Published:Updated:

‘இறைவன் கொடுத்த வரம்!’ - ஓவியர் எஸ்.முருகக்கனி

ஓவியர் எஸ்.முருகக்கனி
பிரீமியம் ஸ்டோரி
ஓவியர் எஸ்.முருகக்கனி

கலை

‘இறைவன் கொடுத்த வரம்!’ - ஓவியர் எஸ்.முருகக்கனி

கலை

Published:Updated:
ஓவியர் எஸ்.முருகக்கனி
பிரீமியம் ஸ்டோரி
ஓவியர் எஸ்.முருகக்கனி
இன்று பெரும்பாலானவர்கள் செல்போனில்தான் கண்விழிக்கிறோம். அரைகுறை உறக்கத்தில் கண்கள் மூடியபடியே கைகளால் தடவி செல்போனை எடுத்துப் பார்ப்பது நம்மில் பலருக்கும் வழக்கமாகிவிட்டது. ஒரு நாளைத் தொடங்குபோது முதன்முதலில் நாம் பார்க்கும் விஷயங்கள் அந்த நாளை நம்பிக்கையோடு கடக்க உதவும் என்கிறது சாஸ்திரம். காலை யில் அவரவர் உள்ளங்கைகளில் கண்விழிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. சிலருக்கு மலர்கள்; சிலருக்கு விருப்பமான முகங்கள்; பெரும்பாலான வர்களுக்கு நாள்காட்டி. அதுவும் இறைவடிவங்கள் தாங்கிய நாள்காட்டிகள் அற்புதமானவை.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கவலைகளோடும் கண் விழித் தாலும் காலெண்டரில் புன்னகைக் கும் ராஜ அலங்காரப் பழநி முருகன் நம்பிக்கை தந்துவிடுவார். பணத் தேவைகளோடு தொடங்கும் தினமா? மார்பில் மகாலட்சுமியைத் தாங்கிய வேங்கடவன் `நான் பார்த்துக்கொள்கிறேன்' என்பார். அனுதினமும் ஆலயம் சென்று கருவறை தரிசனம் செய்ய முடியாத சூழலில்... நம் மனச்சுமைகள், காலெண்டரில் கடவுளைக் கண்டதும் கரைந்துவிடும்.

கோயில்களில் மூலவரைப் புகைப்படம் எடுக்கும் வழக்கம் நம் மரபில் இல்லை. அதற்கு மாற்றாக இறைவனைக் கண்டு வரைந்து அதையே அச்சிடுவது வழக்கம். அனைத்து ஓவியர்களுக்கும் தெய்வத் திருமுகங்கள் வசமாகி விடாது. இறையருளும் கலை ஞானமும் கைகூடும் கலைஞர் களுக்கே அது சாத்தியம். அவ்வாறு தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக ஓவியப் பணி செய்து கொண்டிருக்கும் ஐயா எஸ். முருகக்கனியின் படைப்புகள் அற்புதமானவை.

நாம் பார்த்திருக்கும் பல்வேறு காலெண்டர்களில் அருள்பாலிக்கும் இறை வடிவங்களில் பெரும்பாலனவை ஓவியர் முருகக்கனி வரைந்தவையாக இருக்கும். 83 வயதிலும் தணியாத கலை ஆர்வத்தோடு பணிசெய்யும் முருகக்கனி ஐயாவிடம் அவரின் கலை குறித்து உரையாடினோம்.

‘இறைவன் கொடுத்த வரம்!’ - ஓவியர் எஸ்.முருகக்கனி

``எனக்குச் சின்ன வயசுலேர்ந்தே ஆன்மிக ஆர்வம் அதிகம். அதுக்குக் காரணம் என்னைப் பெத்தவங்க. அப்பா நல்லா பாடுவார். நுட்பமான கலையார்வம் உள்ளவர். மண்ணைப் பிடிச்சார்னா நிமிஷத்துல பொம்மை செய்துருவார்.

அதைப் பார்த்து எனக்கும் ஓர் ஆர்வம் வந்து நானும் செய்வேன். அப்பா ஃபோர் மேனாகத் தான் வேலை செய்தார். ஆனா எந்தக் குறை யும் இல்லாம எங்களை வளர்த்தார்.

அம்மாவும் அப்பாவும் நிறைய பக்திக் கதைகளைச் சொல்லியேதான் என்னை வளர்த்தாங்க. எனக்கும் புராணக்கதைகள்னா ரொம்ப இஷ்டம். அந்தக் காலத்துல எல்லாம் நிறைய புராணக்கதைகள் சினிமாவா வரும். எங்கப்பாவுக்குப் பெரிய வருமானம் எல்லாம் கிடையாது. ஆனா, நான் நல்ல விஷயங்களைப் பார்க்கணும்னு விரும்புவார்.

அதனால் என்னைப் புராணப் படங்களுக்கு அனுப்பிவைப்பார். அதனாலதானோ என்னவோ, என் மனசுல பக்தியும் ஒழுக்கமும் அப்படியே பதிஞ்சுபோச்சு. எவ்வளவு திறமையான ஆளாக இருந்தாலும் பக்தியும் ஆன்மிக ஈடுபாடும் இல்லாம ஓவியங்கள்ல இறைவனின் சாந்நித் தியத்தைக் கொண்டுவர முடியாது. அந்த வகையில் எனக்குள் வேரூன்றிப் போன பக்தியும் ஆன்மிக ஈடுபாடுமே இன்றைக்கு வரைக்கும் எனக்குள்ள இருக்கிற கலையோட ஆணிவேர்.

சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது கொண்டைய ராஜூ என்கிற பெரிய ஓவியரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அப்போ அவர், தான் போட்ட சில ஃப்ரீகேண்ட் ஸ்கெட்ச்சுகளைக் கொடுத்தார்.

அவற்றைப் பார்த்துக்கிட்டே நானும் வரைந்து பார்த்தேன். அதுவரைக்கும் நான் என்னவா ஆகணும்னு திட்டம் எல்லாம் இல்லை. நல்லா படிப்பேன். பாடல்கள் பாடுறதுல நிறைய ஆர்வம் இருந்தது.

ஆனா, அவர் வரைந்த தெய்வப் படங்களைப் பார்க்கப் பார்க்க எனக்கும் வரையணும்னு ஓர் ஆசை உண்டாச்சு. அன்று அவர் போட்ட பிள்ளையார் சுழிதான் நான் ஓவியனாக உதவியது.

‘இறைவன் கொடுத்த வரம்!’ - ஓவியர் எஸ்.முருகக்கனி

நான் வரைஞ்சு பார்க்க ஆரம்பிச் சேன். எங்க அப்பா பென்சில், ஸ்கெட்ச், கலர்ஸ்னு நான் எது கேட்டாலும் வாங்கித் தருவார். பள்ளிக் கூடத்துலயே வரையறதுக்கு இவ்வளவு பொருளோடு வர்றது நான் மட்டுமாத்தான் இருப்பேன். அப்போ இருந்து கொஞ்சம் கொஞ்சமா வரைஞ்சு வரைஞ்சு பழக்கமாச்சு.

பள்ளிப்படிப்பை முடிச்சிட்டு ரவி சார் என்கிற ரவீந்திரன்கிட்ட வந்து அஸிஸ்டெண்டா சேர்ந்தேன். அப்போ அவர்தான் பெரிய ஆர்ட்டிஸ்ட். அதன்பிறகு 11 வருஷம் அவர்கூடயே இருந்தேன். இந்தக் காலகட்டத்துலேயே முழுமையாக நானே வொர்க் பண்ணும் அளவுக்கு என்னை அனுமதிப்பாங்க.

நானும் அவங்க எதிர்பார்க்கிறதைச் செய்துகொடுப்பேன். 1967-க்குப் பிறகு நான் தனியா இயங்க ஆரம்பிச்சேன்.

அது அற்புதமான காலகட்டம். காலெண்டர்களுக்குன்னு பெரிய மார்க்கெட் உருவான காலம். இந்தியா முழுவதும் இருந்து கம்பெனிக்காரங்க வந்து படம்போட்டு பிரிண்ட் பண்ணி வாங்கிக்கிட்டுப் போவாங்க. அதனால் வேலைகளுக்குப் பஞ்சமே இருக்காது.

நான் தனியா வொர்க் பண்ண ஆரம்பிச்சதும் வரைஞ்ச முதல் படம் விநாயகர் படம். விநாயகர் நிற்கிற மாதிரியும் பின்புலத்துல திருச்சி மலைக்கோட்டை இருக்கிற மாதிரியும் வரைஞ்சேன்.

ஒரு ரகசியம் சொல்லவா, அப்போ நான் மலைக்கோட்டையைப் படங்கள்ல பார்த்ததோட சரி; நேரில் தரிசித்தது இல்லை. அதுக்கப்புறமா நிறைய தடவை போயிருக்கேன்!

மனசுல உச்சிப்பிள்ளையாரை வேண்டிக்கிட்டே போட்டதாலோ என்னவோ அந்தப் படம் எனக்கு நல்ல பேர் வாங்கித் தந்தது. அப்புறம் ஒவ்வொரு சாமியா வரைஞ்சு கொடுக்க ஆரம்பிச்சேன். இதுல குறிப்பிட்டுச் சொல்லணும்னா திருப்புகழ் தலங்கள் சில வரைஞ்சதைச் சொல்லலாம்.

தேனியில தனியார் மில் நிறுவனம் ஒன்று. அவங்களுக்குப் பல ஆண்டுகள் காலெண்டர் பண்ணிக் கொடுத்திருக் கேன். இதுல சிறப்பு என்னென்னா... அவங்க முருகன் படம் வேணும்னு கேப்பாங்க. அதிலும் அருணகிரிநாதர் பாடிய தலங்களா இருக்கணும்.

அதற்காகப் பல கோயில்களுக்குப் போய் தரிசனம் பண்ணி, அங்கையே ஓரிருநாள் தங்கி ஸ்கெட்ச் போட்டுக் கிட்டு வரைஞ்சு, பிறகு வந்து கலர் பண்ணிக் கொடுக்கணும். அப்படிப் 15 கோயில்களுக்கும் மேல வரைகிற பாக்கியம் கிடைச்சது.

நான் போய் படம் வரைய அனுமதி கேட்டு யாரும் மறுத்ததே கிடையாது. கோயில் பட்டர்களாகட்டும் மடாதி பதிகளாகட்டும் எல்லோரும் அவங்க அவங்க தரப்புல என்ன ஒத்தாசை செய்ய முடியுமோ அதைச் செய்து கொடுத்திருக்காங்க. குறிப்பிட்டுச் சொல்லணும்னா பழநி தண்டாயுத பாணியை வரைஞ்சதைச் சொல்லலாம்.

எனக்குத் தெரிஞ்சவர் சூர்யராஜ்னு பேரு. அப்போ கோயில் அதிகாரியா இருந்தார். அவர் என்னை அழைத்து பழநி ஆண்டவரை வரைந்து தர முடியுமான்னு கேட்டார். என்ன பாக்கியம் பாருங்கள். முடியாதுன்னு யார் சொல்லுவா... உடனே சரின்னு சொன்னேன். சுவாமியை தரிசனம் பண்ண அழைச்சிக்கிட்டுப் போனார். அப்போ அபிஷேக நேரம். சுவாமிக்கு அத்தனை விதமான அபிஷேகங்களும் நடந்தன. கண்குளிர தரிசிச்சேன். அப்படி ஒரு திவ்ய தரிசனம் வேற யாருக்கும் கிடைக்குமான்னு தெரியலை. எனக்குக் கிடைச்ச பாக்கியம் எத்தகையதுன்னு பாருங்க.

அதன்பிறகு ராஜ அலங்காரம். சுவாமிக்குக் கோயில் கருவூலத்துல இருக்கிற எல்லா நகைகளையும் கொண்டு வந்து பூட்டினாங்க. முக்கிய மான நகைகள் வேல்கள் எல்லாம் அன்றைக்கு வெளில வந்து எனக்கு தரிசனம் கொடுத்தன!

‘இறைவன் கொடுத்த வரம்!’ - ஓவியர் எஸ்.முருகக்கனி

அப்படி சர்வ அலங்கார சொரூபனா எத்தனை பேர் தரிசனம் பண்ணியிருப் பாங்கன்னு தெரியலை. இரண்டு மணிநேரம் அப்படியே சுவாமி முன்னாடி அமர்ந்து வரைந்தேன். திருப்தியா அமைஞ்சது. அதேபோல மறுநாளும்போய் அமர்ந்து இன்னொரு ஸ்கெட்ச் போட்டு எடுத்துக்கிட்டேன்.

ஊருக்கு வந்து படம் வரைஞ்சு முடிச்சபோது என் மனக்கண்ல இருந்த அந்தப் பழநி ஆண்டவன் தத்ரூபமா படத்துல இருந்தார். அதைப் பார்த் ததும் என் மேனியெல்லாம் சிலிர்த்துப் போச்சு. அந்தப் படத்தை அந்தப் பழநி ஆண்டவருக்குக் காணிக்கையா சமர்ப்பணம் பண்ணிட்டேன்.

இதேபோல் நான் சுவாமி முன்னால் அமர்ந்து வரைந்த சுவாமிகள்ல திருச்செந்தூர் முருகனும் ஒண்ணு. இரண்டு கோயில்களை என்னைக் கூப்பிட்டு வரையச்சொன்னதை என் பாக்கியமாகவே கருதுகிறேன்.

ஒருமுறை மயிலம் போயிருந்தேன். அப்போ மடாதிபதி, ``மக்கள் வந்து போகிற நேரத்துல வேண்டாம். தரிசன நேரம் முடிஞ்சதும் தனியா இருந்து வரை''ன்னு சொன்னார்.

அதன்படியே செய்தேன். தனியா சுவாமி முன்னாடி அமர்ந்து வரையறப்போ ஏற்பட்ட அனுபவமே தனி. நானும் சுவாமியும் மட்டும்... அந்தத் தருணத்தில் உள்ளுக்குள் ஏற்பட்ட சிலிர்ப்பு இருக்கே... அதை வார்த்தைகள்ல சொல்ல முடியாது. அப்படியே கண்களால அந்தத் திருவுருவை வாங்கிக் கைகளால வரைஞ்சு முடிச்சேன்.

அதேபோல மதுரை மீனாட்சி அம்மனை வரைஞ்சது தனி அனுபவம். எனக்கு 1962-ல் கல்யாணம் ஆச்சு. மனைவி பேரு சுதந்திர ஜோதி. அப்போ அவங்க அப்பா, அம்மா மதுரைல இருந்தாங்க. அதனால அடிக்கடி மதுரை போவேன்.

அப்போல்லாம் கையில ஒரு நோட்டை எடுத்துக்கிட்டு கோயில்ல இருக்கிற ஒவ்வொரு சிற்பத்தையும் தூணையும் வரைஞ்சிருக்கேன். மீனாட்சி அம்மனை படத்துக்காக வரைஞ்சது தனி அனுபவம். அம்மா முன்னாடி அமர்ந்து அம்மாவைப் பார்த்துக்கிட்டே வரைஞ்சேன்.

ரங்கம் தன்வந்திரி பகவானை வரைவதற்கு சுவாமி பக்கத்துலையே உட்கார அனுமதிச்சி, வரைய வசதி செய்துகொடுத்தாங்க. இந்த பாக்கியம் எல்லாம் யாருக்குக் கிடைக்கும்,

இப்படிப் பெரிய பெரிய கோயில் களுக்குதான் போய் படம் போடுவேன்னு இல்லை. கிராமங்கள்ல இருக்கிற சின்னச் சின்னக் கோயில் களுக்கும் ஆர்வமா போவேன். சில குலதெய்வங்களைப் போட்டுத்தரச் சொல்லிக் கேப்பாங்க. அப்போ அந்தக் கோயிலுக்குப் போய் பயபக்தியோட வரைஞ்சு கொடுப்பேன்.

என் வாழ்க்கையில் இனிமையான ஓர் அனுபவம்னு சொன்னா, சபரி மலை ஐயப்பனை வரைந்த அனுபவத் தைச் சொல்லுவேன். 1980-ல ஒரு தனியார் நிறுவனம் காலெண்டருக்காக சபரிமலை ஐயப்பனை வரையணும்னு சொன் னாங்க. அதுக்காக சபரிமலைக் குப் புறப்பட்டோம். இயற்கை அழகை ரசிச்சிக்கிட்டே பயணம் போனோம்.

பம்பா நதிக்கரைக்குப் போய்ச் சேர்றப்போ இருட்டிடிச்சி. எதிர்க் கரைல கன்னிவிநாயகர் கோயில். சபரி மலையில் `வண்ணச் சந்திரோ தயம்'னு பாட்டு போட்டாங்க. அப்போதான் வானத்தைப் பார்த்தேன்.

பௌர்ணமி நிலா அழகா காட்சி கொடுக்குது. இதைவிட ஓர் ஓவியனுக்கு மனத்தை உற்சாகமூட்ட வேறு என்ன வேணும்? மறுநாள் காட்டுப்பாதைல அழகை ரசிச்சிக்கிட்டே போய் சுவாமியை தரிசனம் பண்ணினோம். சுவாமிக்கு அபிஷேகம் பண்ணும்போது முன்னே இருந்து பார்த்தோம். அப்போ அந்த அபிஷேகத்தோட குளுமை காத்துல நம்ம மேலையும் படும்; மேனி சிலிர்க்கும். இதெல்லாம் இப்போ சாத்தியமேயில்லை. அப்படிப் படம் வரைஞ்சு எடுத்துக்கிட்டு வந்தோம்.

அந்தப் படத்தை எல்லோரும் பாராட்டினாங்க. இன்னைக்கு வரைக்கும் அந்தப் படம் பிரிண்ட் ஆகிக்கிட்டுத்தான் இருக்கு.

இப்படிப் பல கோயிலுக்குப் போய் படம் போட்டிருக்கிறென். ஆனா, ஒரு முறை அமைந்த அலங்காரம் மறுமுறை இருக்காது. மாறுபட்ட திருக் கோலங்கள்ல தரிசனம் கிடைக்கும். இதை நான் தெய்வ சங்கல்பம்னுதான் சொல்லுவேன்.

இறைவன் எனக்குக் கொடுத்த வரம் இந்தக் கலை. என்னோட ஓவியங்கள்ல சுவாமியோட முகங்கள் தமிழக மற்றும் வட இந்திய பாணி கலந்த ஒரு கலவையா இருக்கும். இது மக்களுக்கு ரொம்பப் பிடிச்சது. நான் இதை வலிஞ்சு செய்யல. அதுவா அமைஞ்சது.

‘இறைவன் கொடுத்த வரம்!’ - ஓவியர் எஸ்.முருகக்கனி

மக்கள் தினமும் நம்பிக்கையோடு பார்த்து வணங்கும் சுவாமியோட உருவங்களை வரைஞ்சு கொடுக்கிறதே வேலையா அமைஞ்சது பாக்கியம். இப்படி ஒரு பாக்கியம் வேற யாருக்குக் கிடைக்கும் சொல்லுங்க...'' என்று மனம் நிறைந்த நெகிழ்ச்சியோடு சொல்லி முடித்தார் முருகக்கனி.

ஓவியர் எஸ்.முருகக்கனி 83 வது வயதிலும் இளைஞர்போல ஆர்வமுடன் ஓவிய போர்டின் முன்பு தினமும் அமர்கிறார். விஸ்காம் படிக்கும் தன் பேரன் ராமின் உதவி யோடு, யூட்யூபில் ஓவியம் வரைவது எப்படி என்று வகுப்பெடுக்கிறார்.

பல ஆயிரம் ஓவியங்களை வரைந் திருந்தும் இன்னும் அரசு தொடர்பான பெரிய விருதுகள், கௌரவங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் எண்ணற்ற ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கின்றன, இவர் வரைந்த தெய்வ ஓவியங்கள். கலைஞனுக்கு வேறென்ன வேண்டும். இதுகுறித்த பெருமிதத்தோடும், கலையார்வத் துடனும் தொடர்ந்து இயங்கும் ஐயா முருகக்கனியை வணங்கி விடை பெற்றோம்!