Published:Updated:

ஆயிரம் மலர்களே... சிறுகதை

வீட்டிற்குப் போய் சுத்தபத்தமாக மாறிய பின் மனம் ஒருநிலைப்படவில்லை.

பிரீமியம் ஸ்டோரி

கார் ஹாரனை அடித்தேன். கேட்டைத் தள்ளித்திறந்தது அமிர்தமம்மா.

அப்பார்ட்மென்ட்டிற்குள் நுழைந்ததும் காரை நிறுத்தி, கண்ணாடியையிறக்கி, மாஸ்க்கையும் தாடைக்குத் தளர்த்தி அவரைப் பார்த்துச் சிரித்தேன். என்னைப் பார்த்ததும் இன்னும் மலர்ந்து சிரித்தார்.

“சாயங்காலம் வீட்டுக்கு வரீங்களா அமிர்தமம்மா, மளிகை சாமான் போட ஹெல்ப் வேணும். இன்னிக்கு சண்டே தானே?”

“எப்போ வரணும் மேடம்?”

“அஞ்சு மணிக்கு மேல?”

“சரி.”

ஒவ்வொரு முறை பேசத் தொடங்குவதற்கு முன்னும் பேசிய பின்னும் அமிர்தமம்மாவின் உதட்டிலிருந்து புறப்படும் சிரிப்பு முகம் முழுவதும் பரவிப் படர்ந்து மறையும். பேஸ்மென்ட்டில் காரை நிறுத்தி ட்ராலியில் சாமான்களை வைத்து, லிப்ட்டிற்கருகில் காத்திருந்தேன். மூன்று மாதங்களுக்கு முன்பு முதல்முறையாக அமிர்தமம்மாவைப் பார்த்ததும் இதே பேஸ்மென்டில் இதேபோல லிப்ட்டிற்கருகில் காத்திருந்த பொழுதுதான்.

அன்று அந்த மெயின்டனன்ஸ் அறையிலிருந்து ‘காதல் ஓவியமாக’ ஜென்சியின் குரல் ஒலித்தது. தமிழ் பாடல்! 30 வீடுகளுடைய எங்கள் அப்பார்ட்மென்ட்டில் அப்போது மூன்று வாட்ச்மென்கள். ஆனால் யாருமே இங்கு தங்கவில்லை. அதே அறையிலிருந்து சமையல் நடப்பதை உணர்த்த லேசான புகை வேறு வந்தது. யாராக இருக்கும் என்று யோசிப்பதற்குள் லிப்ட் வர, ட்ராலியை உள்ளே தள்ளி நானும் உட்புகுந்தேன்.

வீட்டிற்குப் போய் சுத்தபத்தமாக மாறிய பின் மனம் ஒருநிலைப்படவில்லை. மூன்று மாதங்களாக ஜெர்மனியிலிருந்து, லாக்டௌன் முடிந்து ஒரு வழியாக இந்தியா வந்து இங்கும் சென்னையில் அம்மா வீட்டில் குவாரன்டீன் முடித்து, பெங்களூர் வீட்டிற்கு வந்து சேர்ந்தால் போதுமென்றாகிவிட்டது. வேலையாள் ராணியம்மா வீட்டைத் துப்புரவாக வைத்திருந்தார். வீடு முழுவதும் அப்பிக் கிடந்த தனிமை என்னவோ செய்ய, கவனத்தைத் திருப்ப டிவியைப் போட்டால் அதிலும் தம்தன தம்தன என ஜென்சியின் பாடலொலித்தது. மனது மெயின்டனன்ஸ் அறைக்குத் தாவியது. பாடல் கேட்கலாம் என இயர்போனைத் தேடிய பொழுதுதான், ஹேண்ட்பேக்கை காரிலேயே விட்டு வந்திருப்பதை உணர்ந்தேன். மீண்டும் பேஸ்மென்ட்டிற்குப் போனபொழுது `இனிய மனது இசையை’ என ஜென்சி பாடிக்கொண்டிருந்தார். என் கால்கள் காரை நோக்கிப் போகாமல் மெயின்டனன்ஸ் அறையை நோக்கிச் சென்றன.

ஆயிரம் மலர்களே... சிறுகதை

4-க்கு 4 அறையில் சிறு சிலிண்டரடுப்பின் மீது ‘எப்போது வேண்டுமானாலும் கத்துவேன்’ என்றமர்ந்திருந்த குட்டிக்குக்கர். சற்றே மங்கலான டியூப்லைட். சுவரில் `நின்ற நாராயணப் பெருமாள் - திருத்தங்கல்’ என்றெழுதிய காலண்டர், அவ்வறையின் உள்ளேயே ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குத் துணி காயப்போடும் கொடி கட்டப்பட்டு செக்யூரிட்டி யூனிபாரமொன்று தொங்கியது. அறையின் ஓரத்தில், பாயும் தலையணையும் போர்வையும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு மூலையில் சில டிரங்குப் பெட்டிகள். குட்டி சிலிண்டரைச் சுற்றி சிறு பாத்திரங்கள், கரண்டிகள், அதற்கிடையில் ஸ்மார்ட்போன். அதிலிருந்து `மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே மலர்ந்த கோலமே’ என ஜென்சியின் குரல் அறையை ஆக்கிரமித்திருந்தது. கூர்ந்து கேட்டபோது குனிந்தபடி அருவாமணையில் வெண்டைக்காய் நறுக்கிக்கொண்டிருக்கும் ஒரு பெண் சன்னமான குரலில் பாடியதும் கேட்டது. பேஸ்மென்ட்டில் வெகுநாள்களாகப் பூட்டிக்கிடந்த அறையொன்றில் எல்லாமே ஒழுங்காகியிருக்க, அதிலமர்ந்து சமைத்துக் கொண்டிருக்கும் பெண், இளையராஜாவின் இசை, அச்சூழலில் என்னை ஏதோ செய்த ஜென்சியின் குரல் எனக் கலவையான உணர்வுகள். அரவம் கேட்டதாலோ - நம்மை யாரோ பார்க்கிறார்கள் என்ற உள்ளுணர்வின் உந்துதலாலோ குனிந்திருந்த தலை சட்டென நிமிர்ந்தது. இயக்குநர்களின் மொழியில் சொல்வதென்றால், அதுதான் அமிர்தமம்மாவை நான் பார்த்த முதல் ஷாட்!

45 அல்லது 50 வயது இருக்கும். ஒரு சாயலுக்கு நடிகை துளசியை நினைவூட்டுமளவு களையான முகம்! என்னைப் பார்த்துச் சிரித்தார். பதிலுக்கு நானும் சிரிக்க, செல்போனை எடுத்து பாட்டை அணைத்துவிட்டு, “அவரு இல்லா” எனக் கன்னடத்தில் சொன்னவரிடம், “இல்லை. தமிழ்ப் பாட்டு கேட்டுச்சுன்னு வந்தேன்” என்றேன்.

“மேடம்… நீங்க தமிழா?”

“ஆமாம் நீங்க?”

“நான்… வாட்ச்மேன் ராசையா வீட்டம்மா. அவரைக் கூப்பிடட்டுமா மேடம்?”

“ஓ... ராசையா வொய்ஃபா? வேணாம்... பாட்டு சத்தம் கேட்டுச்சுன்னுதான் இந்தப் பக்கம் வந்தேன்.”

“சாரி மேடம்… பாட்டை அமர்த்திடறேன்.’’

“இல்ல இல்ல. நீங்க கீழே பேஸ்மென்ட்ல பாட்டுக்கேட்டா 4-வது மாடில கேட்காது. எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. இந்த ரூம் பூட்டியேயிருந்துச்சு. கொஞ்சம் முன்னாடி கார் நிறுத்தறப்ப பார்த்தேன். அதிலிருந்து திடீர்னு பாட்டு கேட்கவும், என்ன யார்னு பார்க்க வந்தேன். வேற ஒண்ணுமில்லை.’’

“மேடம்! ஊரடங்கு இங்கே இருக்க முடியாதுன்னு மத்த ரெண்டு வாட்ச்மேனும் சொந்த ஊருக்குப் போயிட்டாங்க. இவர் வேலைக்கு வரேன்னு சொல்லவும் இவரை இங்கேயே தங்கிக்கச் சொல்லிட்டாங்களாம். வீட்டு வாடகை மிச்சமாகுமேன்னு நானும் இங்கே வந்தேன்.’’

“ஓ… பாட்டு பிடிக்குமா?”

“ரொம்ப மேடம். அதிலும் இவரோட பெயர் வச்சவர் போடுற பாட்டு இன்னும் பிடிக்கும்.’’

இசைஞானியைச் சொல்கிறார் எனப் புரிந்து சிரித்தேன். அதற்குமேல் என்ன பேசவெனத் தெரியாமல் சிலநொடிகள் நின்றுவிட்டு காருக்குப்போய் பையை எடுத்துக்கொண்டு மீண்டும் அன்று வீடடைந்தேன். தேவ்விடமிருந்து இரண்டு மிஸ்டு கால்கள். ‘சும்மாதான் கூப்பிட்டேன்’ என வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியிருந்தான்.

