Published:Updated:

“பாரதி நூல்களை மட்டும் பதிப்பிப்பதே என் வேலை” - பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பேட்டி!

பாரதி

“எதிர்பாராதவிதமாக, எனக்குப் பாரதியின் ஒன்றுவிட்ட சகோதரரும், பாரதி பிரசுராலய நிறுவனருமான சி. விசுவநாத ஐயரின் தொடர்பு ஏற்பட்டது.”

“பாரதி நூல்களை மட்டும் பதிப்பிப்பதே என் வேலை” - பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பேட்டி!

“எதிர்பாராதவிதமாக, எனக்குப் பாரதியின் ஒன்றுவிட்ட சகோதரரும், பாரதி பிரசுராலய நிறுவனருமான சி. விசுவநாத ஐயரின் தொடர்பு ஏற்பட்டது.”

Published:Updated:
பாரதி

60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதி ஆய்வில் ஈடுபட்டுவருபவர் சீனி. விசுவநாதன். தற்போது 88 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் இவர், பாரதி குறித்து இதுவரை அறியப்படாத அரிய தகவல்களையும், பாரதியின் எழுத்துகளையும், பாரதி பற்றிய எழுத்துகளையும் பதிப்பித்துள்ளார். ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்', ‘பாரதி நூற்பெயர்க் கோவை' ஆகியவை இவரது பெரும் சாதனைகள்.

சீனி. விசுவநாதன்
சீனி. விசுவநாதன்
“தம் வாழ்வையே பாரதி ஆய்வுக்காக அர்ப்பணித்த சீனி. விசுவநாதனின் பணியைப் போற்றும் வகையில், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்'' என்று கடந்த செப்டம்பர் மாதம் பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவின்போது தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின், சீனி. விசுவநாதன் உள்ளிட்ட பாரதி ஆய்வாளர்களுக்கு 'பாரதி நினைவு நூற்றாண்டு விருது' வழங்கிச் சிறப்பித்தார்.

பாரதியின் 139-வது பிறந்தநாளை ஒட்டி, மூத்த பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதனுடனான சிறப்புப் பேட்டி.

“உங்கள் குழந்தைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்?”

“1934-ம் ஆண்டு நவம்பர் 22 அன்று பரமத்திவேலூரில் பிறந்தேன். நான்காம் வகுப்பு வரை ஓசூரில் படித்தேன். அங்கு என்னுடைய அப்பா வருவாய்த் துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1944-ல் என் அப்பா இறந்த பிறகு ஒரு வருடம் சேலத்தில் என்னுடைய மூத்த அண்ணன் ராமலிங்கம் வீட்டில் இருந்து படித்தேன். பிறகு ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்துதான் படித்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.”

“பாரதியை நீங்கள் எப்படிக் கண்டடைந்தீர்கள்?”

“பள்ளிப் பருவத்திலேயே எனக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. பாடநூல்களில் பாரதியின் பாடல்களைப் படித்த காரணத்தால் என்னை அறியாமலேயே பாரதிமீது ஈடுபாடு கொண்டேன். நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, பாடப்புத்தகம் வாங்க புத்தகக் கடைக்குச் சென்றேன். பாடப்புத்தகம் கிடைக்கக் காலதாமதம் ஆகும் என்று கடைக்காரர் சொன்னார்.

பாரதியார்
பாரதியார்

அந்தக் கடையில் கண்ணாடிப் பேழையில் பார்வையில்படும்படி பொதுநூல்கள் அழகாக வைக்கப்பட்டிருந்தன. எதேச்சையாக அப்போது, “பாரதி பிறந்தார்” என்ற நூல் கண்ணில்பட்டது. கடைக்காரரிடமிருந்து நூலை வாங்கிப் பார்வையிட்டேன். நூலின் தலைப்பு என்னைக் கவர்ந்ததால், பாடப்புத்தகத்திற்குப் பதிலாக “பாரதி பிறந்தார்” நூலை வாங்கினேன். நூலின் ஆசிரியர் கல்கி; நூலை வெளியிட்டவர் தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை.

எட்டயபுரத்தில் பாரதிக்கு நினைவுச் சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்கிற முயற்சியையும், அதன்பின் நிகழ்ந்தவற்றையும் கல்கி இந்த நூலில் விவரித்திருப்பார். என்னுள் பாரதியின் சக்தியைப் பாய்ச்சிய முதல் நூல் ஆகும்!”

“பாரதி ஆய்வுக்குள் எப்படி வந்தீர்கள்?”

“கல்கியின் “பாரதி பிறந்தார்” நூலை வாசித்த கையோடு, பொதுநூலகங்களிலும் பாரதி தொடர்பான நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். பாரதி தொடர்பான நூல்களைச் சேகரிக்க வேண்டும் என்கிற ஆசை அப்போது எழுந்தது. அந்தச் சமயத்தில் தான் தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலையுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் என்னைப் பதிப்பாளனாக ஊக்கம் கொடுத்தார்.

பாரதி பிறந்தார்
பாரதி பிறந்தார்

‘வேலை வணங்குவதே எமக்கு வேலை’ என்பார்கள் முருக பக்தர்கள். அதேபோல், நானும் பாரதி நூல்களை மட்டும் பதிப்பிப்பதே என் வேலை என்பதாக உறுதிபூண்டு, கடந்த 60 ஆண்டுகளாகப் பாரதி நூல்களையே வெளியிட்டு வருகிறேன்.”

“பாரதி ஆய்வில் நீங்கள் ஈடுபடத் தொடங்கிய ஆரம்ப காலங்களை நினைவுகூர முடியுமா?”

“நிச்சயமாக முடியும். எனக்கு இப்போது வயது 88. என்றாலும், பசுமை நினைவுகளை மறக்கவே முடியாது. நான் முறையாகத் திட்டமிட்டு பாரதி நூல்களைப் பதிப்பிக்க முயன்றபோது, எனக்கு முன்னே பாரதி ஆய்வில் ஈடுபட்டிருந்த பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், வ.ரா., ஆகியோரின் நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். ஆரம்ப நாட்களில் பிரசுரமான நூல்களையும் படிக்க நேர்ந்தபோது காலப்பிழைகளும், கருத்துப் பிழைகளும் இருப்பதாக உணர்ந்தேன்.

பாரதியார் ஆய்வுகள்
பாரதியார் ஆய்வுகள்

இதைத் தொடர்ந்து பாரதி நடத்திய பத்திரிகைகள், பாரதி தொடர்பு கொண்டிருந்த பத்திரிகைகள், பாரதியே எழுதிய நூல்கள் இவற்றைத் தேடும் முயற்சியில் இறங்கினேன். இதற்காக நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டேன்; புது தில்லி, கல்கத்தா ஆகிய நகரங்களுக்கும் சென்றுவந்தேன்.”

“பாரதி பற்றிய உங்கள் முதல் நூல் எப்போது வெளியானது?”

“1962-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் பாரதியின் 81-வது பிறந்த நாள் கொண்டாடப்படவிருப்பதாகப் பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். அப்போது பாரதியார் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட விரும்பினேன். ராஜாஜி, பாரதிதாசன், வெ.சாமிநாத சர்மா, ப.ஜீவானந்தம், பாலதண்டாயுதம், சுத்தானந்த பாரதி ஆகியோரை நேரில் சந்தித்து, தொகுப்பு நூலுக்காக அவர்களுடைய கட்டுரைகளைச் சேர்த்துக்கொள்ள அனுமதி பெற்றேன். “தமிழகம் தந்த மகாகவி” என்ற அந்த நூல் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. ராஜாஜி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், நா.பார்த்தசாரதி போன்றவர்களும், பத்திரிகையாளர்களும் பாராட்டி எழுதினர்.”

பாரதியார்
பாரதியார்

“பாரதி ஆய்வில் உங்களுடைய முக்கியப் பங்களிப்பாக நீங்கள் கருதுவது எதை?”

“பாரதி ஆய்வாளர்களாக விளங்கியவர்களுக்கும் கிடைக்கப் பெறாத பாரதி படைப்புகள் என் தேடலில் கிடைத்தன. அவற்றை ஒழுங்குபடுத்தி, தொகுதி தொகுதிகளாகப் பதிப்பிக்கத் தொடங்கினேன். என் அளவில் பாரதி நூல்களுக்கான விவரத் தொகுதிகளைப் ‘பாரதி நூற்பெயர்க் கோவை', ‘பாரதி நூல்கள் விவரக் கோவை’ என்பதாக வெளியிட்டேன். நவீன ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் விதமாக ‘பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு', ‘பாரதியும் சங்கீதமும்’ ஆகிய நூல்களையும் வெளியிட்டேன்.

எதிர்பாராதவிதமாக, எனக்குப் பாரதியின் ஒன்றுவிட்ட சகோதரரும், பாரதி பிரசுராலய நிறுவனருமான சி. விசுவநாத ஐயரின் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய வழிகாட்டுதலுடன் பாரதிக்கு திருத்தமான பதிப்பாக, 12 ஆண்டுக்கால முயற்சியில் “மகாகவி பாரதி வரலாறு” என்ற நூலை எழுதினேன்.

என் அளவில், 60 ஆண்டுக்காலப் பாரதி தேடலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியோ, பதிப்பித்தோ இருந்தபோதிலும், என் தலையான பணியாகக் கருதுவது “கால­வ­ரி­சையில் பாரதி படைப்­புகள்” என்ற 12 தொகுதிகளை வெளியிட்டதைத்தான்.”

கால­வ­ரி­சையில் பாரதி படைப்­புகள்
கால­வ­ரி­சையில் பாரதி படைப்­புகள்

“பாரதி ஆய்வில் அடுத்த முன்னெடுப்புகள் பற்றிச் சொல்லுங்கள்”

“கால­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­பட்ட பாரதி படைப்­புகள் தொகுதிகளில் சேராமல் விடுபட்டவற்றைத் தேடிக் கண்டறிந்து இந்த நூல் தொகுதியை நிறைவுசெய்ய வேண்டும் என்று உணர்கிறேன். அவற்றைத் தேடிப் பெறும் முயற்சிகளில் பாரதி ஆய்வாளர்கள் ஈடுபட வேண்டும். பேராசிரியர்கள் ஆ.இரா.வேங்கடாசலபதி, ய.மணிகண்டன் இம்மாதிரியான முயற்சிகளில் ஈடுபட்டு, பாரதி படைப்புகளைக் கண்டறிந்து வருகின்றனர்.

பாரதி படைப்புகளைப் போலவே, காலவரிசையில் காலந்தோறும் வெளிவந்துள்ள பாரதி பற்றிய கட்டுரைகள், கவிதைகள் ஆகியனவற்றுக்கும் விவரப்பட்டியல் வெளிப்பட வேண்டும். பாரதி படைப்புகளுக்கு முறையான சொல்லடைவு, பொருளடைவு தொகுதிகள் வெளிவர வேண்டும். நான் பாரதிக்கு வெளியிட்ட விவரத் தொகுதிகளை, நான் தொடர்ந்து மேற்கொள்ளாத நிலையில் விடுபட்டுள்ள விவரத் தொகுதிகளை முழுமைப்படுத்த வேண்டும்.

பாரதி நினைவின் நூற்றாண்டு
பாரதி நினைவின் நூற்றாண்டு

பொதுவாக, இன்னமும் பாரதியைக் கவிஞர் என்ற நிலையிலேயே பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போக்கு மாற வேண்டும். பாரதி பத்திரிகையாளராகப் பணிபுரிந்துள்ளார்; மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்திருக்கிறார்; தமிழில் புலமை பெற்றது போலவே, ஆங்கிலத்திலும் திறம்பெற்றவராகக் காட்சிதருகிறார். தமது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ‘The Fox with Golden Tail’ என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். திலகர், ஜகதீஸ்சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், தாதாபாய் நௌரோஜி ஆகியோரின் சொற்பொழிவுகள், கதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். இப்படிப் பல்வேறு கோணங்களில் அணுகவும், மதிப்பிடப்படவும் வேண்டியவர் பாரதி!”