Published:Updated:

மூன்று கல்யாணம், மூன்று பிரிவு, மூன்று குழந்தைகள்..! அநீதி ஆந்தாலஜி கதைகள் - 6

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

இந்தக் கதைகள் சிலருக்குப் பிடிக்கும்... சிலருக்குக் கசக்கும்... சிலருக்குக் கோபத்தை உண்டாக்கும். இவை அநீதி ஆந்தாலஜி கதைகள். அதனால் கொந்தளிப்புகள் வேண்டாம்... Just sit Back and Read... Be Cool!

விஷால்!

தனக்கான கூலியை வாங்கிக்கொண்டு சந்திரா திரும்பினாள். மதியழகன் தன்னைப் பார்ப்பது தெரிந்தாலும் பார்க்காதது போல புடவையை சரி செய்து கொண்டு மரத்தடியில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனிடம் வந்தாள். அவன் இன்னொரு பையனுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததால், சற்று நேரம் ஏதும் பேசாமல் அமர்ந்தாள். மீண்டும் மதியழகன் இருந்த திசையைப் பார்த்தாள். இப்போது அவன் அங்கு இல்லை. அவன் பெயர்கூட மதியழகன் என்று சந்திராவுக்குத் தெரியாது. இந்த இடத்தில் கட்டட வேலைக்கு சில வாரங்களாக வந்துகொண்டிருக்கிறாள். ஆரம்பத்தில் கவனிக்கவில்லை, சமீபமாகத்தான் மதியழகன் அவ்வப்போது இவளைப் பார்ப்பதைக் கண்டு கொண்டாள்.

“போலாமாடா..."

ஐந்து வயது மகன் இவள் கேட்டதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

“ஏய் தடியா, உன்னைத்தான் போலாமா?”

“போலாம்மா" எனச் சொல்லியவன் இன்னும் விளையாடிக்கொண்டே இருந்தான்.

“நான் போறேன்" எனச் சொல்லியவள் எழுந்து பின்புறத்தில் இருந்த தூசியைத் தட்டிக்கொண்டாள். நடக்க ஆரம்பித்தாள். முகம் கழுவிக்கொண்டு வந்த மதியழகன், லுங்கியை கழற்றி முகம் துடைத்துக்கொண்டு, வேட்டிக்கு மாறிக்கொண்டான்.

பொடியன் விஷால், அம்மா செல்வதைப் பார்த்து, விளையாட்டுக்கு ஒரு அவசர கமா போட்டு விட்டு அம்மாவை நோக்கி ஓடினான்.

கட்டடம் கட்டும் இடம் நெருக்கடி இல்லாத இடமாக ஊருக்கு வெளியே இருந்தது. இன்னும் சரியான சாலைகள் இல்லாமல் இருந்தது. செம்மண் சாலையில் நடந்து போய் தார்ச் சாலையைப் பிடிக்க வேண்டும். சந்திரா செம்மண் சாலையில் ஏறியதும், பொடியன் வந்து சேர்ந்து கொண்டான். அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டான். குதித்து குதித்து நடக்க ஆரம்பித்தான்.

பைக்கில் பின்னால் வந்த மதியழகன், முதன் முறையாகப் பேசினான்.

“பைக்ல ஏறிக்கிறியா... எறக்கி விடறேன்!"

பொடியன் ஆர்வம் காட்டினான்.

“தெனம் நடந்துதான் போறோம். மெயின் ரோடு போனா பஸ் வந்துடும், நீங்க போங்க!''

“பஸ் எப்பனாதான வரும்? வீடு பக்கம்னா, வீட்லயே எறக்கி வுடறேன்!''

“இல்ல வேணாம்!''

“எல்லோரையுமா கேக்கறேன். எதோ புள்ளைய வச்சிக்கிட்டு போறியேன்னு கேட்டேன்!"

சந்திரா ஒன்றும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தாள். பொடியனுக்கு ஏமாற்றமாகப் போனது. மதியழகன் பைக்கை நகர்த்திக்கொண்டு போய் மெயின் ரோட்டில் இருக்கும் டீக்கடையில் நிறுத்தினான். ஒரு டீ ஆர்டர் செய்தான். பஸ்ஸுக்குக் காத்திருந்த நேரத்தில் விஷாலுக்கு பன்னும் பாலும் வாங்கிக்கொடுத்தான்.

இப்படிக் கேட்டுக்கேட்டு அடுத்த வாரத்தில் பைக்கில் சந்திராவை ஏறவைத்துவிட்டான் மதி. "வீடுவரை வேண்டாம் மெயின் ரோடு போதும்" என்று இறங்கிக்கொண்டாள் சந்திரா.

மதியழகன் அங்கே ஆசாரி வேலை பார்க்கிறான். மதி பிறப்பால் ஆசாரி அல்ல. சிறுவயதிலேயே தந்தையை இழந்த மதி பல வேலைகள் செய்து பார்த்தான். அவனது அம்மா இவனை ஒரு ஆசாரி பட்டறையில் சேர்த்து விட, அது மதிக்கு செட் ஆனது. அந்தத் தலைமை ஆசாரி கொஞ்சம் நல்ல மாதிரி நடந்து கொண்டார். உறவுக்கார பையன் போல தங்க வைத்து வேலை சொல்லிக் கொடுத்தார். கான்ட்ராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தான் மதி. தனிக்கட்டை. கிராமத்தில் அம்மா.

பைக்கில் இருந்து இறக்கி விட்டு, “எனக்கு இன்னியோட இங்க வேலை முடிஞ்சது" என்றான்.

“நாளைக்கு வேல இருக்கா?”

“இல்ல, அடுத்த வாரம்தான். அங்க வேலை சொல்லி வுடறேன் வறியா... காசு கொஞ்சம் அதிகம் குடுப்பாங்க!''

தலையாட்டினாள் சந்திரா.

அடுத்த வாரம்வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லிச் சென்றான். ஆனால், மறுநாளே மாலை வந்து மெயின் ரோடு டீக்கடையில் காத்திருந்தான். சந்திரா இவனை எதிர்பார்த்தது போல முகத்தில் எந்த ஆச்சர்யமும் காட்டாமல் சாதாரணமாக எதிர்கொண்டாள். பொடியன் விஷால்தான் முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியைக் காட்டினான். மதியே ஆரம்பித்தான்.

“வேல ஒண்ணும் இல்ல, சும்மா பாத்துட்டுப் போலாம்னுதான்!''

டீ குடித்தார்கள்.

“கோயிலுக்குப் போலாமா?”

பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத பெருமாள் கோயிலில் பைக்கை நிறுத்தினான். கோயிலைச் சுற்றி வரும் இடத்தில் செடி கொடிகள் மண்டிக் கிடந்தன. பூக்கள் ஆங்காங்கே பூத்திருந்தாலும் அவற்றுக்குப் போட்டியாக பாம்பும் கீழே இருக்கும் சாத்தியக்கூறு தெரிந்தது. விஷால் கோயிலுக்குள் ஓடி ஆட ஆரம்பித்துவிட்டான்.

தட்டில் பத்து ரூபாய் போட்டு துளசி தீர்த்தம் வாங்கிக்கொண்டு ஓர் இடத்தில் வந்து அமர்ந்தான் மதி. சந்திரா அமராமல் நின்று கொண்டு விஷாலையும் கோயிலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள்.

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

“ஒக்காரேன்!“

அமர்ந்தாள்.

“சந்திரா, என்னைக் கட்டிக்கிறியா? நான் தனி ஆளுதான். ஊர்ல அம்மா இருக்கு!''

அவன் கேள்வியை எதிர்பார்த்த சந்திரா அவனைப் பார்த்தாள்.

“எனக்கு புள்ள இருக்கு. புருஷன் இருக்கானான்னு கூட தெரிஞ்சிக்காம எப்டி கேக்கற?”

“விசாரிச்சிட்டேன். புருஷன் இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டேன். எப்படி இறந்தாரு?”

“ஆத்துல வெள்ளம். பாலத்துக்கு இந்தப் பக்கம் குதிச்சி அந்தப் பக்கம் ஏறுவேன்னு போட்டில குதிச்சாரு. வெள்ளத்தோட வெச தெரியாம குதிச்சிட்டாரு. தண்ணி ஒரே அடியா தலைய பாலத்துல அடிச்சிருக்கும் போல, நாலு நாள் கழிச்சிதான் பொணம் கெடைச்சிது!''

“ஊறிப்போயி இருக்குமே?”

“ஆமா, முள்ளு மரத்துல சிக்கி இருந்துச்சி. தொட்டா சதை கைல ஒட்டிகிச்சின்னு சொன்னாங்க!”

“ப்ச்...“

சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள்.

“நீ எங்க தங்கி இருக்க?”

“உறவுக்காரவுங்க வீட்லதான். உள் வாடகை குடுத்துட்டு இருக்கேன்!”

“என் வீட்ல நான் மட்டும்தான். எங்கூட வந்துடறியா!''

“திடுதிப்புன்னு எப்டி வர்றது!''

“வூட்ல யார்கிட்டயாச்சும் கேக்கணுமா?”

“போய்த் தொலைஞ்சா போதும்னுதான் இருக்காங்க!''

“அப்புறம் என்னா?”

“எனக்குப் புள்ள இருக்கு. உனக்கு இப்ப வயசு ஆசைல சொல்லுவ!“

“சத்தியமா இல்ல. எத்தனை பொண்ணுங்க வேலை செய்யிது. எல்லார்கிட்டயுமா கேட்டேன்!''

பேசிப்பேசி சந்திராவை தன்னுடைய சின்ன வாடகை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான். வரும் வருடத்தில் விஷாலை பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்வதாகக் கூறி இருந்தான். விஷால் மதியை அங்கிள் என்று அழைத்துக் கொண்டு இருந்தான். மதி, இன்னும் அம்மாவிடம் சொல்லவில்லை. அக்கம்பக்கத்திலும் பெரிதாக ஏதும் சொல்லிக்கொள்ளவில்லை. எதிர் வீட்டு பாட்டி மட்டும், ஒரு தாலியைக் கட்டி வச்சிக்கோ, ஒருத்தியும் நாக்கு மேல பல்லு போட்டு பேசமாட்டா என்று சொல்லியிருந்தார்.

தான் வேலைக்குப் போகையில் தனக்கு உதவியாக சந்திராவை வைத்துக்கொண்டான். இந்தத் தொழிலில் பெரும்பாலும் யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள். எனினும், மதி அதை மிகச் சாதாரணமாகச் செய்தான். சந்திராவும் அடிப்படையான சில வேலைகளைக் கற்றுக்கொண்டாள். அவளுக்கான சம்பளத்தை தினமும் அவளிடம் கொடுத்து வந்தான்.

வழக்கமாக சந்திரா, விஷாலுடன் படுத்துக்கொள்வாள். சில இரவுகளில் அவள் அருகில் நகர்ந்து கைகளால் தீண்டிப் பார்த்து இருக்கிறான் மதியழகன். அப்போதெல்லாம், "கொழந்தை முழிச்சிப்பான்" என்றே பதற்றத்துடன் சொல்வாள் சந்திரா. பகல் நேரங்களில் வேலை இல்லாதபோது விஷால் வெளியில் விளையாடப் போகும்போது, நெருங்கி இருக்கிறான். "விஷால் வந்துடப் போறான்" என்று கூறி விலகி விடுவாள்.

மதியழகனுக்கு எரிச்சல் வரவில்லை. மாறாக பாவமாக இருந்தது.

“பயமா இருக்குய்யா..!"

அவள் இப்படிச் சொல்லிய மறுநாள் வீட்டில் இருக்கும் சாமிப் படம் முன்பு தாலி கட்டினான். மஞ்சள் கயிறுதான். அதன் பிறகான சில நாட்களில் மதியழகன் அசந்து தூங்குகையில் சந்திராவின் கைகள் இரவில் நீண்டபோது, “குழந்தை எழுந்துக்கப்போறான்" என்று மதி சொல்லிச் சிரித்தான்.

———————————————

அனீஷா!

மருத்துவமனையை விட்டு கிளம்பும்போது நவீனின் அழைப்பைப் பார்த்தாள் மோகனப்ரியா. காரில் ஏறி எடுத்துக்கொள்ளலாம் என சைலன்ட்டில் போட்டாள். கார் ஏறுவதற்குள் இன்னும் இரண்டு முறை தொடர்ந்து அழைப்பான் என்று தெரியும். காரில் ஏறி முக்கிய சாலையை அடைந்ததும், நவீனை அழைத்தாள்.

எடுத்தவுடனே கடுப்படித்தான்.

மொபைலை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அமைதியாக கார் ஓட்டிக்கொண்டிருந்தாள். “கேட்டுட்டே இருக்கேன், பதில் சொல்ல மாட்டியா?”

“.....................”

“ஹலோ… நான் கத்தறது கேக்குதா இல்லையா?''

“ம்ம்”

“என்னா ம்ம்...”

“.....”

“சொல்லுடீ“

“ஹலோ , ஹாஸ்பிடல்ல டியூட்டி முடிஞ்சி காரை ரிவர்ஸ் எடுத்துட்டு இருக்கும்போது மொபைலை எடுக்க முடியுமா? மோதிட மாட்டேன்!”

மோகனப்ரியாவுக்கு விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பெண் குழந்தை. பிஸியோதெரப்பிஸ்ட். சொந்த ஃப்ளாட் இருக்கிறது. பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கும் பெண். முதல் கணவனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், இனி ஆம்பளைங்க சங்காத்தமே வேண்டாம் என்று எரிச்சலுடன் இருந்த மோகனாவின் மனதை அசைத்து உள் நுழைந்தவன் நவீன்.

விவாகரத்தான அல்லது விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் பெரும்பாலான உயர் நடுத்தர பெண்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் செய்தாள் மோகனா. டிரெக்கிங் குழுவோடு சேர்ந்து டிரெக்கிங் போனாள். உலகத் திரைப்பட இயக்க நபர்களோடு சேர்ந்து கிம் கி-டுக் படங்களின் வெறியள் ஆனாள். பத்து லட்சம் காலடி இயக்கத்தின் ஃபெனடிக் ஆனாள். பாலே நடனம் கற்றுக்கொள்ள வகுப்பில் சேர்ந்தாள். ஓர் இலக்கிய கோஷ்டி சந்திப்புக்குப் போய், வாசிக்கும் ஆர்வத்தில் உந்தப்பட்டாள். அடுத்த மாதத்திலேயே இலக்கிய ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் இலக்கிய மேடையில் “கு.ப.ரா விடம் இல்லாத ஒரு விஷயம்" என்று ஆரம்பித்து விரிவுரை ஆற்றி கைதட்டல் வாங்கினாள். யதேச்சையாக நடந்ததா, திட்டமிட்டு செய்தானா என்று தெரியவில்லை. டிரெக்கிங், இலக்கியம் என எங்கும் நவீனின் தலை மோகனாவுக்குத் தென்பட்டது. இயல்பாகப் பேச ஆரம்பித்து நெருங்கினான். நவீனும் டிவோர்ஸி என்பதால் இவர்களின் பந்தம் இறுக்கமானது. இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பொண்டாட்டி கொடுமைகளையும், புருஷனின் அக்கிரமங்களையும் அழுது புரண்டு சொல்லிச் சொல்லி மன ஆறுதல் அடைந்துகொண்டார்கள்.

பிறகு ஒருநாள் பொறுமையாக ஐ லவ் யூ சொல்லிக்கொண்டபோது, "கட்டிக்கலாமா" என்று கேட்டான் நவீன். அதிகபட்ச காதலை காட்டும் ஒரே வழி ஆண்களுக்கு இதுதான் என்ற கோட்பாட்டுக்கு நவீனும் விதிவிலக்கு அல்ல. காரணமற்ற பயமுறுத்தும் கனவுகள் அன்றைய இரவில் வந்ததாக இருவரும் சொல்லிக்கொண்டனர்.

அன்றைய காலைப் பொழுதில் காபி போட்டுக் கொடுத்துவிட்டு, பெண்கள் அதிகபட்ச காதலை வெளிப்படுத்த உதவுவதாக நம்பப்படும் “குடிடா புருஷா!" என்ற வார்த்தைகளை உதிர்த்தாள்.

குழந்தை அனிஷாவுக்கு தன் அப்பா அம்மா பிரிவு பெரிதாக இன்னும் மண்டையில் ஏறி இருக்கவில்லை. மோகனா டிரெக்கிங் அல்லது இலக்கிய விழாக்களுக்குச் செல்கையில் எல்லாம் மோகனாவின் அம்மாதான் கடுகடுத்துக்கொண்டே குழந்தையை பார்த்துக்கொள்வது வழக்கம். மோகனா எப்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்தாளோ அப்போதிலிருந்து அம்மா அதிகமாக கடுகடுக்க ஆரம்பித்து விட்டாள். அதன் பிறகு அம்மா இயல்பாக இருந்து பார்த்ததேயில்லை மோகனா. ''என்னா வேணா பண்ணிக்கோ, குழந்தையை ஒழுங்கா பாத்துக்கோ'' என்பதுவே மோகனாவின் ஒன் லைன் அஜெண்டாவாக இருந்தது.

நவீனுடன் டிரிப் செல்வது, தாமத இரவு கூட்டங்களில் பங்கு பெறுவது எல்லாம் மோகனாவுக்கு புதிதாக உருவான பழக்கமாக இருந்தது. நவீனின் நண்பர்கள் வட்டத்திலும் நவீன் செல்வாக்குப் பெற்று ஜாலியான ஆளாக வலம் வந்து கொண்டிருந்தான். நவீனின் நண்பர்கள், மோகனாவை “வெரி லக்கி'' என்று சொல்லும்போதெல்லாம் மோகனாவுக்கு உண்மையிலேயே பெருமையாக இருந்தது.

“உனக்கு டிவோர்ஸ் ஆகி பேப்பர் கைக்கு வர நாளாகும்... அதனால இப்பவே ஒண்ணா சேர்ந்து இருக்கலாமா?” என நவீன் கேட்டது, மோகனாவுக்குப் பிடித்திருந்தது. ஆனால், எப்படி அம்மாவிடம் ஓப்பன் செய்வது என்ற அச்சத்தை நவீனிடம் பகிர்ந்து கொண்டாள்.

“நான் வந்து பேசட்டுமா?” என்று நவீன் கேட்டதற்கு “வேண்டாம்” என்று பயத்துடன் மறுத்தாள். முதலுக்கே மோசம் ஆகி நவீன் மொத்தமாகப் பிரிந்து போய்விடப்போகிறான் என்ற பயம்தான் காரணம்.

தனியாக இருக்கையில் அம்மாவிடம் இதைப்பற்றி பேச ஆரம்பித்து பெரிய சண்டையில் முடிந்து அன்றே அம்மா கோபித்துக்கொண்டு கிளம்பி விட்டாள். போகும்போது “நீ உருப்பட மாட்டடீ... என் வயித்துல எப்படி வந்து பொறந்தியோ!'' என்று திட்டி விட்டுப் போனதைத்தான் மோகனாவால் தாங்க முடியவில்லை.

அன்று மாலையே நவீனை தன்னுடைய ஃபிளாட்டுக்கு வரச் சொன்னாள். நவீன் சிம்பிளாக வருவான் என்று எதிர்பார்த்திருந்த மோகனாவுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக மூட்டை முடிச்சிகளுடன் வந்து சேர்ந்தான் நவீன். அவற்றை ஏறகட்டி வைப்பதற்கே சில மணி நேரங்கள் ஆனது.

அன்றிரவு அனீஷா தூங்க அதிக நேரம் எடுத்தது. அன்று இரவு அனீஷா தூங்குவதற்குள் நவீன் தூங்கி விட்டான். காலையில் கடுகடு என்று இருந்தான். அதை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை எனினும் தெரிந்தது.

அனீஷாவை பள்ளியில் கொண்டுவிடும் வேலையை அவனே ஏற்றுக்கொண்டான். அனீஷா அவனை 'அங்கிள்' என்று அழைத்ததை அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அனீஷா அவனை 'அங்கிள்' என்று எப்போதாவது அழைக்கும்போதெல்லாம் மோகனாதான், “டாடின்னு கூப்புடுன்னு சொல்லிட்டே இருக்கேன்ல? அதென்ன பிடிவாதம்" என்று கடிந்து கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் ரொம்பவும் விலகியிருந்த அனீஷாவை கொஞ்சம் நெருங்கியிருந்தான் நவீன்.

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

ஒருநாள் இரவு உணவு முடிந்து மோகனா அடுப்படியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது நவீன் அனீஷாவின் முதுகில் அடிப்பதைப் பார்த்தாள்.

அடுப்படியில் இருந்து வெளியே ஓடிவந்த மோகனா, “என்னா நவீன் புள்ளைய அடிக்கிற?” என்று பதறியபோது, “எம்புள்ளைய நான் அடிக்கிறேன்.... உனக்கென்ன?” என்று பதில் வந்ததும், பதற்றம் நீங்கி அவன் மேல் காதல் அதிகம் ஆனது. தொடர்ந்த நாட்களில் அனீஷாவுக்கு அடிகள் விழுவது அதிகம் ஆனது. ஏன் என்று விசாரிக்கும்போதெல்லாம் சரியான விளக்கங்கள் கொடுத்தான்.

“அடின்னா வலிக்கிற மாதிரியா அடிக்கிறேன்? அது ஒரு ஷேப் பண்றதுக்குதான்!“ என்பான்.

“நீங்க ரெண்டு பேருமே அவளை ஒழுங்கா வளர்க்கலை. அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையாது'' என்பான்.

ஒழுங்கா படிக்கலை, தரையில் கிடப்பதை எடுத்து சாப்புடறா, அதிகமா மொபைல் கேம் ஆட்றா, சீக்கிரம் தூங்க மாட்றா என காரணங்களை அடுக்கிக்கொண்டு போனான்.

எப்போது கேட்டாலும், “இது எனக்கும் எம்பொண்ணுக்கும் உள்ள பிரச்னை. நடுவுல நீ வராதே” என்றான். அடுத்தடுத்த நாட்களில் குழந்தைகயை தனி அறையில் படுக்க வைக்க வேண்டும் என்றான். சில வெளிநாட்டு ஆய்வுகளைக் காட்டி நிறுவினான். அழுது புரண்டு அடம் பிடித்த அனீஷா அடி வாங்கிக்கொண்டு தனியறைக்கு நகர்த்தப்பட்டாள்.

அனீஷாவே எல்லாம் செய்து கொள்ளும்படி பழக்கப்படுத்துகிறேன் என்று ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பித்தான் நவீன். பயிற்சி தொடர்ந்ததன் காரணமாக அனீஷா கூடியவரையில் எல்லாவற்றையும் “தானாகவே” செய்ய ஆரம்பித்து இருந்தாள். அவ்வப்போது விழும் அடியும் அவளுக்கு கொஞ்சம் பயத்தை உருவாக்கியிருந்தது. ஆனால் சில நொடிகளிலேயே அவளைக் கொஞ்சி குழப்பி விடுவான். ஆனாலும் அடியின் வலி மனதில் பதிந்து விட்டது. வீட்டில் ஒரு லேண்ட் லைன் போன் இருந்தது. எந்தப் பிரச்னை எப்போது என்றாலும் அனீஷாவை போன் செய்ய வேண்டும் என்று பழக்கி வைத்திருந்தான் நவீன்.

இரவுகளில் வீட்டை விட்டு வெளியே நவீனுடன் போகையில், மோகனா பதற்றப்பட்டால், “அதான் பிரச்னைன்னா அவ போன் பண்ணுவா இல்ல? ஷீ இஸ் எ ஸ்மார்ட் கேர்ள்!'' என்று அடக்கி விடுவான். ஒரு வார இறுதியில் பாண்டிச்சேரி செல்வதாக திட்டம். அனீஷாவிடம் பேசி, வீட்டில் தனியாக இருப்பதற்கு ஒத்துக்கொள்ளச் செய்தான் நவீன். மோகனா முன்பு, “நான் தைரியமா இருப்பேன்'' என்று சிரித்தபடியே சொன்னாள் அனீஷா.

ஃப்ரிட்ஜில் ஐஸ் கீரீம், சாக்லெட்டுகள், ஸ்டாக் செய்யப்பட்டு இருந்தன. புளி சாதம், தயிர் சாதம் கிண்டி வைக்கப்பட்டு இருந்தது. வாழைப்பழங்கள், பிஸ்கெட்டுகள், சிப்ஸ் பாக்கெட்டுகள் இருந்தன. புது மொபைல் வாங்கி ப்ரீமியம் விடியோ கேம் டவுன் லோட் செய்து கொடுத்திருந்தான். டிவியில் அமேஸான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் எல்லாம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு தயாராக இருந்தது.

மோகனா பாண்டி செல்ல ஒப்புக்கொண்டாலும், பதற்றத்துடனேயே இருந்தாள். காரில் செல்லும் வழியெங்கும் மோகனாவுக்கு முகமே சரியில்லை. ரெஸார்ட், பீச் என எங்குபோனாலும் மோகனா நிம்மதியிழந்திருந்தாள். நவீன், மொபைலை எடுத்து வந்து மோகனாவிடம் கொடுத்தான். அதில் விடியோ காலில் அனீஷா இருந்தாள். மோகனா ஜாலியாகப் பேசி முடித்ததும், “இப்ப நிம்மதியா... இப்படி தனியா இருக்கப் பழக்கப்படுத்தணும்" என்றான். அதன் பிறகு மகிழ்ச்சியோடு அந்த வார இறுதி கழிந்தது. ஞாயிறு இரவு வீட்டுக்கு வந்து பார்த்ததும் அனீஷாவுக்குக் காய்ச்சல் அடித்துக்கொண்டு இருந்தது. குற்றவுணர்ச்சியில் துடித்த மோகனா முதன்முறையாக வெளிப்படையாக சண்டை போட்டாள்.

“இதுவரைக்கும் அனீஷாவுக்கு ஜுரமே வந்ததில்லையா... நான்தான் வர வச்சேனா?”

“ஃப்ரிட்ஜ் ஃபுல்லா ஐஸ்கிரீம். தயிர் சாதம், புள்ள தனியா இருந்து அளவு தெரியாம சாப்டு இருப்பா. இது உன்னால இல்லையா?”

“நீயும்தானே வந்த?”

“ஆமா, நான் வந்தது தப்புதான். என் புத்திய செருப்பால அடிக்கணும். பாவம் புள்ள ஜுரம் அடிச்சிக்கிட்டு தனியா கெடந்திருக்கு!''

“ஜுரம்னா போன் அடிச்சி இருக்கலாம் இல்ல? அதான் மொபைல் இருக்கே. எவ்ளோ சொல்லிக்கொடுத்தாலும் ஏறலைன்னா நான் என்ன பண்றது?''

“அது குழந்தை. அது என்ன ரோபோவா? பாவம் எவ்ளோ துடிச்சி போயிருக்கும்!''

“ஆமாடி, இங்க வந்த நாள்ல இருந்து எனக்கும் நிம்மதி இல்ல. நானும் துடிச்சிட்டுதான் இருக்கேன். பர்சனல் டைமே இல்லை. எல்லா நேரத்தையும் அனிஷாவே எடுத்துக்குறா... ஐ ஹேவ் டு பை எவ்ரி மினிட் ஃப்ரம் ஹெர்!”

நவீன் இப்படிக் கத்தியதும், மோகனா அதிர்ந்து விட்டாள்.

“கெட் அவுட் அண்ட் கெட் லாஸ்ட்!''

“ஏய்...”

“கெட்ட வார்த்தைல திட்டிடுவேன். மரியாதையா வெளில போயிடு!''

“சீ ஐ ஆம் ஹர் டாடி டூ… பட் அண்டர்ஸ்டேண்ட் மை ஃபீலிங்ஸ்…”

“யூ ஆர் நாட் எ ஃபாதர். யூ ஆர் நாட் ஈவன் அங்கிள். யூ ஆர் ஈவில் டு ஹர்!''

“இது எனக்கு வேணும்டீ… உனக்கு உண்மையா இருந்தேன் பாரு!”

“வெளில போடா!''

———————————

நிகில்!

நிகில் கார்டனில் நாயுடன் பந்து விளையாடிக்கொண்டிருந்தான். வீட்டினுள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தனர். குடும்பத்தினர் என்றால் இரண்டு குடும்பத்தினர்கள். சுப்ரியாவின் குடும்பத்தினர், அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தவர்கள் ராகேஷின் குடும்பத்தினர். குழந்தை நிகிலை கவனிப்பதற்கு பானு கார்டனில் நின்றுகொண்டிருந்தாள்.

சுப்ரியாவின் அம்மாவும் ராகேஷின் அம்மாவும் தூரத்து தோழிகள். சுப்ரியாவின் அம்மா மூலம் தகவல் பெற்று, ராகேஷின் அம்மா பேச்சை ஆரம்பித்து பின் சுப்ரியாவிடம் பேசி இப்போது கேஷுவலாக விருந்தினர்கள் போல வந்திருக்கிறார்கள்.

சுப்ரியாவின் காதல் கல்யாணம் இப்போது விவாகரத்தாகிவிட்டது. சுப்ரியாவும், ஆதியும் பரஸ்பரம் பேசிக்கொண்டு சண்டையில்லாமல் பிரிய முடிவெடுத்துப் பிரிந்தனர். சுப்ரியாவின் அம்மாவுக்கு இது கொஞ்சம் மகிழ்ச்சியைக் கொடுத்ததோடு, விட்டதைப் பிடிக்கும் நோக்கில் ராகேஷ் குடும்பத்தினரை வரவழைத்து இருந்தார்.

“ரியலி ப்ரவுட் ஆஃப் சுப்ரியா. தனியா ஒரு குழந்தையை இந்த அளவுக்கு வளர்க்கிறது ரொம்பவே கிரேட்“

“நிகில் என் வாழ்க்கையில் வருவது எனக்கு சுப்ரியா வருவதை விட மகிழ்வளிக்கிறது'' என்பதை ஆங்கிலத்தில் சொன்னான் ராகேஷ்.

எல்லோரும் மேம்போக்காகப் பேசிக்கொண்டாலும் சுப்ரியா - ராகேஷ் திருமணத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் பேச்சில் அதிகம் அடிபட்டுக்கொண்டிருந்தது நாயுடன் விளையாடிக்கொண்டிருந்த நிகில்தான். நிகிலுக்காகத்தான் எல்லாமே நடப்பதுபோல் இருந்தது அவர்களின் பேச்சு.

ஆதியை விட ராகேஷ் டீஸன்ட்டாக இருப்பதாகப்பட்டது சுப்ரியாவுக்கு. சுப்ரியா பிறவிப் பணக்காரி. ஆதி பிறவிப்பயன் பணக்காரன். சுப்ரியா அளவுக்கு செல்வநாகரீகம் கடைபிடிக்கத் தெரியாது. ஆனால், பிரிவிற்கு அதுவல்ல பிரதான காரணம். ராகேஷுடன் சுலபமாக வாழலாம், எங்கும் தைரியமாகப் போகலாம், கௌரவமாக இருக்கும் என்று சுப்ரியாவுக்குத் தோன்றியது போல அவளுடைய உடல் மொழி இருந்தது.

மொத்த குடும்பத்தினரும் ஒரு ரெஸ்டாரன்ட் செல்லலாம் என முடிவெடுத்தனர். மொத்தம் நான்கு கார்களில் கிளம்பினார்கள். நிகில் செல்லும் காரில் சுப்ரியா, நிகில் மற்றும் நிகிலைப் பார்த்துக்கொள்ளும் இரண்டு நானி!

ரெஸ்ட்டாரன்ட்டில் நிகில் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க, சுப்ரியாவின் அடுத்த திருமணத் தேதி முடிவானது. நிகில் மற்றும் இரண்டு நானிக்களுடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று வந்தாள் சுப்ரியா.

சுப்ரியா - ராகேஷ் தேனிலவு புகைப்படங்கள் எல்லாவற்றிலும் நிகில் இருப்பது போல பார்த்துக்கொண்டாள் சுப்ரியா. நிகில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ராகேஷ் புகைப்படம் எடுக்க முற்பட்டால், நிகில் எழுந்திருக்கட்டும் என்று சொல்லி மறுத்து விடுவாள்.

“திருமண போட்டோ எல்லாவற்றிலும் நிகில் இருந்தது ஓக்கேதான்… ஹனிமூன் போட்டோல கூடவா?” என்று ராகேஷ் கேட்டதற்கு…

“நிகில்தான் எல்லாம்னு சொன்ன? அதுக்குள்ள?''

“யேய் சாரி... சும்மா அவனை டிஸ்டர்ப் பண்ணனுமான்னுதான்…”

கொஞ்ச நேரம் கோபமாக இருந்தாள்.

தேனிலவு பெரிதாக எந்தப் பிரச்சனையும் இன்றி முடிந்து ஊர் வந்து சேர்ந்ததும் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆதி நிகிலை வந்து பார்த்து அழைத்துச் செல்லும் நாள் வந்தது. அதை முன்தினம்தான் ராகேஷிடம் சொல்லி வைத்திருந்தாள்.

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

ராகேஷ், ஆதியை நாகரீகமாக வரவேற்றான். ஆதி ராகேஷுக்கு வாழ்த்துகள் சொன்னான். எப்படி இருக்கிறாய் என்று சுப்ரியாவிடம் மரியாதையாகக் கேட்டான். நிகில் தூங்கி எழுந்ததும் அப்பா குரல் கேட்டு ஓடி வந்து கட்டிக்கொண்டான்.

நிகிலை அழைத்துச் செல்வதற்கு முன், பெரிய பட்டியலை கொடுத்தாள் சுப்ரியா. நிகிலுக்கு என்னென்ன நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று அதில் இருந்தது. வாயாலும் அவற்றை விளக்கினாள். ராகேஷும் அவ்வப்போது விளக்குவதில் உதவி செய்தான். அப்போது ராகேஷை பெருமையாகப் பார்த்தாள் சுப்ரியா.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிகில் தூங்கிக்கொண்டு இருக்கும்போது கொண்டு வந்துவிட்டான் ஆதி. ராகேஷ்தான் தூக்கிக்கொண்டுபோய் படுக்கையில் படுக்கவைத்தான். நன்றி கூறி விடைபெற்று ஆதி சென்றதும், ராகேஷ் சுப்ரியாவிடம் கேட்டான்…

“நாம் எப்ப ட்ரை பண்ணலாம்?”

“என்னது?”

“இல்ல நமக்கு ஒரு குட்டி பாப்பா!“

“அதான் நிகில் இருக்கானே!“

“இருக்கான்… நமக்கு ஒரு குட்டி!”

“அப்ப நிகில் நம்ம குட்டி இல்லையா?”

“சே சே… நிகில்தான் முதல் குழந்தை, இன்னொண்ணு…”

“அதுக்கு இப்ப அவ்ளோ அவசரமா... யோசிச்சி பண்ணலாம்!”

நிகிலுக்கு எல்லாம் நேரத்துக்கு அட்டவணைப்படி நடந்தது. சரியாக இரவு 8 மணிக்கு நானி தூங்க தூக்கிக்கொண்டு சென்று விடுவாள்.

அடுத்த மாதம் ஆதி நிகிலை அழைத்துக் கொண்டு போகும் நாள் வந்தது. அதேபோல ஆதி வந்தான். இந்த முறை பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு விட்டு கிளம்பும்படி ராகேஷ் கேட்டுக்கொண்டான்.

நிகில் எழுந்திருக்கும் நேரத்திற்கு முன்பு இருவரும் கார்டனில் தம் அடிக்கப் போனார்கள். அப்போது ராகேஷ்,

“ஒன் ஃபேவர், இஃப் யூ டோன்ட் மைண்ட்!“

“யெஸ் ப்ளீஸ்“

“நிகிலுக்கு 10 நாள் ஸ்கூல் ஹாலிடேதான்... நீங்க பத்து நாள் வச்சிக்க முடியுமா?”

“காலம் ஃபுல்லா வச்சிப்பேன். கோர்ட்ல கூட கேட்டேனே. சுப்ரியா அலவ் பண்ணல. அப்புறம் குழந்தை அம்மா கூட இருக்குறதுதான் பெட்டர்னு விட்டுட்டேன்!''

“இல்ல, இப்ப ஒரு டென் டேஸ், ப்ளீஸ்!''

“எனக்கு டபுள் ஓகே, ஆனா கோர்ட் உத்தரவு அது இதுன்னு சுப்ரியா கொஞ்சம் பிராப்ளம் பண்ணுவாளே!”

“இல்ல இப்ப சொல்லாதீங்க. கூட்டிட்டுப் போயிடுங்க. அப்புறமா சொல்லுங்க. நான் இங்க இருந்து அதுக்கு ஏத்த மாதிரி சப்போர்ட் பண்றேன்!“

“ஷ்யூர். நிகில் உங்களுக்கு ரொம்ப டிஸ்டர்பிங்கா இருக்கானா?”

“நாட் அட் ஆல். ஹீ ஈஸ் ஸோ ஸ்மார்ட். சுப்ரியாதான் நிகிலை மைண்ட் ஃபுல்லா ஆக்குப்பை பண்ணிக்கிறா. அதான் கொஞ்சம் ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு!''

“ஓக்கே டோன்ட் வொர்ரி... நான் மண்டே அன்னிக்கி பேசி எக்ஸ்டென்ஷன் கேக்கறேன். பட் அவ ஒத்துக்கலைன்னா...”

“இல்ல நான் வேற ஏற்பாடு பண்றேன். டோன்ட் வொரி!''

“ஓகே''

“தேங்க்யூ!''

“எனி டைம்!''

நிகிலை காரில் ஏற்றிக்கொண்டு, கார் ஓட்டியபடியே பேச ஆரம்பித்தான் ஆதி.

“நிகில் அப்பா கூட 10 டேஸ் இருக்கப் போற டா!''

“ஹை ஜாலி டாடி...''

நிகிலுக்குப் பிடித்த பாட்டை சத்தமாகப் போட்டான் ஆதி. நிகில் சீட்டில் அமர்ந்து கொண்டே ஆடினான்.

ராகேஷ், ஒரு வாரத்திற்கு வெளிநாடு டூர் திட்டம் போட்டுக்கொண்டிருந்தான்.

“தம்பி நிகில் இருந்ததால ஓடிகிட்டு இருந்துச்சு இவ்ளோ நாள். தனியா பத்து நாள் உன்னால தாக்குப்பிடிக்க முடியாது ராசா. நிகிலை திரும்ப கொண்டாந்து விடும்போது நீ பிச்சிட்டுப் போயிருப்ப..." என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ஆதி. அவன் சொன்னது காரில் சத்தமாக ஓடிக்கொண்டிருந்த பாட்டின் இசையில் கரைந்து தொலைந்தது.

———————

அடுத்த கட்டுரைக்கு