நான்காவது மாடி வந்ததை அறிவித்தபடி லிப்ட் கதவுகள் திறக்கவும், நினைவுகளிலிருந்து மீண்டு ட்ராலியை வெளியே தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கிப்போனேன்.

வாங்கிவந்த சாமான்களைக் கழுவி, குளித்து பால்கனியில் உலர்த்தி டிவியை ஆன் செய்தால் `தெய்வீக ராகம்’ பாடல். இன்று மட்டுமல்ல, இதைப் பலமுறை கவனித்திருக்கிறேன். அமிர்தமம்மாவைப் பார்த்தபின் ஏதோவொரு இளையராஜாவின் பாட்டு எனைச்சுற்றி ஒலிக்கத் தொடங்கிவிடும்.அதிலும் குறிப்பாக ஜென்சியின் பாடல்களே ஒலிக்கும். அது என்ன மாயமெனத் தெரியவில்லை. ‘ரிஷ்யசிருங்கர் வந்தால் மழை வரும்’ என்பதுபோல் அவரைப் பார்த்தால் ஜென்சியின் பாடல் வருவது என்ன கணக்கோ தெரியவில்லை. அன்று முதல்முறையாக அமிர்தமம்மாவைப் பார்த்தபோது அவரின் பெயரைக்கூடக் கேட்கவில்லை. என்னையும் அவரையும் இணைத்த முதல் இரு நபர்கள் இளையராஜாவும் ஜென்சியுமே. அதற்கடுத்தபடியாக ராசையா!

ராசையா. தமிழர் என்பது தெரியும். ஆனாலும் அவ்வளவாகப் பேசியதில்லை. சொல்லப் போனால் இங்கு வந்த மூன்று வருடங்களில் அப்பார்ட்மென்டில் நான் ராணியம்மாவைத் தவிர எவருடனும் அதிகம் பேசியதில்லை. வருடத்தில் எட்டு மாதங்கள் தேவ் இந்தியாவில் இல்லாததால், பிசினஸ் அலுவலகம், வீடு என என் உலகமே வேறு. ஆனாலும் ராசையா பற்றி கொஞ்சம் தெரியும். காலை 9 மணிக்கு மேல் வாக்கிங் போகும்பொழுது பார்த்தால் அப்பார்ட்மென்ட் தோட்டத்தின் ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். ஒரு மனிதன் சாப்பிட்டதைப் பார்த்த மாத்திரத்தில் அவரது முகம் மனதில் பதிந்துவிடுமா எனக் கேட்கலாம் - பதிந்துவிடும். ஏனெனில், ராசையா சாப்பாட்டை சாப்பிடுவதில் தனித்துவமிருக்கும் 

தான் கொண்டுவந்த டப்பாக்களைத் தன் பைக்குள்ளிருந்து எடுத்து வைத்து, மீண்டும் உள்ளே இருந்து சிறு தட்டையும் எடுத்து, டப்பாவைத் திறந்து கொண்டுவந்த பதார்த்தங்களை மோந்து பார்த்தபின் தனக்குத்தானே தட்டில் பரிமாறி அவர் உண்ணும் பொழுது முகத்தில் அப்படி ஒரு புன்னகையைப் பார்த்திருக்கிறேன். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல... ஏறக்குறைய அவரை நான் தோட்டத்தில் பார்த்த எல்லா நாள்களிலும். காலை, மதிய உணவு, இரவு குடிக்கும் டீ என எல்லா வேலைகளிலும் அவர் உணவை ரசித்து அனுபவித்துத்தான் உண்பார். தேவ்விடம்கூட இதைப்பற்றி ஒரு முறை சொன்னேன்.

“நம்ம வாட்ச்மேன் ஒருத்தர் வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாட்டை எப்படி ரசித்துச் சாப்பிடறாரு தெரியுமா? நானே ஒரு பத்து பதினஞ்சு தடவை பாத்துட்டேன். பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச்னு எது கொண்டுவந்தாலும் அதை முதலில் மோந்து பார்த்தபின் அவர் அதை ரசிச்சு சாப்பிடுவதைப் பார்க்கணுமே. அவரோட வைப் கொடுத்து வச்சிருக்கணும்னு தோணுது தேவ். நீயும்தான் இருக்கியே?”என்றபடி தட்டில் தோசையைப் போட, “அவர் கொடுத்து வச்சவராயிருப்பார். அவருடைய வைப் வகைவகையா நல்லதா சமைச்சுக் கொடுக்கிறாங்களாயிருக்கும். நீ இப்போ சுட்ட தோசையை நீயே பாரு. வேர்ல்டு மேப்ல ஆஸ்திரேலியாவைப் பார்க்கிற மாதிரில்ல இருக்கு!”

