸ்.வி.ஆர்

மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெரியாரிய அறிஞரும் ஆய்வாளருமான எஸ்.வி ராஜதுரை ஆகச்சிறந்த கலை இலக்கிய படைப்புகளை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்களில் முக்கியமானவர். ஆங்கில அறிவுலகிற்கு பெரியாரை கொண்டு சேர்த்ததில் இவரது பங்களிப்பும் அளப்பறியது. இலக்கியம், இசை, நாடகம், கவிதை என ஒவ்வொரு துறையிலும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த படைப்பைத் தேடித் தேடி ஆழ கற்றுணரும் வேட்கை கொண்டவர். அதே வேளையில் தான் கற்றவற்றை தமிழ் வாசக உலகிற்கும் அறிமுகப்படுத்த அவர் ஒரு போதும் தவறியதில்லை.

எஸ்.வி.ஆர் படைப்புகள்
எஸ்.வி.ஆர் படைப்புகள்

அம்பேத்கர், பெரியாரின் கருத்துகளை அவர் பார்வையில் எடுத்துரைத்த அதே வேளையில், கிராம்ஷி, ழான் பால் சார்த்தர் போன்றோரின் கோட்பாடுகளையும் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை கலை இலக்கிய படைப்புகளுக்காக அர்ப்பணித்து வரும் எஸ்.வி.ஆர், தமிழாக்கம் செய்வதில் கூடுதல் சிரத்தை மேற்கொண்டு மூல நூலின் சாரத்தை வழங்குவதில் கை தேர்ந்தவர். அதனால்தான் ஆகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராகவும் இவர் அறியப்படுகிறார். சிறந்த விமர்சகர். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று தொடர்ந்து குரல் எழுப்பி வரும் எஸ்.வி.ஆர் ஆகச் சிறந்த மனித உரிமை போராளியும் கூட.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதுமையிலும் அயராது படைப்பிலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்தி வரும் இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு முகத்தில் அக்கி ஏற்பட்டது. அதே சமயம் இதயமும் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையையும் செய்திருந்தார். அக்கியினால் கடுமையான வலியை அனுபவித்து வரும் எஸ்.வி.ஆர். வலியை மறக்க ஒவ்வொரு நாளும் 13 மணி நேரம் இலக்கிய படைப்புகளுக்குள் மூழ்கி 'ஸரமாகோ: நாவல்களின் பயணம்' என்ற படைப்பை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.அதோடு 'ரஷ்ய புரட்சி இலக்கிய சாட்சியம்' நூலின் இரண்டாம் பதிப்பை நேர்த்தியாக முடித்திருக்கிறார். இந்த இரண்டு நூல்களும் தமிழ் வாசகர்களின் கரங்களில் விரைவில் தவழ இருக்கிறது.

எஸ்.வி.ராஜதுரை
எஸ்.வி.ராஜதுரை

இந்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்த எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை,"முகத்தை பாதித்த அக்கியின் தாக்கம் ஒரு பக்க கண்ணையும் பாதித்தது. 24 மணி நேரமும் இடைவிடாத கடுமையான வலி இருந்துகொண்டே இருந்தது. எந்த மருந்து மாத்திரைகளாலும் வலி குறைந்த பாடில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த வேளையில், கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இலக்கியத்தில் மூழ்க ஆரம்பித்தேன். என்னுடைய முழு கவனத்தையும் எனது கனவு படைப்பான 'ஸரமாகோ நாவல்களின் பயணம்'மீது திருப்பினேன். ஒவ்வொரு நாளும் 13 மணி நேரம் படித்தும் எழுதியும் வந்தேன்‌. என் வாழ்நாளில் இப்படி ஒரு உழைப்பை செலுத்தியதேயில்லை. ஆனாலும் நான் விரும்பிய படைப்பில் மூழ்கியிருந்ததால், எனது வலியை மறந்திருந்தேன்.அதோடு 'ரஷ்ய புரட்சி இலக்கிய சாட்சியம்' நூலின் இரண்டாவது பதிப்புக்கான பணியையும் தொடங்கினேன். இதில் சில திருத்தங்கள் செய்ததோடு புதிதாக சில பகுதிகளையும் சேர்த்திருக்கிறேன்‌. என் வாழ்வின் கடுமையான காலமான கடந்த 5 மாத காலத்தில் உருவான இரண்டு நூல்களையும் எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட இருக்கிறது. இரண்டு நூலையும் படைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.