Published:Updated:

எத்திசையும் புகழ் மணக்க...

எத்திசையும் புகழ் மணக்க...
பிரீமியம் ஸ்டோரி
News
எத்திசையும் புகழ் மணக்க...

- ஆழி செந்தில்நாதன்

“ஒரு காலம் இருந்தது, அது தொல்பழங்காலம். இந்த மண்ணில் பிறந்த திராவிட மதம் மட்டுமே அந்நாளில் வழக்கில் இருந்தது” என்று பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞரும் தத்துவவியல் அறிஞருமான பெ.சுந்தரம் பிள்ளை கூறியபோது, அந்தச் சிந்தனைகள் பிற்காலத்தில் தமிழ் மனப்பரப்பில் அதிர்வலைகளை உருவாக்கும் என்று அவரே எதிர்பார்த்திருக்க முடியாது.

ஆனால் கேரளாவில் பிறந்து தென்தமிழ்நாட்டில் இயங்கியவரான சுந்தரனார் பிற்காலத்தில் தனித்தமிழ் இயக்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்குமான விதைகளை விதைத்த பல மேதைகளில் ஒருவர். அவரது பெயரில்தான் மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இயங்குகிறது. (அவர் எழுதிய காவியமான மனோன்மணீயத்தின் பெயரையும் சேர்த்து அவரை மனோன்மணீயம் சுந்தரனார் என்று இன்று அழைக்கிறோம்). அவர் எழுதிய மனோன்மணீயம் காவியத்தில் இடம்பெறும் ஒரு பாடலான ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்கிற பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டு இந்த ஆண்டுடன் ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன.

மனோன்மணீயம் சுந்தரனார்
மனோன்மணீயம் சுந்தரனார்

சுந்தரனார் அந்த வரிகளை எழுதி முக்கால் நூற்றாண்டுக் காலம் கழித்து அந்த வரிகள் அப்படி ஒரு தேசிய இனத்தின் வாழ்த்துப்பாடலாக ஆனதற்குப் பின்னால் இரண்டு தலைமுறைக்கால அரசியல் போராட்டங்களைத் தமிழ்நாடு சந்தித்திருந்தது.

1967இல் மிகப்பெரிய வெற்றிபெற்று திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை அறிஞர் அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்ற பிறகு, அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் திராவிட இயக்கக் கொள்கைகளைச் சட்டங்களாக மாற்றும் முடிவுகள் முக்கியமானவை.

1967 மார்ச் மாதம் அண்ணா முதல்வராகி ஒரு மாதம்கூட கழியவில்லை. அவர் முதல்வராகக் காலடி எடுத்துவைத்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முகத்தை மாற்றும் முதல் வேலையை ஆரம்பித்தார். ஏப்ரல் 14 - சித்திரை முதல்நாள், அவர் கோட்டையில் ஒரு புதிய பெயர்ப்பலகையைத் திறந்துவைத்தார். அந்தப் பெயர்ப்பலகையில் ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்று எழுதப்பட்டிருந்தது. Secretariat of Government of Tamil Nadu! அவர் செய்த செயல்பாடு ஆச்சரியமானது. ஏனென்றால் அந்தப் பெயர்ப்பலகையைத் திறந்த நேரத்தில் தமிழ்நாட்டின் அதிகாரபூர்வ பெயராக இருந்தது சென்னை மாநிலம் என்பதுதான். அதைவிட ஆச்சரியமாக மாநில இலச்சினையில் இருந்த குறிக்கோள் வாக்கியமான, தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட சம்ஸ்கிருத வாசகமான, ‘சத்யமேவ ஜெயதே’ என்ற சொற்கள் இருந்த இடத்தில் இப்போது ‘வாய்மையே வெல்லும்’ என்கிற சொற்கள் இருந்தன.

எத்திசையும் புகழ் மணக்க...

இந்தியாவில் எந்த முதல்வரும் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு செயலைச் செய்யத்துணியமாட்டார்கள். ஆனால் அண்ணா தனது ஆட்சியை அப்படித்தான் தொடங்கினார். பிறகு அரசியலமைப்புச் சட்டத்தின் நடைமுறைப்படி மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடாக்கினார். இந்திய ஒன்றிய அரசின் மொழிக்கொள்கையைத் தமிழ்நாட்டில் செல்லாததாக்கி இருமொழிச் சட்டத்தைக் கொண்டுவந்தார்.

தனித் திராவிட நாட்டுக் கனவிலிருந்து வெளியேறி, இந்திய ஒன்றியத்தில் தன்னாட்சி கோரும் அரசியலைக் கையிலெடுத்திருந்தது திமுக. ஆனால் “பிரிவினையைக் கைவிட்டு விட்டோம், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியேதான் உள்ளன” என்றார் அண்ணா. ஆனால் தனியாட்சியோ தன்னாட்சியோ தமிழ்நாட்டுக் கெனச் சில தேசிய அடை யாளங்களை உருவாக்குவது என்பதில் அண்ணாவும் அவரின் தம்பிகளும் உறுதியாக இருந்தார்கள்.

தமிழ், திருக்குறள், சங்க இலக்கியம். தமிழிசை, சிலப்பதி காரம் போன்ற அடையாளங்களை அவர்கள் முன்னிறுத்தினார்கள். இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு, உயர் கல்வியில் தமிழுக்கான அடித்தளம் என்று ஒரு தமிழாட்சியைத் தொடர்ந்த அண்ணா, எதிர்பாரா விதமாக காலத்துக்கு இரையானார். பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர், 1970இல் எடுத்த முக்கிய நடவடிக்கைதான் தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம். அத்துடன் தமிழ்நாட்டுக்கென ஒரு கொடியையும் அறிமுகப்படுத்த அவர் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றாலும் அது குறிப்பிடத்தகுந்த ஒரு முயற்சி.

பி.சுசீலா, டி.எம்.செளந்தர்ராஜன்
பி.சுசீலா, டி.எம்.செளந்தர்ராஜன்

ஆட்சித்தமிழ் தொடர்பான செயல்பாடுகள், நீதித்துறையில் தமிழைப் பயன்படுத்துல், தமிழுக் கான அகராதிகள், உலகளவில் தலைசிறந்த பாட நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தல், தேவநேயப்பாவாணர் தலைமையில் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தைத் தொடங்குதல், எல்லாவற்றுக்கும் உச்சமாக 1974இல் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றியது என கலைஞர் தன் தலைமையில் வெற்றிபெற்ற முதலாவது ஆட்சிக்காலத்தில் தமிழ்சார்ந்து பல தி்ட்டங்களை நடைமுறைப் படுத்தினார். அவற்றில் மிகவும் முக்கியமானது தமிழ்த்தாய் வாழ்த்து. ஏன்?

தமிழ்த்தாய் வாழ்த்து என்கிற இந்தப் பாடல் சட்ட அடிப்படையில் ஒரு மாநிலப் பாடல் (State song) ஆகும். இந்தியாவில் பல மாநிலங்கள் தங்களுக்கான மாநிலப் பாடல்களை அங்கீகரித்திருக்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் மொழிவழித் தாயகத்துக்கான வாழ்த்துப்பாடலாக அவை இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் ஆந்திரத்திலும் அவை தாய்மொழிக்கான வாழ்த்துப்பாடலாக இருக்கின்றன.

இந்திய தேசிய அடையாளத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் தங்கள் மொழிவழி அடையாளத்தையும் கைவிடத் தயாராக இல்லாத விருப்பத்தையே இந்த மாநிலப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. மொழிவழித் தாயக அடையாளம் என்பது 1947க்கு முன்பே இந்தியாவில் ஏற்பட்டுவிட்டது. இந்திய மாநிலங்களில் தமக்கென ஒரு கீதத்தை அங்கீகரித்த முதல் மாநிலம் அசாம்தான். 1927லேயே ‘என் நித்திய தேசமே’ என்று தம் தாயகத்தை விளிக்கும் ‘ஓஸ மூர் அனுப்னர் தேஷ்’ என்கிற பாடலை அசாமியர்கள் தங்களுக்கான தேசிய கீதமாகவே ஏற்றுப் பாடிவந்தார்கள். அந்த தேசிய கீதம் பிறகு அவர்களது மாநில கீதமாக மாறியது. பிரிட்டிஷ் காலத்திலேயே இந்தியாவின் முதல் மொழிவழி மாகாணமாக உருவாக்கப்பட்ட ஒடிசா 1936இல் தனக்கான தேசியப் பாடலை - அதாவது இன்றைக்கு மாநிலப் பாடலை - பெற்றது. பந்தே உத்கல ஜனனி என்கிற அந்தப் பாடல் ஒடியத் தாயை வணங்கியது. 1947க்குப் பின், முதல் மொழிவாரி மாநிலமான ஆந்திரப் பிரதேசம் 1956இல் மா தெலுகு தள்ளிகி என்ற பாடலை தாயக / தாய்மொழி வாழ்த்தாக அங்கீகரித்தது. சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சங்கரம்பாடி சுந்தராச்சாரி என்கிற கவிஞர் ஒரு சினிமாவுக்காக எழுதி வெளிவராத ஒரு பாடல்தான் அது!

இந்தப் பின்னணியில்தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அரங்கேறுகிறது. அரசு நிகழ்ச்சிகளில் பாரதமாதாவுக்கு தேசிய கீதத்தோடு மரியாதை செலுத்தப்படவேண்டும் என்பது சட்டமானால், தமிழ்த்தாய்க்கும் அதே போன்ற மரியாதை அளிக்கவேண்டும் என்பதும் சட்டமாக இருக்கவேண்டும் என நம் தலைவர்கள் நினைத்திருக்கிறார்கள். ‘சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் / தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்’ என்கிற வரிகளில் இந்தியாவில், தெக்கணத்தில் (தென்னிந்தியாவில்), திராவிடர் நல் திருநாட்டில் (அதாவது, தமிழ்நாட்டில்) வாழும் தமிழணங்கைப் பாடும் சுந்தரனாரின் மனோன்மணீயம் துதிப்பாடல் இதற்கு வசதியாக இருந்தது.

ஆனால் இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த சில வரிகள் நீக்கப்பட்டது ஒரு சர்ச்சையை உருவாக்கியது. மூலப் பாடலில், `பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் / எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் / கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் / உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் / ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் / சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!’ என்கிற பகுதி நீக்கப்பட்டது.

பரம்பொருள் பற்றிப் பேச பகுத்தறிவாளர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அத்துடன் தமிழ்த்தாயைப் போற்றும் நேரத்தில் வேறு மொழிகளைப் பற்றி எதிர்மறையான சித்திரம் வேண்டாம் எனத் தவிர்த்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. சம்ஸ்கிருதம் வழக்கொழிந்த மொழி என்றோ பிற திராவிட மொழிகள் தமிழின் குழந்தைகள் என்றோ சொல்வதற்கான இடம் இது அல்ல என்று திமுகவினர் கூறினர். ஆனால் இது சமரசம் என்றும் சுந்தரனாரைத் திரிக்கிற வேலை என்றும் எதிர்த்தரப்பினர் கருதினார்கள்.

தமிழ்த்தாய்க்கு இன்னொரு வாழ்த்துப்பாடலும் உண்டு. அது புதுச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து. மண்ணின் மைந்தரான மகாகவி பாரதிதாசன் எழுதிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்கிற அற்புதமான ஒரு பாடல்தான் அது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இதற்குப் பிறகுதான் மாநிலப் பாடல்கள் வரத்தொடங்கின. கர்நாடகம் தனக்கெனக் கொடியே வைத்தி ருக்கிறது. ஆனால் அவர்களது மாநில கீதம் 2004இல்தான் அங்கீகரிக்கப்பட்டது, ‘ஜெய பாரத ஜனனிய தனுஜாதே, ஜெயஹே கர்நாடக மாதே’ என்கிற, மைசூர் அனந்தசாமி எழுதிய அந்தப் பாடல் சற்றே நீண்டது. கேரளாவுக்கு இதுவரை ஒரு மாநிலப் பாடல் இல்லை.

2012இல்தான் பிகார் அரசு ‘மேரே பாரத் கே காந்த் ஹார்’ (என் இந்தியாவின் மலர் மாலையே!) என்கிற பாடலை மாநிலப்பாடலாக ஆக்கியது. சத்தீஸ்கர் 2019இல்தான் தனக்கான மாநிலப் பாடலை அங்கீகரித்தது. உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு இதுவரை ஒரு மாநிலப்பாடல் இல்லை. பஞ்சாபுக்கும் இல்லை.

ஒரு வேதனையான உண்மை, மேற்கு வங்கம். ஜன கண மன என்கிற இந்திய தேசிய கீதத்தையும் அமர் சோனார் பங்ளா (எனது தங்க வங்கமே) என்கிற பங்களா தேஷின் தேசிய கீதத்தையும் - இரு நாடுகளின் தேசிய கீதங்களையும் - இயற்றியவர் வங்கத்து மகாகவி ரவீந்திரநாத் தாகூர். ஆனால் அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு இதுவரை ஒரு மாநிலப் பாடல் இல்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பு மாநில முதல்வர் மம்தா பானர்ஜியே வங்கத்துக்கான மாநில கீதத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாயின.

ஆனால் நாம் நமது தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பொன்விழாக் கொண்டாடு கிறோம், நம் மாநிலத் தாயை வாழ்த்துகிறோம், பல சமயம் ‘செயல்மறந்து’ வாழ்த்துகிறோம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி பி.சுசீலா!

பி.சுசீலா
பி.சுசீலா

“இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடமிருந்து வழக்கம்போல பின்னணிப் பாடல் பாடுவதற்கு அழைப்பு வந்தது. ஜெமினி ஸ்டூடியோவுக்குச் சென்றேன். அங்கு டி.எம்.செளந்தரராஜனும் வந்திருந்தார். அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியும் ஒலிப்பதிவுக்கூடத்தில் இருந்தார். நாம் பாடவிருப்பது வழக்கமான சினிமாப் பாடல் இல்லை; சிறப்பு வாய்ந்த பாடலாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. ‘நீங்கள் பாடவிருப்பது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்’ என்று கூறிய எம்.எஸ்.விஸ்வநாதன், அந்தப் பாடலின் சிறப்பம்சம் மற்றும் பாடவேண்டிய விதம் குறித்தும் எனக்கும் டி.எம்.எஸ்ஸுக்கும் விளக்கினார். நாங்கள் இருவரும் இணைந்து அந்தப் பாடலைப் பாடினோம். பாடல் ஒலிப்பதிவு முடிவதற்குச் சில மணிநேரம் ஆனது. அதுவரை அருகில் அலுவலக அறையில் இருந்தவாறு ஒலிப்பதிவுப் பணிகளைக் கலைஞர் கவனித்துக்கொண்டிருந்தார். முடிவில் அந்தப் பாடலை ஒலிபரப்பினார்கள். அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு எல்லா அரசு நிகழ்ச்சிகளும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலித்த பிறகே தொடங்கும். முக்கியமான அரசு நிகழ்ச்சிகளில் என்னையும் டி.எம்.செளந்தரராஜனையும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாட அழைப்பார்கள். சினிமாப் பாடல்களுக்கு இணையாக, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கும் பலரும் என்னை வாழ்த்தினார்கள். அதன்பிறகுதான் இந்தப் பாடலின் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது. 50 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை இந்தப் பாடல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பப்படுகிறது. இதில் நானும் சிறுபங்கு வகித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!”

- கு.ஆனந்தராஜ்