Published:Updated:

அபூர்வத்தின் நடனம் – நர்த்தகி நடராஜ் | இவர்கள் | பகுதி – 13

நர்த்தகி நடராஜ்
News
நர்த்தகி நடராஜ்

``வாய்ப்புகள் சிறிதும் பெரிதுமாக கிடைத்தபோதிலும் நான் சந்தித்த அவமானங்கள்தான் எனது வாழ்வின் உந்துசக்தியாக எப்போதும் இருந்திருக்கின்றன” என்கிறார் நர்த்தகி.

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.

மனிதர்களைப் பற்றி எழுதுவதும், அவர்தம் சாதனைகளையும், அவற்றை அடைய அவர்கள் கடந்து வந்த பாதையை உலகுக்கு உரக்கச் சொல்வதும் மனதுக்கு உவகை தரும் விஷயங்கள். அதிலும் குறிப்பாக நண்பர்களைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் நம்மில் ஒரு பகுதியைப் பற்றி எழுதுவது போன்ற பரவசமூட்டும் அனுபவமாக அமைந்துவிடுகிறது.

சாஸ்திரிய சங்கீதத்தைக் குறித்தும், நடனத்தைக் குறித்தும் பெரிய அறிவில்லாதபோதும் ரசனையுண்டு. நல்ல இசையைத் தேடிக் கேட்க வேண்டுமென்கிற உந்துதல் எப்போதும் இருப்பதுண்டு. அந்த வகையில்தான் நர்த்தகி நடராஜின் ஒருசில அரங்கேற்றங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தொடக்கத்தில் அவரோடு பெரிய அறிமுகம் எதுவுமில்லை. ஒருமுறை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற அவரின் நடன நிகழ்வுக்கு நானும் என் மனைவியுமாகச் சென்றிருந்தோம். அதுவொரு வெள்ளிக்கிழமை. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த அந்த நிகழ்ச்சி முடியும்போது மலைத்துப்போனேன்.

நர்த்தகியின் நடனம் குறித்த நுட்பங்களைப் புரிந்துகொள்ள முடியாதபோதும், அரங்கத்தின் பின்னாலிருந்த திரையில் அவரோடு சேர்ந்து அவரின் நிழலும் நாட்டியம் புரிந்ததைக் கண்டு மிரட்சியுற்றேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கச்சேரி முடிந்து பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டிருக்கையில், எழுத்தாளன் என்ற முறையில் அவர் என்னை அழைத்து ஒருசில நிமிடங்கள் பேசினார். சடாரென சிலரிடம் ஒரு நெருக்கம் வருமல்லவா… அத்தனை பெரிய கலைஞர், சற்றைக்கு முன்னர் வரையிலும் சப்தநாடியும் ஒடுங்க நான் அவரின் நடனத்தை மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதையும் மீறி அந்த நெருக்கம் ஆதுரமாயிருந்தது. அன்றிரவு `நர்த்தகியின் நிழலும் நர்த்தனம் புரியும்’ என ஒரு பதிவை எழுதியிருந்தேன். அதன் பிறகு அவரின் வேறுசில நிகழ்ச்சிகளிலும் நான் கலந்துகொண்டதுண்டு. நான் வியக்கும் கலைஞர் என்பதையும் மீறி அவர் ஓர் எழுத்தாளனின் மீது வெளிப்படுத்தும் அன்பும் அக்கறையும் மகத்தானவை. எந்த ஒழுங்குக்குள்ளும் அடங்காத எனது ஓட்டங்களை, ஆத்திரங்களை அவ்வப்போது அவர் கண்டிப்பதுண்டு. ஏதாவதோர் இலக்கை நோக்கிப் பயணிக்கவேண்டுமென என்னை வழிநடத்தியவர்களில் நர்த்தகியும் ஒருவர்.

