Published:Updated:

``எதார்த்த நகைச்சுவையை வரமாகப் பெற்ற எழுத்தாளன்!'' - `கடுகு' அகஸ்தியன் நினைவுகள்

`கடுகு' அகஸ்தியன்
`கடுகு' அகஸ்தியன் ( Photo: Vikatan / Ashok kumar )

தமிழின் முதுபெரும் எழுத்தாளர் கடுகு அகஸ்தியன் தனது 88 வது வயதில் மறைந்தார்.

மத்திய தர வர்க்கத்தினரின் வாழ்வை நகைச்சுவையோடு சித்திரிப்பதில் கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன், ஆர்.கே. நாராயண் எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரிசையில் தனித்துவமிக்க படைப்புகளால் தனக்கென ஓர் இடம் பிடித்தவர் 'கடுகு' அகஸ்தியன் என்கிற பி.எஸ்.ரங்கநாதன். எதார்த்த நகைச்சுவை இழையோடும் தனி பாணியில் கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் எனத் தனது படைப்புகளினால் ஏராளமான வாசகர்களைப் பெற்றவர். செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்த காலத்திலேயே எழுத்து, நாடகம் எனக் கலைத்துறையில் ஆர்வம் செலுத்தியுள்ளார் 'கடுகு' அகஸ்தியன். பின்னாளில் தன் சக பள்ளி தோழர்கள் 'சித்ராலயா' கோபு மற்றும் இயக்குநர் ஸ்ரீதருடன் இணைந்து மேடைகளில் நகைச்சுவை நாடகங்களில் நடித்தார். நாடக நடிகராக, நாடக கதையாசிரியராக தன்னை மெருகேற்றிக் கொண்டார். அந்தக் காலகட்டத்தில் கல்கி, ராஜாஜி போன்றோரின் அறிமுகம் இவர் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

`கடுகு' அகஸ்தியன்
`கடுகு' அகஸ்தியன்

நலிந்தோர் வாழ்க்கையை நகைச்சுவை கலந்து தன் படைப்புகளில் பதிவு செய்த கடுகின் திறமையை முதலில் அங்கீகரித்தவர் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி. கடுகின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்ட கல்கி, 1952-ல் தனது இதழில் 'பொன் விளையும் பூமி' என்ற கட்டுரையை வெளியிட்டு ஆதரவளித்தார். அதைத் தொடர்ந்து பல கட்டுரைகளையும் துணுக்குகளையும் கல்கியில் எழுதினார். எழுத்துப் பணியைத் தாண்டி நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் நடித்தும் தன் திறமையை வெளிப்படுத்தினார். இவர் சோ, கே.பாலசந்தர் உள்ளிட்ட பல இயக்குநர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். வார இதழ்களுக்கு துணுக்கு கட்டுரைகள் எழுதுவதில் அகஸ்தியன் கைதேர்ந்தவர். பணி நிமித்தமாகச் சென்னையில் இருந்து டெல்லிக்குச் சென்றவர், டெல்லியில் இருந்துகொண்டே எழுத்துப் பணிகளை மேற்கொண்டார். குமுதத்தில் அகஸ்தியன் எழுதிய 'அரே டெல்லிவாலா' என்ற துணுக்கு கட்டுரை வாசகர் வட்டாரத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கடுகு அகஸ்தியனை மென்மேலும் பிரபலப்படுத்தியவர் எழுத்தாளர் சாவி. தினமணி கதிரில் 'அகஸ்தியன்' என்ற புனைபெயரில் 'பஞ்சு கதைகள்' என்ற தலைப்பில் நகைச்சுவை கட்டுரைகளை எழுதினார்.

'சுஜாதாவையும், சங்கீத விமர்சகர் சுப்புடு'வையும் அடுத்து டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்திய எழுத்தாளர்களில் கடுகு அகஸ்தியனும் ஒருவர். இவர் நாலைந்து வரிகளில் துணுக்குகளாக எழுதிய 'கடுகு செய்திகள்'தான் நாளடைவில் இவரின் நிரந்தர புனைபெயராக மாறியது. கடுகின் 'கேரக்டர்' கட்டுரைகளுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் எழுதிய 'கமலா', 'தொச்சு' என்ற சீரிஸ் கதைகள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. விகடனோடும் நெடுங்காலம் தொடர்பில் இருந்து பல படைப்புகளை வழங்கியிருக்கிறார்.

கல்கி இதழில் வெளியான கடுகின் துணுக்கு
கல்கி இதழில் வெளியான கடுகின் துணுக்கு

எழுத்தாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட கடுகு அகஸ்தியன் அதைத் தாண்டி பல துறைகளில் தனது பெயரை பதித்துள்ளார். குறிப்பாக 'எழுத்துருக்கள்' உருவாக்குவதில் கடுகுக்கு தனி பிரியம். இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் 'அழகி' மென்பொருளில் பயன்படுத்தப்படும் எழுத்துரு கடுகு உருவாக்கியதுதான். இவரது சாதனைகளைப் பாராட்டி எழுத்தாளர் தேவனின் அறக்கட்டளை சார்பில் 'தேவன் விருது' இவருக்கு வழங்கப்பட்டது.

எழுத்தாளர் கடுகு அகஸ்தியன் அவர்களின் மறைவு குறித்த எழுத்தாளர்களின் பதிவுகள்:

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்

"எழுத்தாளர் 'கடுகு' அகஸ்தியன், தமிழ் எழுத்துலகில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் எழுத்தாளர். தனக்கென தனிப் பாணி அமைத்து எழுத்துலகை ஆட்டிப்படைத்தவர். கல்கி, தேவன் அவர்கள் வரிசையில் ஒரு நல்ல எழுத்தாளர். நகைச்சுவையைத் திறம்பட கையாளத் தெரிந்த கலைஞன். நேரில் அவரைப் பார்த்தது இல்லையென்றாலும் அவரின் பல படைப்புகள் எனக்குள் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. நடுத்தர மக்களின் வாழ்க்கையைச் சித்திரித்து படிப்பவர் மனதில் தாக்கத்தை உண்டாக்கும் அளவுக்கு எழுத்துகளைக் கையாளத் தெரிந்தவர். டெல்லியில் இருந்துகொண்டே தமிழகத்தைக் கலக்கியவர்.

'கடுகு' என்ற புனைபெயருக்கு ஏற்றாற்போல நகைச்சுவையாக இருந்தாலும், விமர்சனமாக இருந்தாலும் தன்னுடைய படைப்புகளில் எழுத்துகளை வெடிக்கச் செய்பவர். கடுகின் துணுக்கு கட்டுரைகளுக்குத் தனிப்பட்ட முறையில் நான் ரசிகன். வயது மூப்பின் காரணமாக வெளிநாட்டில் தன் மகளுடன் வசித்து வந்த எழுத்தாளர் கடுகு, நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் மறைந்தார் என்ற தகவல் இன்று காலைதான் எனக்குத் தெரிந்தது. அவரின் இழப்பு எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவர் மறைந்தாலும் அவரது தனித்துவமிக்க படைப்புகள் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் துளியும் ஐயமில்லை."

கடுகு அகஸ்தியனின் நூல்
கடுகு அகஸ்தியனின் நூல்

எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்

"சமையலுக்குக் கடுகு என்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு எழுத்தாளர் 'கடுகு' அவர்கள் இந்த எழுத்துத்துறைக்கு முக்கியம். எழுத்தாளர்கள் பலருக்கும் கடினமான ஒரு பகுதி என்றால் அது நகைச்சுவைதான். நகைச்சுவை சார்ந்து எழுதுவது அவ்வளவு கடினமான ஒன்று. ஆனால், அதைத் திறம்பட கையாளத் தெரிந்த மிகக் குறைவான எழுத்தாளர்களுள் 'கடுகு' அகஸ்தியன் தவிர்க்க முடியாதவர். தோற்றத்தில் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களைப் போலவே இருப்பார். அவருடைய ஒரு நூல் அறிமுகக் கூட்டத்தில்தான் அவரை முதல் முறையாகச் சந்தித்தேன். அதுவே கடைசி முறையாகவும் அமைந்தது. அவருடன் நான் செலவழித்த நிமிடங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள்.

என்னுடைய பெரியப்பாவின் நெருங்கிய நண்பர் எழுத்தாளர் கடுகு. நாவல்கள், கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் எனப் பல பரிமாணங்களில் தனது எழுத்தை வரலாற்றில் பதிவு செய்தவர். அவருடைய படைப்புகள் எல்லாமே எனக்கு விருப்பமானவைதான். குறிப்பாக, அவர் எழுதிய 'என்ன தவம் செய்தேனோ' என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதேபோல் எழுத்தாளர் கடுகு தன் மனைவி கமலாவுடன் இணைந்து பதம் பிரித்து பெரிய எழுத்துருவில் வெளியிட்ட 'நாலாயிர திவ்யப் பிரபந்தம்' நூலும் என்னுடைய விருப்பமான நூல். எழுத்தாளர் கடுகின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இது எங்கள் துறைக்கு ஈடுகட்ட முடியாத பெரும் இழப்பாக நான் கருதுகிறேன்."

அடுத்த கட்டுரைக்கு