கட்டுரைகள்
Published:Updated:

என்றும் மனதில் கவிதை வேண்டும் - ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)

attoor ravi varma
பிரீமியம் ஸ்டோரி
News
attoor ravi varma

யூமா வாசுகி - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

வீன மலையாளக் கவிதையின் ஆசான்களில் ஒருவரும், அந்தக் கவிதைக்கு மிகப் புதியதொரு பாணியை, முகத்தை உருவாக்கிக் கொடுத்தவருமானவர் ஆற்றூர் ரவிவர்மா.

கேரளத்தின் திருச்சூர் அருகே ‘ஆற்றூர்’ எனும் கிராமத்தில் பிறந்தார். அது மலையடிவார கிராமம். திருவிழாக்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பழங்கதைகளுக்கும் பஞ்சமில்லாத பிரதேசம். இவற்றையெல்லாம் பார்த்தும் கேட்டும்தான் ஆற்றூர் வளர்ந்தார். தனது படைப்பாற்றலை விழிக்கச் செய்ய இவையும் காரணமாக இருந்திருக்கலாம் என்று, தன் முதிர்ந்த வயதில் நினைவுகூர்கிறார் ஆற்றூர். இவரின் கவிதைகளில் கிராமிய பிம்பங்களும் கிராமியச் சூழலும் இடம்பெறுவதற்கான மூலமும் இவைதான்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது தன் முதல் கவிதையை எழுதினார். அந்தக் காலத்தில், கவிதையைப் பிரசுரிப்பது பற்றி எதுவும் தெரியாது. நிறைய வாசிப்பதற்கான சூழல் ஆற்றூரில் இருந்தது. இளம் பருவத்தில் நிறைய நாவல்கள் வாசித்தார். அங்கே,

ஓ.சந்துமேனோனின் ‘இந்துலேகா’ படித்த

தெல்லாம் இறுதிவரை அவர் நினைவில் தங்கியிருந்தது. சம்ஸ்கிருதக் கலப்பு அதிகம் உள்ளவற்றைப் பெரும்பாலும் வாசித்தது இல்லை. எளிமையான மலையாள உரைநடைகளைத்தான் பெரிதும் விரும்பி வாசித்தார். வளர்ந்த பிறகு அந்தக் கிராமத்தைவிட்டு இடம்பெயர நேர்ந்தது. நகரத்தில் வாழும்போதும் என்றும் அவரின் நினைவுகள் தன் கிராமத்தைச் சூழ்ந்தே இருந்தன. இப்படி இவரது கவிதைகளில், ஊர் துறந்து வந்தவனின் நினைவிலுள்ள கிராமம் இடம்பெறுகிறது.

அவர் உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கும்போதே கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பெற்றிருந்தது. அப்போது அவர் பொதுவுடைமை இலக்கியங்கள் வாசித்தார். காவல்துறையால் தேடப்படும் இயக்கத் தலைவர்கள் ஆற்றூருக்கு வந்து தலைமறைவாக இருப்பார்கள். அவர்களுடன் பழகியதன் மூலம் கம்யூனிஸ்ட் சார்பு ஏற்பட்டது.

என்றும் மனதில் கவிதை வேண்டும் - ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)

வெகுகாலம் கழித்து கோழிக்கோட்டில் சாமூதிரி கல்லூரியில் இன்டர்மீடியட் படிக்கும் காலத்தில், அதே கல்லூரியில் மலையாள ஆசிரியராகப் பணிபுரிந்தவர் கோருப்பணிக்கர். ஆற்றூரும் கோருப்பணிக்கரும் காலையில் ஒன்றாகத்தான் கல்லூரிக்குச் செல்வார்கள். அன்று கோருப்பணிக்கர், கோழிக்

கோட்டிலிருந்து வெளியான ‘யுவசக்தி’ எனும் பத்திரிகையில் பத்தி எழுதிவந்தார். அவரது பத்தியில்தான் ஆற்றூரின் கவிதை முதன்முதலில் பிரசுரமானது. இதன் மூலம் ஆற்றூரை உற்சாகப்படுத்துவதுதான் அந்த ஆசிரியரின் நோக்கம். பிறகு, கோழிக்கோட்டிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த முற்போக்கு இலக்கிய இதழ்களில் கவிதைகள் எழுதத் தொடங்கினார் ஆற்றூர்.

சாமூதிரி கல்லூரியில் படிக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். எப்போதும் போராட்டங்களில் கலந்துகொண்டதால் அந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப் பட்டார். அந்தச் சமயத்தில், ஆற்றூரின் நம்பிக்கைகளிலும் செயல்பாடுகளிலும் மதிப்புகொண்ட நண்பர் ராகவப்பணிக்கர் (மாத்ருபூமி நிருபர்), அவர் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்த்து படிப்பதற்கு உதவி செய்தார். விரைவிலேயே, அங்கே ஆசிரியராக இருந்த, கவிஞரும் விமர்சகரும் பேச்சாளருமான ஆர்.ராமச்சந்திரனுடன் நெருக்கம் ஏற்பட்டது. கவிதையில் ஆற்றூரை மிகவும் ஊக்கப்படுத்தினார் ராமச்சந்திரன். அவரது கவிதை வாழ்வில் மிகவும் செல்வாக்குச் செலுத்தியவர் ராமச்சந்திரன் மாஸ்டர்தான். அவர் இறக்கும்வரை அவருடன் ஆற்றூருக்கு நல்ல நெருக்கம் இருந்தது.

பிற்காலத்தில் ஆற்றூர் இடதுசாரி அரசியலில் அவநம்பிக்கைகொண்டார். ஆயினும், நக்சல்பாரி இயக்கத்தில் தீவிர அனுதாபம் காட்டினார். ‘என் இளம்பருவத்தில் நான் ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சிக்காரனாக இருந்தேன்’ என்று சொல்லும் ஆற்றூர், ‘என்னை நாத்திகன் என்று சொல்லலாம். ஆனால், கலாசார ரீதியாக நான் நாத்திகன் அல்ல. பாரதியக் கலாசாரத்தை அறிவதற்காக நான் நிறைய யாத்திரைகள் செய்திருக்கிறேன். மனைவியுடன் இமாலயத்துக்குச் சென்றிருக்கிறேன். பாரதியக் கலாசாரத்தைப் பின்தொடர்வதற்கான முயற்சியின் பகுதிதான் இந்த யாத்திரைகள். இவை பரிசளித்த காட்சிகளும் அனுபவங்களும் ஒருபோதும் என்னைவிட்டு அகலாதவை’ என்று கூறுகிறார்.

என்றும் மனதில் கவிதை வேண்டும் - ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)

வரலாற்று நினைவுச் சின்னங்களையும் கோயில்களையும் மீண்டும் மீண்டும் பார்ப்பதில் ஆற்றூருக்கு ஆர்வம் அதிகம். ‘தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்போன்ற அற்புதக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அவ்வளவு பெரிய, அழகான ஒரு கோயிலை அந்தக்காலத்தில் கட்டியெழுப்பிவர்

களைப் பற்றி என்னதான் சொல்வது!’ என்று வியக்கிறார். இமாலயத்தைக் குறித்த சிலிர்ப்பும் என்றும் மனதில் உண்டு.

படிப்பு முடிந்த பிறகு, சென்னை மாநிலக் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் இணைந்தார். அந்தச் சமயத்தில்தான் எம். கோவிந்தனுடன் அணுக்கம் ஏற்பட்டது. அவரும் அவரின் நண்பர்களும் எம்.கோவிந்தனின் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் ஆனார்கள். ‘உண்மையில் எங்களுக்கெல்லாம் குருவாக இருந்தவர் எம்.கோவிந்தன். என் வாழ்க்கைப் பார்வையைத் திருத்திய குரு. அவர் அளவுக்கு என்னைப் பாதித்த மற்றொருவர் இல்லை’ என்கிறார் ஆற்றூர்.

