Published:Updated:

படிப்பறை

மண்ணில் உப்பானவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மண்ணில் உப்பானவர்கள்

மண்ணில் உப்பானவர்கள்

படிப்பறை

மண்ணில் உப்பானவர்கள்

Published:Updated:
மண்ணில் உப்பானவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மண்ணில் உப்பானவர்கள்

“ஒரு சத்யாகிரகியின் கையில் இருக்கும் உப்பு இந்த தேசத்தின் கௌரவம். அதை ஒருபோதும் உயிரே போனாலும் கைவிட்டுவிடாதீர்கள்” என்றார் காந்தி. காந்தி உப்பை போராட்ட ஆயுதமாக ஏந்தத் தொடங்கிய தருணத்தில் ஆங்கிலேயர்கள் மட்டுமன்றி இங்கிருந்த தலைவர்களே, ‘காந்திக்கு என்னவாயிற்று’ என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அது மிகப்பெரும் வடிவெடுத்து பிரவகித்து நின்றது. காந்தி கிராமங்களை இலக்கு வைத்து நடந்தார். அதுவரை கிராமங்களில் வெளிப்பட வாய்ப்பின்றி அடங்கிக்கிடந்த சுதந்திர தாகம் பீறிட்டுக் கிளம்பியது. மக்கள் திரண்டார்கள். அந்தப் பேரெழுச்சியைக் கண்டு ஆங்கிலேய அரசு ஸ்தம்பித்து நின்றது.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, காந்தியடிகளின் தண்டி யாத்திரையை ஒரு நாட்குறிப்புபோல பதிவு செய்கிறது ‘மண்ணில் உப்பானவர்கள்’ நூல். எவ்வளவோ வழிகள் இருக்க, காந்தி உப்புச் சத்யாகிரகப் போராட்டத்தை அறிவிக்க வேண்டிய சூழல் எப்படி உருவானது என்ற பாவண்ணனின் முன்னுரை மிகவும் முக்கியமானது. 12.03.1930 அதிகாலை சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கிய தண்டி யாத்திரை, 240 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து 05.04.1930 அன்று தண்டி கடற்கரையை அடைந்தது. இந்த யாத்திரையின் பின்னிருந்து உழைத்தவர்கள், காந்தியோடு சேர்ந்து பயணம் மேற்கொண்ட சத்யாகிரகிகளை நூலின் தொடக்கப் பக்கங்களில் அறிமுகம் செய்கிறார் சித்ரா. யாத்திரையில் பங்கேற்க காந்தி விதித்த நிபந்தனைகள், பயணத் திட்டம் போன்றவற்றை வாசிக்கையில் காந்தி ஏன் இன்றும் மகாத்மாவாகப் போற்றப்படுகிறார் என்பது விளங்கும்.

தண்டி யாத்திரை, இந்தியாவெங்கும் போராட்டத்தைப் பற்றவைத்தது. தமிழகத்தில் ராஜாஜி வேதாரண்யம் நோக்கி நடக்கத் தொடங்கினார். அவரோடு, 98 பேர் நடந்தார்கள். வழியெங்கும் மக்கள் திரள் திரளாக இணைந்தார்கள். இந்தியாவே குலுங்கியது.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் உப்புச் சத்யாகிரகம் முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை. அக்குறையை இந்நூல் போக்கும். உப்பை அரசியல் ஆயுதமாக ஏந்தி ஆதிக்கவாதிகளை உலுக்கிய இந்தப் போராட்டத்தை காந்தி ஏன் நடத்தினார், எப்படி நடத்தினார் என்பதை இளம் தலைமுறைக்கு உகந்த மொழியில் பதிவு செய்திருக்கும் வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

படிப்பறை

மண்ணில் உப்பானவர்கள்

- சித்ரா பாலசுப்ரமணியன்

தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை-635307, கிருஷ்ணகிரி மாவட்டம். அலைபேசி: 9843870059

பக்கம்: 185

விலை: ரூ.200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆளுமை போற்றுதும்!

படிப்பறை

கதை என்பது அடிப்படையில் பரவசத்தன்மையைக் கொடுக்கும் ஒரு சொல்; ஒரு செயல்பாடு. கேளிக்கைக் கதைகள், பகடிக் கதைகள், நகைச்சுவைக் கதைகள் போன்றவை தமிழில் உண்டுதான். ஆனால், கதை என்கிற செயல்பாடு தன் இயல்பிலேயே கொண்டுள்ள சுவாரஸ்யம் என்ற அம்சத்தைத் தமிழின் பெரும்பாலான நல்ல கதைகள் தவிர்த்துவிடுகின்றன. சுவாரஸ்யமாக எழுதுவதை ஏதோ ‘பாவம்’ என்று கருதக்கூடியவர்கள்கூட உண்டு. யுவன் சந்திரசேகரின் கதைகள், கதைச் செயல்பாட்டின் சுவாரஸ்யத்தன்மையைத் தக்கவைத்துக்கொண்டே தீவிரமாகவும் இயங்குகிறவை. யுவன், சொல்முறையே கதையின் உணர்வுத்தளத்தைத் தீர்மானிக்கிறது என்பதில் நம்பிக்கைகொண்டவர். தன் கதைகளின் வழியாக அந்நம்பிக்கையை மெய்ப்பிக்கவும் செய்திருக்கிறார். மாற்றுக் கதை சொல்லலுக்கான தேடல் கொண்டவர்களுக்கும் அன்றாடத்தைப் பேசும் யதார்த்தக் கதைகளில் சோர்வடைந்தவர்களுக்குமான முதன்மையான மாற்றாக அமையக்கூடியது யுவனின் கதையுலகம். ‘நச்சுப்பொய்கை’, ‘நார்ட்டன் துரையின் மாற்றம்’, ‘தாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தியோரு கதைகள்’ போன்ற தமிழின் முக்கியமான சிறுகதைகளைக் கொண்ட ‘யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்’ என்ற தொகுப்பு யுவனின் முதன்மையான நூல். ‘வெளியேற்றம்’, ‘பகடையாட்டம்’, ‘ஊர்சுற்றி’ போன்ற யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல்கள், வடிவ ரீதியாக நல்ல முன்னகர்வை நிகழ்த்தியிருக்கின்றன.

- சுரேஷ் பிரதீப்

என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி

படிப்பறை

காஞ்சிபுரத்து ஜீவா படைப்பகம் இவ்வாண்டு வெளியிட்ட ‘மன்னார் பொழுதுகள்’ எனும் நானூறு பக்க நாவல் போனமாதம் வாசிக்க நேர்ந்தது. வேல்முருகன் இளங்கோ எழுதியது. திருவாரூர் மாவட்டத்து வடுவூரைச் சேர்ந்தவர். 29 வயதானவர்; பொறியாளர் என்ற தகவல்கள் கடந்து எனக்கு வேறெதுவும் தெரியாது. ‘ஊடறுப்பு’ என்று ஒரு நாவல் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். நான் வாசித்ததில்லை. வேல்முருகன் இளங்கோவை நான் சந்தித்ததுமில்லை. பரந்த களமொன்றில் நாவல் நடக்கிறது. ஐ.என்.ஏ வீழ்ந்த காலகட்டப் பின்னணியில் தொடங்கி சதியால் சாய்க்கப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவன் பிரபாகரன் மரணம் வரை பேசுகிறது நாவல். ஆனால் இதையொரு வரலாற்று நாவல், அரசியல் நாவல் என்ற எல்லைக்குள் நிறுத்த இயலாது. இன, மத வர்க்க முரண்கள், சதிகள், வன்மங்கள் என மிடைந்து ஒரு திரில்லர் வாசிக்கும் அனுபவம் தருகிறது. நாவலுக்கான மொழியும் நடையும் கைவரப் பெற்றிருக்கிறார் வேல்முருகன் இளங்கோ. அறந்தாங்கி, தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களின் மொழி, நெய்தல் நிலத்து மொழி வழக்குகள் எனத் திறனுடன் ஆளப்பட்டிருக்கின்றன. பாசாங்கற்ற, மேதாவித்தனமற்ற உரையாடல்கள் நிகழ்கின்றன. சமகாலத்தில் வாசிக்க வாய்த்த நாவல்களில் மனம் கவர்ந்தது இது. இளம் நாவலாசிரியரான வேல்முருகன் இளங்கோ தன் திறன் உரைத்து நில்லாமல், நாவலை வளர்த்துச் செல்வதில் முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார். அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் புனைவிலக்கியம் வாசிப்பவன் என்பதால் காலந்தோறும் பன்முகப்பட்ட எழுத்தாளுமைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறேன். புத்தம் புதிய, படைப்பூக்கமுள்ள, சொல் திறனில் நவீனமுள்ள, மொழித் தேர்ச்சியுள்ள இளைய நாவலாசிரியர் ஒருவரை ‘மன்னார் பொழுதுகள்’ மூலம் அடையாளம் கண்டேன்!

- நாஞ்சில் நாடன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism