இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.
வாழ்க்ககையை இருபெரும் பிரிவுகளாக காணச் செய்துவிட்ட இப்பெருந்தொற்று காலமானது நம்மைச் சுற்றியிருக்கும் அதே பழைய விஷயங்களை புதிய கோணத்தில் காணும்படி பழக்கியுள்ளதென்றே கூற வேண்டும். என் பயணங்களின் பொழுதெல்லாம் புதிய சிந்தனைகள் கொண்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. நம்மைப்போலவே அவர்களுக்கும் அன்றாடச் சிக்கல்கள், பொருளீட்டும் தேவை என்று எல்லாம் இருக்கும்போதும் அவர்கள் தங்கள் வாழ்வை இரசனையுடனும் நிறைவுப் பூர்வமாகவும் வாழ முனைவதைப் பார்க்கையில் அவர்களின் புத்துணர்ச்சியும் மகிழ்வும் நம்மையும் தொற்றிக் கொள்ளவே செய்கிறது.
'சயன் சகோதரர்கள்' என்கிற புனைப்பெயரில் எழுதி வரும் சந்துரு, கார்த்திகேயன் இருவரும் நுண்கதை வகை கதைகள் மற்றும் மைக்ரோ படங்கள் என்ற நுண்திரைப்படங்கள் படைத்து வருகின்றனர். மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த இவ்விருவரும் குழந்தைப் பருவந்தொட்டே கதை கேட்பதிலும், வாசிப்பதிலும், நாடகங்கள் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தனர். 'நானும் மீனும்', 'ரீ சைக்கிள் பின்',' கோழி குஞ்சும் கள்ள பருந்தும்' போன்ற குறும்படம் 'கேப்டன்', 'நியூட் 18 பிளஸ்' என்ற 'மைக்ரோ' படங்களை இயக்கியுள்ளனர். மைக்ரோ' படம் போல 'மைக்ரோ' கதை அதாவது நுண்கதைகளும் எழுதி வருகின்றனர். 'விளங்கா மெய்' எனும் இப்புத்தகத்தில் ஒரு பக்கம் படம், மறு பக்கம் கதை என 99 கதைகள் எழுதியுள்ளனர். இரண்டு, நான்கு வரிகளில் கூட கதை சொல்லி ஓவியமும் இவர்களே வரைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இத்தகைய பல புதிய சிந்தனைகளும் புதிய முயற்சிகளையும் கொண்டுள்ள இவர்களின் மற்றொரு புதுமையான முயற்சி தங்களது இரு சக்கர வாகனங்த்தை புத்தக விற்பனைக் கருவியாக பயன்படுத்தி தங்களது புத்தகங்களை விற்கத் துவங்கியுள்ளார்கள்.

அமெரிக்க இலக்கியத்தின் தலைசிறந்த கலைஞர்களை உருவாக்கிய பீட் இயக்கம் சுதந்திரமான மனநிலையும் கலகக் குரலும் கொண்டு உருவானது. ஆலன் கின்ஸ்பெர்க், ஜாக் கேரக், பாப் டிலன் மாதிரியான அபாராமான கலைஞர்கள் இந்த இயக்கத்தின் வழியாய் உருவானவர்களே. ஜாக் கேரக்கின் ஆன் த ரோட் நாவல் எனக்கு ஆக விருப்பமானதொன்று. தந்தையின் மரணத்திற்குப்பின் அந்தத் துயரிலிருந்து வெளிவரமுடியாமல் அவதியுறும் நாயகன் வீடு உறவு நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மனம்போன போக்கில் பயணிக்கத் துவங்குவான். நினைத்த இடத்தில் தங்கி கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டு இந்த உலகின் அத்தனை மனிதர்களும் எனக்கானவர்கள் என்கிற மனநிலையோடு சுற்றுவான். இரண்டு வருட காலம் அவனது அலைச்சல்களையும் அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் வாசிக்கையில் மெய் சிலிர்க்கும். மனிதன் தனது தேவைக்கு அதிகமாக சேமித்துக் கொள்ளும் எல்லாமே சுமைகளாகத்தான் மாறிவிடுகின்றன. தேவைக்கு அதிகமாக சேர்க்க வேண்டுமென்கிற ஆசைகளைத் துறக்கும் போதுதான் உலகமும் மனிதர்களும் நமக்கு நெருக்கமானவர்களாய் மாறிவிடுகிறார்கள்.
இந்திய சமூகத்தில் இதுபோன்ற சிந்தனைகள் விதைக்கப்படுவதுமில்லை வளர்வதுமில்லை. இலக்கியத்தை ஆடம்பரமாகப் பார்க்கக் கூடிய ஒரு பிரிவும், முற்றாகத் துறந்த நிலையில் பார்க்கக் கூடிய இன்னொரு பிரிவுமாகத்தான் இருக்கிறார்கள். மக்களோடு தங்களை இணைத்துக் கொண்ட கலைஞர்கள் அபூர்வமாகத்தான் இருக்கிறார்கள். வாழ்வை அதன் எல்லா பிசிறுகளோடும் அசிங்கங்களோடும் எதிர்கொள்கிற கலைஞர்களும் நம்மில் குறைவு. இதனாலேயே நாடோடித்தனம் என்பது பெரும்பாலான கலைஞர்களுக்கு வாய்க்காமலேயே போய்விடுகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநிறைய பயணிக்கக் கூடியவன் என்கிற வகையில் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலும் ஆசியாவின் சில நாடுகளிலும் கொஞ்சமே கொஞ்சமான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு என்னைப் போலவே பயணிக்கும் ஏராளமான வெளிநாட்டவர்களைக் கண்டதுண்டு. இன்றைக்கு woofing மாதிரியான அமைப்புகள் பயணிகளுக்கு பெரும் கொடையாய் மாறியிருக்கின்றன. வடகிழக்கு இந்தியாவின் ஒரு எளிய விடுதியில் சில நாட்கள் தங்கியிருந்தேன். ஒரு அறைக்கு நான்கு பேர், எல்லாம் மாதக் கணக்கில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். விடுதியின் நுழைவுப் புத்தகத்தில் பெயருக்கு அருகில் என்ன வேலை என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் எல்லாம் unemployed என குறிப்பிட்டிருப்பார்கள்.
அந்த நகரின் மையமான இடத்தில் மாலை நேரங்களில் பயணங்களில் சேகரித்த வித்தியசமான பொருட்களை சிறிய விலைக்கு விற்பார்கள் அதில் கிடைக்கும் வருமானம் அவர்களின் செலவுகளுக்கானது, இதில்லாமல் உள்ளூர் உணவகங்களில், தோட்டங்களில் வேலை செய்வார்கள். சில மாதங்களுக்குப்பின் அங்கிருந்து இன்னொரு நிலம், இன்னொரு மொழி, இன்னொரு மக்கள். பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரியும் இந்த வாழ்வைத் தேர்ந்தெடுக்க வாழ்வை எளிமையாக வாழ நினைக்கும் மனம் வாய்க்க வேண்டியது அவசியம்.

சயன் சகோதரர்கள் தங்கள் புல்லட்டில் புத்தகங்கள் விற்பதைக் கேள்விப்பட்டவுடன் ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. கலை என்பது மக்களை சென்றடையும் பொழுதுதான் முழுமை பெறுகிறது. அதனால் புத்தகங்கள் எழுதுவதோடு மட்டுமல்லாது அதை எளிய வழியில் சந்தைப்படுத்தும் செயலையும் அவர்களே செய்வதன் துவக்கமே இந்த "மொபைல் புத்தகக் கடை" என்று ஆர்வமாக பேசுகின்றனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்களது ராயல் என்ஃபீல்ட் புல்லட்டில் புத்தக தோரணம் கட்டி விற்பனை செய்து வரும் இந்த இளைஞர்கள் அப்பகுதி மக்களிடையே பிரபலமாகி வருகின்றனர்.
நடமாடும் நூலகங்கள் இந்தியாவில் புதிதல்ல. வடகிழக்கு மாநிலங்களிலும் கேரளாவிலும் நான் அத்தகைய நூலகங்களை அநேகம் கண்டதுண்டு. அவை மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதைக் காணும்பொழுதெல்லாம் நம்மூரிலும் இது போல் புத்தகங்கள் எளிதில் கைசேரும் வழிகள் செய்ய வேண்டும் என்றெண்ணியதுமுண்டு. வடகிழக்கு மாநிலங்களின் மலைப்பகுதிகளில் cafe வகை தேநீர் விடுதிகள் அதிகம் காணமுடியும். அங்கெல்லாம் நான் கண்டு வியந்ததொரு காட்சி பெரும்பாலான cafe-க்களில் புத்தக அடுக்குகள் இருக்கும். இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு குடிபெயர்ந்து விட்ட இத்தாலிய நண்பரொருவர் அந்தப் பகுதியில் மொபைல் லைப்ரரி ஒன்று நடத்தி வந்தார். ஒரு சமயம் சிக்கிம் சென்றிருந்த பொழுது அவரின் நூலகத்தில் சில மணிநேரங்கள் செலவிட நேரிட்டது.
"நீங்கள் ஏன் இத்தாலியிலிருந்து இங்கு வந்து பெரிதும் லாபமீட்டாத இந்த நூலகம் நடத்துகிறீர்கள் என்று கேட்டபொழுது "இமய மலை மீது எப்பொழுது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. அதேபோல் வாசிப்பின் மீதும். இவ்விரண்டிற்கும் என் வாழ்வில் நிரந்தர இடமளித்துவிட வேண்டும் என்றெண்ணி இங்கு வந்து என் வாழ்வை எனக்கு பிடித்த மாதிரி அமைத்துக் கொண்டேன். இங்குள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் என் மொபைல் நூலகத்தை கொண்டு சேர்க்கிறேன். நாம் நினைப்பதை விட மக்கள் அதிகமாக வாசிக்கவே செய்கின்றனர் " என்றார். அப்பொழுது அவரை பார்த்த பொழுது ஏற்பட்ட அதே வியப்பு இப்பொழுது இந்த சயன் சகோதரர்களை பார்க்கும் போது ஏற்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முழுவதிலும் பத்துகோடிக்கும் அதிகமான தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் தமிழில் எழுதப்படும் சிறந்த புத்தகங்கல்கூட அதிகபட்சமாக ஆயிரம் பிரதிகள் விற்கமுடியாமல் போகின்றன. இதற்கு காரணம் என்ன? தமிழர்களிடம் வாசிப்பு பழக்கம் குறைவா? அப்படியெனில் சமூக வலைதளங்கில் கண்டதையும் கிறுக்கித்தள்ளும் லட்சக்கணக்கானவர்கள் யார்?
மக்களிடம் வாசிப்பதில் சோம்பேறித்தனம் இருக்கிறது என்பது எத்தனை உண்மையோ, அதேயளவு உண்மை புத்தகங்கள் இன்னும் பரவலாக வேண்டும். எல்லாமே தங்களைத் தேடி வரவேண்டுமென்கிற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது. புத்தகங்களைத் தேடிச்சென்று வாங்குவதை விடவும் புத்தகங்கள் தங்களைத் தேடிவரவேண்டுமென விரும்புகிறார்கள். சாலையோரக் கடைகளில் புத்தகம் வைப்பது துவங்கி, சிறிய நடமாடும் நூலகங்கள் என இன்னும் ஏராளமான புதிய முயற்சிகள் இங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாசிப்பை ஒரு இயக்கமாகச் செய்ய வேண்டிய தலையாயக் கடமை நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

கார்த்திக்கின் மனைவி தற்போது சைக்கிளில் புத்தகங்களை விற்றுவருகிறார். இவர்களைப் போலவே இப்போது வேறுசில ஊர்களிலும் சிலர் சைக்கிளில் புத்தகங்கள் விற்கத் துவங்கியிருக்கிறார்கள். தூத்துக்குடியில் ஒரு சலூன் கடையில் நீண்டகாலமாக ஒருவர் நூலகம் நடத்திக் கொண்டிருக்கிறார். இவையெல்லாமே ஆரோக்கியமான முயற்சிகள் மட்டுமல்ல, மக்களின் மனதில் வாசிப்பின் மீது ஆர்வத்தையும் பற்றையும் உருவாக்கக் கூடிய முக்கியமான செயலும் கூட.

மக்கள் ஆர்வமாக வந்து தங்களிடம் புத்தகம் வாங்குவதாகச் சொல்வதோடு எதிர்காலத்தில் பதிப்பகம் துவங்கி மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புவதாக அவர்கள் சொல்கிறார்கள். வாசிப்பை ஒரு இயக்கமாகச் செய்யவேண்டுமென நான் சொல்வதன் ஒரு பகுதி இதுதான். எண்ணங்களில் அனைத்துமே சாத்தியம்தான். எண்ணங்களை செயலாக மாற்றுவதற்குத்தான் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அவசியமாகிறது. அவ்வகையில் சந்துருவும் கார்த்திகேயனும் சேர்ந்து முன்னெடுத்திருக்கும் இம்முயற்சி புதுமையானது மட்டுமல்லாமல் வரவேற்கத்தக்கதும் கூட. பட்டாம்பூச்சி கனவுகள் கொண்டிருக்கும் இவர்களது பயணங்களும் இலக்குகளும் கைக்கூட வாழ்த்துகள்.
(இவர்கள்... வருவார்கள்)