Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

உணவு என்பது நிலத்தொடு நீரே

படிப்பறை

உணவு என்பது நிலத்தொடு நீரே

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை
சூழலியல் குறித்த தன்னுணர்வு இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. திணைகளாகப் பிரித்து வாழ்வைப் பகுத்த, இயற்கையோடு இணைந்த தமிழர் மரபிலிருந்து கிளைத்த வரி `உணவு என்பது நிலத்தொடு நீரே.' சூழலியல் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் பாமயனின் இந்த நூல் கடந்தகாலத் தடயங்களையும் சமகால அவலங்களையும் எதிர்கால அபாயங்களையும் முன்வைக்கிறது.

அளவில் சிறிய இந்தப் புத்தகம், சூழலியல் சார்ந்து நாம் உரையாட வேண்டிய பல புள்ளிகளைத் தொட்டுச் செல்கிறது. `வளர்ச்சி அரசியல்' என்பது எப்படி வளங்களைச் சுரண்டும் ஆதிக்க நோக்கமாக இருக்கிறது என்பதை `சொன்னதும் செய்ததும்' கட்டுரை சுருக்கமாக, அதேநேரத்தில் தீவிரமாக எடுத்துரைக்கிறது. உருளைக்கிழங்கு விவசாயம் செய்த குஜராத் விவசாயிகளிடம் பெப்சி கம்பெனி இழப்பீடு கேட்டதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரை, கார்ப்பரேட் உலகம் விவசாயத்தைக் காவுகொள்ளும் துயரக்கதையைச் சொல்கிறது.

காந்தியின் மீது மாறுபட்ட அரசியல் பார்வைகள் கொண்டவர்களும்கூட சமகாலத்தில் இரு விஷயங்களை முன்னிறுத்தி அவரை மறுவாசிப்பு செய்கிறார்கள். ஒற்றைத்துவத்தை வலியுறுத்தும் மதவாத அரசியலை எதிர்கொள்ளும் முகமாக காந்தியின் பன்மைத்துவச் சிந்தனைகள் முன்னிறுத்தப்படுகின்றன. அதேபோல் மூலதனப் பசியால் விளைந்த, பேராசையை அடிப்படையாகக் கொண்ட நுகர்வுக்கலாசாரம் நம் வாழ்வைச் சூறையாடிக்கொண்டிருக்கும் சூழலில் காந்தியின் எளிமையும் இயற்கை வாழ்வும் விதந்தோதப்படுகின்றன. பாமயனின் `காந்தியடிகளின் பசுமைச்சிந்தனைகள்' கட்டுரையும் சூழலைக் காப்பதில் காந்தியத்தின் பொருத்தப்பாட்டைப் பற்றிப் பேசுகிறது.

படிப்பறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூழலியல் என்ற பெயரில் அறிவியலுக்கு மாறான அச்சுறுத்தும் செய்திகளைச் சொல்லாத சமநிலை இந்தக் கட்டுரைகளின் முக்கியமான பண்பு. `காளை அரசியல்' குறித்துப்பேசும்போதும் நாட்டு மாடு, ஏ1, ஏ2 பால் குறித்த மாற்றுக்கருத்துகளை முன்வைக்கிறார் பாமயன். அதேபோல் சீமைக்கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சி சூழலைச் சிதைக்கும் என்பதையும் மறுக்கிறார். தலைப்பை வலுப்படுத்துவதுபோல் அமைந்துள்ள `தமிழ்த்திணையியல்' கட்டுரை, தமிழர்களிடம் நெடுங்காலமாகத் தொடரும் சூழலுணர்வை முன்வைக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இந்த நூல் முக்கியமானது.

- சுகுணா திவாகர்

உணவு என்பது நிலத்தொடு நீரே

பாமயன்

வெளியீடு :

தமிழினி,

63, நாச்சியம்மை நகர், சேலவாயல்,

சென்னை - 51

தொலைபேசி : 8667255103

பக்கம்: 88

விலை: ரூ.85

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆளுமை போற்றுதும்!

எஸ்.பொன்னுத்துரை. ஈழ இலக்கியத்தில் பேரலையாக எழுந்தவர்.

முற்போக்குவாதம், பிற்போக்குவாதம் என்ற கோட்பாட்டு அமளிக்குள் தன்னுடைய நற்போக்குவாதமென்ற இருப்பைப் புதிய குரலில் தொனித்தவர். இவர் கதைகள் மனிதமனத்தின் இருளுக்குள் நிரந்தரமாய் தரித்திருக்கும் பலவீனங்களையும் மூர்க்கங்களையும் சஞ்சலங்களையும் சரீர வேட்கையையும் எதன்பொருட்டும் அஞ்சாமல் இயம்பியவை.

படிப்பறை

“சத்தியத்துக்கு அதன் இயல்பே வடிவு” என்ற எஸ்.பொவின் கூற்று உயிர்ச்சாரம் நிரம்பியது. அவருடைய ‘தீ’ நாவல் வெளிவந்தகாலத்தில் இலக்கியப்பரப்பில் நிகழ்ந்த அதிர்வலைகள் இன்றைக்கும் கொதிப்புடனிருக்கும் வரலாறு. ‘நனவிடை தோய்தல்’ எனும் புத்தகத்தின் வாயிலாக இவர் ஆவணப்படுத்திய அந்தக்கால யாழ்ப்பாணமும் அங்கிருந்த சாமான்ய மக்களுடைய சங்கதிகளையும் இக்கணம் வாசிக்கையில் தொன்மத்தைத் தீண்டும் அந்தரங்க உணர்வெழுகிறது. நிலமும் வாழ்வும் இழந்து தாயகத்தின் நினைவுகள் அக்கினியாகக் கனலும் புலம்பெயர்ந்தவனுக்கு ‘நனவிடை தோய்தல்’ பேரிலக்கியம் மட்டுமன்றி அவன் கையில் எஞ்சியிருக்கும் தாயகத்தின் புகைப்படமாகவும் இருக்கிறது. எஸ்.பொ படைப்புக்களின் சூழமைவு மிகவும் ஆழமாக விவாதிக்கப்படவேண்டியது. ஈழத்தின் ஆதிக்க சமூக - அரசியல் பின்னணி, இலக்கிய மேலாண்மை வாதம் போன்றவற்றுக்கு நேர்எதிராகப் பயணித்த எஸ்.பொ, எழுத்துலகில் அடைந்த உயர்வு மேன்மைக்கும் போற்றுதலுக்குமுரியது.

அகரமுதல்வன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி

சமீபத்தில் நான் வாசித்துக் களித்த சிறுகதைத் தொகுப்பு அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய ‘பச்சை நரம்பு.’ 2017-ல் வெளியான இவரது இரண்டாம் தொகுப்பான இதில் பத்துக் கதைகள் உள்ளன. இதன் பின் பல்வேறு இதழ்களில் குறிப்பிடத்தக்க அளவில் கதைகள் எழுதியுள்ளார். இவர் ஈழத்தைச் சேர்ந்தவர். ‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர். அதன் தொடர்ச்சியாக இருக்கிறார் அனோஜன்.

படிப்பறை

நவீன வாழ்வின் போக்குகளையும் இத்தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச் செல்கிறார். ‘நானூறு ரியால்’ என்றொரு கதை. நானூறு ரியால் பணம் செலுத்தினால்தான் விமானத்தில் ஏறலாம் என்னும் நிலையில் அங்கிருப்போர் பலரிடம் கேட்டும் கெஞ்சியும் பார்க்கிறான் அவன். (`சூரரைப் போற்று’ படத்தின் விமான நிலையக் காட்சி நினைவு வந்தால் நான் பொறுப்பில்லை.) கடைசியாக ஒருவர் மூலம் கிடைக்கிறது. விமானத்திலிருந்து இறங்கியதும் அவருக்குப் பணம் திருப்பிக் கொடுக்கவேண்டும். சித்தப்பா மூலம் பணமும் வந்து சேர்ந்துவிடுகிறது. ஆனாலும் அவருக்குப் பணத்தைக் கொடுக்காமலே வெளியேறுகிறான் அவன்.

இப்படி எழுதக்கூடாத, அதிர்ச்சி தரும் ‘அறங்களையும் விழுமியங்களையும்’ அனோஜன் கதைகளில் காணலாம். இவ்வாறே காமத்தின் கோணங்களையும் பட்டவர்த்தனமாக அனோஜன் எழுதுகிறார். மரபான கதைசொல்லியின் லாகவமும் மொழியும் கொண்ட அனோஜன் கதைகள் என்னை மிகவும் ஈர்க்கின்றன.

- பெருமாள்முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism