Published:Updated:

பிக்பாஸில் தொ.பரமசிவனின் `அழகர் கோயில்' பற்றி ஏன் பேசினார் கமல்?!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் வாராவாரம் ஒவ்வொரு புத்தகத்தைக் குறிப்பிட்டு அதன் சிறப்புகளைக் கூறிவருகிறார். தமிழில் ஜெயமோகனின் 'வெண்முரசு' மற்றும் ப.சிங்காரம் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' போன்ற புத்தகங்களைப் பரிந்துரைத்தவர், இந்த வாரம் தொ.பரமசிவனின் 'அழகர் கோயில்' பற்றிப் பேசினார்.

"கடவுள் இல்லைன்னு யார் சொன்னா... இருந்தா நல்லாயிருக்கும்" என்று தசாவாரத்தில் நான் பேசிய வசனத்தை ஒரு விவாதத்தில் போகிறபோக்கில் உதிர்த்தவர், இப்படி பல முத்துகளை உதிர்த்த ஐயா தொ.பரமசிவன் கோர்த்த முத்து மாலைதான் 'அழகர்கோயில்' என்றார்.

"ஒரு பகுத்தறிவாளர் எழுதிய புத்தகத்தில் பக்தர்களின் உணர்வுக்கு எவ்வளவு இடம் கொடுத்திருக்கிறார் என்பதற்கான சான்று" என்று பெருந்தமிழஞறிஞர் தொ.பரமசிவனின் 'அழகர்கோயில்' புத்தத்துக்கு அறிமுகம் கொடுத்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.

மண்ணின் வரலாறும், பண்பாட்டின் வரலாறும் இணைந்ததே கோயில் வரலாறு. ஆனால் பல பெருங்கோயில்களின் வரலாறுகள் புராணங்கள் புனைந்ததாக மாறி தெய்விகத் தன்மை அடைந்துவிட்டன.

குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்ற சிலர், ஆதாரங்களைத் திரட்டி வரலாற்றுத்தன்மையோடு சில கோயில்களை பகுத்தாய்ந்து நூல்களை வெளியிட்டிருக்கிறாகள். பெருந்தமிழறிஞர் தொ.பரமசிவம் எழுதியுள்ள 'அழகர் கோயில்' நூலும் அப்படியான ஓர் அருந்தமிழ் நூல்தான். நாட்டுப்புற வரலாற்றின்பால் மிகுந்த பற்றுகொண்ட தொ.ப எழுதியதால் இந்த நூல் வட்டார வரலாற்றுத்தன்மையோடும் பண்பாட்டுப் பதிவாகவும் அமைந்திருப்பது சிறப்பு.

தொ.பரமசிவன்
தொ.பரமசிவன்

அழகர் கோயில் எளிய மக்களுக்கு நெருக்கமான கோயில். மதுரையின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த கோயில். நாட்டார் தெய்வத் தன்மை மிக்க சடங்குகளும் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் அந்தக் கோயிலில் நிரம்பியிருக்கின்றன. புராணம், வரலாறு, இலக்கியம், செவிவழிக்கதைகளென எல்லா வடிவங்களிலும் அழகர் கோயில் நிலைத்திருக்கிறது.

கோயில்களைப் பண்பாட்டின் கூறாகப் பார்க்கிற தொ.ப, தன் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுத்தலைப்பாக எடுத்ததுதான் 'அழகர் கோயில்'. அந்த ஆய்வை காமராஜர் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டுள்ளது. அழகர் கோயில் குறித்து குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் ஆய்வு செய்திருக்கிறார் தொ.ப. தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருத்தலங்களில் அழகர் கோயிலும் ஒன்று. கோயிலின் நிலக்காட்சிகளை வார்த்தைகளில் சித்திரமாக்கும் தொ.ப, கோயிலின் கட்டுமானங்கள், சிற்பங்கள், மண்டபங்கள், திருச்சுற்றுகள், திருவீதிகள், கோபுரங்கள், கோயிலை ஒட்டியிருக்கும் நீர்நிலைகள் அனைத்தையும் அதனதன் தன்மைகளோடு ஆவணப்படுத்துகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூதத்தாழ்வார், இளம்பெருவழுதியாரின் பாடல்களையும் சிலப்பதிகாரத்தின் சித்திரங்களையும் சுட்டிக்காட்டும் தொ.ப, சீனி வேங்கடசாமியின் கூற்றுப்படி இது பௌத்த கோயிலாக இருக்கலாம் என்ற கருத்தை ஆமோதிக்கிறார்.

அழகர் கோயிலின் சமூகத் தொடர்புகளை ஆய்வு செய்யும் தொ.ப, கோயிலோடு தொடர்புடைய கள்ளர் சமூகத்தின் கூறுகளையும் கிளைப்பரப்பில் தேடுகிறார். அச்சமூகத்தின் பிரிவுகள், பண்பாடு குறித்து அவரது தேடல் நீள்கிறது. ஒரு பண்பாட்டு ஆய்வாளர் வரலாறெழுதும்போது நிகழ்வது இது. நாயக்கராட்சியின் போதும், அதற்குப் பின்னரும் மதுரையின் அரசியல் தலைமையை எதிர்த்துப் போராடிய மேல்நாட்டுக் கள்ளர் குறித்த தரவுகள் வியக்க வைக்கின்றன.

தொ.பரமசிவன்
தொ.பரமசிவன்

யாதவ சமூகத்தினருக்கும் கள்ளழகர் கோயிலுக்குமான பந்தம் ஓர் அத்தியாயமாக விரிகிறது. சித்திரை திருவிழாவில் கள ஆய்வு செய்து, வேடமிட்டு வழிபடும் அடியவர்களில் 33 பேர் சதவிகிதம் பேர் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார் தொ.ப. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் கோயிலுக்குமான தொடர்புகள் குறித்தும் விரிவான பதிவுகள் நூலில் உள்ளன. திருவிழாக்களில் உள்ள சமூகத் தொடர்புகள் குறித்தும் திருவிழாக்களின் நோக்கங்கள் குறித்தும், அக்காலத்தில் இயல்பாக நடந்து இப்போது அதுவே வழக்கமான நடைமுறைகளானது குறித்தும் வாசிக்கும்போது சுவாரஸ்யம் குறையாது.

ஒரு கோயில் குறித்த ஆய்வு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல... ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் இந்த நூல் ஒரு சான்று. இந்த நூலுக்காக மிகப்பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் தொ.ப. பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் இயற்றிய 'அழகர் அந்தாதி', வேம்பத்தூர் கவி குஞ்சரமய்யர் எழுதிய 'அழகர் கலம்பகம்', சென்னை கீழ்திசைச் சுவடி நூலகத்திலுள்ள ஆசிரியர் பெயர் அறியப்படாத சிற்றிலக்கியங்கள், அடையாறு உ.வே.சா ஏட்டுச்சுவடி நூலகத்திலுள்ள 'அழகம் பெருமாள் வண்ணம்' என ஏராளமான நூல்களை, சுவடிகளை ஆய்வு செய்திருக்கிறார்.

சித்திரைத் திருவிழா குறித்து பழைய மரபுக் கதைகளும் நம்பிக்கைகளும் மிக விரிவாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய செய்திகளும் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. கதைப்பாடல்கள். நம்பிக்கைகள், கருப்பசாமியின் வைணவத் தொன்மையுடைய தோற்றம் குறித்தும் தொ.ப ஆய்வு செய்துள்ளார்.

அழகர் கோயில் - தொ.பரமசிவன்
அழகர் கோயில் - தொ.பரமசிவன்

மக்களுக்கு நெருக்கமான, பழைமையான கோயில் குறித்த ஆய்வு நூல். புனிதத்தன்மை குலையாமல் அதை ஒரு வட்டார வரலாற்று நூலாக மாற்றியதுதான் தொ.ப வின் தனித்தன்மை. தமிழ்த் தொன்மத்தை, வழிபாட்டு மரபை, சமூக நடைமுறைகளை, அடுத்து அடுத்தென்று வளர்ந்து கிளைத்து நிற்கும் நம்பிக்கையை புரிந்துகொள்ள அவசியம் இந்த நூலை வாசிக்க வேண்டும்.

அழகர் கோயில் - தொ.பரமசிவன் | பதிப்புத்துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு