சினிமா
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

பாரதி உயிர்பெற்றால்...

ஒரு காலகட்டத்தில் வெளியான இதழ்களைப் படிப்பது என்பது அந்தக் காலத்தின் சூழலை, அரசியலை, மக்களின் மனவோட்டத்தைப் படிப்பது. ‘பாரதி உயிர்பெற்றால்...’ என்னும் லோகோபகாரி இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புநூலை இப்படித்தான் கருத வேண்டியிருக்கிறது.

லோகோபகாரி, 1895-ம் ஆண்டு தொடக்கப்பட்ட பத்திரிகை. அதில் 1913 முதல் செயல்பட்ட பரலி சு.நெல்லையப்பரே 1922-ம் ஆண்டில் அதை விலைக்கு வாங்கி நடத்த ஆரம்பித்தார். பாரதி, ‘தம்பி’ என்று அழைத்த பெருமைக்கு உரியவர் பரலி சு.நெல்லையப்பர். ‘பாரதி உயிர்பெற்றால்...’ நூலில் இருக்கும் பெரும்பான்மையான கட்டுரைகள், 7.9.1940 அன்று பாரதி நினைவுதினச் சிறப்பிதழாக வெளிவந்த தொகுப்பில் இருந்தே தொகுக்கப்பட்டிருக்கின்றன. டி.கே.சிதம்பரநாத முதலியார், எஸ். வையாபுரிப்பிள்ளை, கு.ப.ராஜகோபாலன், கி.வா.ஜ, க.நா.சு, எம்.பக்தவத்ஸலம் போன்ற முக்கியமான ஆளுமைகளின் கட்டுரைகள் இதில் இடம்பிடித்துள்ளன.

கு.ப.ராவின் ‘பாரதியின் காட்சிகள்’ குறித்த கட்டுரை மிகவும் முக்கியமானது. பாரதியின் தேசியக் கவிதைகளையும் கண்ணன் பாட்டுகளையும் மட்டுமே கொண்டாடும் கூட்டம், காட்சிகளை வாசித்துக் கொண்டாடவேண்டும் என்றும், அதுவே கவிதையின் உச்சம் என்றும் கூறும் கருத்து பாரதியின் புதுமை குறித்த அக்காலத்தின் தெளிவை நமக்கு உணர்த்துகிறது.

படிப்பறை

கேரள தேசத்தில் வையாபுரிப்பிள்ளை பாரதியைச் சந்தித்த அனுபவத்தை விவரிப்பதோடு அக்காலத் தமிழர்கள் எப்படி அரசுக்கு அஞ்சி பாரதிக்கு ஒரு பிரசங்க மேடை அமைக்கக்கூட மறுத்தார்கள் என்னும் நிதர்சனத்தை முன்வைக்கிறது.

இவை தவிர்த்த பாரதியும் பண்டிதனும் என்னும் கட்டுரை, பாரதியின் ஆங்கிலப் புலமை பற்றிய கட்டுரை அனைத்தும் பழைமையின் வாசனை கொஞ்சமும் இன்றிப் புதிய சிந்தனைகளும் கருத்தாடல்களும் கொண்டிருக்கின்றன.

பாரதி ஆய்வுக்கு லோகோபகாரி கட்டுரைகள் பெரிதும் பயன்பட்டவை. அவற்றில் சிலவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறார் நாக. செங்கமலத் தாயார். இவர், பாரதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பன்னிரண்டுபேரில் ஒருவரான இளைஞர் நாகரத்தினத்தின் மகள். இயல்பிலேயே பாரதி அன்பராகத் திகழும் பேறுபெற்ற நூலாசிரியர், பாரதி சார்ந்த கட்டுரைகளைத் தேடித் தொகுத்துத் தந்திருக்கும் முறைமையைப் பாராட்டலாம். பாரதி அன்பர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்தச் சிறுநூல் மிகவும் பயன் தரும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

பாரதி உயிர்பெற்றால்...


தொகுப்பாசிரியர் : நாக. செங்கமலத் தாயார்

மொழி - விழி கலை இலக்கியப் பேரவை

வெளியீடு:
104/ அ, முதன்மைச் சாலை
அண்ணாமலை நகர், சாரம், புதுவை - 605013
தொலைபேசி : 9443062931

பக்கங்கள்: 101

விலை: ரூ.100