ஒருமுறை மதியவேளையில் துளசி பறிக்கலாம் எனத் தோட்டத்திற்குப் போனபொழுது வழக்கமாக அவர் சாப்பிடும் இடத்தில் பாத்திரங்கள் கழுவி வைக்கப்பட்டிருந்தன. சில அடிகள் நான் முன்னகர, கைநிறைய பவளமல்லிப் பூக்களுடன் எதிர்ப்பட்டவர், விலகினார். துளசி பறித்த பின் திரும்பி வரும்பொழுது பார்த்தால், பாத்திரத்திற்குள்ளிருந்த ஈரத்தை டவலால் துடைத்தவர், பூக்களை அதற்குள் போட்டார். மனுசன் ரொம்பவே ரொமான்டிக் என நினைத்தபடி நகர்ந்தேன். அப்பார்ட்மென்டில் `பூக்களைப் பறிக்காதீர்கள்’ என்ற போர்டு உண்டு என்றாலும் `உதிர்ந்த பூக்களைப் பொறுக்காதீர்கள்’ என்ற போர்டு எதுவும் இல்லை. மேலும் தரையில் உதிர்ந்து கிடக்கும் பவளமல்லியை எடுப்பதைப் பார்த்தாலும் இவரை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.

திடீரெனக் கேட்ட ஆம்புலன்சின் சைரன் கவனத்தைக் கலைத்தது. பெங்களூரு ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் எங்கள் அப்பார்ட்மென்ட்டிற்குப் பக்கத்தில்தான் சில்க் போர்டு - எலக்ட்ரானிக்சிட்டியை இணைக்கும் மேம்பாலம் உள்ளது. எப்பொழுதும் கார், பைக், கனரக வாகனங்கள் எனப் பரபரப்பாக இருக்கும் அந்த மேம்பாலத்தில் வாகனங்களின் இரைச்சலே நிறைந்திருக்கும். சமீபகாலமாக வாகன இரைச்சல் குறைந்து ஆம்புலன்சின் சைரன் அலறுகிறது. முன்பெல்லாம் ஒரு மணி நேரத்திற்கு ஒன்றிரண்டு என்றிருந்த ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் இப்பொழுது அடிக்கடி கேட்கிறது.

மீண்டும் மனது அமிர்தமம்மாவிடமே போனது. அவளை முதல்முதலாகப் பார்த்த அன்று மறுபடியும் பேஸ்மென்ட்டிற்குச் சென்றதை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பு வரும். புதிதாக காதலிக்கத் தொடங்கிய காதலி பிறரறியாமல் காதலனைச் சந்திக்கும் சந்தர்ப்பமைத்துக்கொள்வது போல நானும் அவரைப் பார்க்க இரண்டாவது தடவையாக அன்று கீழிறங்கினேன்.

மனைவி சமைத்துக் கொடுத்ததை டப்பாவில் கொண்டு வந்து சாப்பிடும் பொழுதே அவ்வளவு ரசிப்பவர், மனைவி பக்கத்தில் அமர்ந்து பரிமாறினால் எப்படிச் சாப்பிடுவார் எனப் பார்க்கும் ஆவல் வந்தது. ‘என்ன இது, இப்படி அல்பமா யோசிக்கிறேன்’ என்று புத்தியும், ‘போய்த்தான் பாரேன்’ என்று மனதும் நச்சரிக்க, காரைத் துடைக்கும் சாக்கில் வாளி மற்றும் துணியுடன் மீண்டும் பேஸ்மென்ட்டிற்குப் போனேன். அப்பொழுதும் `புது இனிய மனது இசையில்’ என ஜென்சியே பாடிக் கொண்டிருந்தார்: பாடலுடன் பேச்சு சத்தமும்! நான் எதிர்பார்த்தபடியே அந்தம்மா பரிமாற ராசைய்யா சாப்பிட்டுக்கொண்டிருந்தார். முகத்தில் அதே பூரிப்பு. அமிர்தமம்மா பரிமாறிய விதத்திலும் அவர் சாப்பிடுவதிலும் அத்தனை உயிர்ப்பும் காதலும் அன்னியோன்யமுமிருந்தது. சற்று நிமிர்ந்து என்னைப் பார்த்தவர் எழ முயல, “சாப்பிடுங்க” என்றபடி அவர்கள் அறைக் கதவருகில் சென்றேன்.

என்ன பேச என்று தெரியாமல், “டைம் இருக்கும் பொழுது கார் க்ளீன் பண்ண முடியுமா?’’ உளறினேன்.

“சரி மேடம். இதை இன்டர்காமில் கூப்பிட்டுச் சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே? உடனே பண்ணணுமா, இல்ல அப்புறம் செஞ்சாப் போதுமா?”

“அவசரமில்லை. சாயங்காலம் 6 மணிக்குள்ள பண்ணிட்டா போதும்.”

“சரி மேடம் - செஞ்சுடறேன்.’’ அதற்கு மேல் அங்கு நிற்காமல் வாளியை வைத்துவிட்டு மாடிக்கு வந்தேன்.

எனக்கு கணவன் மனைவி ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவதைப் பார்க்க அவ்வளவு பிடிக்கும். அம்மா சமைத்த எதையும், “நன்றாக இருக்கு - இல்லை” என அப்பா சொல்லி நான் கேட்டதோ அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து சேர்ந்து சாப்பிட்டதையோ பார்த்ததில்லை. அப்பா மாத்திரமல்ல, அலுவலகத்தில், உறவில், நட்பு வட்டத்தில் என நான் பார்த்த எந்த ஆண்களும் வீட்டில் சமைத்த உணவு டப்பாவை மகிழ்ச்சியுடன் உண்டு பார்த்ததில்லை. சென்ற வருடம் வரை அலுவலகத்திற்குப் போய்க்கொண்டிருந்த நாள்களிலும் அப்படித்தான். உடன் பணிபுரியும் ஆண்கள் எல்லாருமே டப்பர்வேர் அல்லது கண்ணாடி டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்பொழுது கவனம் முழுவதும் பேச்சிலும் போனிலும் இருக்குமேயல்லாது, தாங்கள் கொண்டு வந்த டப்பாவிலிருக்கும் உணவைப் பற்றியோ அதைச் சமைத்தவர் பற்றியோ இருந்ததில்லை.

கணவனுக்கு உணவு பரிமாறுவது பற்றிப் பேசும்போதெல்லாம் அம்மா சொன்னது நினைவுக்கு வரும். “நான் கல்யாணம் ஆகி வந்த புதுசுல அப்பா பக்கத்தில் உட்கார்ந்து பரிமாற பாட்டி விட்டதே இல்லை தெரியுமா? பக்கத்துல உட்கார்ந்து பரிமாறினால் புருஷன் கவனம் முழுக்க பொண்டாட்டி மேலதான் போகுமாம். ஆசை வந்துடுமாம். அதனால, சமைத்ததை எல்லாம் எடுத்து வச்சுட்டு கதவோரம் நின்று அவங்க சாப்பிடுவதைப் பார்த்தால்தான் அவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு தெரியுமாம்” எனப் பாட்டி உபதேசித்தாளாம். “பக்கத்துல உட்கார்ந்து ஆசையா நீ பரிமாறினால் அவன் வயிறு ரொம்பாது. அவனோட ஆசையில உன் வயிறுதான் ரொம்பும்” என உபதேசித்த பாட்டிக்கு எட்டுப் பிள்ளைகள், அம்மாவுக்கோ நான் மட்டுமே!

ஆயிரம் மலர்களே... சிறுகதை

தேவ்வும் நானும் திருமணத்திற்குப்பின் சேர்ந்து வாழும் இந்த 4 வருட வாழ்க்கையில் ஒன்றாக அமர்ந்து உண்ட நாள்களை எளிதில் எண்ணிவிடலாம். மீட்டிங் மீட்டிங் எனப் பாதி நாள்கள் வெளியே ஹோட்டலிலும், மீதி நேரங்களில் பிசினஸ் நிமித்தமாக வெளிநாடுகளிலும் என்றிருக்கும் வாழ்க்கையில், அவனுடன் கடைசியாக அமர்ந்து சாப்பிட்டது என்று எனவும், ‘உன் சமையல் நல்லா இருந்தது’ என்று அவன் சொன்னது எப்போது என்றும் யோசிக்கிறேன். நினைவுகூர முடியவில்லை. அதைக்குறித்த பெரிய வருத்தங்கள் இல்லை எனிலும் நமக்காக ஒருவர் சமைத்த உணவை ரசித்து சாப்பிடுபவர்களைக் கண்டால் ஆசையாக இருக்கிறது. இப்படியான சூழலில்தான் வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை ரசித்து உண்ணும் ராசையாவைப் பார்க்கக் கிடைத்தது.

அன்றும் மாலை நாலு மணி வாக்கில் காலிங்பெல் ஒலிக்க, கதவைத் திறந்தால் நின்றிருந்தது அவரின் மனைவி! வாளி, கார் துடைத்த துணியுடன் நின்றிருந்தார். முகம் கழுவி, பவுடர் பூசப்பட்டு, தலைவாரி, படிய பின்னி, நெற்றியில் திருநீறும் உச்சியில் குங்குமமும் தெறிக்க நின்றிருந்தவரைப் பார்த்ததும் அம்மாவின் நினைவு வந்தது. உள்ளே வரச் சொன்னதும் தயங்கியபடியே வீட்டிற்குள் வந்தார். வாளியை வாங்கக் கையை நீட்ட, “பாத்ரூம் எங்கன்னு சொன்னீங்கன்னா நானே போய் வெச்சுடுவேன் மேடம்” என்றவரிடம் பாத்ரூமைக் காட்டினேன். பின் பணத்தைக் கொடுத்தேன்.

“இல்ல மேடம், அவர்கிட்ட கொடுத்துடுங்க. அவர் என்கிட்ட காசு வாங்கிட்டு வரச் சொல்லல. இதைக் கொடுத்துட்டு வரத்தான் சொன்னார்.’’

“இருங்க, டீ குடிச்சிட்டுப் போகலாம்.”

“இல்ல மேடம்...’’

“அவரு ஒண்ணும் சொல்ல மாட்டார், நான் சொல்லிக்கிறேன். உட்காருங்க.’’

“இல்ல மேடம். கீழ போய்ட்டு நானும் அவரும் சேர்ந்து டீ குடிப்போம். அதான்...”

“உங்க பேரென்ன?”

“அமிர்தவள்ளி. நான் வரேன்” என்றபடி நகர்ந்தார்.

அன்று தொடங்கியது அமிர்தமம்மாவுடனான உரையாடல்கள். அமிர்தமம்மாவும் ராசையாவும் அப்பார்ட்மென்ட்டைக் காவல்காத்தார்கள். தேவ்வும் இங்கு இந்தியாவில் இல்லாததால் எப்போதாவது ஒத்தாசைக்கு வரச் சொன்னால் வருவார். பேசாவிட்டாலும் வாய் மூடியே இருந்தாலும் உதட்டோரம் தொடங்கி முகம் முழுவதும் ஒரு சிரிப்பு பரவிக்கிடக்கும். பணம் கேட்கமாட்டார். என்ன கொடுத்தாலும் அதை வாங்கிக்கொள்ளவும் மாட்டார். “அவர்கிட்ட கொடுத்துருங்க” என்றபடி நகர்ந்துவிடுவார்.

வாரத்திற்கு இருமுறையாவது அவர் என் வீட்டுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. கொஞ்சம்கொஞ்சமாக திருமணமாகி 22 ஆண்டுகள்ஆனதை, குழந்தை இல்லாததை என அவர்களைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் எனக்கு அறிமுகமானது. அவர்கள் காதலிப்பதை அறிந்த சுற்றமும் உறவும் எதிர்த்து நின்றபோதும் கூட, ராசு பிடிவாதமாக இவரைத்தான் மணப்பேன் என்று நின்றதை அவ்வளவு பெருமை பொங்கச் சொன்னார். மற்றொரு நாள் விவசாயமும் கைகொடுக்காமல், சொந்தத் தொழிலும் நொடிந்து கடந்த சில வருடங்களாக செக்யூரிட்டி வேலை பார்ப்பது பற்றிச் சொன்னபோதுகூட எந்தச் சலிப்பும் இல்லை. “உன் கேர்ள் பிரெண்டு வந்தாங்களா இன்னிக்கு?” என தேவ் எனைச் சீண்டுமளவுக்கு அவருடன் நான் செலவிடும் நேரமிருந்தது.

அமிர்தமம்மா எப்போது வந்தாலும் எதைப்பற்றிப் பேசினாலும் ராசுவின் பெயர் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வந்துவிடும். கடைசியாக அவர் இங்கு வந்திருந்தபோது என் மாமியாரிடம் இருந்து அழைப்பு. “திருமணமாகி நான்கு ஆண்டுகளில் நல்ல செய்தி எதுவுமே சொல்லவில்லை நீங்கள்” என வழக்கம்போலத் தொடங்கினார். பேசி வைத்ததும் அமிர்தமம்மாவிடம், ``நாலு நல்ல வருஷத்துக்கே இவ்வளவு” என்றுவிட்டு நிறுத்தினேன். ‘உங்களுக்கெல்லாம் ஊர்ல எவ்வளவு கேள்வி கேட்டிருப்பாங்கில்ல?’ எனக் கேட்க நினைத்து நான் முழுங்கியதைப் புரிந்து கொண்டவர்போல சிரிப்பையே பதிலாகக் கொடுத்தார். அடுத்ததாக என் அம்மாவிடமிருந்து அழைப்பு வர, அதே கேள்விகள். அறை அதிர அம்மாவைத் திட்டியபடி போனை வைத்தேன்.

சில நிமிட மௌனத்திற்குப் பின், “ஒரு பக்கம் என் அம்மா, இன்னொரு பக்கம் மாமியார். இவங்களுக்கு என்கிட்ட பேச வேற விஷயமே இல்லை. ‘லவ் பண்ணிதானே நீயும் அவனும் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க, அப்புறம் எப்படி இன்னும் விஷயம் எதுவும் இல்லை’ன்னு என் அம்மா கேட்கறாங்க. பச்சையா அசிங்கமா ஏதேனும் சொல்லலாம்னு வருது’’ என்றதும் டேபிளிலிருந்த தண்ணீர் பாட்டிலை என் பக்கமாக நகர்த்தினார்.

“சமயத்தில் முடியல அமிர்தமம்மா. வருஷத்துக்கு நாலு மாசம்தான் நானும் அவனும் சேர்ந்திருக்கோம். அதிலும் போன வருஷம் கொரோனாவால அவன் அங்கு ஜெர்மனியிலேயே மாட்டிக்க, நான் ஒரு வழியா அக்டோபரில்தான் அங்க போய் அவனோட சில மாசம் இருந்துட்டு வந்தேன். இவங்க என்கிட்ட கேட்கிற கேள்வியை நினைத்துப்பார்த்தாலே கடுப்பா வருது.”

“விடுங்க மேடம். அவங்க பெரியவங்க அவங்களுக்கும் உங்க பசங்களைப் பார்க்கணும்னு ஆசை இருக்காதா?” என்றுவிட்டு நகர்ந்தார்.

மற்றொரு நாள் ராசுவைப் பற்றிப் பேசும்பொழுது, இவரின் டப்பாவை ராசு ரசித்து உண்பதைப் பற்றி நான் சொல்ல, “சாப்பாடுன்னு இல்ல! நான் ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுத்தாலும் அவர் அப்படித்தான் அமிர்தத்தைக் கொடுத்த மாதிரி குடிப்பாரு” என்றபோது அவ்வளவு கர்வம் அவர் முகத்தில். “என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க ரெண்டு பேரு மட்டும்தானே, உங்க மனசு கோணக்கூடாதுன்னுகூட அவர் எல்லாச் சமயமும் உங்ககிட்ட ஆசையா நடந்துக்கிறார்னு எனக்குத் தோணும்” என்றதற்கும் சிரிப்புதான் பதில்.

காதல், கல்யாணம், சொந்த ஊர், உறவு, இப்போதைய பெங்களூரு வாழ்க்கை எனப் பல விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் என்னிடம் சொல்லாத ஏதோ ஒன்று அவரிடம் இருப்பதாகவே எனக்குப்பட்டது. நினைவுகளிலிருந்து மீட்டது காலிங்பெல். கதவைத் திறந்தால் –அவரேதான்!

ஆயிரம் மலர்களே... சிறுகதை

அடுப்படியில் அமர்ந்து மளிகைச் சாமான் ஒவ்வொன்றாகப் பிரித்து பாட்டிலில் போட்டபடி, “அம்மாகிட்ட பேசினீங்களா மேடம்?”

“இல்லை.”

“பேசுங்க மேடம்.”

“எனக்கு மனசு ஆறலை அமிர்தமம்மா. எங்கம்மா அன்னைக்கு என்ன சொன்னாங்க தெரியுமா? குழந்தைங்கற ஒண்ணு இல்லைன்னா தேவ் என்னை விட்டுடுவானாம். உங்களுக்குத் தெரியுமா? நானும் அவனும் டெய்லி பேசுறவங்க கிடையாது. இப்போன்னு இல்ல, லவ் பண்ணின காலத்திலிருந்துமே வாரத்துக்கு ரெண்டு, மூணு தடவைதான் பேசிப்போம். 35 வயசுக்குள்ள இந்த வேலையில நாங்க அடையணும்னு வச்சிருக்கிற இலக்குகளும் அப்படி. எங்களைக் கேட்டால், சின்னக் குறைகளைத்தாண்டி நாங்க சந்தோஷமாதான் இருக்கோம். ஆனால் என் அம்மா தேவ் என்னை விட்டு விலகிடுவான்னு சொன்னதிலிருந்து, நான் கூப்பிடும்போது அவன் போனை எடுக்காட்டாகூட ‘என்னை விட்டு அவன் விலகறானோ’ன்னு எனக்குத் தோணுது. நான் இப்படி யோசிக்கிறவளே கிடையாது. இவங்க சொல்றத எல்லாம் கேட்டுக் கேட்டு நான் அவனையே சந்தேகப்படறேன்னும் தோணுது.’’

அழுகை வர, மேற்கொண்டு பேசாமல் சட்டென எழுந்து ஹாலுக்குப் போய் அமர்ந்தேன். ஆம்புலன்சின் சைரன் ஒலி நாராசமாய்க் கேட்டது. தலையைப் பிடித்தபடி குனிந்து அமர்ந்திருந்தேன். திடீரென ‘தெய்வீக ராகம்’ என ஜென்சியின் குரல் ஒலிக்க, எழுந்து மீண்டும் அடுப்படிக்குள் போனேன். பாட்டு கேட்டபடியே பாட்டில்களை நிரப்பிக்கொண்டிருந்தார்.

“அமிர்தமம்மா, நீங்க இன்னைக்கு என்கூட டீ குடிக்கணும்’’ என்றதும், எப்போதும் மறுப்பது போல மறுக்காமல் ``சரி’’ என்றார்.

“மேடம்! அடுப்பில் தண்ணி வச்சுட்டு நீங்க முகம் கழுவிட்டு வாங்க. நான் பார்த்துக்கிறேன்.’’ சில நிமிடங்களுக்குள் நான் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தேன். அவரின் செல்போனிலிருந்து இன்னமும் பாடல் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தது. பாட்டை நிறுத்தப்போனவரிடம், “சவுண்டை மட்டும் குறைங்க, நிறுத்த வேண்டாம்’’ என்றுவிட்டு அடுப்படியிலேயே டீ குடிக்க அமர்ந்தோம்.

“கவலைப்படாதீங்க மேடம். உங்க அம்மா சொல்ற மாதிரியெல்லாம் இல்ல. எப்பவும் சந்தோஷமாதான் இருப்பீங்க.’’

ஒரு மாதிரி வரவழைக்கப்பட்ட மனதிடத்துடன் அமிர்தமம்மாவிடம், “கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. நமக்குக் குழந்தை இல்லை என்கிற வருத்தமும் அதில்லாததால் இவர் நம்மை விட்டு ஒதுங்கிடுவாருங்கற பயமும் எப்பயாவது உங்களுக்கு இருந்திருக்கா?”

நொடியும் தாமதிக்காமல் தீர்க்கமாக “இல்லை மேடம்” என்றார்.

அவர் இன்னும் ஏதோ சொல்ல பாக்கி வைத்திருப்பதுபோலத் தோன்ற, அவரையே உற்றுப் பார்த்தேன்.

“நான் வயசுக்கே வரல மேடம்.”

“என்னது?”

“நான் பெரிய மனுஷியே ஆகல மேடம். இவர் என் மாமா பையன்தான். ஒண்ணுத்துக்கும் ஆகாதவளை விரும்பறார்னுதான் வீட்டில எங்க கல்யாணத்துக்கு சண்டை வந்துச்சு. ‘இவ எதுக்கும் ஆக மாட்டா, உனக்குன்னு வாரிசுகூட வராது’ன்னு என் அம்மாவே இவர்கிட்ட சொன்னாங்க. ஆனாலும் பிடிச்ச பிடியை விடாம, ஆசைப்பட்டு இவரு கட்டிக்கிட்டார். அதனாலதான் சொல்றேன், சாருக்கெல்லாம் உங்க மேல பிரியம் எப்பவும் குறையாது’’ என்று சொல்லவும், எனக்குள் ஏதேதோ உணர்வுகள் உருகியோடத் தொடங்கின.

அந்த க்ஷண அமைதியைக் கிழித்தபடி, “என் வானிலே, ஒரே வெண்ணிலா” என ஜென்சியின் குரல் கிளம்பி என் அகத்தை நிரப்பத் தொடங்கியது...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு