Published:Updated:

பசித்த மானிடம் - காலத்தில் எஞ்சியிருக்கும் காட்சிகள்

கரிச்சான் குஞ்சு
பிரீமியம் ஸ்டோரி
கரிச்சான் குஞ்சு

பாதிப் படிகள் மூழ்க, பச்சைநிறத் தண்ணீரைப் போர்த்திக்கொண்டு விரிந்து கிடக்கிறது மகாமகக் குளம். தென்கரை மூன்றாவது மண்டபத்துக்கு எதிரில், வண்ண விளக்குகள் ஒளிர உயர்ந்து நிற்கிற திருமண மண்டபத்தின் பழைய முகவரி, ‘கரிச்சான் குஞ்சு’.

பசித்த மானிடம் - காலத்தில் எஞ்சியிருக்கும் காட்சிகள்

பாதிப் படிகள் மூழ்க, பச்சைநிறத் தண்ணீரைப் போர்த்திக்கொண்டு விரிந்து கிடக்கிறது மகாமகக் குளம். தென்கரை மூன்றாவது மண்டபத்துக்கு எதிரில், வண்ண விளக்குகள் ஒளிர உயர்ந்து நிற்கிற திருமண மண்டபத்தின் பழைய முகவரி, ‘கரிச்சான் குஞ்சு’.

Published:Updated:
கரிச்சான் குஞ்சு
பிரீமியம் ஸ்டோரி
கரிச்சான் குஞ்சு

ந்தக் காலத்தில், ‘சத்திர போஜனா, மடா நித்திரா’ என்றிருந்த வழிப்போக்கர் களுக்கும் யாத்ரீகர்களுக்கும் தலைசாய்க்க, ஓய்வெடுக்க இடம்தந்த சத்திரம். ‘மாப்பிள்ளை தலையணை’ என்று எழுதியிருக்கிறார் கரிச்சான் குஞ்சு. தலையணை மாதிரி ஆங்காங்கே திண்டுவைத்துக் கட்டியிருந்தார்களாம். ‘பசித்த மானிட’த்தில் வரும் கோபி சந்தனமிட்ட, உச்சிமேட்டு ராயருக்கு இந்தத் திண்டுதான் சொர்க்கம்.

கணவர் ராமாமிருத சாஸ்திரி மறைந்த பிறகு, சேதனீபுரத்திலிருந்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இந்தச் சத்திரத்துக்கு வந்துவிட்டார் கரிச்சான் குஞ்சுவின் அம்மா ஈஸ்வரி. இங்கேயே தங்கி சமையல் வேலைசெய்தார். இந்தச் சத்திரத்திலி ருந்துதான் ‘பசித்த மானிடம்’ கணேசனின் வாழ்க்கை தொடங்குகிறது. சத்திரத்தின் முதலாளி வீடு, தென்கரையின் கோடியில் இருக்கிறது. இப்போதும் அந்த வீட்டின் முகம் மாறவில்லை. அநேகமாக, முதலாளியின் மூன்றாம் தலைமுறையினர் அந்த வீட்டில் வசிக்கலாம். நிலத்தைக் கொஞ்சம் காலத்தால் அகழ்வு செய்தால் கணேசன், சத்திரத்துக்கும் முதலாளி வீட்டுக்கும் நடந்து தேய்ந்த பாதச்சுவடுகள் கிடைக்குமோ என்னவோ...

கணேசன், கும்பகோணம் மஹாமகக் குளத்தின் தென்கரை மூன்றாவது மண்டபத்தில் உட்கார்ந்திருந்தான். மேற்கே பார்த்து உக்கார்ந்திருந்தான். அந்தத் தென்கரையில் உள்ள வீடுகளும் சத்திரங்களும் அவனுக்கு மிகவும் பழக்கமானவையே.
கணேசன், கும்பகோணம் மஹாமகக் குளத்தின் தென்கரை மூன்றாவது மண்டபத்தில் உட்கார்ந்திருந்தான். மேற்கே பார்த்து உக்கார்ந்திருந்தான். அந்தத் தென்கரையில் உள்ள வீடுகளும் சத்திரங்களும் அவனுக்கு மிகவும் பழக்கமானவையே.

மகாமகக் குளத்தின் தென்கரை மூன்றாம் மண்டபத்துப் படித்துறையில் அமர்ந்தால், ‘பசித்த மானிடம்’ வாசித்த அத்தனை பேரும் பெருவியாதி இல்லாத கணேசனாகி விடுவார்கள். கும்பகோணத்து நிலக்காட்சி களையும் சூழலையும் அவ்வளவு நுட்பமாக, உயிர்ப்பாக ப் பதிவுசெய்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு. 20-ம் நூற்றாண்டில், தமிழ் இலக்கியத்தின் மிக அரிதான எழுத்தாளர் களில் ஒருவரான கரிச்சான் குஞ்சு, விரிவாக எழுதியதென்னவோ ஒரு நாவல்தான். அதுவும் அவ்வளவு எளிதாக அச்சாகி வாசகனின் கைக்கு வந்துவிடவில்லை. தி.ஜாவும், ஜெயகாந்தனும் பரிந்துரைத்தும்கூட, உள்ளடக்கம் வாசித்த பலர் மிரண்டு ஒதுங்கிக்கொண்டார்கள். ‘நட்டமானாலும் பரவாயில்லை’ என்ற முன்முடிவோடு மீனாட்சி புத்தக நிலையத்தார் வெளியிட்டார்கள். பெரிய இலக்கிய விசாரணையாளர்களும் ஏகாந்திகளும் அந்த நாவலைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நாற்பதாண்டுகள் கடந்து, இன்று இளம் தலைமுறை வாசகனின் இதயத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறது ‘பசித்த மானிடம்’. சிறந்த தமிழ் நாவல்களின் வரிசையில் அதைக் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் கும்பகோணத்தில் கரிச்சான் குஞ்சுவுக்கு நூற்றாண்டுவிழாவும் நடத்தியிருக்கிறார்கள் வாசகர்கள். கரிச்சான் குஞ்சுவின் பிற சிறுகதைகளையும் குறுநாவல்களையும் முழுத்தொகுப்பாக்கும் முயற்சியும் தீவிரமாக நடந்துவருகிறது.

நவீன இலக்கியத்தில் ஒருங்கிணைந்த தஞ்சையின் பங்களிப்பு மிக முக்கியமானது. குறிப்பாக, கும்பகோணம். நா.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., தி.ஜா., கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், நகுலன், சுவாமிநாத ஆத்ரேயன், துமிலன் என அம்மண்ணில் பிறந்த படைப்பாளிகளின் பட்டியல் நீளமானது. மகாமகக் குளப் படிக்கட்டுகள், எம்.வி.எம் வீடு, தொண்டர் கடை என இலக்கியக் கூடுதலங்கள் அங்கே நிறைய உண்டு. தவிர, ‘அமரர் சங்கம்’ போன்ற தத்துவ அமைப்புகளுக்கும் குறைவில்லை. திருலோக சீதாராம், சுவாமிநாத ஆத்ரேயன், ஏ.எஸ்.ராகவன் போன்ற எழுத்தாளர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் எனப் பலரும் அமரர் சங்கத்தில் உண்டு. இலக்கியம், தத்துவம், மதம் என எல்லாம் இந்தச் சங்கத்தில் விவாதிக்கப்படும். கரிச்சான் குஞ்சுவின் பரந்துபட்ட வேத ஞானத்துக்கும் தத்துவப் பார்வைக்கும், மானுட அனுமானத்துக்கும் இந்த அமரர் சங்கம்தான் அடிப்படையாக இருந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘தொண்டர் கடை’ பற்றி ஒருமுறை இந்திரா பார்த்தசாரதி வியந்து சொன்னார். நகர உயர்நிலைப்பள்ளிக்கு எதிரே இருக்கும் ஸ்டேஷனரிதான், தொண்டர் கடை. தி.ஜா அங்குதான் ஆசிரியராக இருந்தார். எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு உள்பட எல்லா எழுத்தாளர்களும் இந்தக் கடையில் கூடி இலக்கியம் பேசுவார்களாம். ஆசை ஆசையாகப் போய் தேடினால், தொண்டர் கடை சிமென்ட் விற்கும் கடையாக மாறியிருக்கிறது.

பசித்த மானிடம் - காலத்தில் எஞ்சியிருக்கும் காட்சிகள்

கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானிடம்’, மனிதர்களின் வேட்கையை, அதிகாரப் பசியை, அடர்ந்த காமத் தேடலைப் பேசும் நாவல். எல்லாவற்றையும் தாண்டி மனிதன் சென்றுசேரும் ஒரு ஞானவெளியை அது தரிசிக்கத் தருகிறது. அதுவரையிலும் உருவாக்கப்பட்டிருந்த பல மரபுகளை தன் ஒற்றை நாவலில் உடைத்தெறிந்தார் கரிச்சான் குஞ்சு. தி.ஜானகிராமன் மரபை மயிலிறகால் வருடினாரென்றால், கரிச்சான் குஞ்சு தன் நாவலில் அதன் அடிப்படையைக் குத்திக் கேள்வியெழுப்புகிறார். அதற்கு ஆதர்சமாக இருந்தவர் கு.ப.ரா. பால்பேதமற்ற உணர்ச்சிகளையும் வேட்கைகளையும் புறக்கணிக்காமல், தான் உருவாக்கிய பாத்திரத்தை ஊடுபொருளாக்கி நிர்வாணமாக நிறுத்துகிறார். ஒருபால் சேர்க்கை குறித்து உருவாக்கப்பட்ட முதன் நவீன பிரதி ‘பசித்த மானிடம்’.

எந்த உன்னதப் பூச்சும் இல்லாமல், நலிந்த ஒரு பெருவியாதிக்காரனின் வாழ்க்கையாக விரியும் நாவல், கும்பகோணம், மன்னார்குடி, தோப்பூரென அவருக்குப் பரிச்சயமான பாதைகளில் நம்மை அழைத்துச் செல்கிறது. கணேசன் பின்னாலேயே அவன் செல்லும் திசையெங்கும் அலைந்து திரிகிறது மனம்.

முதல் பாரம் படிக்க, ‘அன்னவாசல் தெருத்திருப்பம் வழியாகப் பள்ளிக் கூடத்துக்குச் செல்லும் கணேசனின் ஆண்மையில் அசந்து, தன்னறையில் படுக்கையளித்துக் களித்த சிங்க ரவுத்து’, ‘போலீஸுக்கு பயந்து மன்னார்குடி, தட்டைப்புள்ளைத் தெருவுக்கு வடக்கே திறந்துகிடக்கும் ஒரு வீட்டுக்குள் நுழைந்த கணேசனை வசப்படுத்திய சுந்தரியின் கடும் காமம்’, ‘சுந்தரிக்கு வைத்தியம் செய்யப்போன இடத்தில் கணேசனின் ஏகாந்தத் தோழியான பெண் டாக்டர்’ என நாவல் வெவ்வேறு இடங்களில் காமத்தில் புரண்டெழுகிறது. இறுதியில், கணேசன் தொழுநோயாளி யாகிறான். அதுவரை அவன் அங்கத்தைச் சுகித்துக் கிடந்த மருத்துவர், அவனைச் சகிக்காமல் ஒரு வாகனத்திலேற்றி, தஞ்சையில் விடச்செய்கிறாள். கணேசன் பின்னோக்கி நடக்கிறான். உடம்பின் மீதுள்ள பற்றும் பசியும் படிப்படியாக உடைந்து சிதறுகிறது. இறுதியில் ஞானதரிசனம் அவனுக்கு வாய்க்கிறது.

“உங்கள் ஆஸ்பத்திரியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த இடம் ஓர் அன்பு மலையென்றும் இங்கே தெய்வீகக் கருணைச் சுனையொன்று இருப்பதாகவும், இந்தச் சுனையின் குளிர்நீரில் மூழ்குகின்றவர்களின் தொழுநோயுடன் மனநோய்களும் தீர்ந்துவிடுமென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“உங்கள் ஆஸ்பத்திரியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த இடம் ஓர் அன்பு மலையென்றும் இங்கே தெய்வீகக் கருணைச் சுனையொன்று இருப்பதாகவும், இந்தச் சுனையின் குளிர்நீரில் மூழ்குகின்றவர்களின் தொழுநோயுடன் மனநோய்களும் தீர்ந்துவிடுமென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

“கரிச்சான் குஞ்சு ஏழையாகப் பிறந்து ஏழையாக மறைந்தவர். எழுத்தாளனுக்கு நேர்ந்த சாபம் இது. நாராயணசாமி என்பதுதான் இயற்பெயர். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். மூன்று சகோதரிகள், ஒரு தம்பியென பெரிய குடும்பம். கணவரின் மரணத்துக்குப் பிறகு கும்பகோணத்துச் சத்திரத்தில் அடைக்கலமாகிவிட்டார் தாய். கரிச்சான் குஞ்சு எட்டு வயதிலேயே அத்யயனம் பண்ணப்போய்விட்டார். அதை முழுமை செய்த பின், ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் தமிழும் சம்ஸ்கிருதமும் உள்ளடங்கிய சிரோமணி பட்டம் பெற்றார். வேதத்தில் மிக மேலான தேர்ச்சி கொண்டிருந்தார் கரிச்சான் குஞ்சு. குறைவாக எழுதினாலும் அவரது எழுத்தின் வீச்சுக்கும், ஆழமான தரிசனங்களுக்கும், முடிவு கூறல்களுக்கும் அதுதான் காரணமாக இருந்தது...” என்கிறார் ஆடலரசன்.

மிகத்தேர்ந்த கல்வியாளராகவும், வேத ஞானியாகவும் இருந்த கரிச்சான் குஞ்சு, ‘பசித்த மானிட’த்தை மிக எளிய மொழியில் படைத்திருக்கிறார். காமம் பேசும் எந்தப் பக்கத்திலும் விரசமில்லை. வெற்றுக் கிளர்ச்சியின்றி, கணேசனின் 40 ஆண்டுக்கால வாழ்க்கை தரிசனத்தை வாசகனுக்குக் காட்சிப்படுத்துகிறார். உடல் வெடித்து, முக அடையாளங்கள் மாறி, தீவிர தொழு

நோயாளியாக தஞ்சாவூரில் கொண்டுவிடப்படும் கணேசன், கும்பகோணம் மகாமகக் குளத்தின் தென்கரை மூன்றாவது மண்டபத்தில், தான் வேலை செய்த சத்திரத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான். அங்கிருந்து அவன் நினைவுகள் விரிகின்றன. கும்பகோணத்தில் மன்னார்குடி, தோப்பூர், திருச்சியென நகர்ந்து நிறைவுறுகிறது நாவல். வாசகன் தன் எண்ணத்தில், விசாரணையில் நாவலை முடித்துவைக்கிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நாவலை தீர்க்கமாக வாசிப்பவர்களை அதன் நிலக்காட்சிகள் ஈர்க்கும். கணேசன் என்கிற உயிர்ப்புள்ள பாத்திரம் தன் 40 ஆண்டுக்கால வாழ்க்கையை நகர்த்திச்சென்ற தடங்களைத் தரிசிப்பதென்பது நாவலின் காலத்திற்குள் வாழ்ந்து பார்ப்பது. அப்படியொரு பயணம் எனக்கு வாய்த்தது.

 கணேசனுக்குப் புதிய இடமும் மிகவும் பிடித்துவிட்டது. எதிரே பெரிய குளமும் இருந்தது மிகவும் சந்தோஷமாயிருந்தது. காலையிலும் மாலையிலும் 
மைய மண்டபம்வரை நீந்துவான்.
கணேசனுக்குப் புதிய இடமும் மிகவும் பிடித்துவிட்டது. எதிரே பெரிய குளமும் இருந்தது மிகவும் சந்தோஷமாயிருந்தது. காலையிலும் மாலையிலும் மைய மண்டபம்வரை நீந்துவான்.

கரிச்சான் குஞ்சுவின் நூற்றாண்டு விழாவை கும்பகோணத்தில் நடத்தி, அவரது பங்களிப்பைச் சமகால இலக்கிய ஆளுமைகளுக்கும் இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கும் அடையாளப்படுத்திய கவிஞர்கள் ராணிதிலக், ஆடலரசன், ‘பிரதி’ இளங்கோவன், ‘தாழ்வாரம்’ பாரதிமோகன், ‘மேழி’ பாலு, மருதம் கோமகன், பிரபாவதி ஆகியோரும் பயணத்தில் இணைய, ஒரு பொழுதை முழுமையாக நிறைத்தார் கரிச்சான் குஞ்சு. பிரபாவதி, கரிச்சான் குஞ்சுவின் இரண்டாவது மகள். ஓய்வுபெற்ற ஆசிரியை.

“அப்பாவோட முதல் மனைவி பேரு வாலாம்பாள். இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் எங்க அம்மா. நாங்க நான்கு பேரும் பெண்பிள்ளைகள். சிரமந்தான்... பாட்டி கொஞ்சம் உதவி செஞ்சாங்க. இதோ இந்தச் சத்திரத்துலதான் சமையல் வேலை செஞ்சாங்க. தொடக்கத்தில் கொஞ்ச நாள் வைதிக வேலைகள் செய்தார் அப்பா. சென்னை ராமகிருஷ்ணா பள்ளியில தமிழாசிரியரா வேலை கிடைச்சுது. அப்பா பெரிய கோபக்காரர். அவச்சொல், அவமரியாதை பொறுக்க மாட்டார். யார்கிட்டயும் போய் உதவினு நிக்க மாட்டார். ‘பொம்பளப் புள்ளைகளை ஏன் படிக்கவைக்க நினைக்குற... என் கையில் கொஞ்சம் காசு இருக்கு... அவாளுக்குக் காலாகாலத்துல கல்யாணத்தைப் பண்ணி வெச்சுடு’னு பாட்டி சொன்னபோது, ‘அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்... அவா படிக்கட்டும்’னு சொல்லி எங்க நாலு பேரையும் படிக்கவெச்சார்.

தி.ஜா ஒருவகையில எங்களுக்கு உறவுக்காரர். ரெண்டுபேரும் மிக நெருக்கமான நண்பர்கள். தி.ஜாவும் சென்னையிலதான் இருந்தார். ரெண்டு பேருக்குமே கு.ப.ரா மேல மிகப்பெரிய மரியாதை இருந்துச்சு. ‘கு.ப.ரா கும்பகோணம் வந்துட்டார்’னு தெரிஞ்சவுடனேயே வேலையை விட்டுட்டு ரெண்டு பேரும் கும்பகோணம் வந்துட்டாங்க. தி.ஜாவுக்கு உடனே வேலை கிடைச்சிருச்சு. அப்பாவுக்குக் கிடைக்கலே. ரொம்ப நாளைக்கு அப்புறம் நேட்டிவ் ஸ்கூல்ல வேலை கிடைச்சுது. அதுக்கப்புறம் விஷ்ணுபுரம் ஸ்கூலுக்குப் போனார். அங்கிருந்து மன்னார்குடி தேசிய உயர்நிலைப்பள்ளிக்குப் போனார்.

அங்கே அவர் வேலைசெய்தபோது, நானும் படிப்பை முடிச்சுட்டேன். எனக்குப் பள்ளியில் வேலை கேட்டார். தரப்படலை. ‘இவ்வளவு நாள் இந்தப் பள்ளிக்குச் சேவை செஞ்சிருக்கேன்... என் மகளுக்கு வேலை இல்லாத வேலை எனக்கும் வேண்டாம்’னு அங்கிருந்து வெளியே வந்துட்டார். அதுக்குப் பிறகு, புதுச்சேரி ‘பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் ஆஃப் இண்டாலஜி’யில் மொழிபெயர்ப்பாளரா வேலை கிடைச்சுது. அங்கும் அஞ்சு வருஷம்தான் இருந்தார்...” என்று கரிச்சான் குஞ்சுவின் இயல்பைக் குறித்துச் சொல்கிறார் பிரபாவதி.

சங்கரநாராயணன், கண்ணன்
சங்கரநாராயணன், கண்ணன்

ன்னார்குடியில் ஹரித்ரா நதிக்குளத்தின் வடகரை கீழ்க்கோடியில், ஒரு சத்திரம் இருந்தது. அந்தச் சத்திரத்துக்குப் பெயர், ‘சேதுபாவாசத்திரம்’. இருக்க இடம், உடுத்தத் துணி கொடுத்து, கல்வியும் கொடுத்திருக்கிறார்கள். ‘பசித்த மானிடம்’ நாவலில் இந்த நிலக்காட்சியை கவனப்படுத்துகிறார் கரிச்சான் குஞ்சு. ‘இப்போது அந்தச் சத்திரம் இல்லை. அந்த இடம் ஒரு மடத்துக்குச் சொந்தமாகி அடர்ந்த புதர் மண்டியிருக்கிறது. கும்பகோணம் சத்திரத்து மாமியிடம் விரும்பிக் கேட்டு கணேசனை தன்னோடு அழைத்துவந்த வாத்தியார், படிக்கவைக்க விரும்பி இந்த சேதுபாவாசத்திரத்தில்தான் சேர்த்து விடுகிறார். அங்கு தங்கிப் படித்த கணேசன், குளத்தின் மையமண்டபம்வரை நீந்திச் செல்வான்.’ நொடிப்பொழுதில் கணேசனாக மாறிவிடுகிறது மனம்.

மடத்துக்கு அருகிலுள்ள ஒரு பழைமையான வீட்டில் குடியிருக்கும் 84 வயதுப் பெரியவர் கண்ணன். கரிச்சான் குஞ்சுவின் மாணவர். மூன்று ஆண்டுகள் அவரது வகுப்புகளில் படித்தவர்.

அவன் பள்ளிக்கூடம் போகும்போதும் திரும்பி வரும்போதும், அன்னவாசல் தெருத் திருப்பத்தில் ஒரு பெரிய பங்களாவின் வாசலில் நின்று ஒரு பணக்காரர், கணேசனை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்.
அவன் பள்ளிக்கூடம் போகும்போதும் திரும்பி வரும்போதும், அன்னவாசல் தெருத் திருப்பத்தில் ஒரு பெரிய பங்களாவின் வாசலில் நின்று ஒரு பணக்காரர், கணேசனை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்.

“அப்போ, மன்னார்குடி தேசிய உயர்நிலைப் பள்ளியில மூணு வித்வான்கள் இருந்தாங்க. ராமானுஜ அய்யங்கார், ராமநாதன் பிள்ளை, நாராயணசாமி அய்யர். நாராயணசாமி அய்யர், தமிழ் வாத்தியார். பெரிய எழுத்தாளர்னெல்லாம் அப்போ எங்களுக்குத் தெரியாது. பெரிய வேதிக் ஸ்காலர்னு தெரியும். புரோகிதர்கள், அர்ச்சகர்களெல்லாம்கூட அவர்கிட்ட வந்து வியாக்யானம் கேப்பாங்க. எப்பவும் குழையக் குழைய வெற்றிலை போட்டுக்கிட்டு இருப்பார். மன்னார்குடி முதல் தெருவுலதான் குடியிருந்தார். ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழாவுல ராமாயணம் பத்தி சொற்பொழிவு நடத்துவார். ‘கர்ணன் உயர்ந்தவனா, கும்பகர்ணன் உயர்ந்தவனா’னு அவர் பேசின பேச்சு இப்பவும் என் காதுக்குள்ள ஒலிக்குது. சேதுபாவா சத்திரத்துலயும் உபன்யாசம் செய்திருக்கார்...” என்று பழைய நினைவுகளில் மூழ்குகிறார் கண்ணன்.

‘கணேசனுக்காக வாத்தியார் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்த மன்னார்குடி கடைத்தெரு போஸ்ட் ஆபீஸை’ இடித்துவிட்டு இப்போது வங்கி கட்டிக்கொண்டி ருக்கிறார்கள். ‘கணேசன் பள்ளிக்குச் செல்லும்போது, அன்னவாசல் தெரு திருப்பத்தில் இருக்கும் பங்களாவில் இருந்துகொண்டு கண்களால் அவன் உடலைப் பருகுவார் சிங்க ரவுத்து.’ அவரது பங்களா இருந்ததாகச் சுட்டும் இடத்தில் இடிபாடுகளோடு இருக்கிறது பெரிய கட்டடம்.

இந்தத் தென்கரையில் கீழ்க்கோடியில் ஆபாசங்கள் நிறைந்த ஒரு சந்தில் இருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் அம்மாவும் தானும் குடியிருந்தபோது அம்மா செத்துப்போனதும்...
இந்தத் தென்கரையில் கீழ்க்கோடியில் ஆபாசங்கள் நிறைந்த ஒரு சந்தில் இருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் அம்மாவும் தானும் குடியிருந்தபோது அம்மா செத்துப்போனதும்...

“கரிச்சான் குஞ்சு அவ்வளவு கச்சிதமாக நாவலின் நிலக்காட்சிகளைப் பதிவுசெய்தி ருக்கிறார். தமிழில் இந்த அளவுக்கு ஒரு புனைவை நிலத்தோடு தொடர்பு படுத்தியவர்கள் குறைவு. 40 வருடங்களுக்கு முன்பு, பேசாத் தலைப்பொன்றை எடுத்து அதன் உளவியலை அலசி ஆராயும் துணிவும், பக்குவமும் கரிச்சான் குஞ்சுவிடம் இருந்துள்ளது. சிங்க ரவுத்து, கணேசனைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தும் இடமாகட்டும், சுந்தரியும் கணேசனும் தங்களை மறந்து இன்புறுவதாகட்டும், சுந்தரிக்கு மருத்துவம் பார்க்கும் பெண்மருத்துவர் கணேசனின் ஆண்மையில் மயங்கிப் பயன்படுத்துவதாகட்டும், எந்த இடத்திலும் சிறு விரசம்கூட தொனிக்காமல் கதையை நகர்த்துவது அவரது தனித்தன்மை.

சிங்க ரவுத்துவின் பிடியிலிருக்கும் கணேசனைச் சந்திக்க வரும் ஆசிரியரிடம், ‘இவர் என்னை ரொம்பப் பிரியமா வெச்சிண்டிருக்கார்’ என்று கணேசன் சொல்லும்போது, ‘என்ன... வெச்சுண் டிருக்காரா?’ என்ற கேள்வி வாத்தியாரை அறியாமல் வந்து விழும். அந்த ஒரு வார்த்தையில் அவர்களின் உறவை அடக்கி வைக்கிறார் கரிச்சான் குஞ்சு...” என்று உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் ராணிதிலக்.

சிங்க ரவுத்து நோய்வாய்ப்பட்ட பிறகு, குடும்பத்தினரின் புறக்கணிப்பையும் எதிர்ப்பையும் சகிக்காமல், அங்கிருந்து விடுபட்டு வெளியேறுகிறான் கணேசன். அன்று ஊரில் பெரும் கலகமொன்று நடக்கிறது. ரயில்வே ஸ்டேஷன், முனிசிபாலிட்டி, கலெக்டர் அலுவலகத்தை யெல்லாம் கொளுத்திவிடுகிறார்கள் போராட்டக்காரர்கள். வேடிக்கை பார்க்கச் சென்ற கணேசன், செட்டித்தெரு வழியாக மகிமைசாமி அய்யர் தெருவுக்குத் திரும்ப நினைக்கிறான். காவலர்கள், கிழக்குப் பக்கம் போய் வேறொரு பாதையில் செல்லுமாறு அறிவுறுத்துகிறார்கள். ஆனால், தட்டைப் புள்ளைத் தெருவைத் தாண்டி, வடக்கில் செல்கிறான். அங்கே வன்முறை பெரிதாகிறது. தடியடி நடக்கிறது. எல்லா வீட்டுக் கதவுகளும் மூடப்படுகின்றன. தப்பித்து ஓடிய கணேசன், திறந்திருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்து விடுகிறான். அந்த வீடுதான் ஆசிரியை சுந்தரி வீடு. பள்ளியில் படித்த காலத்திலேயே அவன்மேல் காமமுற்றிருந்த சுந்தரிக்கு அது நல்லதொரு தருணமாக அமைந்துவிடுகிறது.

சுந்தரியும் கணேசனும் சந்திக்கும் முதல் அத்தியாயத்திலேயே மன்னார்குடியின் ஊரமைப்பைக் காட்சிப்படுத்திவிடுகிறார்.

