Published:Updated:

`அசோகமித்திரன்’ - ஆவணப்படம் உருவான கதை சொல்லும் இயக்குநர் அம்ஷன் குமார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அசோகமித்திரன்
அசோகமித்திரன் ( ப.சரவணகுமார் )

"செகந்திராபாத்தில் லேன்சர் பேரக்ஸ் அவருடைய இளமைக் காலம் கழிந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அசோகமித்திரன் அங்கு வருகிறார். அப்போது அவருக்கு என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்பட்டன என்பது இந்த ஆவணப்படத்தில் பதிவாகியிருக்கிறது."

தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படம் இப்போது யூடியூபில் வெளியாகியிருக்கிறது. ஆவணப்பட இயக்குநர் அம்ஷன் குமார் இயக்கத்தில், 2003-ல் வெளியாகி பரவலான கவனம் பெற்ற ‘அசோகமித்திரன்’ ஆவணப்படம், இப்போது யூடியூபில் வெளியாகி இளைய தலைமுறையினரை எட்டியிருக்கிறது.
அசோகமித்திரன்
அசோகமித்திரன்

‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக, 1995-ம் ஆண்டு அசோகமித்திரனுக்குச் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் சாகித்திய அகாடமி திட்டத்தின் ஓர் அங்கமாக, அசோகமித்திரன் பற்றிய இந்த ஆவணப்படத்தை அம்ஷன் குமார் உருவாக்கியிருக்கிறார்.

“1970-களில் என்னுடைய கல்லூரிக் காலத்திலிருந்தே எனக்கு அசோகமித்திரனைத் தெரியும். அவரைத் தொடர்ந்து வாசித்துவந்தேன். ‘வாழ்விலே ஒருமுறை’ என்ற அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு, தமிழில் எழுதப்பட்ட மற்ற கதைகளைவிட வித்தியாசமான கதைகளைக் கொண்டிருந்தது. எதையும் வலிந்து சொல்லாமல், எல்லாவற்றையும் உள்ளடக்கிச் செல்லும் கூறுகளை அவருடைய கதைகள் கொண்டிருந்தன. ‘கரைந்த நிழல்கள்’ நாவலின் பரிசோதனை வடிவம் என்னை பிரமிக்கச் செய்தது” என்று அசோகமித்திரன் பற்றியும் அவருடைய படைப்புகளுடனான தன்னுடைய அறிமுகம் பற்றியும் பேசத் தொடங்குகிறார் அம்ஷன் குமார்.

அம்ஷன் குமார் - அசோகமித்திரன்
அம்ஷன் குமார் - அசோகமித்திரன்

“‘கணையாழி’யில் உதவி ஆசிரியராக இருந்த அசோகமித்திரன் புதிய, இளம் எழுத்தாளர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திவந்தார். இப்போதுபோல் பத்திரிகையில் எழுதுவது, பிரசுரிப்பது என்பது அத்தனைச் சுலபமாக இருக்கவில்லை; சிறுபத்திரிகை என்றால் இன்னும் கடினம். இந்தப் பின்னணியில்தான் சுப்ரமண்ய ராஜு, தேவகோட்டை வா.மூர்த்தி போன்ற எழுத்தாளர்கள் எழுத வந்தனர். நானும் அப்படித்தான் எழுதத் தொடங்கினேன். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆவணப்படங்களில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது” என்கிறார் அம்ஷன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சியைப் பூர்விகமாகக் கொண்ட அம்ஷன் குமார், இதுவரை 25 ஆவணப்படங்களுக்கும் மேல் எடுத்திருக்கிறார். நோபல் விருது பெற்ற தமிழர் சி.வி.ராமன், ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர், மகாகவி சுப்ரமணிய பாரதியார், பாதல் சர்கார் போன்ற ஆளுமைகளைப் பற்றியும், தமிழ்நாட்டில் நவீனக் கலை, அலையாத்தி காடுகள் என பல்துறைகள் சார்ந்தும் அம்ஷன் ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார்.

அசோகமித்திரன் எழுதுகிறார்
அசோகமித்திரன் எழுதுகிறார்

“பாதல் சர்கார், பாரதியார் ஆகிய ஆவணப்படங்களுக்குப் பிறகு, நமக்குத் தெரிந்த, நம்முடன் வாழும் எழுத்தாளரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க விரும்பினேன். அசோகமித்திரனுடன் எனக்குப் பல ஆண்டுகள் நல்ல பழக்கம் இருந்ததால், அவரிடம் ஆவணப்படுத்துக்கான விருப்பத்தை வெளிப்படுத்தினேன். அவரும் அனுமதி கொடுத்தார். தொடர்ந்து சாகித்திய அகாடமியை அணுகியபோது, அவர்களிடமிருந்தும் ஒப்புதல் கிடைத்தது. சாகித்திய அகாடமியின் இந்தத் திட்டத்தில் ஜெயகாந்தனைப் பற்றி சா.கந்தசாமியும், இந்திரா பார்த்தசாரதியைப் பற்றி ரவி சுப்ரமணியனும் எடுத்த ஆவணப்படங்கள் வெளியாகியிருந்தன. இந்த வரிசையில் அடுத்ததாக, ‘அசோகமித்திரன்’ ஆவணப்படத்துகான பணியை நான் தொடங்கினேன்” என்று ஆவணப்படம் தொடங்கிய கதையை விவரிக்கிறார் அம்ஷன்.

நடேசன் பூங்காவில் அசோகமித்திரன்
நடேசன் பூங்காவில் அசோகமித்திரன்
Vikatan

“இந்த ஆவணப்படத்துக்காக அசோகமித்திரன் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் அவரை அழைத்துச் சென்றேன். செகந்திராபாத்தில் லேன்சர் பேரக்ஸ் அவருடைய இளமைக் காலம் கழிந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அசோகமித்திரன் அங்கு வருகிறார். அப்போது அவருக்கு என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்பட்டன என்பது இந்த ஆவணப்படத்தில் பதிவாகியிருக்கிறது. அவரோடு எனக்கிருந்த பல ஆண்டுகள் தொடர்பினால் உருவான இந்த ஆவணப்படம் எனக்கு மிகவும் திருப்திகரமாக உருவானது; அவரும் இந்த ஆவணப்பட உருவாகத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். 2003-ல் வெளியான இந்த ஆவணப்படம், பல இடங்களில் திரையிடப்பட்டிருக்கிறது. நானே பட இடங்களுக்குச் சென்று திரையிட்டிருக்கிறேன். வெளிநாடுகளுக்குச் சென்றபோதும் கூட, அங்கெல்லாம் இந்தப் படத்தைத் திரையிட்டிருக்கிறேன்” என்று இந்த ஆவணப்பட உருவாக்கத்தின் பின்னணி குறித்து அம்ஷன் பகிர்கிறார்.

லேன்சர் பேரக்ஸ் குடியிருப்பு
லேன்சர் பேரக்ஸ் குடியிருப்பு
செகந்திராபாத், லேன்சர் பேரக்ஸ் குடியிருப்பு, சென்னை நடேசன் பூங்கா என அசோகமித்திரன் வாழ்வின் முக்கிய இடங்கள் ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன; எழுத்தாளர்கள் தியடோர் பாஸ்கரன், திலீப் குமார், வாஸந்தி, பதிப்பாளர் ‘நர்மதா’ ராமலிங்கம், அசோகமித்திரன் மூத்த மகன் ரவிசங்கர் ஆகியோர் அசோகமித்திரனைப் பற்றிப் பேசியிருக்கின்றனர்.
அசோகமித்திரன் எழுத்து
அசோகமித்திரன் எழுத்து
``உண்மை புனைகதையைவிட விசித்திரமானது!'' - அசோகமித்திரன் பிறந்ததினப் பகிர்வு

“ஆவணப்படங்கள் மூலமாக ஒரு ஆளுமையைப் பற்றி கூடுதல் தகவல்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியும். எழுத்தாளர்கள், கலைஞர்கள் என நிறைய பேரை நாம் ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டோம். நமக்கு சினிமா என்றால் தியேட்டரில் பார்க்கும் சினிமா மட்டும்தான்; ஆவணப்படங்களில் நாம் கவனம் கொள்வதில்லை. ஒப்புநோக்க தமிழ்நாட்டைவிட இந்தியாவின் பிற மாநிலங்களில் ஆவணப்படங்கள் அதிகம் உருவாகியிருக்கின்றன. ஆனால், இப்போது இந்த நிலை மாறிவருகிறது. நிகழ்வுகளில் புத்தகங்களோடு, இப்போது ஆவணப்படங்களும் வெளியாகின்றன. இதுவொரு நல்ல தொடக்கம். இங்குள்ள தொலைக்காட்சி சேனல்கள் ஆவணப்படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அப்போது ஆவணப்படங்கள் தான் வெகு மக்களைச் சென்றடையும்” என்று ஆவணப்படங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார் அம்ஷன் குமார்.

நடேசன் பூங்காவில் அசோகமித்திரன்
நடேசன் பூங்காவில் அசோகமித்திரன்
“இதுவரைக்கும் 9 நாவல்கள், முந்நூற்றிச் சொச்ச சிறுகதைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். என்னுடைய எழுத்து மேல் திருப்தி இருக்கிறது. வாழ்க்கை மேல் புகார்கள் கிடையாது. உலகத் தரத்தில் என் எழுத்துகளை ஒப்பிடச் சொன்னால், நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை என்றுசொல்வேன்" என்று 2012-ம் ஆண்டு ஆனந்த விகடன் பேட்டியில் அசோகமித்திரன் தன்னை மதிப்பிட்டார்.
2017-ல் அசோகமித்திரனின் இறப்புக்குப் பிறகு, ஒரு இளம் வாசக பரப்பு அவருக்கு உருவாகியிருக்கும் சூழலில், அவர் வாழும் காலத்திலேயே உருவாக்கப்பட்ட அவரைப் பற்றிய ஆவணப்படம் இப்போது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு