Published:Updated:

வாசிப்பும் வாழ்க்கையும்! #MyVikatan

Representational Image
Representational Image

இதுவரை படிக்காத புதிய வரிகளைப் பார்த்தால் எங்கிருந்து இந்த வரிகளைப் பிடிக்கிறார்கள் என்ற வினா மின்னல் பொழுதில் வரும்.

இன்றைய தலைமுறையினர் வாசிப்பை வசப்படுத்த.. இன்றைய தலைமுறையினர் வாசிப்பு என்பது இணையத்தில் Continue reading வந்தாலோ more வந்தாலோ அடுத்த பக்கத்துக்கு போய்விடுவார்கள். அல்லது அதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள். காரணம் நேரம் ஒதுக்கிப் படிக்கும் அளவிற்குப் பொறுமை இல்லை என்பதே. எண்ணம் விரைவாகவும் செயல் மந்தமாகவும் இருப்பதால் இந்த அவசரம். உடனே ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள விளைவதும், குறுகிய காலத்தில் அறிவு வளர ஏதேனும் இருக்கிறதா எனத் தேடும் நவீன இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர்.

Representational Image
Representational Image

இணைய உலகில் யாராவது புத்தக வரிகளைப் பதிவிட்டால் ஆச்சர்யமாய் இருக்கும். இதுவரை படிக்காத புதிய வரிகளை பார்த்தால் எங்கிருந்து இந்த வரிகளைப் பிடிக்கிறார்கள் என்ற வினா மின்னல் பொழுதில் வரும். எல்லாவற்றுக்கும் லைக் இட்டுக்கொண்டு..நானும் ஒரு காலத்தில் வாசித்தேன் என மற்றவரிடம் கூறி நம் குற்ற உணர்வுக்கு ஓர் ஒப்பனை செய்வோம். இருப்பினும் உள்ளூற நாம் நம் தகுதியை உயர்த்த ரகசியமாய் முயல்வோம்.

நாட்குறிப்பு எழுதலாம்..!

சிறுதுளி பெருவெள்ளம் என்பது நீருக்கு மட்டுமல்ல நம் அறிவுக்கும். நாள்தோறும் கண்ணில் படும் அல்லது ரசித்த வரிகளை அறிஞர்களின் கருத்தை நாட்குறிப்பேட்டில் எழுதலாம். ஆரம்பத்தில் சற்று கடினமாய்த் தோன்றினாலும் பின்னாளில் ஒரு அறிவுப் புதையலைக் கட்டமைக்கிறோம் என்பதை உணர்ந்தால் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யலாம். நாளிதழில் வெளியாகும் சில கட்டுரைகளில் யோசிக்க வைக்கும் பத்தி வந்தால் உடனே இதில் குறித்து வைத்துக்கொள்ளலாம்.

Representational Image
Representational Image

ஈ புக் திறந்து பார்க்கலாம் ..!

ஈ புக் எனும் வாட்ஸ்அப் குருப்பில் இணைந்தவுடன் நாமும் ஓர் இலக்கியவாதியான ஒரு நம்பிக்கை வரும். அது நிறைவேற அதில் வரும் அத்தனையையும் பதிவிறக்கம் செய்வோம். பதிவிறக்கம் செய்தாலே பாதி படைப்பாளன் ஆனதுபோல உள்ளூர சுரக்கும் ஒரு அட்ரினல் அதை உண்மை எனச்சொல்லும். அப்படி டவுன்லோடு செய்து மெமரிகார்டை நிரப்பிய புத்தகங்களை மறுமுறை திறந்து பார்ப்பது அரிதினும் அரிதாய் இருக்கும். இனி அவ்வாறு செய்யாமல் ஓய்வு நேரத்தில் நெட் ஆன் செய்யாமல் ஈ புக் படிக்க நேரம் ஒதுக்கலாம். பிடித்த வரிகளை இணையத்தில் பதிவிடலாம். இது நன்மதிப்பையும் வாசிக்கும் நண்பர் வட்டத்தையும் அதிகப்படுத்தும்.

நூலகம் செல்வது சாலவும் நன்று..!

நம்ம ஊர்ல கண்டுகொள்ளப்படாத இடங்களில் நூலகமும் ஒன்று. வாசிப்பில் தனித்துவம் பெற முதலில் இங்கு உறுப்பினராக வேண்டும். பதினைந்து நாள்களில் திருப்பித்தர வேண்டும் என்ற காலக்கெடு உள்ளதால் விரைவில் படித்துக்கொடுக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி வரும். குறிப்பாக புத்தகம் தேர்ந்தெடுக்கும் பயிற்சியை நூலகமே தரும். அட்டையை மட்டும் பார்த்து எடுப்பது, தலைப்பைப் பார்த்து தேர்ந்தெடுப்பது என அத்தனை அனுபவமும் புதிய புத்தகம் வாங்கும்போது நிச்சயம் உதவும். தற்போது வெளிவராத புத்தகங்கள், பழைமையான பல அறிய புத்தகங்கள் வாசிக்க உதவும். ஆண்டுக்கட்டணம் மட்டுமே உண்டு என்பதால் இதில் சேர்ந்து பயன்பெறலாம். நேரம் இருப்பின் அங்கேயே அமர்ந்து குறிப்புகளும் எடுக்கலாம். கேள்விப்படாத இலக்கிய இதழ்கள் அங்கு காணலாம். அதன் மூலம் புதிய நூல்கள் அறிமுகம், புதிய செய்திகள் அடுத்தகட்ட வாசிப்புத்தளத்துக்கு வழிகாட்ட உதவும்.

Representational Image
Representational Image

மாதம் ஒரு புத்தகம்..!

புதிய புத்தகம் வாங்கும் பழக்கம் உன்னதமானது. மாதத்திற்கு ஒரு நல்ல புத்தகம் வாங்கலாம். பிரபலங்கள் சொன்ன புத்தகத்தை முதலில் நாம் ஒரு பக்கமாவது படித்த பின் வாங்கலாம். அதில் அடிக்கோடிட்டுப் படித்தல் நலம். ஏனெனில் அதை மறுவாசிப்பு செய்யும் போது உதவிகரமாக இருக்கும். நல்ல கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது அதன் வழியே நம் மனதில் புதிய சொற்கள் ஊறும். இப்படியாகத் தேர்ந்தெடுத்து நம் மனதுக்குப் பிடித்தவை மட்டும் வாங்கினால் நமக்கு மட்டுமல்லாது நமக்கு பின்னால் வரும் நம் குடும்பத்திலுள்ள வாசகருக்கும் உதவும்.

வாசிப்பின் அடுத்த கட்டம்..!

முதல் நிலையில் பிரபலங்கள் மற்றும் தெரிந்த புத்தகம் வாங்கிய பிறகு அடுத்த நிலைக்கு வழிகாட்ட ஆள் இருக்க மாட்டார்கள். நாமே சுயமாய்த் தேர்ந்தெடுத்து படிக்கும் பக்குவம் வந்துவிடும். புனைவிலிருந்து கொஞ்சம் கட்டுரைகள், மொழி பெயர்ப்பு பக்கம் தேடுதல் அதிகமாகும். நீ கற்றுக்கொள்ள தயாராய் இருக்கும்போது உன் குரு உன் முன்னால் தோன்றுவார் என்பார்கள். அதுபோல அடுத்த கட்ட வாசிப்பிற்குத் தயாராய் இருக்கும்போது சில வழிகாட்டல்கள் நமக்கு கிடைக்கும். அதைப் பயன்படுத்தி நாம் நகரலாம். முக்கிய கட்டுரைகளை பத்திரப்படுத்தி வைக்கலாம். மீள் வாசிப்பு செய்ய உதவியாய் இருக்கும்.

Representational Image
Representational Image

வசப்படுத்திய வாசிப்பு என்ன செய்யும்..!

மனம் எப்போதும் புத்துணர்வோடு இருக்கும். ஒவ்வொரு நாளும் மனதை ஒருநிலைப்படுத்தி வாசிக்கும்போது மனது அமைதிப்பட்டு சிந்தனை விசாலப்படும். வாழ்வியல் சிந்தனையுடனான தத்துவங்கள் புதிய மனமாற்றத்தை ஏற்படுத்தும். நல்ல வரிகளோடு எண்ணங்களை மனது அசைபோடும். ``வாசிப்பு என்பது ஓர் அலைதல். உடலால் நாம் ஒருபோதும் நிறைவு செய்துவிட முடியாத அலைச்சலை ஆத்மாவால் நிகழ்த்திக் கொள்ளும் பயணம்” என எழுதியிருப்பார் சு.மோகனரங்கன். அறிவுத் தேடலை இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்

-மணிகண்ட பிரபு

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு