Published:Updated:

வண்ணங்களில் தமிழ் எழுத்தாளர்களின் இளமைக்காலப் படங்கள்... `அழியாச்சுடர்'களின் புது முயற்சி!

தமிழ் எழுத்தாளர்கள்
தமிழ் எழுத்தாளர்கள்

தமிழின் முன்னோடி எழுத்தாளர்களின் கறுப்பு வெள்ளைப் ஒளிப்படங்களை வண்ணப் படமாக மீளுருவாக்கம் செய்து வாசகர்களை கிளர்ச்சியடைய வைத்திருக்கிறது ‘அழியாச்சுடர்கள்’!

‘அழியாச்சுடர்கள்’ தளத்தை அறியாத இலக்கிய வாசகர்கள் தமிழில் இருக்க முடியாது. ‘நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டக’மாக விளங்கும் இந்த இணையதளம், இளம் வாசகர்களுக்கு நவீன இலக்கியத்துக்கான ஒரு நுழைவாயிலாகத் திகழ்கிறது. தமிழிலக்கியத்தின் சாதனையாளர்களாகக் கருதப்படும் எழுத்தாளர்களின் முக்கியப் படைப்புகள், நேர்காணல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ‘அழியாச்சுடர்கள்’ தளத்தைத் தமிழிலக்கியத்தின் ஓர் ஆவணக் காப்பகம் என்றே சொல்லலாம்.

ராம்பிரசாத் ஹரிஹரன் என்ற இலக்கிய வாசகரின் ஈடுபாட்டால் 2008-ல் இத்தளம் தொடங்கப்பட்டிருக்கிறது. ‘தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்’ என்று போற்றப்படும் எழுத்தாளர் மௌனியின் தீவிர வாசகரான ராம்பிரசாத், ‘அழியாச்சுடர்’ என்ற மௌனியின் சிறுகதைத் தலைப்பைக் கொண்டே இத்தளத்தைத் தொடங்கியிருக்கிறார். “முதலில் மௌனியின் படைப்புகளை மட்டுமே பதிவேற்றம் செய்திருந்தேன். நான் வாசித்த, என்னுடைய சேமிப்பிலிருந்த மற்ற படைப்புகளையும் பதிவேற்றத் தொடங்கியபோது ‘அழியாச்சுடர்கள்’ என்று பெயரைத் திருத்தினேன்’ என்கிறார் ராம்பிரசாத்.

கொரோனா மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் புத்தகங்கள் : எப்படி படிக்கலாம், என்னென்ன படிக்கலாம்?!

‘அழியாச்சுடர்களி’ன் சமீபத்திய முன்னெடுப்பாக, தமிழின் முன்னோடி எழுத்தாளர்களின் கறுப்பு வெள்ளைப் ஒளிப்படங்களை வண்ணப் படமாக மீளுருவாக்கம் செய்து அழியாச்சுடர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ராம்பிரசாத் வெளியிட்டுவருகிறார்.

“அந்தக் காலகட்டத்து எழுத்தாளர்களில் பெரும்பாலானோரின் ஒளிப்படங்கள் மிகக் குறைவாகவே நமக்குக் கிடைத்திருக்கின்றன; எனவே அவர்கள் இப்படித்தான் இருந்தார்கள் என்பதை அவர்களின் ஒன்றோ இரண்டோ கறுப்பு வெள்ளைப் படங்களின் மூலம்தான் அறிகிறோம். இந்த ஊரடங்கு காலகட்டத்தில், வீட்டிலிருந்தபோது அவற்றை மீளுருவாக்கம் செய்தால் என்ன என்ற யோசனையின் விளைவுதான் முன்னோடிகளின் இந்த வண்ணப்படங்கள்!” என்கிறார் ராம்பிரசாத்.

ராம்பிரசாத்
ராம்பிரசாத்

தன்னுடைய சேகரிப்பில் உள்ள பழைய புத்தகங்கள், இணையத்தில் கிடைப்பவை, எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள் எனப் பல இடங்களிலிருந்து ஒளிப்படங்களைத் திரட்டியிருக்கிறார் ராம்பிரசாத். ஏற்கெனவே காணக்கிடைக்கும் படங்களைத் தாண்டி, இளமைக் கால ந. முத்துசாமி, தாடியில்லாத தஞ்சைப் பிரகாஷ் என எழுத்தாளர்களின் இதுவரை வெளிவராத இளமைக் காலப் படங்களை வண்ணத்தில் மீளுவாக்கம் செய்து வாசகர்களை மட்டுமல்லாமல் எழுத்தாளர்களின் குடும்பத்தினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் ராம்பிரசாத் ஹரிஹரன்!

வண்ணத்தில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட எழுத்தாளர்களின் கறுப்பு வெள்ளை படங்கள் சில:

அழியாச்சுடர்கள் தளம்: https://www.azhiyasudargal.blogspot.com/

அழியாச்சுடர்கள் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/azhiyasudar

அடுத்த கட்டுரைக்கு