Published:Updated:

கனடா அதிபர் முதல் நடிகர் பொன்வண்ணன் வரை வியந்த தமிழக எழுத்தாளர்... சத்தமில்லாமல் ஒரு சாதனை!

அருண்மொழிவர்மன் நடிகர் பொன்வண்ணனோடு...
அருண்மொழிவர்மன் நடிகர் பொன்வண்ணனோடு... ( நா.ராஜமுருகன் )

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மின்னஞ்சல் மூலமா என்னைத் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவிச்சு கடிதம் அனுப்பினார்.

மலையளவு திறமைகளை வைத்திருந்தாலும், அதை வெளிப்படுத்த, மக்களிடம் கொண்டுசேர்க்க வழிதெரியாமல் எழுத்தாளர்கள், கலைஞர்கள் விழிபிதுங்கி நின்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. ஆனால், இன்றைய டிரெண்டிங், வைரல் யுகத்தில், வித்தியாசமாக யோசித்து, புதுமையாகச் செய்யப்படும் எழுத்தோ, கலையோ, மீம்ஸோ, கருத்தோ ஓவர்நைட்டில் ஹிட்டடிக்கும் என்பது நிதர்சனம். அருண்மொழிவர்மன் முயற்சியும் அப்படித்தான்.

அருண்மொழிவர்மனின் அந்த வைரல் ஈபுக்
அருண்மொழிவர்மனின் அந்த வைரல் ஈபுக்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான கண்கொடுத்த வணிதத்தைச் சேர்ந்தவர் இவர். ஆங்கிலத்தில் விளையாட்டாக எழுதி ஆன்லைனில் இவர் வெளியிட்ட ஈபுக் ஒன்று, 14 தேசங்களில் கவனம் பெற்றிருக்கிறது. அந்த நூலைப் படித்துவிட்டு, கனடா அதிபர் பாராட்டியிருக்கிறார். தமிழ் சினிமா நடிகர் பொன்வண்ணனும் போனில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாமணி கிராமத்தில் நடைபெற்ற ஒரு கல்வி சார்ந்த நிகழ்ச்சிக்காக வந்தவரை சந்தித்துப் பேசினோம்.

அருண்மொழிவர்மன்
அருண்மொழிவர்மன்

"கண்கொடுத்த வணிதம்தான் எனக்கு பூர்வீகம். அப்பா இல்லை. அம்மா, நான், தங்கச்சி மூணு பேருதான். ரொம்ப ஏழ்மையான குடும்பம். அதனால் 2004-ம் வருஷம் பன்னிரண்டாம் வகுப்பை முடிச்சாலும், என்னால் மேற்கொண்டு படிக்க முடியலை. குடும்ப சூழல் காரணமாக சென்னைக்கு வேலைக்குப் போய்ட்டேன். அதன்பிறகு, 'சாதிக்க படிப்பு வேணும்'னு 2011–ல் வேலையை விட்டுட்டு, ஊருக்கு வந்துட்டேன். பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ மனிதவள மேலாண்மைத்துறை படிச்சேன். அப்படியே ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்கும் போனேன். ஆங்கில பத்திரிகைகள், புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். ஆங்கிலத்தில் சரளமா எழுத; பேச கத்துக்கிட்டேன். ரவீந்தரநாத் தாகூர் புத்தகங்களை விரும்பி படிக்க ஆரம்பிச்சேன். அவர் எழுதிய கீதாஞ்சலி புத்தகத்தை படிச்சப்பதான், 'நாமும் எழுத்தாளராகணும்'னு முடிவு பண்ணினேன்.

அந்த உந்துதல்ல 39 கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினேன். 'மனிதர்கள் அனைவரும் சமம்' என்ற கருத்தை மையக்கருத்தா வச்சு, நான் எழுதின அந்தக் கட்டுரைகளை, 'Reflection of human relations' என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பதிப்பகம் மூலம் மின்புத்தகமா வெளியிட்டேன். கடந்த வருஷம் வெளியிட்டேன். அந்தப் புத்தகத்தை படிச்ச அமெரிக்காவில் பணிபுரியும் நண்பரான ரஞ்சித்குமார், தான் நடத்தி வரும் இ-மேகஸின், கம்பெனி வலைதள பக்கம், மற்ற தளங்கள்ல இதை ஷேர் செய்திருந்தார்.

நியூயார்க் கல்லூரி வெளியிட்டபோது...
நியூயார்க் கல்லூரி வெளியிட்டபோது...

இரண்டே நாள்களில் என்னோட புத்தகத்தின் தலைப்பு அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், பிரேசில், இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, டென்மார்க்னு 14 நாடுகள்ல பேமஸாச்சு. அதை படிச்ச கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மின்னஞ்சல் மூலமா என்னைத் தொடர்புகொண்டு, வாழ்த்து தெரிவிச்சு மெயில் அனுப்பினார்.

ஒருகணம் நம்பமுடியாமல் என்னையே கிள்ளிப் பார்த்துகிட்டேன். அந்த இ-புக்கை படிச்சு, நியூயார்க்கில் உள்ள 'NYU STERN SCHOOL OF BUSINESS' கல்லூரி, அமெரிக்காவில் என் புத்தகத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

அதோடு, அவர்கள் என்னை தங்கள் கல்லூரியில் பிஹெச்.டி படிக்க அழைப்பும் விடுத்தனர். எனக்கோ மயக்கம் வராத குறைதான். ஆனா, அதோடு நிற்கவில்லை. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்செட்டி, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் ஜெஸ்பர், இஸ்ரேல் பேராசிரியர் யுவால் நோவா ஹராரி, நியூயார்க்கில் இருந்து பால் எம்.பேரட், அமெரிக்க பேராசிரியர் டேவ் உல்ரிச், ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஹெப்வொர்த்னு தொடர்ச்சியா எதிர்பார்க்காத ஆள்கலெல்லாம், 'குட் ஒன்', 'நைஸ் ஒன்'னு பாராட்டினாங்க.

கனடா பிரதமர் பாராட்டு
கனடா பிரதமர் பாராட்டு

சினிமா நடிகர் பொன்வண்ணன் சார் எனது இ-புக்கை படிச்சுட்டு பாராட்டினார். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்ஸும், 'இந்திய சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் வரவும், `மேன் புக்’ விருது பெறவும் வாழ்த்துகள்'னு பாராட்டினார். எனக்கு தலைகால் புரியாத நிலைமை.

அதேபோல், என் புத்தகத்தைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வந்ததாக பாடகர் அந்தோணிதாசன் சொன்னார். வரும் செப்டம்பர் மாசம் கம்போடியாவில் உள்ள தமிழ் அமைப்பு ஒன்று அங்கு நடக்கும் சர்வதேச தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்காங்க. 5 நாள் பயணமா அங்கே போறேன். சும்மா விளையாட்டாக ஆரம்பிச்ச எழுத்து, இவ்வளவு தூரம் பெருமையைத் தேடி தரும்னு சத்தியமா கனவுலகூட நான் நினைக்கலை.

அருண்மொழிவர்மனின் இரண்டாவது புத்தகம்
அருண்மொழிவர்மனின் இரண்டாவது புத்தகம்
நா.ராஜமுருகன்

அந்த உற்சாகத்திலேயே என்னுடைய எண்ணத்துல உதித்த 120 ஆங்கில மேற்கோள்களைத் தொகுத்து, 'quotable quotes' என்ற தலைப்புல இ-புத்தகமாகவும், பிரின்டடாகவும் வெளியிட்டோம். அது கல்லூரி மாணவர்கள் மத்தியில் செம ஹிட்டாகி இருக்கு. பல கல்லூரிகளில் இருந்து பிரதிகள் கேட்கிறாங்க. இப்போ கூடுதலா 80 ஆங்கில மேற்கோள்களை எழுதி இருக்கிறேன்.

அதை அந்தப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் சேர்த்து வெளியிடலாம்னு இருக்கேன். இப்போ மூணாவதா, 'Creations of MIND'னு ஓர் புத்தகத்தை எழுதிட்டு இருக்கேன். அதோடு, சிவில் சரிவீஸ் தேர்வுக்காக ஐ.ஏ.எஸ் கனவாகும் லட்சியத்தோடு தீவிரமாகப் படிச்சுட்டு இருக்கேன். அந்தக் கனவையும் நனவாக்குவேன்.

கம்போடியா உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டுக்கு அழைப்பு
கம்போடியா உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டுக்கு அழைப்பு

தவிர, நடிகர் பொன்வண்ணன் சார் எழுதி வரும் வரலாற்று நூலான, 'ஆழி சூழ் ஆதி'ங்கிற புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்போறேன். ஆஸ்திரேலியா மியூசியம் வரை சென்று அவர் ஆய்வு பண்ணி எழுதிய அற்புதமான நூல் அது. இவ்வளவு தூரம் எனது இ-புக் ஹிட்டாகியும், தமிழகத்தில் யாருக்கும் தெரியலை. அதுக்குக் காரணம், நான் ஆங்கிலத்தில் எழுதியதுதான். அதனால், தொடர்ந்து அன்னைத் தமிழில் தன்னம்பிக்கை கட்டுரைகளையும், கதை, புதினங்கள், வரலாற்று நூல்களையும் எழுதலாம்னு முடிவு பண்ணி இருக்கிறேன். தமிழில் திடமாக தடம் பதிப்பேன்" என்கிறார் உற்சாகமாக!

அடுத்த கட்டுரைக்கு