Published:Updated:

``சைனீஸ் பேம்பூ ட்ரீ மாதிரிதான் நம்ம பசங்களும். ஒருநாள் உசந்து நிப்பாங்க" - ஒரு நம்பிக்கைக் கதை

Be Like Chinese Bamboo Tree
Be Like Chinese Bamboo Tree

``சில பிரச்னைகள் உடனடியா தீர்ந்துடாது. கொஞ்ச காலம் எடுக்கும். நாம மெதுவாத்தான போகமுடியும். எதுக்கு இப்ப அவசரம்?"

அருணுக்குக் காலை முதலே ராஜி மீது கடுங்கோபம். எப்படியாவது வகுப்பிலிருக்கும் குழந்தைகளுக்கு நன்னடத்தை குறித்துக் கற்பித்துவிட வேண்டும் என்று தீவிரமாக உழைத்துக்கொண்டிருந்தவனுக்கு, ராஜி அதில் பெரிதாக ஈடுபடவில்லை என்பதே கோபத்தின் காரணம்.

Representational Image
Representational Image

தொடக்கத்தில் ராஜி தன்னுடைய முதன்மையான வேலைகளில் ஏதும் குறைவைக்கவில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆனால், வகுப்புக்காக தன்னைத் தயார் செய்துகொள்வதிலும் வகுப்பை மிக சுவாரஸ்யமான முறையில் நடத்துவதிலும் அவள் காட்டிய ஆர்வத்தை, அதன்பின் தன் மாணவர்கள் அவற்றைப் பின்பற்றுகின்றனரா என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதை அவளிடம் எப்படிக் கேட்பது என்ற குழப்பத்திலேயே பொறுமையாக இருந்தான். என்றாலும், ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் பொறுமை காக்கமுடியவில்லை.

``நீ ஏன் எல்லா வேலையும் அரைகுறையாவே செய்ற?", அவன் கேள்வி காட்டமாக இருந்தது. அவளுக்கோ எதற்காக திடீரென இவன் ஏன் இப்படிக் கோபமாகப் பேசுகிறான் என்ற குழப்பம்.

``என்ன ஆச்சு அருண்? நான் என்ன செஞ்சேன்?" தன் பதில் கேள்வியை மென்மையாக முன்வைத்தாள்.

Representational Image
Representational Image

``நம்ம ஸ்கூல் தொடங்கி ஆறு மாசமாச்சு. நம்ம எடுக்குறது மேக்ஸோ, சயின்ஸோ இல்ல. ஒரு எக்ஸாம் வச்சு பசங்க என்னக் கத்துக்கிட்டாங்கனு தெரிஞ்சுக்க. நம்ம கத்துக்குடுக்குறது எல்லாமே சோஷியல் ஸ்கில்ஸ், வாழ்க்கைக்கான வேல்யூஸ் பற்றிய வகுப்பு. இதுவரை பசங்க என்ன கத்துக்கிட்டாங்க, அதை எப்படி அவங்க வாழ்க்கையில ஃபாலோ பண்ணுறாங்கன்னு தெரிஞ்சுக்குற அக்கரையே உனக்கு இல்லையா?" என்றவன் ஒரு சிறிய இடைவெளிவிட்டு, ``ரெண்டு நாளுக்கு முன்னாடி நடந்த கிளாஸ்ல நம்ம சேது தனியாவே உட்கார்ந்திருக்கான். மத்த ஸ்டூடண்ட்ஸ்கூட சேரவும் இல்ல. நீ பார்க்குறியா இல்லையான்னு தெரியல, ஆக்‌ஷுவலா அவன் இந்த வருஷம் தொடங்குனதுல இருந்தே தனியாத்தான் இருக்கான். சேது மாதிரியே ஒவ்வொரு ஸ்டூடண்ட்கிட்டயும் ஒவ்வொரு பிரச்னை. இதுக்குலாம் நாம் என்ன பண்ணப்போறோம்?"

அவன் பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ராஜி ஒரு சிறிய புன்முறுவலை வெளிப்படுத்தினாள். சிரித்தபடியே, ``நீ ஏன் இவ்வளவு கோபப்படுற அருண். சில பிரச்னைகள் உடனடியா தீர்ந்துடாது. கொஞ்ச காலம் எடுக்கும். நாம மெதுவாத்தான போகமுடியும். எதுக்கு இப்ப அவசரம்?" என்றாள்.

Representational Image
Representational Image

``அது இல்லமா. நம்ம ஸ்கூல் பத்தித்தான் தெரியும்ல. ஒரு வாரத்துல ஒரு கிளாஸுக்கு அதிகபட்சமா ஒரு மணி நேரம்தான் ஒதுக்குறாங்க. அதையும் பாதி நேரம் மேக்ஸ் டீச்சர் கடன் வாங்கிக்கிறாங்க. அவங்களுக்கு என்னமோ மேக்ஸ் மட்டும் படிச்சாபோதும்னு நெனப்பு. பசங்கள நல்வழிப்படுத்துற வேல்யூ எஜுக்கேஷன் கிளாஸ் ரொம்ப முக்கியம். நமக்கு இருக்குற நேரத்துல அதை எவ்வளவு அதிகமா சொல்லிக் கொடுக்குறோமோ, அவ்வளவு நல்லா போய்ச் சேரும்ல..." . தன் கோபத்துக்கான காரணத்தை சாந்தமாக முன்வைத்தான்.

``பசங்களுக்கு வேல்யூ எஜுக்கேஷன் முக்கியம்தான். ஆனா அதையும் ஏன் மத்த சப்ஜெக்ட் டீச்சர்ஸ் மாதிரி திணிக்கணும்னு நினைக்கிற?" ராஜியின் இந்தக் கேள்வி அருணுக்குப் புதிதாக இருந்தது.

Representational Image
Representational Image

புருவங்கள் சுருங்க ``புரியல" என்றான்.

``நிறைய சொல்லித்தரணும்னு அவசியமில்ல அருண். கொஞ்சமா சொல்லித் தந்தாலும் சரியான முறையில சொல்லித்தந்தா போதும். இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது ஒரு நாள் பசங்க மாறுவாங்க. உனக்கு `சைனீஸ் பேம்பூ ட்ரீ' கதை ஞாபகம் இருக்கா?"

``நமக்கு `வொர்க்‌ஷாப்'ல சொன்னாங்களே அந்தக் கதையா?"

``அதே கதைதான்!"

``எனக்குச் சரியா ஞாபகம் இல்லையே. கொஞ்சம் திரும்பச் சொல்லேன்."

``சைனாவுல இருக்குற ஒரு வகை மூங்கில் மரம். அதோட விதையப் புதைச்சதுக்குப் பிறகு சாதாராணமா தண்ணி ஊத்திதான் வளர்ப்பாங்க. புதைச்சு ஒரு சில நாள்ல அரை அடியில இருந்து ஒரு அடி வரைக்கும் அது பூமிக்கு வெளிய துளிர்விடும். அதுக்குப் பிறகு தினமும் தண்ணி ஊத்தணும். அப்படிப் பண்ணுனா எத்தனை நாள்ல அது வளரும்னு தெரியுமா?" என்றாள், ராஜி.

The first bud of a Chinese Bamboo Tree
The first bud of a Chinese Bamboo Tree

``என்ன ஒரு ரெண்டு மூணு மாசம் ஆகுமா?" எனக் கேட்டான், அருண்.

``ஹா ஹா. அதான் இல்ல. ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல. அதுக்கு அடுத்த ஐந்து வருஷத்துக்கு அந்த அரை அடியிலதான் அதோட உயரம் இருக்கும். ஆனா, நிறுத்தாம தண்ணி ஊத்திக்கிட்டே இருக்கணும்."

``வளர்ச்சியில்லாம தண்ணி ஊத்திக்கிட்டே இருந்தா கடுப்பாகாது?"

``அதெல்லாம் ஆகாது. ஏன்னா விதைய விதைச்சு ஐந்தாவது வருஷத்துல வெறும் நாற்பது நாள்ல 80 அடி வரைக்கும் அந்த மரம் வளர்ந்துடும்."

``அப்போ அவ்வளோ நாள் ஊத்துன தண்ணி?"

``அதுதான் இந்த 80 அடியா மாறியிருக்கு. ஐந்து வருஷமா தன்னோட வேர்ல எல்லா சத்தையும் சேர்த்து வச்சு அதோட மொத்த தாக்கமாத்தான் அந்த அசுர வளர்ச்சி." ஏற்கெனவே கேட்டிருந்தாலும் ராஜி சொல்லும்போது வியப்பாகவே இருந்தது அருணுக்கு.

``சைனீஸ் பேம்பூ ட்ரீ மாதிரிதான் நம்ம பசங்களும். இப்போ சொல்லித்தர்றது எல்லாமே அவங்க மனசுல கண்டிப்பா நிக்கும். இப்போ இல்லைன்னாலும் என்னைக்காவது ஒருநாள் அவங்களுக்கு உதவும். அதனாலதான் நான் வகுப்புக்கு முன்னாடி செய்யற தயாரிப்புகள்ல அவ்வளவு கவனம் செலுத்துறேன். அதுல நாம அக்கறைகாட்டி வேலை செஞ்சு பசங்களோட மனசுல பதியுற மாதிரி கிளாஸ் எடுத்தாலே போதும்" என்றாள்.

A grown up Chinese Bamboo tree
A grown up Chinese Bamboo tree

``அப்படின்னா அன்னிக்கு டீம்-வொர்க் பத்தி ஒரு கிளாஸ் எடுத்தோமே அது சேதுவுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறியா?"

``நிச்சயமா. அவன் அந்த வட்டத்துக்குள்ள இருந்து வெளிய வர கொஞ்ச காலம் ஆகும். ஆனா, அப்போ சைனீஸ் பேம்பூ மாதிரிதான், ரொம்ப ஓங்கி உயர்ந்து இருக்கும். இது நம்ம வகுப்புக்கு மட்டுமில்ல. மேக்ஸுக்கும், சயின்ஸுக்கும்கூட பொருந்தும். ஏன் உலகத்துல இருக்குற எல்லா அமைப்புக்குமே பொருந்தும்" என ஒரு விளக்கமளித்து மீண்டும் தொடர்ந்தாள் ராஜி.

Representational Image
Representational Image

``தான் செய்யற வேலையால எந்தப் பலனும் கிடைக்கலனு நிறைய பேருக்கு ஒரு மன அழுத்தம் இருக்கும். ஏமாற்றம் இருக்கும். ஆனா யாரா இருந்தாலும் அவங்க செய்யற வேலைய ஒழுங்கா அதோட சரியான நோக்கத்தப் புரிஞ்சுக்கிட்டு செஞ்சா, என்னைக்காவது ஒரு நாள் அதோட தாக்கம் தெரியும்," எனக் கூறி முடித்தாள்.

அடுத்த கட்டுரைக்கு