நர்த்தகி நடராஜ்
நர்த்தகி நடராஜ்

தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழுவின் உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்றிருக்கும் பேரன்புக்குரிய நர்த்தகி நடராஜ் போன்ற முன்னோடிகளின் வாழ்க்கைப் பயணத்தை அவ்வபோது சமூகத்துக்கு நினைவூட்டுவது அவசியமாகிறது. மதுரையில் வசதியானதொரு குடும்பத்தில் பிறந்த நர்த்தகி, தனது பத்தாவது வயதில் தன் குடும்பத்தினரிடம் தனக்குள்ளிருக்கும் பெண்மையைச் சொன்னபோது குடும்பத்தினர் அவரை ஏசவும் கண்டிக்கவும் செய்தனர். இயற்கையில் தனக்கு அமைந்த அடையாளங்களை மட்டுமே சுமந்துகொண்டு வாழ்வது மனிதர்களுக்குச் சுலபமான ஒன்று. நர்த்தகிக்கு இயற்கை கொடுத்த அடையாளமே சவாலானதாக இருந்தது. பால்திரிபுநிலை குறித்த விழிப்புணர்வோ, அடிப்படைப் புரிதலோ இல்லாத காலகட்டத்தில் அவரின் உடலியல்பு பெருஞ்சாபமாக சுற்றத்தாரால் கருதப்பட்டு அவர் உதாசீனப்படுத்தப்பட்டபோதுதான் அடையாளங்கள் மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்ட செளகரியங்களே அன்றி வேறல்ல என்பது அவருக்குப் புரிந்தது. அச்செளகரிய வளையத்துக்குள் இடம்பெற முடியாதவர்களை ஏற்றுக்கொள்வதைவிட, அவர்களை ஒதுக்குவது சுலபமானதாக இருப்பதை

இளம்பிராயத்திலேயே புரிந்துகொண்ட நடராஜ் எனும் ஆண், தன்னுள் மலரத் துடித்த நர்த்தகியை கலையெனும் தங்கக் கம்பளம் விரித்து வரவேற்றார்.

நங்கைகளில் சிறப்புடையவர்கள் என்பதால் அவர்களை `திரு’ என்ற அடைமொழியோடு 'திருநங்கை' என்று பெயர்சூட்டி முதன்முதலில் தமிழுலகுக்கு வழங்கியதும் அவரே. வேறு எந்த மொழியிலும் இடம்பெறாத, இடம்பெற முடியாத அழகு தமிழ்ச்சொலை அமைத்துத் தந்தவர் 'திருநங்கை நர்த்தகி நடராஜ்.’

மதுரை அனுப்பானடியிலுள்ள தியாகராசர் முன்மாதிரிப் பள்ளியில் படித்த நடராஜ், மிகச் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். இருந்தபோதும், உடற்கூற்றின் மாற்றங்கள் அவரை, தான் மற்றவர்களிடமிருந்து வேறு என்று உணர்த்திக்கொண்டேயிருந்தன.

வீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி, 12-ம் வகுப்புவரை படித்த நடராஜ், அதற்குப் பிறகு படிப்பதற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நடனக் கலை அவரை அரவணைத்தது. தன்னை ஏற்றுக்கொள்ளாத

குடும்பத்திலிருந்து வெளியேறியவர், தனது ஆன்மத் தேடலின் மறுபாதியாக பாஸ்கர் (சக்தி பாஸ்கர்) என்பவரைக் கண்டுகொண்டார்.

அன்றிலிருந்து இன்று வரை தனது ஆற்றலும் கலையும் செருக்குடன் வீற்றிருக்கும் சிம்மாசனமாக சக்தி பாஸ்கரைச் சுட்டுகிறார்.

"தான் நடனத்தைத் தேடிச் சென்றதாக கூறுவதைவிட நடனம் தன்னைத் தாய்மடியாக ஏந்திக்கொண்டது என்றே கூற வேண்டும்" என்கிறார் நர்த்தகி நடராஜ். சமூக அழுத்தத்தால் தான் சந்தித்த உளவியல் சிக்கல்கள் அனைத்துக்கும் நடனத்தில் பதில் கிடைத்ததாகக் கூறும் அவர், அவ்வகையில் தன் வாழ்வின் பொருளைக் கண்டுணர்ந்து அப்பாதையில் பயணிக்கத் தொடங்கினார்.

நர்த்தகி நடராஜ்
நர்த்தகி நடராஜ்

திரைப்படங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் எனுமளவிலேயே நடனம் அவருக்கு அப்போது அறிமுகமாகியிருந்தது. கோயில்களிலும் உள்ளூர் கலை விழாக்களிலும் நடனம் பயின்ற அவருக்கு ஒரு கட்டத்தில் நடனத்தைத் தீவிரமாகத் தொடர வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. வைஜெயந்தி மாலா, யமுனா ராணி, சுதாராணி ரகுபதி போன்ற நாட்டிய விற்பன்னர்களின் குருவான திரு.கிட்டப்பா பிள்ளையை நாடிச் சென்றனர் நர்த்தகியும் சக்தி பாஸ்கரும். சுமார் ஒரு வருடகால காத்திருப்புக்குப் பின் தங்களை

சீடர்களாக ஏற்றுக்கொண்ட கிட்டப்பா பிள்ளையிடம் பதினைந்து வருடங்கள் 'தஞ்சை பாணி' செவ்வியல் பரத நடனத்தைப் பயின்றனர்.

பரதகலையின் முன்னோடிகளான 'தஞ்சை நால்வருள்' ஒருவரான சிவானந்தத்தின் பேரன் கிட்டப்பா பிள்ளை. அவரை குருவாக அடைந்ததைத் தனது பெரும்பேறாக நர்த்தகி கூறுவதுண்டு. நடராஜ் என்பவருக்கு `நர்த்தகி’ என்று பெயர்சூட்டியதும் கிட்டப்பா பிள்ளை அவர்கள்தான்.

நர்த்தகி நடராஜ்
நர்த்தகி நடராஜ்

வாய்ப்புகள் சிறிதும் பெரிதுமாகக் கிடைத்தபோதிலும் தான் சந்தித்த அவமானங்கள்தான் தனது வாழ்வின் உந்து சக்தியாக எப்பொழுதும் இருந்திருக்கின்றன என்கிறார் நர்த்தகி. கோவை நடன நிகழ்ச்சியொன்றில் நர்த்தகியின் நடனத்தைக் கண்டு வியந்த பெரும் பிரபலமான ஒருவர், நிகழ்ச்சியின் இடைவேளை நேரத்தின்போது நர்த்தகியை அணுகி "உங்கள் நடனம் அற்புதமாக இருந்ததில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் எனது வருத்தமெல்லாம் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்திருக்கலாமே என்பதுதான்’’ என்றதும் பலவண்ண விளக்குகள் ஒளிர்ந்த அவ்வரங்கில் காரிருள் மேகமொன்று தன்னை விழுங்கியதுபோலிருந்தது நர்த்தகிக்கு. அந்த நிகழ்வுக்குப் பிறகு தன்னை எவரிடத்திலும் நிரூபிக்கவேண்டிய தேவையில்லை என்ற வைராக்கியமும் அவரை ஆட்கொண்டது. அதற்குப் பிறகு அவர் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் நடனத்தில் உயர்ந்த பரிமாணங்களை எட்ட அவருக்கும் உதவின எனலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பரத நடன பாணிகளில் பழம்பெரும் தஞ்சை பாணியை இன்றளவும், அதன் தொன்மையும் கட்டமைப்பும் சிறிதும் குலையாமல் தனது வெளள்ளியம்பலம் நாட்டிய அறக்கட்டளையின் மூலம் இளம் தலைமுறைக்குக் கற்பித்துவரும் நர்த்தகி அவர்கள், தன்மீது வைக்கப்படும் விமர்சனங்களை புன்சிரிப்புடன் எதிர்கொள்கிறார். தனது நடனத்தில் புதுமையான உத்திகளைக் கையாள்வதில்லை என்னும் விமர்சனத்துக்கு அவர்,

"புதுமைக்கு நான் எதிரி அல்ல. ஆனால் நான் பயின்ற நடனத்தின் தொன்மையான பாரம்பர்யத்தை வளரும் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே எனது குறிக்கோள்