ஆற்றூருக்குத் தமிழின் மீது நெருக்கம் ஏற்படுவதற்கு முதற்காரணம்,

எம்.கோவிந்தனுடனான பழக்கம்தான். தமிழ் கற்றுக்கொள்வதற்கான மற்றொரு காரணம், இசையின் மீதுள்ள ஆர்வம். கர்னாடக இசைப்பாடல்கள் எல்லாம் தெலுங்கிலோ தமிழிலோதான் இருந்தன. தெலுங்கு கற்றுக்கொள்ள முடியாது என்று அவருக்குத் தோன்றியது. பிறகு, அவர் தமிழ்ப் பாடல்களும் பேச்சுகளும் கேட்டு தமிழ் கற்றுவந்தார். பாட்டின் வரிகளை வாசிக்கவும் பழகிக்கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் செய்த அதிகமான யாத்திரைகளும் தமிழ் கற்றுக்கொள்ள உதவின. எம்.கோவிந்தன், சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலை ஆற்றூருக்கு வாசிக்கக் கொடுத்தது அந்தச் சமயத்தில்தான். அதிலிருந்துதான் ஆற்றூருக்கு நவீனத் தமிழ் இலக்கியத்தின் பாற்பட்ட தீவிரமான வாசிப்பு தொடங்கியது.

சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’தான் ஆற்றூர் முதன்முதலில் தமிழிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்த்த நூல். பிற்காலத்தில், 400 தமிழ்க் கவிதைகளை, ‘புதுநாநூறு’ எனும் பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’, சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’, ‘பக்தி காவியம்’ எனும் தலைப்பில் சைவ நாயன்மார் கவிதைகள் முதலியவற்றை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். வாழ்வின் இறுதிக்கட்டத்தில் வெகுகாலமாக, தோழமைக் கவிஞர் மாதவன் அய்யப்பனுடன் சேர்ந்து கம்பராமாயணத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்துவந்தார். இந்தப் பணி நிறைவுபெறவில்லை.

‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ மொழிபெயர்ப்பு தொடர்பாக ஆற்றூர், நாகர்கோயிலுக்கு வந்து சுந்தர ராமசாமியைச் சந்தித்துப் பேசுவதுண்டு. சுந்தர ராமசாமி தமிழும் மலையாளமும் நன்கறிந்தவர் என்பதால், தன் நாவலின் மொழிபெயர்ப்பு குறித்து அவருக்குச் சில கருத்துகள் இருந்தன. உரையாடல் நீண்டது. இறுதியில், நாவல் மலையாளத்தில் வரும்போது பெரும் வரவேற்புபெற்றது. இதற்குள் சுந்தர ராமசாமிக்கும் ஆற்றூருக்குமான தோழமை ஆழப்படவே அடுத்ததாக, சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலையும் மலையாளத்துக்கு மொழிபெயர்த்தார் ஆற்றூர்.

சுய அனுபவங்களைத் தீவிரமாக வெளிப்படுத்துவது என்பதுதான் என் கவிதை. என் மனதைப் பாதிக்காத எதைப் பற்றியும் நான் எழுதியதில்லை.

‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவல் மொழிபெயர்ப்பு நடந்துகொண்டிருக்கும் காலத்தில், சுந்தர ராமசாமியின் வீட்டுக்கு வரும்போது ஒருமுறை அங்கே ஜெயமோகனைச் சந்தித்தார் ஆற்றூர். பிறகு, ஜெயமோகனின் எழுத்துகளை வாசித்தபோது அவர்மீது நேசமும் மதிப்பும் கொண்டார். ‘கடும் அவநம்பிக்கையிலிருந்தும் தாழ்வுமனப்பான்மையிலிருந்தும் என்னை மீட்டவர் ஆற்றூர் ரவிவர்மாதான். அந்த நிழலிலிருந்துதான் என் எழுத்து வளர்ந்தது’ என்று குறிப்பிடுகிறார் ஜெயமோகன்.

ஆற்றூர், கேரளத்தில் தலச்சேரி பிரண்ணன் கல்லூரியில் மலையாளப் பேராசிரியராகப் பணியாற்றியபோது, இவரின் மாணவர்களில் ஒருவராயிருந்தார் தற்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன். தன் மாணவர் விஜயனைக் குறித்து ஆற்றூரின் நினைவு இது: ‘பொதுவாக விஜயன் அமைதியாக இருப்பார். படிப்பு தொடர்பான விஷயங்களில் தீவிரமாக இருப்பார். அதிகமாகப் பேசமாட்டார்…’

ஆற்றூர் ரவிவர்மாவின் கவிதைகள் குறித்து ஜெயமோகன், ‘ஆற்றூரின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு பிரபஞ்சம் இருக்கும். யார் கவிஞர் எனும் கேள்விக்கு நான் எளிதில் தரக்கூடிய விடை, ஆற்றூர்தான்’ என்கிறார்.

மலையாள நவீனக் கவிதையின் முன்னோடிகளில் முக்கியமானவர் ரவிவர்மா. சுண்டக் காய்ச்சிய, அதாவது ‘குறுகத் தரித்த கவிதையின் அப்போஸ்தலர்’ என்று சிறப்பிக்கப்படுகிறார். அமைதியான மேற்பாங்கும் வலுவான அடியோட்டமும் கொண்டவை அவரது கவிதைகள். மலையாள நவீனக் கவிதையின் வடிவம், உக்கிரம், மொழி, அரசியல் பரிணாமம் முதலியவையெல்லாம் ஆற்றூர் மூலமாகவே சாத்தியமாயின. கலாசார வகைமைகளின், நிலம்சார்ந்த அடையாளங்களின் மொழித்தன்மைகளை ஆற்றூர் கவிதைகள் வெளிப்படுத்தின. அவை, நவீன மலையாளக் கவிதையின் கிளாசிக் என்று புகழப்

படுகின்றன. கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்புகள் மூலமாகத் தமிழுடன் ஆத்மார்த்த பிணைப்பும் பரிமாற்றமும் கொண்டிருந்த பெருங்கலைஞர் அவர்.

நிறைய வருடங்களில் மிகக் குறைவான கவிதைகளே ஆற்றூர் எழுதியிருக்கிறார். 2012 வரையிலான, ஒட்டுமொத்தக் கவிதைகள் அடங்கிய தொகுப்பில் 143 கவிதைகளே இடம்பெற்றிருக்கின்றன. வெகுநீண்ட காலத்தில் இவ்வளவு குறைவாக கவிதைகள் எழுதியதற்குக் காரணம் கேட்டபோது அவர் சொல்கிறார்: ‘நிறைய படிக்க வேண்டும். வாசிப்புக்காகத்தான் நான் நிறைய நேரம் செலவிட்டேன். வாசிப்பின் மூலமாகத்தான் கற்பனையின் உலகம் மனதில் உருவாகிறது. அப்படி ஆனதற்குப் பிறகுதான் கவிதை உருவாகிறது. அதுமட்டுமல்ல, கவிதை எழுதுவது எனக்குச் சுலபமல்ல. கவிதை சிலருக்குத் தடையற்ற பெருக்காக இருக்கிறது. ஆனால், எனக்கு அப்படி அல்ல. நான் கவிதை எழுதுவதில் கலைரீதியான பிரயத்தனங்கள் நிறைய இருக்கின்றன. மிகவும் பிரயாசைப்

பட்டுத்தான் நான் ஒவ்வொரு கவிதையையும் எழுதுகிறேன். கிராஃப்டுக்காகத்தான் எனக்கு அதிக நேரம் செலவாகிறது. கவிதை எழுதுவது எனக்கு ஒரு போராட்டம்தான். இரண்டு விதமான கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒரு சாராருக்குக் கவிதை ஒரு பெருக்கு. மறு சாராருக்கு, உள்ளாழ்ந்த அனுபவத்தை, அதன் உணர்ச்சியும் இயல்பும் கெடாமல் மொழிக்கு மாற்றுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். எளிதாகச் சொன்னால், சுய அனுபவங்களைத் தீவிரமாக வெளிப்படுத்துவது என்பதுதான் என் கவிதை. என் மனதைப் பாதிக்காத எதைப் பற்றியும் நான் எழுதியதில்லை. அனுபவங்களைத் தீவிரமாக வெளிப்படுத்த வேண்டும் எனும் கட்டாயம் எனக்கு இருப்பதால், கவிதை எழுதுவது எனக்கு ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது. கவிதை எழுதும்போது, என்னையே நான் ஓர் அந்நியனாகத்தான் காண்கிறேன்…’

ஒரு கவிதையை நீண்ட காலம் தன் வசம் வைத்திருந்து, பல முறை படித்துப் பார்த்து, ஒவ்வொரு முறையும் அடித்துத் திருத்தி எழுதி, செம்மையாக்கித்தான் பிரசுரத்துக்குக் கொடுப்பார் ஆற்றூர். இப்படிப் பல முறை வாசித்து கவிதையின் பல வரிகளை அடித்த பிறகு, முதலில் எழுதியதில் பாதிக்கும் மேற்பட்ட வரிகள் நீக்கப்பட்டிருக்கும்.

இறுதிக் காலத்தில் நினைவுகள் மங்கியிருந்தாலும், பேசும்போது பழைய நினைவுகளை மீட்டெடுக்கச் சிரமப்

பட்டாலும், தான் எழுதிய கவிதைகளைப் பற்றிப் பேசும்போது துல்லியமான நினைவாற்றலுடன் பேசுவார். தன் கவிதைகளை மீண்டும் மீண்டும் அடித்துத் திருத்தி எழுதியிருந்ததுதான் இதற்குக் காரணம்.

தான் எழுதும் காலம், நவீனக் கவிதையின் காலம் எனும் தீவிரப் பிரக்ஞைகொண்டவர் ஆற்றூர். நவீனக் கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் உறுதியான நிலைப்பாடு கொண்டவர். விரித்து எழுத வேண்டிய தேவையில்லை. தேவையற்ற எந்த வார்த்தைக்கும் கவிதையில் இடமில்லை. குறைந்த வரிகளில் அதிக கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இவர் எண்ணம். இவரது இந்தக் கருத்துக்கு ஆதரவாக, ஸ்பானியக் கவிஞர் யுவான் ராமொன் ஹிமனேஸின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் மலையாளக் கவிஞர் அனிதா தம்பி: ‘கவிதையில் வார்த்தை துல்லியமாக இருக்க வேண்டும். வாசிப்பில் வார்த்தை மறைய வேண்டும், அதன் அகம் மட்டும் மிச்சமாக வேண்டும். போக்கை மட்டும் வெளிப்படுத்தி தண்ணீரை மறைக்கும் நதிபோல.’

என்றும் மனதில் கவிதை வேண்டும் - ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)

இவரது புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்றான ‘சம்க்ரமணம்’ (சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாறக்கூடிய நிலைமாற்றம்) ஆரம்பத்தில் ஏறத்தாழ 140 வரிகளைக் கொண்டதாக இருந்தது. பிறகு இது திருத்தப்பட்டு மாற்றப்பட்டு, 70-க்கும் குறைவான வரிகள் கொண்டதாயிற்று. வீட்டின் உள்ளே பற்பல வேலைகளில் மூழ்கி உருகியழியும் ஒரு வீட்டம்மாவைப் பற்றிய கவிதை இது. ஒவ்வோர் ஆணையும் தன் வீட்டுக்கு உள்ளே பார்க்கத் தூண்டும் கவிதை. அல்லது, தன் வாழ்க்கைத் துணைக்கு முன்னால் தலைகுனியச் செய்வது. இந்தக் கவிதை குறித்து ஆற்றூர், ‘இப்படியோர் எண்ணம், சில கேள்விகள் மனதில் வந்தபோது இந்தக் கவிதையை எழுதினேன். அது இப்படி இருக்க வேண்டும், வரிகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்த எண்ணங்கள் எனக்கு ஆரம்பத்தில் இல்லை. எழுத எழுத, இது இப்படி மாறிவிட்டது’ என்கிறார்.

கவிதை எழுத வேண்டும் என்றோ, கவிஞராக அறியப்பட வேண்டும் என்றோ எந்தக் கட்டாயமும் ஆற்றூருக்கு இல்லை. அதே நேரத்தில், அவரது கவிதை கைவிட்டுப் போகாதிருப்பதில் – அதன் கலையும் மொழியின் ஒழுங்கும் இழப்பாகாதிருப்பதில் கவனம் கொண்டிருந்தார். கவிதை எழுதவில்லை என்றாலும், பிரசுரிக்கவில்லை என்றாலும் எப்போதும் மனதில் கவிதை இருக்க வேண்டும் எனும் நிர்பந்தம் கொண்டவர்.

தான் எழுதியவற்றில் மிகவும் குறைவான கவிதைகளைத்தான் அவர் பிரசுரத்துக்கு அனுப்பினார். தன் அகவாழ்க்கையில் அவர் கவிஞராக இருந்தார், கவிஞராகவே வாழ்ந்தார். ஆனால், மற்றவர்கள் அவரைக் கவிஞராக நினைக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அவருக்கு இருந்ததில்லை. ‘தாளம் மொழிக்குத் தவிர்க்க முடியாதது, அது பிரக்ஞைப்பூர்வமாக உண்டாக்குவது அல்ல. அது நம் மொழியில் இயல்பாகவே உள்ளது. அது கவிதைக்கும் ஏற்புடையது’ என்பது ஆற்றூரின் கருத்து.

இளைய கவிஞர்களைப் பார்க்கும்போதெல்லாம், ‘கவிதை இருக்கிறதா?’ என்று கேட்பது அவர் வழக்கம். ‘இல்லை’ என்று சொன்னால் அதை விரும்பமாட்டார். ‘எழுத வேண்டும்’ என்று வலியுறுத்துவார். சில நேரங்களில் இப்படியும் சொல்வார்: ‘எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை. எழுதாமல் இருப்பதில் திருப்தியடையாமல் இருந்தால் போதும்.’ வெகுகாலமாகச் சந்திக்காமல் இருந்த இளைய கவிஞர்கள் அவர் வீட்டுக்குச் செல்லும்போது, ‘நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் கவிதைகள் வந்தால் போதும்’ என்று கேட்டுக்கொள்வார்.

ஆற்றூரைப் பற்றி ‘மறுவிளி’ (எதிர்விளி) எனும் தகவல்படம் (நான்கு வருடக் காலம் கொண்டு எடுத்த 90 நிமிடப் படம்) எடுத்த மலையாளக் கவிஞர் அன்வர் அலி, ‘திருச்சூர் வரும்போதெல்லாம் ஆற்றூரைக் காணச் செல்வேன். என் கவிதையை அவரிடம் வாசித்துக் காட்டுவேன். என் பல கவிதைகள் அவருக்குப் பிடிக்காது. இது சரியாக வரவில்லை – இது கவிதையாக ஆகவில்லை – இது கம்யூனிகேட் ஆகவில்லை’ என்றெல்லாம் கறாராகச் சொல்வார். கவிதை அவருக்குப் பிடித்திருந்தால், அருமையாக இருக்கிறது! என்று குழந்தைபோலக் குதூகலிப்பார். எங்கள் கவிதை இளம்பிராயத்தை விமர்சனபூர்வமாகவும் அனுபவரீதியாகவும் வழிநடத்தியவர் ஆற்றூர் ஒருவரே! ஆற்றூரைப் பற்றிப் படம் எடுக்க என்னைத் தூண்டியது எது? அவர் கவிதைகள் கொடுத்த ஆழமான வாசிப்பு அனுபவம் மட்டுமல்ல, என் எழுத்து கவிதை ஆவதற்கு நான் நடத்தும் முயற்சிகளுக்குக் குறுக்கே, அவரது எழுத்துமுறை ஒரு பெரிய தடையை வைத்தது. இதுதான், ஆற்றூரின் கவிதைகளுக்குள் நான் ஆழ்ந்துபோகவும் அதைக் காட்சிகளாகச் சித்திரிக்க முயன்றதற்கும் காரணம்.’

‘வாசித்துத் தீர்ப்பதற்கானதல்ல, திரும்பத் திரும்ப வாசித்துத் திறப்பதற்கானவை ஆற்றூரின் கவிதைகள். யார் வாசகர்கள் என்று கேட்டால், வேறோர் இடத்திலோ காலத்திலோ இருந்து வாசிக்கும் சிலரால் நாம் எழுதுவதை அனுபவிக்க முடியலாம். அவர்கள்தான் வாசகர்கள் என்று ஆற்றூர் சொல்வார். அந்தக் காலம் இடம் கடந்த வாசிப்புகளினூடேதான், மீண்டும் மீண்டுமான வாசிப்புகளினூடேதான் மகாகவிகள் தோன்றுகிறார்கள். ஆற்றூர் ரவிவர்மா எனும் மலையாளத்தின் மகாகவி, இனிமேல்தான் நம் கவிதை வரலாற்றில் தோன்றப்போகிறார் என்று நான் கருதுகிறேன்’ என்பவையும் அன்வர் அலியின் வரிகள்.

