Published:Updated:

படிப்பறை

வர்ணாசிரமத்துக்கும் சாதியத்துக்கும் எதிரான உரையாடல்களும் சமய நல்லிணக்கம் குறித்த கருத்துகளும் சமகாலத்துக்கும் தேவையானவை என்பதால் வரவேற்கத்தக்கவை.

பிரீமியம் ஸ்டோரி
ரலாற்றை ரசமான புனைவாக்குவது மட்டுமே படைப்பாளியின் பணியல்ல, வரலாற்றின் இருண்ட பக்கங்களில் இருந்து உண்மைகளைத் தேடியெடுத்து அதன் சமூக, பண்பாட்டுப்பின்னணி குறித்த உரையாடலைத் தொடங்கிவைப்பதும் படைப்பாளியின் பணிதான். அந்தவகையில் இதுவரை அதிகமும் கவனிக்கப்படாத ஒரு நூற்றாண்டுக்கால ஆட்சி குறித்த உரையாடலைத் தொடங்கிவைக்கிறது எழுத்தாளர் தமிழ்மகனின் ‘படைவீடு’.

13-ம் நூற்றாண்டின் இறுதியில் மூவேந்தர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 15-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின்கீழ் தமிழகம் வந்துவிடுகிறது. இடைப்பட்ட ஒரு நூற்றாண்டுக்காலத்தில் தமிழகத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தெளிவான பார்வைகள் இல்லை. இந்த ஒருநூற்றாண்டுக்காலத்தில்தான் சம்புவராயர்கள தொண்டை மண்டலத்தைச் சிறப்பாக ஆண்டார்கள் என்பதைப் பல்வேறு ஆய்வுகளை முன்வைத்து புனைவாக மாற்றியிருக்கிறார் தமிழ்மகன்.

படிப்பறை

வைதீகத்துக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டதால் களப்பிரர் காலம் ‘இருண்ட காலம்’ ஆக்கப்பட்டது என்பதை க.ப.அறவாணன், பொ.வேல்சாமி ஆகியோர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதேபோல் சம்புவராயர்கள் காலமும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்று சொல்லும் தமிழ்மகன், கிடைத்த வரலாற்று ஆதாரங்களைத் தன் கற்பனைவளத்தால் நிரப்பி முக்கியமான நாவலைக் கொடுத்திருக்கிறார்.

தமிழ் மன்னர்களுக்குள் பூசல்கள் இருந்தபோதும் அவர்கள் வடவர் எதிர்ப்பில் எப்போதும் உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் மாலிக் கபூரின் படையெடுப்பும் செல்வங்கள் சூறையாடல்களும் தமிழ் மன்னர்களை அதிரச்செய்தது. சுல்தானியர் ஆட்சிக்கு எதிராகத் தொண்டை மண்டல மன்னர்களைத் திரட்டச் செல்லும் இளவரசர் ஏகாம்பரநாதரின் பயணத்தில் தொடங்கும் நாவல் சமயப்பூசல்கள், இடங்கை-வலங்கை சாதிப்பிரிவுகள், விஜயநகரப் பேரரசுடான போர் என விரிகிறது. மாற்றுத்திறனாளிகளான இரட்டைப்புலவர்கள், சிலேடைக் கவிராயர் காளமேகப்புலவர், ‘கலிங்கத்துப்பரணி’ எழுதிய செயங்கொண்டார் எனப் பல பாத்திரங்களும் நாவலுக்குச் சுவை சேர்க்கின்றன.

வர்ணாசிரமத்துக்கும் சாதியத்துக்கும் எதிரான உரையாடல்களும் சமய நல்லிணக்கம் குறித்த கருத்துகளும் சமகாலத்துக்கும் தேவையானவை என்பதால் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சாதியத்துக்கு எதிரான கருத்துகள் அரசர்களாலே முன்வைக்கப்பட்டது என்பது நூலாசிரியரின் அரசியல் விருப்பத்திலிருந்து எழுகிறதா என்கிற கேள்வியும் தோன்றுகிறது. இதுவரை புனைவில் வரப்படாத வரலாற்றை எழுதிய வகையிலும் நூற்றாண்டுகளாய் மாற்றம் கண்டுவரும் சாதியமைப்பின் இயக்கம் குறித்த கேள்விகளை முன்வைத்த வகையிலும் ‘படைவீடு’ முக்கியமான நாவல்.

- சுகுணா திவாகர்

படிப்பறை

படைவீடு -

தமிழ்மகன்

வெளியீடு :

தழல், 35, அண்ணாநகர் பிளாசா, சி 47, 2வது நிழற்சாலை, அண்ணாநகர், சென்னை - 40

தொலைபேசி : 7299241264

பக்கங்கள் : 562

விலை : ரூபாய் 600

ஆளுமை போற்றுதும்!

படிப்பறை

வாழ்தலுக்கான நம்பிக்கையை, வாசகனின் இதயத்தில் மூலிகைத்தைலம்போலப் பூசிச் செல்பவை கோணங்கியின் கதைகள். அவரின் கதைகளில் வரும் ஊரும் மனிதர்களும் சம்பவங்களும் வேறு எந்தத் தமிழ் எழுத்தாளரும் அணுகாதவை. வாழ்வின் அசாத்தியமான தருணங்களை ரத்தமும் சதையுமாய் எழுதும் மாயக்கலைஞனான கோணங்கி, தான் நம்பும் கலைக்கு அதிகபட்ச உண்மையோடு வாழ்வதுதான் எல்லாவற்றையும்விட ஆச்சர்யமான ஒன்று. எழுத்தாளனாய் மட்டுமே வாழ்வது என்னும் அவரது அசாத்தியமான பிடிப்பை, இலக்கியம் பிழைப்பிற்கானதல்ல என்பவர்களால் புரிந்துகொள்ள இயலாது. மதினிமார் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் என்னும் அவரது நான்கு சிறுகதைத் தொகுதிகளும் சிறப்பானவை. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களின் கதைகளுக்கு இணையானவை இத்தொகுப்புகளில் உள்ள கதைகள். கி.ராஜநாராயணனிடம் தொடங்கிய கரிசல் மரபின் உச்சம் கோணங்கி. வறுமை, இடப்பெயர்ச்சி இவையெல்லாவற்றையும் மீறி, சொந்த நிலத்தின்மீது மனிதர்கள் கொள்ளும் பிடிப்பு, இவற்றை அழுத்தமாய்ப் பேசும் இக்கதைகள் காலம் கடந்து நிலைக்கக்கூடியவை. எழுத்துக்கலையைப் பயில்கிறவர்களுக்கு இந்தக் கதைகள் ஒரு நல்ல வழிகாட்டி! கோணங்கியின் தனித்துவம் என்பது, அவரது கதைகளும் மொழியும் மட்டுமல்ல, அவரும்தான்!

- லஷ்மி சரவணகுமார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி

ற்போது தீவிரமாக எழுதிவரும் படைப்பாளிகளில் வெய்யிலின் கவிதைகள் என்னை ஈர்க்கின்றன. பெரும்பாலான கவிதைகளில் அவரது கிராமிய உலகும் குடும்ப உறவுகளும் புதிய சொல்முறைகளில் விவரிக்கப்படுகின்றன. அறம் தவறிய உலகம், கவிஞரைப் பெரிதும் பாதிக்கிறது. இது ஆதி கவியின் அடிப்படை மனவார்ப்பு. ‘ஆறுகள் லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுகின்றன’ என்ற நிகழ்கால நாகரிக அவலத்தை ‘அறத்தடி நீர்’ என்ற கவிதையில் சொல்கிறார்.

படிப்பறை

உணர்வுகளையும் காட்சிகளையும் இக்காலக் கவிஞர்கள் போல் வெய்யிலும் மோதவிடுகிறார். தற்காலக் கவிதைகளின் இன்னொரு முகமென்பேன் வெய்யிலின் கவிதைகளை. நினைத்தறியாத, நினைவுகூற முடியாத சித்திரிப்புகளையும் உணர்வுகளையும் அடுக்கிக்கொண்டே போவது இக்காலக் கலைஞனின் தேவையாகிறது. இதையே வெய்யில் மீண்டும் மீண்டும் தன் கவியுலகாக நிர்மாணிக்கிறார்.

வெய்யிலின் ‘நான் மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ கவிதை, கவிதை குறித்த வழக்கமான அவதானிப்புகளை நொறுக்குகிறது. ‘அக்காளின் எலும்புகள்’ தொகுப்பு முற்றிலும் புதிய பொருளையும் கவிமொழியையும் கொண்டிருக்கிறது. வெய்யில், தனது நவமான எழுத்துமுறையினால் ஒரு தனித்த பாணியைத் தோற்றுவிப்பதில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை அவரது கவிதைகள் உறுதி செய்கின்றன

- வண்ணநிலவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு