Published:Updated:

`நாம் சந்திக்கும் எல்லா மனிதர்களுமே நல்லவர்கள்... நாம் பார்க்கும் அனைத்துமே அழகு' - பிரபஞ்சன்

பிரபஞ்சன்
News
பிரபஞ்சன்

எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவு தினப் பகிர்வு!

தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஆளுமை பிரபஞ்சன். அவரின் 3 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று. பிரபஞ்சன் மனித மனங்களின் சரணாலயம். எப்போதும் பாசாங்கற்ற சொற்களால் தன்னையும், தன் எழுத்தையும் நிறுவிக் கொண்டவர். அன்பு மட்டும்தான் மனிதனின் விடுதலையை, காதலை, வாழ்வை மீட்டுத்தரும் வல்லமைகொண்டது என அழுத்தமாக கூறிச்சென்றவர்களில் முக்கியமானவர் எப்போதும் புன்னகை ததும்ப வாஞ்சையோடு, ``வாங்க, சந்தோஷம், என உரையாடலைத் தொடங்குவார். தமிழ் இலக்கியம், சென்னை வாழ்க்கை என எதுகுறித்துப் பேசினாலும் அதில் அவரின் பிரத்யேகமான நகைச்சுவை உணர்வும், அவருக்கே உரிய வாழ்வின் மீதான யதார்த்த போக்கும் அவரது பேச்சில் நிறைந்திருக்கும். பேசி முடித்துக் கிளம்பும்போதும் ``பேசலாம்" என உரையாடலை முடிப்பார். எல்லோருக்கும் பிடித்தமான வயது மூப்பான நண்பர் ஒருவரை ஞாபகப்படுத்தும் அவருடனான உரையாடல்கள். அதற்கு நேர் எதிரான சங்க இலக்கியம், மகாபாரதம், இராமாயணம் குறித்த புலமையும் அவரிடமிருந்தது. இவை இரண்டும் கலந்ததுதான் அன்பும் அன்பு சார்ந்த இடமுமான பிரபஞ்சனின் எழுத்துகள்.

பிரபஞ்சன்
பிரபஞ்சன்

அவர் உடல் நிலை மோசமாகிக் கிடந்தபோது அவரைச் சந்திப்பதற்காக புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவறை சந்திப்பதற்காகச் சென்றேன். எப்போதும் ஜிப்பாவும் வெள்ளை வேட்டியும் குங்குமம் வைத்ததைப் போன்ற நெற்றித்தழும்பும் தினந்தோறும் மழிக்கப்பட்ட முகமும்தான். ஆனால் அப்போது, நான் பார்த்த பிரபஞ்சன் அப்படி இல்லை. நிறைய தளர்ந்திருந்தார். ஆனாலும் சிரமப்பட்டு பேசியவர். சீக்கிரம் வந்துடுவேன் என்றார். நினைவில் நின்ற சில கதைகளைப் பேசினார். பேசி முடித்துக் கிளம்பும்போது தளர்ந்த குரலில் 'பேசலாம்' என்றார். அதன் பிறகான புத்தாண்டு தினத்தின்போது அவர் உயிருடன் இல்லை. 2018-ம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் பாண்டிச்சேரியில் உடல்நலக் குறைவால் அவர் மரித்துப் போனார். பாண்டிச்சேரி அரசு அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தமிழகத்தின் எழுத்தாளர்கள் மட்டுமின்றி வாசகர்கள், அரசியல், திரை ஆளுமைகள் என்ப பலரும் பிரபஞ்சனுடனான, அவரின் எழுத்துகளுடனான தங்கள் நினைவைப் பகிர்ந்தனர். அனைவரையும் ஏதோவொரு விதத்தில் பிரபஞ்சன் பாதித்திருக்கிறார் என்பதை அது உணர்த்தியது. பிரபஞ்சன், 55 வருடங்களாக தன் எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களிடையே உரையாடிக் கிடந்தவர். எந்தவிதமான பணிகளிலும் தன்னை நிரந்தமாகப் பொருத்திக் கொள்ளாதவர். நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் அவர் படைத்த பாத்திரங்கள் பலருக்கும் நெருக்கமானவை. மனிதரின் மனதுக்குள் பொதிந்திருக்கும் உணர்வுகளை, ரகசியங்களை தன் பாத்திரங்களின் வழியே உரையாடியவர். எழுத்தால் என்ன செய்துவிட முடியும். எழுத்து எதைக் கொடுக்கும் என்பதைப் பற்றிய சலனங்களின்றி வாழ்நாள் முழுக்க எழுத்தாளராகவே வாழ்ந்தவர் பிரபஞ்சன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாழ்வின் மீது எத்தனைக் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், வாழ்வை ஒருவித தன்னம்பிக்கையுடன் நேர்மறையான எண்ணத்துடன் அணுக வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் பிரபஞ்சன். நாம் சந்திக்கும் எல்லா மனிதர்களுமே நல்லவர்கள்... நாம் பார்க்கும் அனைத்துமே அழகு என அவர் சொல்வதுண்டு. நல்லவன், கெட்டவன் என மனிதனை பிரித்துவைத்து இடம் சுட்டிப் பொருள் விளக்கும் விளையாட்டுக்களில் அவருக்கு ஒருபோதும் விரும்பமிருந்ததில்லை. மனிதன் அவன்போக்கில் நல்லவனாகவும், கெட்டவனாகவும் பிறருக்கு தெரிகிறான். மனிதன் அவன் கற்றுணர்ந்த அறத்தின் வழியே இதைச் செய்கிறான் என்பவர். பிரபஞ்சனின் சுவாரஸ்யமான மனிதர் எனப்பலரும் சொல்வதுண்டு. நகைச்சுவை ததும்பும் அவரின் மேடைப் பேச்சுகள் அலாதியானவை. தாடிகள் மழித்து, திருத்தப்பட்ட மீசை, அடர்நிற ஜிப்பா பட்டு வேட்டி, நெற்றியில் குங்குமக் கீற்று எனத் தன்னை நேர்த்தியாகப் பார்த்துக்கொள்வார். பேச்சுகளின் இடையிடையே அவர் வாழ்வில் அவருக்கு நடந்த பல விஷயங்களை நையாண்டியாகச் சொல்லிச் சிரிப்பார்.

அவரின் கதைகளில் பெரும்பாலும் குரலற்றவர்களின் பாத்திரங்கள் நிறைந்து நிற்கும். அவர்களின் காதல், ப்ரியம், ரகசியம், துயரம், நுண்ணுணர்வுகள் இவற்றைச் சார்ந்தே அவரது புனைவுலகம் நிறைந்திருக்கும். `ஒரு மனுஷி' , `மரி என்கிற ஆட்டுக்குட்டி', `அப்பாவின் வேஷ்டி' என இவரின் பல சிறுகதைகள் அதற்கு சாட்சியமாக உள்ளன.

எழுத்தாளர் பிரபஞ்சனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார், எழுத்தாளர் மற்றும் திரைப்பட கதாசிரியரான பாஸ்கர் சக்தி. ``பிரபஞ்சனோடு மிக நெருங்கிப் பழகியவர்களுக்குதான் தெரியும், அவர் எவ்வளவு உன்னதமான மனிதர் என்று. அவருடைய எழுத்துக்கும் குணத்துக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. அவரின் கதைகளை ஆழ்ந்து படிப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும், அவர் கதைகளில் கெட்டவர்களே கிடையாது என்று. ``இந்த உலகத்தில் இது அழகு இது அழகில்லை என்று எதையும் சொல்ல முடியாது. நாம் சந்திக்கும் எல்லா மனிதர்களுமே நல்லர்வர்கள்தான். நாம் பார்க்கும் அனைத்து விஷயங்களுமே அழகுதான்" என பிரபஞ்சன் அடிக்கடி கூறுவார். பாஸ்கர் சக்தி பிரபஞ்சன் நினைவுகள் குறித்து பேசியதன் முழு வடிவம் Podcast - ஆக..

எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றிய தன் நினைவுகளை பகிர்கிறார் எழுத்தாளர் தமயந்தி.

``ஒரு முறை பிரபஞ்சன் அவர்கள் என்னிடம் `நீங்கள் எந்த மாதம் பிறந்தீர்கள் தமயந்தி?' எனக் கேட்டார், அதற்கு நான், 'எனது பிறந்தநாள் ஏப்ரல் 15' என்றேன். அதைக் கேட்டு, சிறு குழந்தைபோல அத்தனை குதூகலத்தோடு தானும் ஏப்ரல் மாதத்தில் பிறந்ததாகவும், அதனால்தான் நாம் இருவரும் பல விஷயங்களில் ஒத்துப்போவதாகவும் கூறினார். இந்த மாதிரியான ஓர் இடத்தை அவர் எனக்குக் கொடுத்ததே எனது மிகப்பெரிய வரமாகக் கருதுகிறேன்.

எழுத்தாளர் தமயந்தி பிரபஞ்சன் குறித்துப் பேசியதன் முழுவடிவம் Podcast - ஆக

ஒவ்வொரு கலைஞன் மறைவின் போதும் கலைஞன் தன் படைப்புகளின் வழியே வாழ்வான் என நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்வது வழக்கமான ஒரு சம்பிரதாயமாகவே நிற்கிறது. பிரபஞ்சனே கூட இதைவேறு விதமாகக் கூறியிருக்கிறார். சென்னையின் நிறத்தை மக்களும், மக்களின் நிறத்தை சென்னையும் பூசிக்கொள்கிறார்கள் என பிரபஞ்சன் கூறியதுண்டு. சென்னை திருவல்லிக்கேணியின் மேன்சன்கள், புத்தக வெளியீட்டு விழா மேடைகள், சென்னையின் தனிமையான சாலைகள் என பிரபஞ்சன் தன் நிறத்தை வாசத்தை விட்டுச்சென்றிருக்கிறார். அந்த 'பிரபஞ்ச' வாசம் என்றும் நிலைத்திருக்கும். பிரபஞ்சன் எப்போதும் நினைவிலிருப்பார்.