என்பதால் அவ்வெண்ணத்தின் அடிப்படையில் இயங்குகிறேன்" என்கிறார். உலகம் நம்மீது வைக்கும் எதிர்பார்ப்புகள் அல்லது எதிர்வினைகள் இரண்டுக்குமே சமநிலை குலையாமல் பதில் கூறும் ஒழுக்கத்தையும் நடனத்திடமிருந்தே பெற்றதாக நர்த்தகி கூறுகிறார். கட்டடற்ற சுதந்திரம் வாய்க்கப்பெறும்போது தீவிரமான பொறுப்புணர்வும் கூட வேண்டியது அவசியம். எப்படியும் வாழலாம் என்பது தற்காலிக இன்பம் தருவதுபோல் தோன்றினாலும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று மனிதன் தனக்கு விதித்துக் கொள்ளும் சில கட்டுப்பாடுகளே அவனது முன்னேற்றத்தின் பாதையை செம்மைப்படுத்துகின்றன. நர்த்தகி நடராஜ் தான் நம்பும் விதிமுறைகளுக்கு நேர்மையாக வாழ்பவர். அதற்கு அவருக்கு இதுவரை சாத்தியப்பட்ட உயரங்களும் இனி அவர் எட்டப்போகும் உயரங்களுமே சான்று.

நர்த்தகி நடராஜ்
நர்த்தகி நடராஜ்

மேட்டுக்குடியினர் மட்டுமே ஆடுவதற்கான கலையாக இருந்த பரதத்தை ஒரு திருநங்கை ஆடுவதற்குக் கடுமையான எதிர்ப்புகள் வந்தபோதெல்லாம் மனதளவில் உறுதியோடு நின்று தனது திறமையின் மூலம் பதிலுரைத்தார். சங்க இலக்கியங்களை அடிப்படையாகக்கொண்டு இவர் உருவாக்கிய நடனங்கள் பரதக் கலையின் முகத்தை மாற்றின. நடனத்தைத் தவிர்த்து வேறு துணையில்லாத தமது இளமைக் காலத்தின் துயரங்களைப்போல் அடுத்த தலைமுறை திருநங்கைகள் பாதிக்கப்படக் கூடாதென்பது அவரின் எண்ணம். இன்றைக்குத் தனது நடனப்பள்ளியின் வரும் வருமானத்தில் எண்பத்தைந்து சதவிகிதத்தை திருநங்கையரின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தக் கொடுத்துவிடுகிறார்.

கலைமாமணி, சங்கீத நாடக அகாதமி புரஸ்கார், நிருத்ய சூடாமணி, நிருத்ய ரத்தினாகரா போன்ற விருதுகள் மட்டுமின்றி, இந்திய அரசின்

பெருமைக்குரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ள நர்த்தகியின் வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தமிழ் பிரிவில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது.

சமூகம் எப்போதெல்லாம் தன்னைத் துன்புறுத்தவும் துரத்தவும் செய்ததோ அப்போதெல்லாம் பரதமே தன்னை அரவணைத்துக்கொண்டதாகக் குறிப்பிடும் நர்த்தகி, உலகின் பல்வேறு நாடுகளில் நடன நிகழ்வுகளையும் நிகழ்த்திவருகிறார். அமெரிக்காவிலும் கனடாவிலும் அவருக்கு நடனப்பள்ளிகள் உள்ளன. இவ்விடத்தில் கடவுச்சீட்டு வாங்குவதற்காக அவர் எதிர்கொண்ட இன்னல்களையும் அவமானங்களையும் குறிப்பிட்டு எழுதினால் நம் இதயம் நொறுங்கிப்போகும். இருப்பதிலேயே துயரமானது நமது அடையாளத்தைத் தொடர்ந்து நாம் நிரூபிப்பதற்கான போராட்டம்தான். பால் புதுமையினர் குறித்து பெரிய புரிதல்கள் இன்றும் வந்திடாத இந்தியா போன்றதொரு நாட்டில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு திருநங்கை கடவுச்சீட்டு வாங்கியது அசாதாரணமான காரியம். ’நீ தோற்ற இடத்திலேயே உன்னை ஜெயிக்கப் பண்ணுவேன்’ என்கிறது விவிலியம். நர்த்தகி எங்கெல்லொம் உதாசீனப்படுத்தப்பட்டாரோ அங்கெல்லாம் கொண்டாடப்படுகிறார். வியந்து போற்றப்படுகிறார். கலை ஒரு மனிதனுக்கு தரக்கூடியது பொருளோ, பதவியோ, விருதுகளோ அல்ல, விடுதலை!