‘போல’ என்று ஆற்றூர் கவிதையில் பல இடங்களில் வரும் உவமைகள் குறித்து அனிதா தம்பி இப்படி சிலாகிக்கிறார். ‘கவிதைகளில் கவிஞரின் கையெழுத்தாக வெளிப்படும் நிறைய ‘போல’களை நான் பார்த்தேன். அவை வெறும் உவமைகள் அல்ல. கவிதைகள் முழுதும் ஒற்றையாகவும் இரட்டையாகவும் பறந்து வந்து அமரும் ‘போல’கள். பறக்கவிருக்கும் மூன்று போலகள், நான்கு போலகள். இந்தப் ‘போல’களின் சாவி வரிகளினூடே நடந்தால், வானுக்கோ, சிகரத்துக்கோ, காட்டுக்கோ, அருவிக்கோ’ என்பதுபோல பற்பல அனுபவ உலகத்துக்குச் சென்றடையலாம் – அவை ஒரு கவிதைக்குள் பல கவிதைகளை அடக்கம் செய்கின்றன; ஒரு கவிதையிலிருந்து பல கவிதைகளை விடுவிக்கின்றன.’

ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து ஆற்றூின் கவிதை இது. நான் ஆற்றூரை நோக்கிச் செல்வதற்கு கதவுகளை விரியத் திறந்தது இந்தக் கவிதைதான் என்கிறார் அன்வர் அலி. அவர் ஆற்றூரைப் பற்றி எடுத்த தகவல் படத்தின் பெயரும் இதுவே.

எதிர்விளி

நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது

எனக்குக் கேட்கிறது

சொல்லாமலிருப்பது

என்னில் எதிரொலிக்கிறது

நமக்கு ஒரே ஒலி ஒரே பொருள்

ஒரே மௌனம்

ஊர் முற்றங்களில்

பொங்கல் விழாக்களில்

கோலமிட

நமது விரல்கள்

ஒன்றாக மடங்கி விரிகின்றன

ஒரே கடலின்

இரு பக்கமும்

நாம் பலியிட்டோம்

மொட்டை போட்டோம்

நாம் காண்பது ஒரே ஆழம்

இக்கரையில் ஓர் ஊர்

ஒரு முப்பட்டி

ஒரு குலதெய்வம்

உங்களைக் காத்திருக்கிறது.

உங்கள் பேர்கள்

எனக்கு நன்கு அறிமுகம்

இடங்கள் அறிமுகம்

ரீகல் சினிமா

வீரசிங்கம் நூலகம்

பேருந்து நிலையம்

எல்லாம் என்னுடைய

காணாத காட்சிகள்

தபால் நிலையச் சாலை வழியாக

நடந்து போகும்போது

பாதையில் ஒரு கைப்பிடியளவு

ரத்தம்

உள்ளங்கைபோலப் பரவி

என்னிடம் முறையிடுகிறது

என்னை அதட்டுகிறது

என்னைத் துரத்துகிறது

கடலிறங்கி

கரையேறி

என் பின்னால் வருகிறது

நான் அதனிடம் சொல்கிறேன்

மன்றாடுகிறேன்

கெஞ்சுகிறேன்

நான் விசையோ குண்டோ அல்ல

வானரனோ வால்மீகியோ அல்ல

முழு வழுக்கையான

முன்பற்கள் உதிர்ந்த

அரை வேட்டி மட்டும் அணிந்த

குண்டு துளையிட்ட

ஒரு வெறும் கேள்விக்குறி.

(1989-ல் எழுதப்பட்டது. கவிதை மொழிபெயர்ப்பு, ஜெயமோகன்)

கே.ஆர்.டோணி எனும் கவிஞர், தன் குரு ஆற்றூர் ரவிவர்மாவுக்கு விடைகொடுக்கும் கவிதையில் இப்படிச் சொல்கிறார்:

‘இனி ஒரு கவிதை எழுதும்போது, அது எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக நான் முதலில் யாரிடம் செல்வேன்? கவிதையுடன் அந்த வீட்டுக்கே சென்று, சற்று நேரம் அங்கே அமர்ந்த பிறகு திரும்பி வர வேண்டியதுதான். அப்படிச் செய்தால்தான் எனக்கு திருப்தி ஏற்படும்…’