“ ‘பசித்த மானிடம்’, பல புனிதங்களைக் கட்டுடைக்குது. அதுதான் அந்த நாவலோட தனித்தன்மை. காமம் மிகப்பெரும் சக்தி மிக்கது. எல்லாப் பசிகளையும்விட அகோரமானது. அதிகாரங்களைக்கூட நொடிப்பொழுதில் வீழ்த்திவிடக்கூடியது. அந்த நிதர்சனத்தை நாவல் ஒவ்வொரு பக்கத்திலும் கடந்துபோகுது. திளைக்கத் திளைக்க காமம் அனுபவித்த ஒருவனைக் காலம் இறுதியில் ஞானநிலையில் நிறுத்துகிறது. ‘பசித்த மானிட’த்தை முழுமையாக உள்வாங்கக் குறைந்தது மூன்று முறையாவது படிக்கணும். ஒரு நாவல், வாசிப்பவனுக்கு ஒரு படிப்பினையை வழங்க வேண்டும். அதை ‘பசித்த மானிடம்’ நிறைவேற்றுகிறது.

இந்த நாவலின் இன்னொரு வலிமை, உரையாடல்கள். ஒவ்வொரு பாத்திரமும் வார்த்தைகளை அவ்வளவு ரசமாக, நிதானமாகப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, சுந்தரிக்கும் கணேசனுக்கும் நடக்கும் உரையாடல்கள். ‘பசித்த மானிடம்’ வெளிவந்த காலகட்டத்தில் ஆ.மாதவன், கோவை ஞானி, அ.மார்க்ஸ் ஆகியோர் நாவல் குறித்து விரிவாக எழுதினார்கள். பலர் அதைச் சீண்டவில்லை. ஆனால், இன்று அதன் மகத்துவத்தைக் காலம் உணர்த்தியிருக்கிறது” என்கிறார் ‘பிரதி’ இளங்கோவன்.

கும்பகோணம், மன்னார்குடி, தோப்பூர், திருச்சி... இந்தப் பகுதிகளைத்தான் ‘பசித்த மானிடம்’ கடக்கிறது. நாவல் குறித்த உரையாடல் நீள, மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் வந்தடைகிறோம்.

பொருளாதாரநிலை குறித்து கரிச்சான் குஞ்சு சிறிதும் கவலைப்படவில்லை. அவருக்குச் சீட்டாடும் பழக்கம் இருந்தது. குதிரைப் பந்தயத்திலும் ஈடுபாடு. பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட்டில் வேலைக்குச் சென்ற பிறகு, ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது. ஆனாலும், கிடைத்த பணத்தையெல்லாம் குதிரைப்பந்தயத்தில் விட்டார்... இறுதிவரை சொந்த வீடு இல்லை. இவர்பட்ட பாட்டையும் வீட்டு உரிமையாளர்களிடம் பெற்ற அவமானங்களையும் கருதியே இவரது மகள்கள் இருவர், சொந்த வீடு கட்டுவதை லட்சியமாகக்கொண்டார்கள்; அதை நிறைவேற்றவும் செய்தார்கள்.

‘பசித்த மானிடம்’ நாவல், கரிச்சான் குஞ்சு வாழ்ந்த பகுதிகளையே சூழ்ந்திருக்கிறது. ஒருவகையில், கணேசனின் பால்யமும் கரிச்சான் குஞ்சுவின் பால்யமும் ஒன்றுதான்.

‘கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இறங்கி மகாமகக் குளத்துக்கு வரும் வழியில், தான் படித்த ஆங்கிலப் பள்ளியைப் பார்க்கிறான் கணேசன். அம்மா உயிரோடு இருந்த காலத்தில் அங்குதான் படித்தான். அது ஒரு பாதிரியார் நடத்திய பள்ளிக்கூடம். அன்றிருந்ததுபோலவே இப்போதும் இருக்கிறது அந்தப் பள்ளி. ஆனால், கணேசனுக்கு சட்டை, துண்டு, சிலேட் குச்சி, புத்தகமெல்லாம் வாங்கிக் கொடுத்த பன்னீர் வாத்தியார், பாதிரியாரெல்லாம் இருப்பார்களா, தெரியவில்லை. அம்மா இறந்து, சத்திரத்துக்கு வந்த பிறகு படிப்பு முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு அந்தப் பள்ளிக்கூடத்துப் பக்கமே திரும்பவில்லை கணேசன்.’

அந்தக் காலத்தில் மகாமகக் குளத்தின் கரையில் பெரிய பெரிய கடப்பாறைகளை நட்டு நூல்களுக்குப் பாவு இழைத்திருக் கிறார்கள். யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட அந்தத் தொழிலாளர்கள் குறித்து ‘பசித்த மானிடம்’ பதிவுசெய்கிறது. கும்பகோணத்தின் பதிவுசெய்யப்படாத வரலாறுகளில் ஒன்று, அங்கு நிறைந்திருந்த தறித் தொழிலாளர்களின் வரலாறு.

‘நெடுநேரம் மகாமகக் குளக்கரையில் அமர்ந்திருந்த கணேசன், மெல்ல எழுந்து, ஜகந்நாதப் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த காபி கிளப் கட்டிடத்துக்குள் போகிறான். இதற்கு முன்பும் பலமுறை அங்கு போய் காபி சாப்பிட்டிருக்கிறான். இப்போது, ‘பெருவியாதிக்காரர்கள் உள்ளே வரக் கூடாது’ என்று பெரிதாக வைக்கப்பட்டுள்ள போர்டு, அவனுக்கு மனத்தடையை ஏற்படுத்துகிறது.’ இப்போது அந்த காபி கிளப் இருந்த இடத்தில் ஒரு டீக்கடை இருக்கிறது. கணேசனைப் பற்றி அந்த டீக்கடைக்காரர் அறிந்திருக்க மாட்டார்.

‘காபி கிளப்பில் மாஸ்டராக இருந்தவன் சிவன் கோயில் பரிசாரகர் நடேசய்யரின் மகன் வைத்தி. கணேசனும் அவனும் ஆற்றிலும், தெருவிலும், பள்ளிக்கூடத்திலும் ஓடியாடி விளையாண்டதுண்டு. ஆனால், தொழுநோய் முகத்தைத் தின்றுவிட்டதால் வைத்திக்கு கணேசனை அடையாளம் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் வழிய அந்த இடத்தைவிட்டு அகன்று, அரசலாற்றுக்குக் குளிக்கப்போகிறான் கணேசன். பெண்கள் கல்லூரி, விடுதி யெல்லாம் புதிதாக முளைத்திருக்கின்றன. குளித்து முடித்து, வைத்தி கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு கிளம்புகிறான்.’

‘கணேசன் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு கும்பகோணம் வந்ததற்குக் காரணம், அங்கிருந்த தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுதான். முத்துப்பிள்ளை மண்டபத்திலிருக்கிறது இந்த மருத்துவமனை. ‘ஜான் மிஷ்ஷோட்டி’ என்ற பாதிரியார் உருவாக்கியது.’ அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தால் கண்கள் கணேசனைத்தான் தேடுகின்றன.

அந்தத் தொழுநோய் மருத்துவமனைக்குப் புதிதாகப் பணிசெய்ய வரும் எல்லோருக்கும் இந்த நாவலை வாங்கிக் கொடுக்கிறார்கள், அங்கே ஊழியம் செய்பவர்கள்.

“பசித்த மானுடம் நாவல், உண்மைக்கு நெருக்கமானது. கணேசன் பாத்திரமும் நிஜம்” என்கிறார் கரிச்சான் குஞ்சுவின் நண்பரும் அமர சங்கத்தின் ஆளுமைகளில் ஒருவருமான பேராசிரியர் சங்கரநாராயணன். கணேசன் யார் என்பது குறித்து இப்போது பேசுவது நல்லதல்ல... ஆனால், அவன் இந்த கும்பகோணம் மண்ணில் வாழ்ந்தவன்” என்கிறார் அவர்.

நாவலை எழுதுவதற்கு முன்பு, கணேசனுடன் பல காலங்களைக் கழித்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு. ரிக்‌ஷாவில் அவருடன் அமர்ந்துகொண்டு கும்பகோணத்தைச் சுற்றிவருவாராம்.

தொழுநோய் குறித்து நிறைய கற்பிதங்கள் நம் சமூகத்தில் உண்டு. ‘ரத்தக்கண்ணீர்’ பார்த்துதான் நம்மவர்கள் அந்த நோயைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். கரிச்சான் குஞ்சு, தொழுநோய் பற்றிப் பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம், தொழுநோய் மருத்துவ மனையிலேயே கழிந்திருக்கிறது அவர் பொழுது.

தொழுநோய் ஒரு தொற்றுநோய். ஆனால், அது நோய்கண்ட ஒருவரை ஓரிரு முறை தொடுவதாலெல்லாம் பரவாது. பல மாதங்கள் அவருடன் வாழ்பவர்களுக்கு வரலாம். மூக்கிலும் காதுகளிலும்தான் அந்தக் கிருமிகள் வாழும். கணேசனுக்கு எப்படி தொழுநோய் வந்ததென்று நாவலில் கூறப்படவில்லை. ‘ரத்தக்கண்ணீர்’ அதை ஒரு பால்வினைநோய் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ‘பசித்த மானிட’மும் அப்படியான ஒரு சித்திரிப்பைத்தான் உருவாக்குகிறது.

கரிச்சான் குஞ்சு வாசகர் வட்டம்
கரிச்சான் குஞ்சு வாசகர் வட்டம்

ஆனால், சிங்க ரவுத்துக்கோ, சுந்தரிக்கோ, மருத்துவருக்கோ தொழுநோய் இல்லை. ஒருவேளை அவர்களில் யாருக்கேனும் இருந்திருந்தால், அவர்களோடு நெருக்கமாக வாழ்ந்த கணேசனுக்கும் வந்திருக்கக்கூடும். இந்த ஒரு நெருடலை நாவலில் கடந்தால், ஒரு தொழுநோயாளியின் அவஸ்தையை, அந்த நோயின் கொடூரத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும்.

கரிச்சான் குஞ்சு, ஆசாரம் கொண்டவர். மதப்பிடிப்பு உள்ளவர். ஆனால், மிகுந்த நேர்மையோடு அதன் உள்ளடக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குபவர். ஒருபால் சேர்க்கையென்பது மனிதகுலம் தோன்றிய காலம்தொட்டிருக்கும் ஒரு பாலுணர்வு. ஆயினும், அது விபரீதமான பேசாப்பொருளாகவே இருந்துவந்திருக்கிறது. தி.ஜா போன்ற உற்ற நண்பர்கள்கூட முறைப்படியான ஆண்-பெண் பாலுறவைத்தான் கதைக்களமாகக் கொண்டார்கள். கரிச்சான் குஞ்சு, ஒருபால் ஈர்ப்பு உளவியலைத் தொட்டார். இந்தத் தைரியம் அவருக்கு கு.ப.ராவிடமிருந்தே வந்திருக்கக்கூடும்.

கு.ப.ராவைச் சந்தித்தபோது கரிச்சான் குஞ்சுவுக்கு வயது 23. ஒன்றரை ஆண்டுகள் கு.ப.ராவோடு இருந்தார். அந்தக் குறுகிய காலகட்டத்திலேயே கரிச்சான் குஞ்சுவின் எழுத்தை வடிவமைத்தார் கு.ப.ரா. தொடக்கத்திலேயே கரிச்சான் குஞ்சுவின் தனித்தன்மையை அடையாளம் கண்டுவிட்டார் கு.ப.ரா. “நீ ஜானகிராமனைப் போலில்லை. அவன் பாப்புலர் ரைட்டர். நீ வேற... நீ சீரியஸான ஆளு. அதுதான் உன் அடையாளம்” என்று ஒரு திசையைக் காட்டி பயணத்தைத் தொடங்கிவைத்தார். சிட்டி உள்ளிட்ட ஆளுமைகளிடம் “இவர்கள் என் கண்டுபிடிப்புகள்” என்று பெருமிதமாக கரிச்சான் குஞ்சுவையும் தி.ஜாவையும் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார் கு.ப.ரா.

‘மணிக்கொடி’ இதழ் நின்றுபோன பிறகு சாலிவாஹனன், ‘கலாமோகினி’ பத்திரிகையைத் தொடங்கினார். மாதம் இரு முறை வெளிவந்த இந்த இதழில், கு.ப.ரா இறந்தபோது ஓர் இரங்கல் கட்டுரை எழுதினார் கரிச்சான் குஞ்சு. நாராயணசாமியாக இருந்தவர், கரிச்சான் குஞ்சுவானது அந்தக் கட்டுரைக்குப் பிறகுதான். கு.ப.ரா, ‘கரிச்சான்’ என்ற புனைப்பெயரில் எழுதுவார். அதனால், ‘கரிச்சான் குஞ்சு’வானார் நாராயணசாமி.

ரிச்சான் குஞ்சு இயல்பில் காந்தியவாதி. கட்டுக்குடுமி, வேதம், விபூதி, சந்தனம் என்ற தோற்றத்திலிருந்தாலும் இடதுசாரி இயக்கத்தின் மீதும் அவருக்குப் பெரும் மரியாதை இருந்தது. நக்சல்பாரிகளுக்கு ஆதரவாக மக்கள் யுத்தக்குழு கும்பகோணத்தில் நடத்திய பேரணியில், பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு முன்வரிசையில் நடந்து கோஷம் போட்டதை கே.ஜி.சேஷாத்ரி பதிவுசெய்கிறார். இந்தியாவின் தத்துவ தரிசனமாக உருவகப்படுத்தப்படும் மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயவின் நூலை, ‘இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். ‘சென்னை புக்ஸ்’ நிறுவனம் இந்த நூலை வெளியிட்டது. “மலிவுவிலைப் பிரதிகள் ரஷ்யாவிலிருந்து தமிழகத்துக்கு வரும் முன்னரே நான் அதை தருவித்துப் படித்திருக்கிறேன்” என்று ஓரிடத்தில் பதிவுசெய்கிறார் கரிச்சான் குஞ்சு. சம்ஸ்கிருதத்தில் ஆனந்த வர்த்தனர் எழுதிய ‘த்வந்யாலோகம்’ என்ற அலங்கார நூலையும் தமிழுக்குக் கொண்டுவந்தார் கரிச்சான் குஞ்சு.

கரிச்சான் குஞ்சு, எழுத்தைத் தவமெனக் கருதியவர் இல்லை. 75 சிறுகதைகள் தொகுப்பில் இருக்கின்றன. கல்யாணராமன், ராணிதிலக், ஆய்வு மாணவர் தனசேகர் போன்றவர்கள் தொகுப்பில் இடம்பெறாத, இதழ்களில் அச்சேறிய பத்துக்கும் மேற்பட்ட கதைகளைக் கண்டடைந்திருக்கிறார்கள். ‘சுகவாசிகள்’, ‘ஒரு மாதிரியான கூட்டம்’ என இரண்டு குறுநாவல்கள் எழுதியிருக்கிறார்.

தன் போக்கில் வாழ்ந்தார் கரிச்சான் குஞ்சு. ஒற்றைப் பைசா இல்லாத பொழுதுகளையும் பாக்கெட் நிறைய பணக்கட்டுகள் கொண்டிருந்த பொழுதுகளையும் மாறி மாறிக் கடந்தார். துக்கத்தையும் சந்தோஷத்தையும் ஒரே மாதிரி பார்க்கும் விட்டேத்தி மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். ‘மூத்த மகளின் திருமணத்துக்குப் பணம் இல்லாமல் தவித்தபோது, ஜெயகாந்தனோ தி.ஜாவோ சொல்லித்தான் ‘பசித்த மானிடம்’ நாவலை எழுதினார்’ என்று சிலர் பதிவுசெய்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் திருமணத்துக்குச் செலவு செய்யும் அளவுக்கு அந்த நாவல் பொருளீட்டித் தந்திருக்குமா என்று தெரிய வில்லை. ஆனாலும் அது காலத்தின் மேலேறி அழுந்த நிற்கிறது. கரிச்சான் குஞ்சுவை இளம் தலைமுறைப் படைப்பாளிகள் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். அடுத்தடுத்து அவரது படைப்புகள் வெளிவரவிருக்கின்றன. சமீபத்தில் கும்பகோணத்தில் கரிச்சான் குஞ்சுவின் நூற்றாண்டு விழா நடந்து முடிந்தி ருக்கிறது. ‘இதுவரை இல்லாத வகையில் 82 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்’ என்று சொன்னார் ராணிதிலக். தமிழை தன் படைப்பால் செழுமைப்படுத்திய ஆகப்பெரிய ஓர் எழுத்துக் கலைஞனைக் கொண்டாட இணைந்தவர்களின் எண்ணிக்கை 82. இதுதான் தமிழ், இதுதான் தமிழகம்...

வாழ்க தமிழ் இலக்கியம்!

புகைப்படங்களுக்கு அருகிருக்கும் வரிகள் ‘பசித்த மானிடம்’ நாவலில் இடம்பெற்றவை...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism